தெரு நாய்கள்

தேனி மு. சுப்பிரமணி
முன்னுரை
உலகம் முழுவதும் நன்றிக்கும், மாறாத பற்றுக்கும் உதாரணமாகச் சொல்லப்படும் ஒரே விலங்கினம் நாய் மட்டும்தான். மனிதர்களால் செல்ல விலங்காக வளர்க்கப்பட்டு வரும் நாய்கள் மட்டுமின்றி, மனிதர்களிடமிருந்து வீணாகும் உணவுக் கழிவுகளை உண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் தெருநாய்களும், தங்களுக்கான உணவுக்கு ஆதாரமாக இருக்கும் மனிதர்களுக்கு நன்றியுடன் வாலாட்டிக் கொண்டு அவர்களைச் சுற்றியே வலம் வந்து கொண்டிருந்தன. அந்தத் தெரு நாய்களின் வாழ்க்கை, தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது. தெரு நாய்கள் மனிதர்களைத் தாக்குவதுடன் கடித்துக் காயப்படுத்தி விடும் நிகழ்வுகள் தற்போது அதிகமாக நடந்து கொண்டிருக்கின்றன. தெரு நாய்கள் கடிப்பதால், மனிதர்களுக்கு வெறிநாய்க்கடி நோய் (Rabies) ஏற்பட்டு மனிதர்களுக்கு உயிரிழப்பு கூட ஏற்பட்டு விடுகிறது. எனவே, தெரு நாய்களை முற்றிலுமாக அழிக்க வேண்டும் அல்லது அவைகளை மனிதர்கள் வாழும் பகுதியிலிருந்து முழுவதுமாக அகற்ற வேண்டும் என்று ஒரு பிரிவினரும், தெரு நாய்கள் இருப்பதால்தான் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தடுக்கப்படுகின்றன, மனிதர்கள் வீணாக்கும் பல்வேறு உணவுக் கழிவுகள் சுத்தம் செய்யப்பெற்று மனிதர்கள் நல்ல உடல் நலத்துடன் வாழ முடிகிறது. எனவே, தெரு நாய்களை அழிக்க முயற்சிக்கக் கூடாது, அதனை மனிதநேயத்துடன் பாதுகாக்க வேண்டும் என்று ஒரு பிரிவினரும் வலியுறுத்தி வருகின்றனர். இவ்விரு பிரிவினர்களும் இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்து, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், நாய்கள் மற்றும் தெரு நாய்கள் குறித்து சிறிதாவது அறிந்து கொள்வோம்.
நாய்கள்
நாய் (Canis lupus familiaris) என்பது கேனிடே (Canidae) குடும்பத்தின் வீட்டுப் பாலூட்டி வகையைச் சேர்ந்தது. இது சாம்பல் ஓநாயின் (Canis lupus) ஒரு கிளை இனமாகவும், நரிகள் மற்றும் குள்ளநரிகளுடன் தொடர்புடையதாகவும் இருக்கிறது. உலகில் மனிதர்களால் நாய் மற்றும் பூனை என்ற இரு விலங்கினங்கள் அதிக அளவில் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. இந்த இரு விலங்குகளில் நாய், மனிதர்களுக்குப் பல்வேறு பணிகளில் உதவியாக இருந்து வருகிறது. மேலும், நாய்கள் பெரும்பான்மையாக, மனிதர்களைச் சார்ந்தே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மனிதர்கள் மற்றும் நாய்களுக்கிடையிலான தொடர்பு 15 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலானது என்கின்றனர்.
நாய்கள் எனும் போது, மனிதர்களின் வீடுகள், தோட்டங்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட சில இடங்களில் காவல் நாய்களாக இருக்கின்றன. ஆடு மற்றும் மாட்டுக் கூட்டத்தைக் குறிப்பிட்ட இடத்தில் மேய்ச்சலில் ஈடுபடுத்தவும், அவை வழி தவறி அக்கூட்டத்திலிருந்து விலகிச் சென்று விடாமல் பாதுகாக்கவும், மேய்ப்பு நாய்களாகச் செயல்படுகின்றன. மனிதர்கள் இறைச்சிக்காகவும், தங்களது வீரத்தினை வெளிப்படுத்தவும் காட்டுப் பகுதிகளுக்கு வேட்டையாடச் செல்லும் போது, அவர்களுக்கு வேட்டை நாய்களாக உதவுகின்றன. (தற்போது இந்தியாவில் காடுகளில் வேட்டையாடச் செல்ல அனுமதி இல்லை. மேலும் இது குற்றச் செயலாகவும் இருக்கிறது). உலகில் பனிப்பகுதிகளில் சரக்குப் பொதிகளை இழுத்துச் செல்லும் இழுநாய்களாகப் பணிபுரிகின்றன. கண் பார்வை இழந்தவர்களுக்குத் துணையாக வழிகாட்டும் நாய்களாகவும், பிற மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான சில பணிகளைச் செய்வதற்குப் பயிற்சி அளிக்கப்பட்டு சேவை நாய்களாகவும் துணை நிற்கின்றன. காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படைகளில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு, கண்ணி வெடிகள் அல்லது போதைப் பொருட்களைக் கண்டறிதல், குற்றச் செயலில் ஈடுபட்டவர்களைக் கண்டறிதல் போன்ற பணிகளில் துப்பறியும் நாய்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. சீனா உள்ளிட்ட சில நாடுகளில் நாய் இறைச்சி உணவாக உட்கொள்ளப்படுவதால், இறைச்சிக்கான நாய்களாகவும் வளர்க்கப்படுகின்றன. பொதுவாக, மனிதர்களின் வாழ்க்கையில் நாய்கள் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன என்றால் அது மிகையில்லை.
சாம்பல் ஓநாயிலிருந்துதான் நாய்கள் தோற்றம் பெற்றிருக்கின்றன. இருப்பினும், நாய்களின் சரியான தோற்றம் குறித்து சில அறிவியல் விவாதங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. 14,000 முதல் 29,000 ஆண்டுகளுக்கு முன்பு நாய்கள் தங்கள் காட்டு மூதாதையர்களிடமிருந்து பிரிந்து மனிதத் தொடர்புகள் மூலம் வளர்க்கப்பட்டதாக மரபியல் கூறுகிறது. நாய்களின் பரிணாமம் பற்றிய விவரங்கள் நிச்சயமற்றவை என்றாலும், முதல் நாய்கள் கூர்மையான பார்வை மற்றும் வாசனை உணர்வுகளைக் கொண்ட வேட்டையாடக் கூடியவைகளாக இருந்தன. வேட்டையாடுதல், பாதுகாத்தல் மற்றும் சேவைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக மனிதர்கள் நாய்களைத் தேர்ந்தெடுத்து இனப்பெருக்கம் செய்துள்ளனர். காலப்போக்கில், பயன்பாட்டு வழியிலான விருப்பத்தேர்வுகள் செயல்பாட்டிலிருந்து அழகியலுக்கு மாறிவிட்டன. அதன் விளைவாக பல்வேறு அளவுகள், உருவங்கள் கொண்ட, பல்வேறு வகையான நாய் இனங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தற்போது, நாய்களில் 400-க்கும் அதிகமான தனித்துவமான இனங்கள் இருக்கின்றன.
மனிதர்கள், தங்களது தேவைகளுக்கும், பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில் பல்வேறு நாய்களை உருவாகியிருக்கின்றனர். இந்த நாய்கள் உருவத்திலும், அளவிலும் பல வகைகளாக உருவாக்கம் செய்யப் பெற்றிருக்கின்றன. அஸ்டக் என்ற பண்டையச் செவ்விந்திய இனத்தவரால் தெய்வீகமாகக் கருதப்பட்ட சிறிய தேநீர் கோப்பை அளவிலான சிக்குஅகுவா (Chihuahua) எனும் சிறிய கண்கள் மற்றும் பெரிய காதுகளைக் கொண்ட சிறு நாய்களிலிருந்து, பெரிய கிரேட்டன் (Great Dane) எனும் குறுமயிருள்ள ஆற்றல் மிக்க பெரிய நாய்கள் வரை பல்வேறு உருவங்களிலான நாய்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதே போன்று, சடை நாய் இனம் என்று சொல்லப்படும் 1.5 கிலோகிராம் எடை கொண்ட பொம்மை பூடுல் (Toy Poodle) முதல் பெரிய, குறுகிய முடியுடைய 104 கிலோகிராம் வரை எடை கொண்ட மாஸ்டிப் (Mastiff) நாய்கள் வரை பல்வேறு அளவுகளிலான நாய்களும் மனிதர்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
பழங்குடி நாய்களில் நோர்டிக் (Nordic) அல்லது ஸ்பிட்ஸ் (Spitz), டிங்கோ (Dingo) அல்லது பரியா (Pariah), கூர்மையான காதுகள் கொண்ட ஹவுண்ட் (Hound) மற்றும் (Gazehound) என்று நான்கு அடிப்படை வகைகள் அல்லது குழுக்கள் இருக்கின்றன. இந்த நான்கு குழுக்களிலான நாய்களும் புதிய (கி.மு. 3000 அல்லது அதற்கு மேற்பட்ட) பூர்வீகமற்ற மனித ஊடுருவலுக்கு முன்பே இருந்திருக்கின்றன. அவை பல தலைமுறைகளாக மனிதர்களுடன் சேர்ந்து வாழ்ந்திருக்கின்றன. அதற்கான ஆதாரங்கள் பல்வேறு ஆவணங்களில் இடம் பெற்றிருக்கின்றன. இன்றைய நாய் இனங்களில் பழமையானது என்றால், ஆஸ்திரேலிய டிங்கோ (Australian Dingo) மற்றும் நியூ கினியா பாடும் நாய்கள் (New Guinea Singing Dog) மட்டுமே. இவ்விரு நாய் வகைகளும் முழுமையாகக் காடுகளில் வாழ்கின்றன. இந்நாய்கள் பழங்குடியினரின் வாழ்விடத்திலும், அதற்கு அருகிலும் இனப்பெருக்கம் செய்த போதிலும், மனிதர்கள் அந்நாய்களை எடுத்து வளர்க்கவில்லை. இருப்பினும், இந்நாய்கள் இன்னும் பழங்குடியினர்களைச் சார்ந்தே வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
தெரு நாய்கள்
மனிதர்களின் பயன்பாடுகளுக்கேற்ப உருவாக்கப்பட்டு மனிதர்களால் வளர்க்கப்பட்டு வரும் நாய்கள், மனிதர்களின் விருப்பங்களுக்கேற்ப நாயின் தோற்றத்தை அழகாகவோ அல்லது அதன் உருவ அமைப்பில் சில மாற்றங்களைச் செய்தோ உருவாக்கப்பட்ட நாய்களே பெருமளவில் மனிதர்களால் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவ்வகையான நாய்ககளின் எண்ணிக்கை மிகக் குறைவானதுதான். காடுகளை வாழ்விடங்களாகக் கொள்ளாமல், மனிதர்களால் வளர்க்கப்படாமல், மனிதர்கள் வாழ்விடங்களில் மனிதர்களைச் சார்ந்து வாழக்கூடிய நாய்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கின்றன. இவைகளை நாட்டு நாய்கள் அல்லது பூர்வீக நாய்கள் என்று சொல்ல வேண்டுமென்று சிலர் வலியுறுத்துகின்றனர். வீடுகளிலிருந்து தொலைந்து போன நாய்கள், உரிமையாளர்களால் கைவிடப்பட்ட நாய்கள், பேரழிவுகளின் போது வழி தவறிச் செல்லும் நாய்கள் மற்றும் உரிமையாளர் இல்லாத நாய்கள் ஆகியவற்றை ‘தெரு நாய்கள்’என்று சிலர் வகைப்படுத்துகின்றனர். ஆனால் பொதுவாக, தெருக்களில் பிறந்த அல்லது கைவிடப்பட்டதால் ஆதரவற்றுப் போன விலங்குகள் அனைத்தையும் தெரு விலங்குகள் என்று வரையறை செய்யலாம் என்கின்றனர்.
உலகில் மனிதர்கள் வசிக்கும் இடங்களில் கரோலினா (Carolina), கோஸ்டா ரிகா (Costa Rican), பிஜியன் (Fijian), ஹோண்டுரான் (Honduran), லெபனான் (Lebanese), லைபீரியன் (Liberian), பாலினேசியன் (Polynesian) என்று பல வகையான பூர்விக நாய்கள் இருக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகளைக் கொண்ட இந்தியக் கண்டத்தில் மனிதர்கள் வசிக்குமிடங்களில் ‘இந்தியப் பரியா நாய்’ (Indian Pariah Dog) எனும் பூர்விக நாய்கள் அதிகமாக இருக்கின்றன. உலகம் முழுவதும் இருக்கும் மொத்த நாய்களின் எண்ணிக்கை 900 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் சுமார் 20% எனும் அளவிலான நாய்கள் சொந்தமாக வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளாக இருக்கின்றன. இவைகளைத் தவிர்த்து, 720 மில்லியன் நாய்கள் தெரு நாய்கள் அல்லது பூர்விக நாய்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதே போன்று, இந்தியாவில் சுமார் 62 மில்லியன் தெரு நாய்கள் அல்லது பூர்வீக நாய்கள் இருக்கின்றன.
பூர்வீக நாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் இனப்பெருக்கம் செய்யப்படாததால், அவற்றின் தோற்றம், உடல் பகுதிகள் மற்றும் மனப்பண்புகள் போன்றவை இயற்கைத் தேர்வு செயல்முறையால் மட்டுமே உருவாக்கப்படுகின்றன. கூடுதலாக, அவை இயற்கை நாயின் இயற்கையான நுண்ணறிவை இழக்கவில்லை. இதனால் காட்டு ஓநாய்கள், நரிகள் மற்றும் குள்ளநரிகளைப் போலவே பகுத்தறியும் திறன் கொண்டவைகளாக இருக்கின்றன. இந்நாய்கள் மிகவும் புத்திசாலியாக இருப்பதால், இந்நாய்களை மனிதர்களின் பயன்பாடுகளுக்கேற்பப் பயிற்சியளிப்பது எளிதுதான். இருப்பினும், இவ்வகை நாய்கள் வீட்டில் வளர்க்கப்படும் மற்ற நாய்களைப் போன்று, மீண்டும் மீண்டும் கீழ்ப்படிதல் பயிற்சிகளைத் தொடர விரும்புவதில்லை. சில வேளைகளில், பயிற்சி கொடுப்பவர்களை எதிர்க்கவும் செய்கின்றன. மனிதர்களால் வீணாக்கப்படும் உணவுகளைக் குப்பைகளிலிருந்து பெற்றுக் கொள்ளும் இந்நாய்கள், பெரும்பான்மையாகத் துப்புரவுப் பணிகளைச் செய்யும் தோட்டிகளாகவேத் தங்கள் வாழ்க்கையை வாழ்கின்றன. எனவே, இந்த நாய்களை எவரும் சொந்தமாக்கிக் கொள்ள விரும்புவதில்லை.
இவ்வகைப் பூர்வீக நாய்கள் மனிதர்கள் வாழும் இடங்களில், தங்களுக்கான எல்லைகளை வரையறுத்துக் கொண்டு அதற்குள் வாழ்கின்றன. தாங்களிருக்கும் பகுதியிலிருக்கும் மனிதர்களிடம் நட்புடன் இருக்கவே இவை விரும்புகின்றன. இந்நாய்கள் அப்பகுதியிலுள்ள மனிதர்களிடம் அன்பையும் பாசத்தையும் பெறுவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றன. தாங்கள் இருக்கும் பகுதிக்குள் இவை வெளியாட்களையும், பிற பகுதிகளிலிருந்து வரும் நாய்களையும் அனுமதிப்பதில்லை. இவை தனியாக இல்லாமல், ஒரு பகுதிக்குள் குழுவாகவே இருக்கின்றன. அந்தப் பகுதியைச் சேர்ந்த மனிதர்கள் இந்நாய்களை விரட்டும் நிலையில், வாலை ஆட்டிக் கொண்டு அமைதியாக இருந்து விடுகின்றன அல்லது அங்கிருந்து ஒதுங்கிச் சென்று, சிறிது நேரம் கழித்துத் திரும்பவும் வந்து விடுகின்றன. ஆனால், அப்பகுதியைச் சாராத வெளியாட்கள் அப்பகுதிக்குள் வரும் போது, 52% நாய்கள் இலேசாகக் குரைத்து விட்டு ஒதுங்கிப் போய்விடுகின்றன. ஆனால், 11% நாய்கள் ஆக்ரோஷமாகக் குரைத்து அவர்களை அப்பகுதிக்குள் நுழைய விடாமல் தடுக்கப் பல்வேறு வழிகளில் முயற்சிக்கின்றன. இது போன்ற நாய்கள் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக இருக்கின்றன.
தெரு நாய்கள் அல்லது பூர்வீக நாய்கள் பொதுவாக, தாங்கள் உயிர் வாழ்வதற்காக மனிதர்களுடனான மோதலைத் தவிர்க்கவே செய்கின்றன. இருப்பினும், அவை அச்சுறுத்தலுக்கு ஆளாகும் போது, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்று நினைக்கும் போது, அதிலிருந்த தன்னைக் காத்துக் கொள்ள கடிக்க அல்லது தாக்க முயற்சிக்கின்றன. தங்களது நாய்க்குட்டிகள், உணவு அல்லது பொம்மைகள் என்று அது தன்னுடன் வைத்துக் கொண்டிருப்பதைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் அதனை நெருங்குபவர்களைக் கடிக்கின்றன. நோய் அல்லது காயம்பட்டிருக்கும் வேளைகளில், அதனுடைய உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது மனிதர்களைக் கடித்து விடுகின்றன. அதனுடன் விளையாடும் போது அல்லது அவற்றுக்குப் பசி, தாகம் ஏற்படும் வேளைகளில் மனிதர்களைக் கடிக்க முற்படுகிறது. இந்நாய்களுக்குத் தங்களது பகுதி எனும் உள்ளுணர்வு மற்றும் வேட்டையாடும் உள்ளுணர்வு ஏற்படும் போது அப்பகுதிக்குள் நுழைபவர்களைக் கடிக்க முனைகிறது. இப்படி அவை கடிப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
பாதிப்புகள்
மனிதர்களின் வாழ்க்கை நிலைகளில் தெரு நாய்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. தெருக்களில் குரைத்தல், ஊளையிடுதல் மற்றும் நாய்களுக்குள்ளான சண்டைகள் போன்றவை, அப்பகுதி மக்களுக்குப் பெரும் தொல்லையாக இருக்கின்றன. குறிப்பாக இரவு வேளைகளில், பகுதிகளின் குறியிடுதல் விளைவாக ஏற்படும் நாய்களின் சிறுநீரின் வாசனை, கருத்தடை செய்யப்படாத நாய்களிடையே கடுமையானதாக மாறுகின்றன. தெருக்களில் இருக்கும் நாய்களின் மலத்தின் வழியாக, அதிலிருக்கும் நாய் வட்டப்புழுக்கள் மனிதர்களுக்கு டாக்ஸோகேரியாசிஸ் எனும் நோயை உருவாக்குகின்றன. இவை தவிர, அப்பகுதியிலிருக்கும் நாய்களால் ஏற்படும் நாய்க்கடி மற்றும் தாக்குதல்கள் குறித்த பயம் மற்றும் பதட்டம், அப்பகுதி மக்களின் நடமாட்டத்தையும், வெளிப்புற நடவடிக்கைகளையும் பெருமளவில் பாதிக்கின்றன. குறிப்பாக, காலை வேளைகளில் நடைப்பயிற்சி செய்பவர்களுக்குப் பெரிதும் இடையூறாக இருக்கிறது. இதனால், நடைப்பயிற்சிக்குச் செல்ல முடியாத வயதானவர்களின் உடல் நலத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
தெருக்களில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் மட்டுமின்றி முன்னெச்சரிக்கை இல்லாமல் செல்லும் இளைஞர்களையும் கடித்து விடுகின்றன. நாய் கடித்தவர்களுக்கு வெறிநாய்க்கடி நோய் எனும் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ஒரு தீவிர நோய்த்தொற்று ஏற்படுகின்றது. இந்த நோய்க்குத் தகுந்த சிகிச்சை எடுக்காத நிலையில், நாய் கடித்தவர்கள் உயிரிழக்கும் அபாயமும் இருக்கிறது.
இதே போன்று, தெரு நாய்களின் வாழ்க்கைத் தரமும் மனிதர்களுடனான அவற்றின் தொடர்புகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. அப்பகுதியிலிருக்கும் குப்பைகளிலிருந்து தெரு நாய்களுக்குத் தேவையான உணவு கிடைக்காமல் போவதுடன், நீரும் கிடைக்காமல் வாழ்வதற்குப் போராடுகின்றன. அண்மைக் காலமாக, கோழி இறைச்சிக் கடைகளிலிருந்து வீசப்படும் கழிவு இறைச்சிகளைச் சாப்பிடும் தெருநாய்களுக்குப் புதுவகையான தோல் நோய்கள் ஏற்பட்டுப் பெருமளவில் துன்பமடைகின்றன. மேலும் தெருநாய்கள் முறை தவறியப் பயன்பாடு மற்றும் புறக்கணிப்புக்கும் ஆளாகின்றன. தெரு நாய்களுக்குச் சரியான மருத்துவப் பராமரிப்பு இல்லாததால் சிகிச்சையளிக்கப்படாத காயங்கள் மற்றும் சில நோய்களுடன் சுற்றித் திரிகின்றன. பொதுவாக, தற்போதைய நகர்ப்புறச் சூழல்கள் அவைகளுக்குத் தேவையான சரியான உணவு கிடைக்காமல், அவைகளின் வாழ்க்கைக்குக் கடுமையானதாகவும் மன அழுத்தமாகவும் மாறிப் போய்விட்டன. சில வேளைகளில், மனிதர்களால் ஏற்படும் பயம், காயங்களால் அச்சமடையும் நாய்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறி வேறு இடங்களுக்குச் சென்று விடுகின்றன. சில இடங்களில் மனிதர்கள் உணவுடன் விசத்தைக் கலந்து தெருநாய்களைக் கொல்லவும் செய்கின்றனர்.
இந்தியாவில் தெரு நாய்கள் அதிகரிப்பால், மனிதர்களுக்குப் பெருமளவில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, தெரு நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி அதன் எண்ணிக்கை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும், மனிதர்களின் உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருக்கும் தெருநாய்களை முழுவதுமாகக் கொன்று அழித்துவிட வேண்டும் என்றும் பலர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், மனிதர்களைச் சார்ந்து வாழும் தெரு நாய்கள் இருப்பதால்தான் திருட்டு உள்ளிட்ட பல குற்றங்கள் தடுக்கப்படுகின்றன. மனிதர்களுக்கும், அவர்களது இருப்பிடங்களுக்கும் பாதுகாப்பாக இருந்து வரும் தெரு நாய்களுக்கு மனிதர்களிடம் பாதுகாப்பில்லாத நிலை இருப்பது வேதனைக்குரியது என்று சொல்வதுடன், மனிதர்களைச் சார்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தெரு நாய்களைப் பாதுகாக்காமல், அவைகளை விரட்டுதல், காயப்படுத்துதல், விசம் கொடுத்துக் கொல்லுதல் போன்ற கொடூரச் செயல்களைச் சில மனிதர்கள் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த மனிதர்களிடமிருந்து தெருநாய்களைப் பாதுகாக்க வேண்டும் என்று விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். பொதுவாக, இவ்விரு கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பினும், தெரு நாய்களின் உயிரை விட மனிதர்களின் உயிர் மேலானது என்கிற கருத்து தற்போது மேலோங்கி இருக்கிறது.
வெறிநாய்க்கடி நோய்
உலகில் தெரு நாய்கள் கடிப்பதால் பாதிக்கப்படுபவர்கள் குறித்தத் தரவுகள் முறையாகச் சேகரிக்கப்படவில்லை எனினும், உலகில் தற்போது இது ஒரு பெரிய பொது சுகாதாரப் பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது. உலகில் ஆண்டுதோறும் 10 மில்லியன் பேர்களுக்குத் தெரு நாய்களால் காயங்கள் ஏற்படுகின்றன. அமெரிக்காவில் ஆண்டுக்குச் சுமார் 4.7 மில்லியன் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனர். உயர் வருமானம் கொண்ட அமெரிக்கா போன்ற நாடுகளில் நாய்க்கடிக்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள முடிவதால், இந்நாட்டில் வெறிநாய்க்கடி நோயால் ஏற்படும் பாதிப்புகள் குறைவாகவே இருக்கின்றன. அதே வேளையில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில், நாய்க்கடிகளுக்குப் பின்பு சிகிச்சை எடுத்துக் கொள்ள இயலாமையால் அல்லது அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த அறியாமையால் வெறிநாய்க்கடி நோயால் (Rabies) ஏற்படும் பாதிப்புகள் அதிகமாக இருக்கின்றன. இந்தியாவில் 2024 ஆம் ஆண்டில் 3.7 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டிருப்பதாக வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் ஆண்டுதோறும் 18 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் பேர் வரை வெறிநாய்க்கடி நோயினால் இறக்கின்றனர். இது உலகளாவிய வெறிநாயக்கடி நோய் இறப்புகளில் 36% என்று உலகச் சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
வெறிநாய்க்கடி நோய் (Rabies) என்பது மனிதர்களுக்கு மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ஒரு தீவிர நோய்த்தொற்று ஆகும். காடுகளில் வாழும் சில வகை வௌவால், நரி, ஓநாய் மற்றும் வீட்டு விலங்கான நாய், பூனை, எலி உள்ளிட்ட சில விலங்குகளின் உடலில் வழக்கமாய் வாழும் ரேபீஸ் தீநுண்மம் (Rabies Virus) பாதிப்பால் அவ்விலங்குகளுக்கு மூளையழற்சி நோய் ஏற்படுகிறது. இந்தப் பாதிப்பு ஏற்பட்ட விலங்குகள் கடிப்பதால் நேரடியாகவோ அல்லது அவ்விலங்குகளால் கடிக்கப்பட்ட பிற விலங்குகள் கடிப்பதாலோ வெறிநாய்க்கடி நோய்த் தொற்று ஏற்படுகிறது. இந்நோய்த் தொற்று, மனிதர்களைச் சார்ந்து வாழும் நாய்களிடமிருந்து மனிதர்களுக்கு அதிகமாகப் பரவுகிறது.
தடுப்பூசிகள்
வெறிநாய்க்கடி நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நாய், மனிதனைக் கடிக்கும் போது, அதன் உமிழ் நீர் வழியாக இந்நோய் பரவி விடுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட மனிதனின் மூளை மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்படைகிறது. பொதுவாக, நாய் கடித்த ஆரம்பக் கட்டங்களில் வெறிநாய்க்கடி நோய்க்கான அறிகுறிகள் பெரும்பாலும் தெளிவற்றதாக இருக்கும். நாய் கடித்தவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, கவலை உணர்வு போன்ற சில அறிகுறிகள் ஏற்பட்டாலும், அதனை வழக்கமான காய்ச்சல், தலைவலி போன்று எடுத்துக் கொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்கின்றனர். இந்நோய்க்கான சரியான சிகிச்சை பெறாத நிலையில், முதலில் குறைவாகத் தென்பட்ட அறிகுறிகள் தீவிரமாக மாறும். அதன் பிறகு, ஆக்ரோஷமான நடத்தை, கிளர்ச்சி, மாயத்தோற்றம் மற்றும் நிறைய உமிழ்நீரை உருவாக்குதல் போன்றவை ஏற்படுகின்றன. அதன் பின்னர், சுவாச அமைப்பு, இரைப்பை குடல் அமைப்பு மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படுத்துவதுடன், இறுதியாக உயிரிழப்பையும் ஏற்படுத்தி விடுகின்றது. உயிரிழப்பைத் தவிர்க்க, வெறிநாய்க்கடி நோய்க்கான தடுப்பூசிகளை போட்டுக் கொள்வது நல்லது.
வெறிநாய்க்கடி நோய்க்குப் பயன்படுத்தப்படும் தடுப்பூசி கொல்லப்பட்ட ரேபீஸ் தீநுண்மத்திலிருந்து (Rabies Virus) தயாரிக்கப்படுகிறது. மனிதர்களுக்கான வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசியானது நோய் வெளிப்பாடு இல்லை, நோய் வெளிப்பட்ட பிறகு என்று இரண்டு நிலைகளில் போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
நோய் வெளிப்பாடு இல்லை - தடுப்பூசி
விலங்குகளைக் கையாளுபவர்கள், கால்நடை மருத்துவர்கள், வெறிநாய்க்கடி நோய் ஆய்வகப் பணியாளர்கள், வெறிநாய்க்கடி நோய் உயிரியல் தயாரிப்பு ஊழியர்கள் ஆகியோர் வெறிநாய்க்கடி நோய் வருவதற்கான ஆபத்தில் உள்ளனர். எனவே, இவர்களுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்புத் தடுப்பூசி போடுவது அவசியமாகிறது.
வெறிநாய்க்கடி நோய் முன் - வெளிப்பாடு தடுப்பூசியானது மூன்று வேளை மருந்தளவுகளில் போடப்படுகிறது. அவை;
1. வேளை மருந்தளவு (Dose) 1 - பொருத்தமான
2. வேளை மருந்தளவு (Dose) 2 - வேளை மருந்தளவு 7 நாட்களுக்குப் பிறகு 1 நாள்
3. வேளை மருந்தளவு (Dose) 3 - வேளை மருந்தளவு 21 நாட்களுக்குப் பிறகு 28 நாட்கள் வரையில் - 1 நாள்
ரேபீஸ் தீநுண்மம் தொடர்பாக வெளிப்படும் ஆய்வகப் பணியாளர்கள் மற்றும் இந்நோய் தொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்திக்கான காலப் பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் தேவைக்கேற்ப செயலூக்கி வேளை மருந்தளவுகள் (Booster Dose) கொடுக்கப்பட வேண்டும்.
நோய் வெளிப்பட்ட பிறகு - தடுப்பூசி
விலங்கு கடித்த அல்லது ரேபீஸ் தீநுண்மத்தால் பாதிக்கப்பட்ட எவரும் நாய் கடித்ததால் ஏற்படும் காயத்தைச் சுத்தம் செய்து உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். தடுப்பூசி போட வேண்டுமா இல்லையா என்பதை மருத்துவர் தீர்மானிப்பார்.
வெளிப்படும் மற்றும் நோய்க்கு எதிராக தடுப்பூசி போடப்படாத ஒரு நபர் ரேபிஸ் தடுப்பூசியின் நான்கு வேளை மருந்தளவுகளைப் பெற வேண்டும். ஒன்று உடனடியாகவும், கூடுதல் மூன்று வேளை மருந்தளவுகளை முறையே 3 ஆவது, 7 ஆவது மற்றும் 14 ஆவது நாளில் போட்டுக் கொள்ள வேண்டும். ரேபிஸ் இம்யூன் குளோபுலின் எனப்படும் மற்றொரு முதல் வேளை மருந்தளவு அதே நேரத்தில் எடுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. முன்பு தடுப்பூசி போடப்பட்ட ஒரு நபர் ரேபிஸ் தடுப்பூசியின் இரண்டு வேளை மருந்தளவுகளைப் பெற வேண்டும். ஒன்று உடனே, மற்றொன்று முறையே 3 ஆவது நாளில். இங்கே, ரேபிஸ் இம்யூன் குளோபுலின் தேவையில்லை.
இத்தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்குச் சில நேரங்களில் ஊசி போடப்பட்ட இடத்தில் தற்காலிகப் புண், வீக்கம் மற்றும் சிவத்தல் போன்ற குறைபாடுகள் ஏற்படலாம். சிலருக்குத் தலைவலி, இலேசான காய்ச்சல், வாந்தி, தசைவலி மற்றும் சொறி போன்றவை ஏற்படலாம். இருப்பினும், மேற்சொன்ன முறைகளில் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல், உயிரிழப்பு ஏற்படும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
நீதிமன்றத் தீர்ப்புகள்
இந்தியாவில் நாய்க்கடி மற்றும் வெறிநாய்க்கடி நோய் (Rabies) காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இது குறித்த செய்தி அறிக்கையை கவனத்தில் கொண்ட இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே. பி. பர்திவாலா மற்றும் நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்தப் பிரச்சனையைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கில் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 அன்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘டெல்லி, டெல்லி மாநகராட்சி, என்எம்டிசி ஆகியவை அனைத்துப் பகுதிகளிலிருந்தும், தெரு நாய்களை விரைவில் பிடிக்கத் தொடங்க வேண்டும். அதை எப்படிச் செய்வது என்பது பற்றி அதிகாரிகள் முறையாகப் பரிசீலிக்க வேண்டும். அவர்கள் இதற்காக ஒரு படையைத் தனியாக உருவாக்க வேண்டுமானால், அதையும் விரைவில் செய்திட வேண்டும்.
இருப்பினும், அனைத்துப் பகுதிகளையும் தெரு நாய்கள் இல்லாததாக மாற்றுவதற்கான முதல் மற்றும் முக்கிய நடவடிக்கையாக இது இருக்க வேண்டும். இதில் எந்தச் சமரசமும் இருக்கக் கூடாது. உடனடியாக அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தெரு நாய்களைக் கொண்டு வந்து காப்பகங்களில் அடைக்க வேண்டும். தற்போதைக்கு, மற்ற விதிகளை மறந்து விடுங்கள். டெல்லியின் அனைத்துப் பகுதிகளிலும் உடனடியாக, நாய்க் காப்பகங்களைக் கட்ட வேண்டும். இந்தக் காப்பகங்களில், நாய்களைக் கையாளக் கூடிய, கருத்தடை மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்கக் கூடிய வல்லுநர்கள் இருக்க வேண்டும். எந்தக் காரணத்தை கொண்டும் இந்த நாய்களை வெளியே விடக்கூடாது. நாய்கள் இந்தக் காப்பகங்களில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை உறுதிப்படுத்த சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும்.
நாய்க்கடி நிகழ்வுகள் குறித்துப் புகாரளிக்க என்று ஒரு தனி உதவி எண்ணைத் (Help Line) தொடங்க வேண்டும். இதில் முக்கியமானது என்னவென்றால், ஒரு தெரு நாய் கூட மீண்டும் விடுவிக்கப்படக் கூடாது. இது நடந்துள்ளது என்று எங்களுக்குத் தெரிந்தால், நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம். டெல்லி தெருக்களை முற்றிலும் தெரு நாய்கள் இல்லாததாக மாற்ற வேண்டும். தெரு நாய்களைத் தத்தெடுக்கவும் அனுமதிக்கக் கூடாது’ என்று உத்தரவிட்டனர்.
தெரு நாய்களுக்கு காப்பகங்களில் கருத்தடை செய்யப்பட்டு, பின்னர் அவை பிடிக்கப்பட்ட இடத்திலேயே விடுவிக்கப்பட வேண்டும் என்ற நடைமுறையிலிருந்த விதிகளுக்கு மாறாக இந்த உத்தரவு இருந்தது. இதனால், விலங்கு நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் சட்ட வழியாகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அவர்கள் தடுப்பூசி மற்றும் கருத்தடை போன்ற தெரு நாய்களுக்குப் பாதிப்புகளில்லாதபடி மனிதநேயத்துடன் இதனை அணுக வேண்டும். காப்பகங்களில் அனைத்து நாய்களையும் அடைப்பது, அதிகப்படியான நெரிசல் மற்றும் கொல்லுதல் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
அதனைத் தொடர்ந்து, விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளின் சார்பில் ஆகஸ்ட் 11 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் மாற்றங்களைச் செய்யக் கோரியும், மாநகராட்சி ஊழியர்கள் தெரு நாய்களைப் பிடிக்கத் தடை விதிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா மற்றும் என். வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதி அமர்வு முன்பாக, ஆகஸ்ட் 14 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடுவண் அரசு தரப்பில் நேர்நிலையான நடுவண் அரசுத் தலைமை வழக்கறிஞர் (Solicitor General) துஷார் மேத்தா, 'நாடு முழுதும் நாள்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெறிநாய்க்கடிக்கு ஆளாகின்றனர். ஆண்டுக்கு 20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வெறிநாய்க்கடி நோயால் உயிரிழக்கின்றனர். குழந்தைகள், முதியோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்' என்று பல புள்ளி விபரங்களுடன் வாதிட்டார்.
நாய் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் சார்பில் நேர்நிலையான உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், 'தெருநாய்களை ஒன்றாகக் காப்பகங்களில் அடைப்பதால், அவை ஒன்றோடொன்று சண்டையிட்டு இறந்து போகும். இது, அவற்றைக் கொலை செய்வதற்குச் சமமானது. தெருநாய்களுக்குக் கருத்தடை செய்வது, வெறி ஏற்படுவதைத் தடுக்கத் தடுப்பூசி செலுத்துவது போன்ற மனிதநேயமிக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம். ஈவு, இரக்கமின்றி தெருநாய்கள் விவகாரத்தை அணுகக்கூடாது' என்று கேட்டுக் கொண்டார்.
இருதரப்பு வாதங்களையும் குறித்துக் கொண்ட நீதிபதிகள், தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். அதன் பின்பு, இவ்வழக்கு ஆகஸ்ட் 22 ஆம் நாளன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஆகஸ்ட் 11 ஆம் நாளன்று இரண்டு நீதிபதிகள் அமர்வு வழங்கிய உத்தரவில் சில மாற்றங்களைப் பிறப்பித்துத் தீர்ப்பளித்தனர்.
அந்தத் தீர்ப்பில், ‘டில்லியில் சுற்றித் திரியும் தெருநாய்களைப் பிடிக்கத் தடை விதிக்க முடியாது. மாநகராட்சி ஊழியர்கள் தெரு நாய்களைப் பிடிக்கும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம். பிடிக்கப்படும் நாய்களுக்குக் கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்த வேண்டும். அந்த நாய் எங்கே பிடிக்கப்பட்டதோ, மீண்டும் அங்கேயே கொண்டு போய் விட்டுவிட வேண்டும். அதே வேளையில், இந்த உத்தரவு வெறிநாய்க்கடி நோயால் பாதித்த வெறிநாய்கள் மற்றும் மூர்க்கத்தனமான நாய்களுக்குப் பொருந்தாது. அவற்றைப் பிடித்து வந்து காப்பகத்தில் பராமரிக்க வேண்டும். அதே போல் தெரு நாய்களுக்குப் பொது இடங்களில் உணவளிக்கத் தடை விதிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டிருந்தது.
தெருநாய்க்கடி நிகழ்வுகளால், நாடு முழுதும் ஏராளமான சிறுவர்களும், முதியவர்களும், இரு சக்கர வாகனங்களில் செல்வோரும் அடிக்கடி பாதிக்கப்படுவதாக நாளிதழ்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. இதுதொடர்பான வழக்கைத் தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பரில் தீர்ப்பு வழங்கியது.
அதில், 'பொது இடங்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து தடுப்பூசி போட்ட பின் அல்லது கருத்தடை செய்த பின், மீண்டும் அதே இடங்களில் விடக்கூடாது. அவற்றைப் பராமரிக்க தனியாகக் காப்பகங்கள் அமைக்க வேண்டும்' என, உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் திரும்பப் பெறக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, அண்மையில் உச்ச நீதிமன்றம் கள்ளுபடி செய்தது. தெருநாய்களைப் பொது இடங்களில் இருந்து அப்புறப்படுத்தவும், அவற்றைக் கருணைக் கொலை செய்யவும் பிறப்பிக்கப்பட்ட முந்தைய உத்தரவுகளில் திருத்தம் மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்து விட்டது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் சில முக்கியப் பகுதிகள்
* தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்தவும், மனிதர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மாநில அரசுகள் உரிய மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்தி, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது, 'வெறி பிடித்த, குணப்படுத்த முடியாத நோய் பாதித்த அல்லது வெளிப்படையாகவே ஆபத்தான, ஆக்ரோஷமான நாய்கள், இருந்தால், அவற்றை கருணைக்கொலை செய்ய, சட்டப்படியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
* அரசியல் சட்டப்பிரிவு, 21-ன் கீழ் மனித உயிரைப் பாதுகாப்பதற்கான அரசின் கடமையை, விலங்குகள் மீதான இரக்கம் மீற முடியாது. மனிதர்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை இருக்க வேண்டும்.
* தெருநாய்களைப் பராமரிக்கக் காப்பகங்களை உருவாக்குவது போன்ற, உச்சநீதிமன்றத்தின் சில நிபந்தனைகள் கடினமானவை எனினும், கட்டுப்பாடற்ற தெருநாய்களின் எண்ணிக்கையைச் சமாளிக்க, உறுதியான நடவடிக்கை தேவை.
* தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த, ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, பயிற்சி பெற்றப் பணியாளர்கள் மற்றும் அறுவை சிகிச்சை வசதிகளுடன் கூடிய, முழு நேரமும் செயல்படும், ஒரு இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையத்தை அமைக்க வேண்டும். (கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான காலக்கெடு மற்றும் பிற விபரங்கள் குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை)
* 2023 ஆம் ஆண்டு அறிமுகமான விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாட்டு விதிகளை, அனைத்து மாநில அரசுகளும், உறுதியாகப் பின்பற்ற வேண்டும். தெருநாய்களுக்குத் தடுப்பூசி போடுவது மற்றும் கருத்தடை செய்வதில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான், தெருநாய்கள் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். இதன் வாயிலாக, மனிதனின் ஆரோக்கியத்திற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இத்தீர்ப்பினைத் தொடர்ந்து, இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளின் அரசுகள் விரிவான திட்டங்களைச் செயல்படுத்தி, தெருநாய்களின் பரவலைக் கட்டுப்படுத்தி, மனிதர்களைப் பயமின்றி வாழச் செய்யும் என்று நம்பிக்கை கொள்ளலாம்.
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|