இலக்கியங்களில் மனித உரிமைகள் குறித்த கருத்தியல்கள்
முனைவர் பா. தமிழரசி
இன்றைய உலகில் மனிதஉரிமைகள் மிகவும் இன்றியமையாதவொன்று. ஓர் அரசாங்கத்தின் செயல்பாட்டினை அளவிடும் ஓர் அளவுகோலாக இன்று மனித உரிமைகள் காணப்படுகின்றன.
வரலாறு
ஐரோப்பிய நாடுகளில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக மனித உரிமைகளைப் பற்றிய தத்துவரீதியான, தர்க்கரீதியான விவாதங்கள் நடைபெறுகின்றன. பெரும்பாலும் ஒரு சமுதாயத்திற்கு எத்தகைய அரசியல் பண்புகள் மற்றும் நடத்தைகள் வேண்டும் என்பதை ஆளும் உயர்குடியைச் சார்ந்தவர்களே தீர்மானம் செய்கின்றனர்.
மனிதனின் ‘இயற்கைஉரிமை’ என்ற வாதத்திலிந்துதான் இன்றைய மனித உரிமை தோன்றியதாகச் சிலர் கூறுவர். கிரேக்கத் தத்துவஞானியான அரிஸ்டாட்டில் இயற்கை உரிமையினைப் பற்றி முதன் முதலில் கூறியவர் ஆவார்.
இன்றைய நூற்றாண்டில் மனித உரிமைகள் ஐந்து பின்புலங்களைக் கொண்டுள்ளது.
1. இயற்கை உரிமை
2. சட்டம்
3. சமூகத் தேவைகள்
4. தனிமனித ஆளுமை
5. சமூக ஒழுக்க மாண்புகள்.
இயற்கை உரிமை
பெண்ணிற்குரிய இயற்கை உரிமை காலங்காலமாக மறுக்கப்பட்டிருக்கின்றது. கணவன் மனம் கோணாமல் சமைத்துப் போட்டுக் கொண்டும், சந்தோசத்தைத் தந்து கொண்டுமிருந்தால் மட்டுமே கற்புக்கரசியாகப் பட்டம் பெற முடியும். இவ்விதத்தில் கணவன் எப்படிப்பட்டவனாக இருப்பினும், தம் பதிவிரதா தர்மம் காக்கப்பட வேண்டுமெனில், அவனுடன் ஒட்ட ஒழுக வேண்டும். அதுவே இல்லற தர்மம் என்பதாக நாலடியார் வழிப்படுத்துவதுடன் ‘பெண்ணிற்கு என தனித்த சுயம்’ என்பதைக் கூட மறுத்தொதுக்கியும் விடுகிறது. சான்றாக,
“கடக்கருங் கானத்துக் காளையின் நாளை
நடக்கவும் வல்லையோ என்றி, சுடர்த்தொடிகு!
பெற்றான்னொருவன் பெருங்குதிரை அந்நிலையே
கற்றான் அஃதூரும் ஆறு” ( நாலடி . 398)
என்ற பாடலில் தவைனுடன் நாளை எவ்வாறு தொலைதூரம் நடந்து செல்வாய் என்று கேட்ட தோழிக்குத் தலைவியானவள், குதிரையைப் பெற்ற ஒருவன் அதைப் பெற்ற அப்பொழுதே அதில் ஏறி நடத்தும் முறையையும் அறிந்தவனே அல்லனோ என்று பதில் தருகிறாள்.
இப்பாடல் வழி நடத்தப்பட வேண்டியவள் பெண், வழி நடத்துபவன் ஆண் என்ற கருத்தாக்கத்தையும் முன் வைக்கிறது.
தனிமனித ஆளுமை
ஒரு மனிதன் தனது சுற்றுச்சூழலோடு உறவுகொள்ளும் சிறப்பான முறையை உருவாக்கும் அவரது சிந்தனை, உணர்வுகள், நடத்தை ஆகியவற்றின் ஒட்டுமொத்தமே அவரது ஆளுமைப்பண்பு என்று உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
* ஆளுமைப்பண்பு மேம்பட வேண்டுமானால் நமது மனப்பாங்கு நேர்முகமாக அமைய வேண்டும்.
* பிறர்பால் நட்புணர்வு கொள்ள வேண்டும்.
* அல்லல்படுபவர்களுக்கு இரக்கம் காட்டவேண்டும்.
* இயன்ற அளவு அவர்களுக்கு உதவி புரிய வேண்டும்.
* பிறர் மகழ்ச்சியைக் கண்டு பொறாமை கொள்ளாது அதில் நாம் பங்கு கொள்ளவேண்டும்.
ஸ்கின்னரின் நடத்தைக் கோட்பாடு
சூழ்நிலைக்கேற்ப மனிதனின் செயல்பாடு மாறுபடுகிறது, நிலைநிறுத்தப்படுகிறது என்பதை விளக்குவதே ஸ்கின்னரின் நடத்தைக் கோட்பாடு ஆகும். ஒரு நடத்தையை வலியுறுத்தவோ அல்லது மாற்றவோ தேவையான தூண்டலை சூழல் அளிக்கிறது. அந்தத் தூண்டல் பரிசாகவோ, தண்டனையாகவோ இருக்கலாம். தண்டனையால் குறிப்பிட்ட விரும்பத்தகாத நடத்தையை நிறுத்தி விடலாம்.
“கழனிமாஅத்துவிளைந்துஉகுதீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம்இல் பெருமொழி கூறிதம்இல்
கையும் காலும் தூக்கத்தூக்கும்
ஆடிப்பாவைப் போல
மேவனசெய்யும்,தன் புதல்வன் தாய்க்கே.” (குறுந். 8)
தலைவனின் விரும்பத்தகாத நடத்தையை இப்பாடல் பதிவுசெய்துள்ளது. தன்னிச்சையாகச் செயல்படும் போது வெளிப்படாத நடத்தை நெறிப்படுத்தலால் சாத்தியமாகும். தலைவனின் இழிவான நடத்தை பரத்தையால் எள்ளலுக்கு உள்ளாகும் போது நெறிப்பட வாய்ப்புள்ளது. தொடர்ச்சியாக ஒவ்வொரு நன்னடத்தையையும் நெறிப்படுத்தி வலியுறுத்தி வந்தால் ஒரு கட்டத்தில் அது மனிதரிடம் நிலை கொண்டுவிடும் என்கிறார் உளவியல் அறிஞர் ஸ்கின்னர். பரத்தையின் உரிமை பறிபோகும் சூழலில் தலைவனை இழிவுக்குள்ளாக்கும் செயலில் ஈடுபடுகிறாள்.
சமூகத் தேவைகள்
போர்க்காலச் சமூகத்தில் அரசன் மண்ணைக் காக்கும் பொருட்டு பொருளாதாரா ரீதியாகவும், தொழில் நுட்பத்தின் வாயிலாகவும் மனிதனை மூலதனமாகக் கருதிப் பணி நியமனம் செய்தான். இதற்கு அடுத்த நிலையில் சமுதாயவியல் அக்கரையோடு பணி நியமனம் செய்ய வேண்டிய சூழல் அக்காலச் சமூகத்தில் நிலவியது. வள்ளுவர்,
“குடிப்பிறந்துகுற்றத்தின் நீங்கவடுப்பரியும்
நாணுடையான் கட்டேதெளிவு” (குறள் - 502)
என்றகுறளில், நல்லகுடியில் பிறந்தவனா, குற்றத்திற்கும் பழிச் சொல்லிற்கும் நாணம் உடையவனா என்று அறிந்து பணி நியமனம் செய்ய வேண்டும் என்கிறார். இதனை நடப்புக் காலத்தில் வர்க்கமுரண்பாடு என்கின்றனர். இன்று இட ஒதுக்கீடு என்பது பொருளாதாரப் பின்புலத்தில் சாதியை வகைப்படுத்திப் பிரிக்கப்பட்டது. ஆனால் முன்னோடிய காலங்களில் ஒருகுறிப்பிட்ட இனக்குழு பிற இனக்குழுவோடு இணைந்து வாழும் வாய்ப்பு அதிகமில்லை. எப்படி‘அந்தணர் என்போர் அறவோர்’ என்ற கருத்து முகிழ்ந்ததோ அது போல் பணிநியமனத்திற்கு குடிப்பிறப்பிற்கு அவசியமென்று கருதியிருக்கிறார். பண்டைக் காலம் முதல் நடப்புக் காலம் வரை பணி நியமனத்தில் அரசியல் குறுக்கீடு நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இதை மாற்றவோ, மறைக்கவோ முடியாது.
சமூக ஒழுக்க மாண்புகள்
மனிதனின் வாழ்வியல் கூறுகளில் ஒன்றாக ஒழுக்கம் கட்டமைக்கப்பட்டு கற்பிக்கப்படுகின்றது. இவ்வித நிகழ்வுகள் இயங்கியல் தன்மை கொண்டதாக இருப்பதால், இவை மரபுரீதியான கருத்தாக்கமாக மாறுகின்றன. காலச் சுழற்சியில் மனிதனை எடை போடும் தளமாக மாறியது. இவ்விதத் தளத்தில் இயங்குவதற்று மனிதன் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான். இந்நிலையில் இயங்கும் மனிதனின் செயல்பாடுகளைக் கொண்டு சமூகம் அவனை ஒழுக்கம் சார்ந்தவன், ஒழுக்கம் சாராதவன் என்று மதிப்பிடுகின்றது.
இதனை லீய்ட்டன் “ ஒரு பொது நோக்கை நோக்கி நிலையாகவும் உறுதியாகவும் ஒரு சேர ஈர்க்கும் மனிதக் குழுவின் ஆற்றலே ஒமுக்கம் எனப்படும்” (1) என்கிறார்.
மனிதனை அடையாளப்படுத்தும் கூறுகளில் இல்வாழ்க்கை என்பது ஒன்றாகும். இவ்வித வாழ்க்கையில் முதன்மைப்படுத்தப்படுபவள் பெண். ஆகையால் பெண்ணை மனைத்தக்க மாண்புடையாள் என்கிறார் வள்ளுவர். இவர் இல்லறத்தில் உடைமைப் பொருளாக்கப்படுவதுடன் கணவனின் தனிச் சொத்தாகக் கட்டமைக்கப்படுகிறாள். இக்கருத்தானது நடப்புக் காலத்திலும் இயங்கிக் கொண்டிருக்கின்ற ஒரு நிகழ்வாகும். காலந்தோறும் பெண் நுகர்வுப் பொருளாகக் கட்டமைக்கப்பட்டிருப்பதன் வழி திருவள்ளுவர் பெண்களுக்கான ஒழுக்க நெறிகளை வரையறை செய்வதற்கு முற்படுகிறார். இவ்வித ஒழுக்க நெறிகள் பெண்களிடம் “ நிறை காக்கும் காப்பே காப்பு “ என்று காக்கப்பட்டு போற்றப்பட்டன. இவ்விதச் செயல்பாடுகளுக்குக் காரணம் யாதெனில், பெண் இனத்தின் மீதான ஆண் இனத்தின் நுகர்வுச் செயல்பாடு எல்லை மீறிய நிலையில் இவை தொடர்பான ஒழுக்க நெறிகள் குறித்த விழிப்புணர்வு நடப்புக் காலத்திலும் தேவைப்படுகிறது. வள்ளுவர் இதனை,
“பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்” (குறள்- 146)
என்ற குறளில், பிறன் மனைவியிடம் நெறி கடந்து செல்பவன் பகை, பாவம், அச்சம், பழி என்ற நான்கு வகையான குற்றத்திற்கும் ஆட்படுவான் என்ற கருத்தை முன்வைக்கிறார். ஒழுக்கம் சார்ந்த கருத்தியல் கொண்டு இதனை அணுகும் போது குற்றம் நீங்கிய வாழ்க்கை முறைகள் கொண்டு வாழ்பவன் சமுதாயம், இனம் ஆகியவற்றில் மேம்பாடு அடைகிறான் என்பதை அறியமுடிகிறது.
மனித உரிமை மீறலுக்கான காரணங்கள்
* மதவெறி
* இனவெறி
* சாதி வெறி
* அரசியல் காரணங்கள்
* பொருளாதாரக் காரணங்கள்
* சித்தாந்தப் பாகுபாடு
* எல்லை மீறல்
* பதவி போட்டிக்கான பிரச்சினை
* சுயநலம் போன்றவை
மனித உரிமையின் இன்றைய நிலை
மனித உரிமையின் இன்றைய நிலை மிகவும் மோசமானதாகவும் கொடியதாகவும் உள்ளது. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதைத் தடுத்து நிறுத்தி வெற்றி பெறப் போராட்டங்களும் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
குறிப்புகள்
1. இலக்கியமும் நவீன வாசிப்பும் - சரவணஜோதி, சீ., ப.45
2. ம. திருமலை, ஒப்பிலக்கியம் கொள்மைகளும் பயில் முறைகளும், ப.212
3. க. கைலாசதி, பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும், ப. 120.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.