அவளோர் இளமை கொஞ்சும் பேரழகி. கண்டார் மயங்குகின்ற கவர்ந்திழுக்கும் அழகுக்காரி. தேர்ந்த சிலை வடிக்கும் வல்லுநன், அளவெடுத்துச் செதுக்கிய எழில் மிக்க சிலை, உயிர் பெற்று வந்ததைப் போன்ற உருவத்தாள்.
சீத்தலைச் சாத்தனாரின் வர்ணனைப்படி செல்வதென்றால், ஆணொருவன், ஒழுக்க நெறிகளை எண்ணிக் கொண்டோ அல்லது வேறு என்ன காரணத்தினாலோ, அவளைப் பார்க்காமல், அவள் அழகில் மயங்கால் இருந்தான் என்றால், அவன் ஆண் தன்மை பெற்றவனே இல்லை.
அந்த அழகுச்சிலை ஒத்த கன்னி, அருவிக்கு அருகில் மர நிழலில் தோழியரோடு விளையாடிக் கொண்டிருந்தாள்; விளையாடிக் கொண்டே, தோழியர் அறியாதவாறு, தன் காதலர் வருகின்றாரா என்று அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டும் இருந்தாள்.
அருவியில் நீர் பேரொலியோடு விழுந்து சிதறி வழிந்து ஓடிக் கொண்டிருந்தது. அந்த நீரோட்டத்தில் அளவற்ற மீன்கள் துள்ளி நீந்திக் கொண்டிருந்தன. நிறைய நீர்ப் பறவைகள் பறந்து வந்து மீனைக் கொத்திச் சென்று உண்டு தம் பசியைப் போக்கிக் கொண்டு இருந்தன.
சிரல் என்பது ஒரு சிறு மீன் கொத்திப் பறவை. இப் பறவையைச் சிச்சிலி என்றும் அழைப்பார்கள். துடிப்பு மிகுந்த சிரல் ஒன்று பசியோடு அங்கே பறந்து கொண்டிருந்தது. மீன் கொத்திச் சென்று உண்ணுவதற்காக நீரோட்டத்திற்கு உயரத்தில் தன் இறகுகளை மிக விரைவாக வீசிக் கொண்டு, ஒரே இடத்தில் இருந்து மீனை நோட்டமிட முனைந்தது.
மரத்தடியில் தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்த அழகி திரும்பினாள், காதலர் வந்தாரா என்று பார்க்க! அவள் திரும்பியதும் மின்னலடித்தாற் போன்ற ஒளி தோன்றவே, சிரலின் பார்வை, மரத்தடியின் பக்கம் திரும்பியது.
அட, இரண்டு மீன்கள் அருகருகே கொஞ்சம் உயரத்தில் இருக்கின்றனவே! அவற்றைக் கொத்திச் சென்று உண்ணலாமே! என்று எண்ணி, சிரல் அவளை நோக்கிப் பறந்து வந்தது. அழகியின் கண்களை இரண்டு கயல்களாகவே எண்ணி மயங்கி விட்டது அந்தச் சிறிய சுறுசுறுப்பு மிக்க சிரல்.
அவள் முகத்திற்கு அருகில் பறந்து வந்தது; கண்களாகிய மீன்களைக் கொத்திச் செல்ல ஊக்கத்தொடு முனைந்தது அந்த மீன்கொத்தி! அழகி, இந்தச் சிரல் நம் முகத்தை நோக்கிப் பரந்து வருகிறதே என்று எண்ணிப் புருவத்தை நெரித்து நோக்கினாள்.
அரண்டு மிரண்டு பின் வாங்கியது சிரல்! ஐயோ! அங்கே இரண்டு விற்கள் காவல் காக்கின்றனவே! கொஞ்சநேரம் அங்கேயே இருந்திருந்தால் அம்புக்கு என் உயிரை அல்லவா இழந்திருப்பேன்! என்று தனக்குள் கூறிக் கொண்டே, பின்வாங்கி நடுக்கத்தோடு அச்சின்னஞ்சிறு சிச்சிலி, அங்கிருந்து பறந்து ஓடிப் போனதாம்! அழகியின் புருவத்தைத்தான் விற்களாகக் கருதி அஞ்சி நடுங்கி விட்டதாம் அந்த அறியாப் பறவை!
எப்படி கற்பனை? சமண முனிவர் ஒருவரின் கற்பனை இது!
“நாலும் ரெண்டும் சொல்லுக் குறுதி” என்ற பழமொழி, நாலடியில் எழுதப்பட்ட நாலடியார் நூலையும் இரண்டடியில் எழுதப்பட்ட திருக்குறளையும் போற்றுகிறது. நாலடியாரை எழுதியவர்கள், சமண முனிவர்கள் ஆவர்.
நானூறு வெண்பாக்களைக் கொண்ட நாலடியாரை, ‘நாலடி நானூறு’ என்றும் கூறுவர். அவற்றில் 395ஆம் பாடல்தான் நமக்கு மேலே விரிவாகக் கூறிய காடசியை நம் கண்முன்னே கொண்டு வந்து நம்மை மகிழ்விக்கிறது. அந்தப் பாடல் இதுவே: