ஹைக்கூ கவிதைகளில் சுற்றுச்சூழல் குறித்த பதிவுகள்
முனைவர் சி. சேதுராமன்
தமிழாய்வுத் துறைத்தலைவர்,
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி),
புதுக்கோட்டை - 622 001.
முன்னுரை
ஓர் உயிரினத்தைச் சுற்றிக் காணப்படும் உயிருள்ள மற்றும் உயிரற்ற கூறுகளை உள்ளடக்கியவற்றைச் சுற்றுச்சூழல் எனலாம். அது காற்று, ஒலி, ஒளி, மண், வெப்பம், நீர் மற்றும் அவற்றோடு தொடர்புடைய பிற உயிரினங்களையும் அந்த உயிரினங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் காரணிகளையும் தன்னுள் அடக்கியதாகும்.
சுற்றுச்சூழலை இருவகைப்படுத்தலாம். அவையாவன,
1. இயற்கைச் சுற்றுச்சூழல்
2. மனிதன் உருவாக்கிய சுற்றுச்சூழல்
என்பனவாகும்.
இயற்கைச் சுற்றுச்சூழலில் நீர், நிலம், வானம், உயிரினத் தொகுதிகள் ஆகியவை அடங்கியுள்ளன. இவை இடைவிடாது இயங்குவதால் மனிதனின் செயல்களைக் கட்டுப்படுத்துகின்ற காரணிகளாக விளங்குகின்றன.
மனிதன் உருவாக்கிய சுற்றுசூழல்களை மூவகைப்படுத்தலாம். அவையாவன,
1. மனிதக் குழுமக் கூறுகள் (மதம், இனம், மொழி உள்ளிட்டவை மனிதக் குழுமக் கூறுகளாகும்)
2. கட்டுமானக் கூறுகள் (கிராமங்கள், நகரங்கள், சாலைகள், தொடர்வண்டி, இருப்புப் பாதைகள் போன்றவை கட்டுமானக் கூறுகளாகும்)
3. நிறுவனத் தொகுதிக் கூறுகள் (பொருள் உற்பத்தி செய்யப்படும் விவசாயம், தொழிற்சாலை சார்ந்த பொருள் உற்பத்திக் கூறுகளும் கல்வி, வாணிபம் போன்றவையும் நிறுவனத் தொகுதிக் கூறுகளாகும்) என்பனவாகும். சுற்றுச்சூழலே உயிரினங்களின் வாழ்க்கை நிலை மாற்றங்களுக்குக் காரணங்களாக அமைகின்றன. இச்சுற்றுச்சூழல் குறித்த பல்வேறுவிதமான பதிவுகள் புதுக்கவிதைகளின் ஒரு கூறாக விளங்கும் ஹைக்கூ கவிதைகளிலும் காணப்படுகின்றன.
ஹைக்கூ கவிதைகளில் சுற்றுச்சூழல் பதிவுகள்
உலகம் முழுவதும் இன்றைய மிக முக்கியத் தேவையாக இருப்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் ஏற்படும் காலநிலை மாற்ற விளைவுகளாலும் உலகம் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றது. இயற்கைச் சமநிலையை மனிதன் தனது சுயநலத்திற்காகப் பயன்படுத்துவதால் உலகில் பல்வேறுவிதமான மாற்றங்கள் ஏற்பட்டு இயற்கை மனிதனுக்குப் பகையாக மாறி வருகின்றது.
மனிதர்கள் இயற்கையை முறையாகப் பயன்படுத்தாமல் பண ஆசையால் காடுகள், மலைகள், கடல், பல்வேறு உயிரினங்கள், காற்று, நீர்நிலைகள், ஆறுகள் உள்ளிட்டவற்றைக் கெடுத்து காலநிலைகளில் பெரிய தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர். மனிதர்களால் பல்வேறுவிதமான மாசுகள் ஏற்பட்டு உலகம் உயிர்கள் வாழ்வதற்குத் தகுதியற்றதாக மாறிக்கொண்டு வருகின்றது. இதனை ஹைக்கூ கவிஞர்கள் தங்களின் கவிதைகளில் பதிவு செய்து மனிதக் குலத்தை எச்சரித்து இயற்கையைப் பாதுகாக்கின்ற கருத்தினை விதைத்து மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த விழைகின்றனர்.
காற்று மாசு குறித்த பதிவு
வாகனங்களின் பெருக்கத்தாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கரும்புகையினாலும், எரிபொருட்களின் கலப்படத்தாலும் காற்று மாசுபடுகிறது. டெல்லி உள்ளிட்ட சில வடமாநிலங்களில் காற்று மாசானது குறிப்பிட்ட வரையறையை விட அதிக அளவில் இருப்பதால், மக்களுக்குச் சுகாதாரக் கேடு உண்டாகிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று டெல்லி அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுத்தமான காற்று மனித குலத்திற்குத் தேவை. வாகனங்களின் புகையால் காற்று மாசடைவதையும் அதனால் காற்று தனது குரலால் எச்சரிப்பதையும்,
“அலறியது காற்று
ஒளிய இடமில்லை
வாகனப்புகை” (சென்னிமலை தண்டபாணி, கொஞ்சம் ஹைக்கூ கொஞ்சம் சென்ரியு)
என்று தனது வாமனக் கவிதையில் கவிஞர் சென்னிமலை தண்டபாணி பதிவு செய்து காற்று மாசுறுவதை அனைவரும் முயன்று தடுக்க வேண்டும் என்ற சூற்றுச் சூழல் விழிப்புணர்வினை ஏற்படுத்துகின்றார்.
மேலும், காற்றினை மாசடையச் செய்தால் தூய்மையான காற்றை விலை கொடுத்து வாங்கும் அவல நிலை ஏற்படும் என்ற கருத்தினை இக்கவிதையில் வலியுறுத்தியிருப்பது நோக்கத்தக்கது.
காலநிலை மாறுபாடுகளால் வேளாண்மை பொய்த்துப் போகக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுகின்றன. பெரிய பெரிய வணிக நிறுவனங்கள் நிலங்களை வேளாண் பெருமக்களிடமிருந்து மிகக் குறைந்த விலைக்கு வாங்கி, அதில் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டி விற்பனை செய்கின்றனர். இவ்வாறு அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவதால் நிலம் பாதிப்புக்குள்ளாகிறது. மழையின் பற்றாக்குறை, வறட்சி, நிலத்தடி நீர் குறைந்து வருதல் உள்ளிட்ட காரணங்களால் இயற்கை அழிவை நோக்கிச் செல்கின்றது. இதனை ஹைக்கூ கவிஞர் சென்னிமலை தண்டபாணி,
‘‘சோளக் கொல்லை பொம்மை
காணக் கிடைக்கவில்லை
கான்கிரீட் கட்டிடங்கள்” (சென்னிமலை தண்டபாணி, கொஞ்சம் ஹைக்கூ கொஞ்சம் சென்ரியூ)
என்று தெளிவுற எடுத்துரைப்பதுடன் விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றக் கூடாது என்ற கருத்தினையும் விளக்குகின்றார்.
நகர்மயமாதல்
மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக நகர்மயமாதல் அதிவிரைவாக நிகழ்கின்றது. மக்கள் வேலைவாய்ப்புக்காகவும், பிற காரணங்களுக்காகவும் கிராமங்களை விட்டு நகரங்களை நோக்கி வருகின்றனர். அதனால் நகரப்பகுதிகளில் இட நெருக்கடி, சூழல் பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படுகின்றன. நகரங்களுக்கு அருகிலுள்ள கிராமங்கள், நகர எல்லைக்குள் கொண்டு வரப்பட்டு அங்குள்ள இயற்கைச் சூழல் அழிக்கப்படுகின்றது.
விளைநிலங்கள், காடுகள் ஆகியவை அழிக்கப்பட்டு, நகரங்கள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. தனித்தனிக் குடியிருப்புகள் மட்டுமல்லாமல், பல அடுக்ககங்கள் கட்டப்பட்டு எங்கு நோக்கினும் அடுக்ககங்களே காணப்படுகின்ற நிலை உருவாகின்றது. இதனால் இயற்கையான மலை, மரங்கள், குளங்கள் இவை ஏதுமின்றி செயற்கையினை மக்கள் நாடும் அவலம் தொடர்வதை,
‘‘வீட்டிற்குள் குரோட்டன்ஸ்கள்
தொட்டிக்குள் மீன்கள்
வானம் தொலைத்த நகரம்’’ (அறிவுமதி, ஈகரை கவிதைக் களஞ்சியம், இணைய தளம்)
என்று கவிஞர் அறிவுமதி அழகுறக் காட்சிப்படுத்துகின்றார்.
மரங்களும் செடிகொடிகளும், அழகிய குளங்களும் அழிக்கப்பட்ட இயற்கைச் சூழல்களால் அதனைத் சார்ந்து வாழ்கின்ற உயிரினங்களும் அழிந்து விட்ட நிலையில் செயற்கையாக நகரத்தில் வாழ்வோர் வாழ்கின்ற வாழ்க்கைச் சூழலை இக்கவிதையில் கவிஞர் பதிவு செய்கின்றார்.
துணைநகரம் அமைத்தல், நகரங்களை விரிவுபடுத்துதல் என அதிவிரைவாக நகர்மயமாதல் என்பது தடுக்கப்பட வேண்டும். நகர்மயமாதல் என்பது ஒருபுறம் நல்லதாகக் காணப்பட்டாலும், மறுபுறம் அது மனிதக் குலத்திற்கும், இயற்கைக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய நிகழ்வாகும். இதனை உணர்ந்து அரசும் மக்களும் அதற்கேற்றவாறு திட்டமிடுதல் வேண்டும் என்ற சூழல் விழிப்புணர்வை இக்கவிதையின் மூலம் கவிஞர் தெளிவுறுத்துகிறார்.
கடல் நீர், கடற்கரை மாசுபடுதல்
கடலில் தொழிற்சாலைக் கழிவுகள் அதிகமாகக் கலந்து கடல் நீர் மாசடைகின்றது. அதுமட்டுமின்றி கடற்கரையில் சேரும் நெகிழிக் கழிவுகள் மணலில் புதையுண்டு நிலத்தை மாசடையச் செய்கின்றது. கடற்கரை மணலில் புதையுண்டும் நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருட்கள் பயன்படுத்துவதாலும் மண்ணின் தன்மை மாறுகிறது. பிளாஸ்டிக் மட்காத பொருள். இது மட்குவதற்கு 200 ஆண்டுகளுக்கும் அதிகமாக ஆகலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே, நிலத்தையும் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதையும் இந்நெகிழிகள் தடுக்கின்றது என்ற விழிப்புணர்வை,
”கடற்கரையில் ஊற்று தோண்டியதும்
கையில் கிடைத்தது
பிளாஸ்டிக் பை” (அறிவுமதி, ஈகரைக் களஞ்சியம் இணைய தளம்)
என்று கவிஞர் எடுத்துரைக்கின்றார்.
இயற்கை வளங்களின் அழிவுகளும் காலநிலை மாற்றங்களும்
இயற்கை வளங்களான ஆறு, நிலம், காடுகள் ஆகியவை அழிக்கப்படுவதால், காலநிலையில் பெருமளவு மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆறுகளில் அதிகளவில் மணலை எடுப்பதன் மூலம் நீர் தேங்காமல் ஆறுகள் வறண்டு போகின்றன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வறட்சி ஏற்படுகின்றது. இயற்கையில் கிடைக்கும் கனிம வளங்களுள் மணல் முதன்மையான இடத்தைப் பெறுகின்றது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் மணலை ஆறுகளில் இருந்து எடுக்கக் கூடாது என்ற நடைமுறை விதிகள் இருந்தாலும் மனிதர்கள் பண ஆசையால் அளவுக்கு அதிகமாக மணலை அள்ளி விற்பனை செய்கின்றனர். இதனால் இயற்கை தந்த கொடையான ஆறு நீரின்றி வறண்டு போகின்றது. இதனை,
”பறவைகள் முகம்பார்க்க
கண்ணாடியின்றி திரும்பின
வறண்டு போன நதி” (அறிவுமதி, ஈகரைதமிழ்களஞ்சியம்,இணையதளம்)
”ஆழமான ஆறு
இறங்கியது லாரி
மணல் எடுக்க” (அறிவுமதி, ஈகரைதமிழ்களஞ்சியம்,இணையதளம்)
என்று ஹைக்கூ கவிஞர் குறிப்பிடுகின்றார். குறிப்பாக ஆற்றைக் கண்ணாடியாக கவிஞர் உவமைப்படுத்திய விதம் பாராட்டுதற்குரியதாக அமைகிறது.
ஆறுகளில் மணல் இருந்தால்தான் தண்ணீர் தேங்கும். தண்ணீர் தேங்கினால்தான் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அதனால் மக்களுக்குக் குடிப்பதற்குக் குடிநீரும், வேளாண் தொழில்களைச் செய்வதற்கு தடையற்ற நீரும் கிடைக்கும். அவ்வாறின்றி மணல் அள்ளப்பட்ட ஆறு இறந்து போய்விடும். நீர் தேங்காத ஆறு இறந்ததற்குச் சமாமாகும். இதனால் ஆறுமின்றி, நிலத்தடி நீருமின்றி ஆறு சார்ந்து வாழ்கின்ற உயிரினங்கள் அழிந்துவிடும். மனிதர்களும் அழிவின் விளிம்பினை அடைவர் என்பதைச் சிற்பி பாலசுப்பிரமணியன் அவர்கள்,
‘‘மணல் தோண்டிய
படுகுழிகளில் கிடக்கிறது
ஆற்றின் சடலம் ’’ (சிற்பி பாலசுப்பிரமணியன், கண்ணாடிச் சிறகுள்ள ஒரு பறவை வெளியீடு: கவிதா பப்ளிகேஷன் சென்னை - 600 017)
என்று தெளிவுறுத்துகின்றார்.
‘‘ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்’’ என்பது ஆன்றோர் வாக்கு. ஊருக்கும் உலகிற்கும் அழகினைத் தரும் ஆற்றினை உயிர் உள்ளதைப் போன்று சித்திரிக்கும் சிற்பியின் கவித்திறம் போற்றுதற்குரியதாக அமைந்து, சூழல் குறித்த விழிப்புணர்வினையும், இயற்கையைப் பாதுகாக்கின்ற எண்ணத்தையும் நமக்குள் ஏற்படுத்துகின்றது.
மேலும், மனிதர்களின் பண ஆசையால் இயற்கை வளமாகிய ஆற்றுவளம் சூறையாடப்பட்டுப் பல ஆறுகள் காணாமல் போய்விட்டன. மணல் கொள்ளையால் ஆறு வறண்டு போய்விட்டது. ஆற்றில் அக்கரைக்குச் செல்லப் பயன்பட்ட படகு தற்போது அக்கரைக்குப் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டு சக்கரத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக சிற்பி,
‘‘வற்றிய ஆற்றோரம் படகு
சக்கரம் கேட்கிறது
அக்கரை போக’’ (சிற்பி பாலசுப்பிரமணியன், கண்ணாடிச் சிறகுள்ள ஒரு பறவை)
என்று இயற்கை வளமான ஆறுகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனையை நம் மனதுள் விதை்க்கின்றார்.
மரங்கள் மண்ணின் வரங்கள். மழையின் கொடையாளி. இத்தகைய மரங்களை வெட்டி, காட்டு வளத்தை அழிப்பது மனிதக் குல அழிவுக்கு வழிவகுக்கும். நகர்மயமாதலாலும், சாலைகள் விரிவாக்கப்படுவதாலும் மரங்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் இயற்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு மழை வளம் குறைந்து காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு உயிரினங்கள் அழிவின் விளிம்புக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கவிஞர் அறிவுமதி,
‘‘ஒரு மரத்தை வெட்டுபவன்
மழையைக்
கொலை செய்கிறான்’’(ஈகரைத் தமிழ்க் களஞ்சியம், இணைய இதழ், அறிவுமதியின் ஹைக்கூ கவிதைகள்)
‘‘கண்ணில் ஓவியம்
காதில் இசை
மழைப் பாட்டு’’ (ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணைய இதழ், அறிவுமதியின் ஹைக்கூ கவிதைகள்)
என்று பதிவு செய்கின்றார்.
மரங்களை வெட்டி காடுகளை அழிப்பது உயிரினப் பன்மையை அழிப்பதற்குச் சமம். ஒரு மரம் வெட்டப்படுகின்றதென்றால் அதனைச் சார்ந்து வாழ்கின்ற உயிரினங்களின் வாழ்வும் அிக்கப்படுகின்றது என்பதே பொருளாகும். மரங்கள் அடர்ந்திருக்கும் காடுகளை நம் முன்னோர்கள் உயிர்களாகக் கருதினர். இதனை,
‘‘காடுகொன்று நாடாக்கி’’
என்று பட்டினப்பாலை எடுத்துரைக்கின்றது.
காடுகளை அழித்து என்று குறிப்பிடாமல் கொன்று என்று குறிப்பிடுகின்றது. காடுகள் உயிருள்ளவை. அவற்றை அழிப்பது ஓர் உயிரைக் கொல்வதற்குச் சமமாகும் என்று அவ்வரியானது நமக்கு உணர்த்துகின்றது.
பட்டினப்பாலைக் கவிஞனைப் போன்றே இன்றைய ஹைக்கூ கவிஞரும் சிந்திப்பது, காலங்கள் மாறினாலும் கவிஞர்களின் சிந்தனை மாறாது என்பதை நமக்கு எடுத்துரைப்பதாக உள்ளது. மர வியாபாரி ஒருவன் மரத்தின் வேர் முதல் கிளை வரை பார்க்கிறான். அதில் மனிதநேயமோ, உயிர் நேயமோ இல்லை. மாறாக வணிகச் சிந்தனையே மேலோங்கி நிற்கிறது. மேலும், அந்த மரத்தில் சில குருவிகள் கூடுகட்டி வாழ்ந்து வருகின்றன. அதையும் வணிக நோக்கத்துடனேயே மர வணிகம் செய்பவன் பார்க்கிறான். நம்முடைய சுயநலப் போக்கால் மரங்கள் அழிக்கப்படுவதையும், உயிரின வளங்கள் அழிவதையும் கவிஞர் அறிவுமதி,
‘‘மர வியாபாரி பார்க்கிறான்
வேர்முதல் கிளைவரை
குருவிக்கூடு நீங்கலாக’’ (ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணைய இதழ், அறிவுமதியின் ஹைக்கூ கவிதைகள்)
என்று இக்கவிதையில் பதிவு செய்துள்ளார்.
காடுகள், குளங்கள் அழிக்கப்பட்டு பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இயற்கை இழந்த மனிதர்கள் இயற்கையைச் செயற்கையாகக் காண விழைகின்றனர். இயற்கையை இயற்கையாக இருக்கச் செய்தல் வேண்டும். மாறாக மனிதர்கள் தங்களின் சுயநலத்திற்காக அழித்தால் வெறுமையே மிஞ்சும். இதனை,
‘‘வீட்டிற்குள் குரோட்டன்ஸ்கள்
தொட்டிக்குள் மீன்கள்
வானத்தைத் தொலைத்த நகரம்” (ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் இணைய இதழ், அறிவுமதியின் ஹைக்கூ கவிதைகள்)
என்று கவிஞர் அறிவுமதி தெளிவுறுத்துகிறார்.
செடிகொடிகளை அழித்துவிட்டு, அதனை செயற்கையான குரோட்டன்ஸ்கள் வாயிலாக மனிதன் காண விழைகின்றான். அதைப் போன்றே குளங்களையும், ஆறுகளையும் அழித்துவிட்டு, அதில் அடுக்கங்களைக் கட்டி அந்த அடுக்கக வீடுகளுக்குள் தொட்டிகளை வைத்து மீன்களை வளர்த்து இயற்கைச் சூழலைக் காண விரும்புகின்றான். ஆனால், அத்தகைய நகர வாழ்க்கை இயற்கையை அழித்துத் தொலைத்த வானமாகிய இயற்கயை மரணிக்கச் செய்த நரக வாழ்க்கையாகும் என்பதை கவிஞர் உணர்த்தியிருப்பது சிந்தனைக்குரியதாக விளங்குகின்றது.
காடழிப்பும் பல்லுரியிரின அழிப்பும்
மனிதர்கள் தங்களது தன்னலத்திற்காக மரங்களை வெட்டிக் காடுகளை அழிக்கின்றனர். இதனால் காட்டுவளம் மட்டுமல்லாது காடுகளைச் சார்ந்திருக்கும் உயிரின வளமும் அழிவு நிலைக்குத் தள்ளப்படுகின்றன. குருவிகள், பாம்பு, விலங்குகள் உள்ளிட்டவை தங்களது வாழ்விடங்களை இழந்து பரிதவிக்கும் நிலைக்கு ஆளாகின்றன. மனிதர்கள் காடுகளை அழித்து ஆக்கிரமித்து மற்ற உயிரினங்களை அழிவின் விளிம்பிற்கு உள்ளாக்குகின்றனர். இயற்கை வளங்களை மனிதர்கள் அழிக்காது உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற சூழல் பாதுகாப்பு உணர்வினை,
‘‘லாரி நிறைய மரம்
இரையுடன் கூட்டைத் தேடும்
தாய்க்குருவி’’ (கணேஷ் சுப்ரமணி, மதுரை)
என்ற கவிதை நமக்கு ஏற்படுத்துகின்றது.
மேலும் காடுகளும் மலைகளும் அழிக்கப்படடு இரயில் தடங்களும், சாலைகளும் அமைக்கப்படும் நிலையில், காட்டினையும் மலையையும் நம்பி இருக்கும் யானைகள், காட்டெருமைகள், புலிகள் உள்ளிட்ட உயிரினங்கள் அழிகின்றன. இயற்கையை அழிக்காது இத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் உயிரினப் பன்மை பாதுகாக்கப்படும் என்பதை,
‘‘ரயில் மோதி
பிளிறும் யானையிடம்
அழிக்கப்பட்ட காட்டின் குரல்!’’ (பா.கவிதா, கழனிவாசல் - 2022-இல் ஹைக்கூ கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற கவிதைகள், ஹைக்கூ கவிதைகள். காம்)
என்ற கவிதை நமக்கு தெளிவுறுத்துகின்றது.
இயற்கை வளங்களை அழித்தால் மனிதக்குலம் அழிந்துவிடும். மழை இல்லாமல் போவது, காட்டு விலங்குகள் மனிதர்களின் வசிப்பிடங்களுக்கு வருவது, பருவநிலை மாற்றம், பனிமலைகள் உருகுவது, வெப்பநிலை அதிகரிப்பது, திடீர் மழை, வெள்ளம், மணிசரிவு, மலைச்சரிவு உள்ளிட்ட இயற்கைப் பேரிடர் நிகழ்வது என அனைத்தும் மனிதர்கள் இயற்கை வளங்களை அழிப்பதாலேயே நிகழ்கின்றன.
இயற்கையைப் பாதுகாத்து சூழலைப் பேணி மனிதர்கள் உன்னதமான வாழ்வினை வாழ வேண்டும் என்ற சூழலியல் சிந்தனைகளை ஹைக்கூ கவிதைகள் காலத்திற்குத் தகுந்தாற்போல் எடுத்துரைக்கினறன. இக்கவிதைகள் மனிதக்குலம் மகிழ்வுடன் வாழ வழிகாட்டும் கைவிளக்குகளாகவும் திகழ்கின்றன எனலாம்.
துணைநூற் பட்டியல்
1. சுற்றுச் சூழல் பயில்வுகள், முனைவர் சி. சேதுராமன், என்சி.பி.ஹெச் வெளியீடு, சென்னை.
2. சென்னிமலை தண்டபாணி, கொஞ்சம் ஹைக்கூ கொஞ்சம் சென்ரியு, விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோயம்புத்தூர்.
3. நல்வழி, ஔவையார், கழக வெளியீடு.
4. ஈகரை கவிதைக் களஞ்சியம் இணைய தளம் (https://eegarai.darkbb.com/f2-forum)
5. பட்டினப்பாலை, கழக வெளியீடு.
6. கண்ணாடிச் சிறகுள்ள ஒரு பறவை - சிற்பியின் கவிதைத் தொகுப்புகள், என்சி. பி.ஹெச். வெளியீடு, சென்னை.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.