எட்டுத்தொகை அக இலக்கியங்களில் அகத்தொடர்புகள்
முனைவர் பொ. இராதாஜெயலட்சுமி
முன்னுரை
அகம் என்பது உள்ளத்தைக் குறிக்கின்றது. உள்ளத்தால் உணரப்பட்டு பிறரிடம் வெளிப்படுத்த இயலாது உள்ளத்திற்குள் நிகழும் தொடர்பு அகத்தொடர்பாகும். மனிதர்களின் சிந்தனை மற்றும் எண்ணத்தின் விளைநிலமாக உள்ளம் திகழ்கின்றது. இவ்வுள்ளம் பல ஆற்றல்களை உள்ளடக்கிய நுண்பொருளாகும். புறத்தில் நிகழும் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் வெளிப்பாடுகள் உள்ளம் சார்ந்தே நிகழ்கின்றது. இவ்வாறு உள்ளம் சார்ந்து நிகழக்கூடிய உள்ளுணர்வுகளைச் சங்க இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. சங்க இலக்கியங்களில் ஒன்றாகிய எட்டுத்தொகையில் இடம் பெற்றுள்ள அக நூல்களாகிய நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள அகத்தொடர்புகளை ஆய்வு செய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
அகம்
அகம் என்ற சொல்லிற்கு உள், மனம், மார்பு, ஞானம், வீடு, பூமி, ஆழம் என்று பலவகையான பொருள்களை அகராதிகள் குறிப்பிடுகின்றன.
“அகப்பொருளாவது, போக நுகர்ச்சியாகலான் அதனான் ஆய பயன்தானே அறிதலின் அகம்” என்று தொல்காப்பியப் பொருளதிகாரம் கூறுகின்றது.
ஒத்த அன்பான ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறு இருந்ததெனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்று நச்சினார்க்கினியர் விளக்கமளிக்கின்றார்.
அக இலக்கியங்களில் தலைவன் தலைவி இருவரிடையே தோன்றும் உணர்வுகளை அகவுணர்வுகள் என்றும், இவ்வுணர்வுகளால் நிகழும் தொடர்புகளை அகத்தொடர்புகள் என்றும், இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக அமைவது பாலுணர்வு என்றும் சங்க இலக்கியங்கள் வரையறை செய்கின்றன. பாலுணர்வு உள்ளம் சார்ந்தவையாக இருப்பினும் அவற்றிற்கான தூண்டுதல்கள் உடல் வழியில்தான் நிகழ்கின்றன. உடல் மன வளர்ச்சியின் பிரதிபலிப்பாய் ஏற்படும் உணர்ச்சி மற்றும் நடத்தைகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். அவற்றை எல்லோர் முன்னிலையிலும் வெளிப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும் போது அவ்வுணர்வுகள் அமுக்கத்திற்கு உள்ளாகி நனவின் தற்காப்புச் செயலுக்குக் கட்டுப்பாடு அடங்கி நடக்கிறது. இவ்வாறு அமுக்கத்திற்கு உள்ளாகிய உணர்வுகள் உள்ளத்திற்குள் தோன்றும் மகிழ்ச்சி, சினம், இரக்கம், அன்பு இன்னும் பிற உணர்வுகள் மற்றும் உள்ளுறுப்புகளின் செயல்பாட்டினாலும், முகக் குறிப்பினாலும், உடல் உறுப்புகளின் அசைவுகளினாலும் வெளிப்படுகின்றன. இவற்றைத் தொல்காப்பியர் ‘மெய்ப்பாடு’ என்று குறிப்பிடுகின்றார். இம்மெய்ப்பாடு எட்டு வகைப்படும் என்பதை,
“நகையே அழுகை இலிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப” (தொல் பொருள் - நூற்பா - 247)
என்ற நூற்பா வழி அறிய முடிகிறது.
அகத்தொடர்பு
மக்களின் வாழ்வைக் கருவாகக் கொண்டு அமைந்த அக இலக்கியங்களில் தலைவன், தலைவி என்று பொதுப் பெயராலேயே குறிக்கப்படுகின்றனர். ஏனெனில் அக வாழ்வு என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். ஒத்த வயதும், தோற்றப் பொலிவும், உணர்வும் உடைய ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஒருவர் பால் ஒருவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டு அகத்துள்ளேயே தொடர்பு நிகழும். இவ்வாறு ஈர்ப்பு ஏற்பட்டுத் தொடர்பு நிகழும் போது, அது காதலாக மலர்கிறது. அவ்வாறு மலரும் போது நண்பர்களின் வாயிலாக ஒருவரை ஒருவர் சந்தித்துக் கூடி மகிழ்வர். இவ்வாறு உணர்வொத்து காதலில் இணைந்த காதலர்கள் இன்பம், துன்பம் ஆகிய இரு நிலைகளிலும் இணைந்தே இருப்பார்கள். சான்றாக,
“பிறப்பே குடிமை, ஆண்மை யாண்டோ
டுருவு நிறுத்த காம வாயில்
நிறைய யருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே” (தொல் பொருள் - நூற்பா - 269)
என்ற தொல்காப்பிய நூற்பா அமைகின்றது.
இவ்வாறு கூடியிருந்து பிரிதல் பொருட்டு, தலைவன் பிரிவால் தலைவியோ, தலைவியின் பிரிவை எண்ணித் தலைவனோ வருந்தும், தன் நெஞ்சிற்கு வருத்தம் நீங்கும் வகையில் அறிவுரையோ ஆறுதலோ கூறுவதாகும். தனக்குள்ளேயே நிகழக்கூடிய இத்தொடர்பை அக இலக்கியங்கள் அகத் தொடர்பு என்று சுட்டுகின்றன.
நற்றிணையில் அகத்தொடர்பு
தலைவியின் அழகில் மதி மயங்கிய தலைவனுக்கு, அவள் நினைவு மீண்டும் மீண்டும் காமத்தைத் தூண்ட அது நோயாக உருப்பெற்றது. அவ்வாறு தோன்றிய காம நோய்க்கு தலைவி விருந்தாக அமையாததால் பலவாறு வருந்திப் புலம்பிய நெஞ்சிற்கு,
“அருந் துயர் அவலம் தீர்க்கும்
மருந்து பிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கே” (நற்றிணை பா.எ - 140)
என்று தலைவன் கூறுவதாகச் சுட்டப்பட்டுள்ளது.
நெஞ்சே தலைவியை இழித்தும், பழித்தும் எண்ணிவிடாதே. எனக்கு ஏற்பட்ட நோய்க்குத் தலைவியே மருந்து என்று தலைவன் தனக்குள்ளேயே தொடர்பு கொள்வதாக அமைந்துள்ளது.
குறுந்தொகையில் அகத்தொடர்பு
காதலுக்கு நாடு, மொழி, இனம் எதுவும் தடையில்லை என்பதை உணர்த்தக் குறுந்தொகைத் தலைவி முடங்கிக் கிடந்து, துன்பப்படுவதை விட முயன்று எழுந்து வெற்றி பெறுவதே மேலென்று எண்ணி,
“வல்வேற் கட்டி நல்நாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்,
வழிபடல் சூழ்ந்திசின், அவருடை நாட்டே” (குறுந்தொகை பா.எ . 11)
என்று தன் நெஞ்சைத் தலைவனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
சங்கு வளையல்கள் நெகிழ்ந்து விழுமாறு தவிக்க விட்டுவிட்டுத் தலைவன் பொருள் தேடச் சென்றுவிட்ட ஒவ்வொரு நாளும், உறக்கமில்லாமல் கலங்கிய கண்ணோடு தனிமைத் துயரால் வருந்திக் கிடக்கக் கூடாது. இப்பொழுதே முற்பட்டு எழுந்து நம் தலைவன் வேற்று மொழி பேசக் கூடிய நாட்டிற்குச் சென்றிருந்தாலும் சரி, அங்கு சென்றடைவதே சிறப்பென்று தலைவி தன் நெஞ்சை ஆற்றுப்படுத்துகிறாள்.
ஐங்குறுநூற்றில் அகத்தொடர்பு
தலைவியைக் காப்பதே உயிரினும் மேலானது என்று உலகைப் பற்றிக் கவலை கொள்ளாது, பொருள் தேட காட்டு வழியில் நெடுந்தொலைவு சென்ற தலைவன் மேலும் செல்லாது மீளக்கருதித் தன் நெஞ்சிடம்,
“அழுத கண்ணள் ஆய்நலம் சிதையக்
கதிர் தெறு வெஞ் சுரம் நினைக்கும்,
அவிர் கோல் ஆய்தொடி உள்ளத்துப் படரே” (ஐங்குறுநூறு - பா. எ - 330)
என்று கூறுவதாக அமைந்துள்ளது.
நம் காதலி நாம் சென்ற காட்டு வழியின் கொடுமைகளை எண்ணி கண்ணீர் சிந்திக் கொண்டிருப்பாள். நாம் கடமை கருதி மேலும் நெடுந்தொலைவு பிரிந்து சென்றால், நம் பிரிவிற்காக வருந்தும் போது, அவள் அழகு நலன்கள் கெட்டுவிடும் உலகைப் பற்றிக் கவலை கொள்ளாது, தலைவியின் உறுப்புநலன்களைப் பாதுகாப்பதே நம் கடமை என்று தலைவன் கூறுகிறான்.
கலித்தொகையில் அகத்தொடர்பு
மனித வாழ்விற்கு நம்பிக்கையே மூலதனமாகும். அவ்வகையில் தலைவன் தன்னோடு கூடி மகிழ்ந்திருந்து நீங்கிய பின் வருந்திய தலைவி தன் நெஞ்சிற்கு அவன் தன்மையை எடுத்துக் கூறி நம்பிக்கையூட்டுவதை,
“ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ -
ஓர்வு உற்று ஒருதிறம் ஒல்காத நேர்கோல்
அறம்புரி நெஞ்சத்தவன்” (கலித்தொகை - பா.எ - 42)
என்ற பாடல் புலப்படுத்துகிறது.
நம் தலைவன் தன்னுடைய கொடைத் தன்மையை அறிந்து நாடி வந்தவர்களுக்குத் தனது தேரையும் கொடுக்கக் கூடிய கைகளை உடையவன். இவ்வளவு மென்மையான உள்ளம் கொண்ட நம் தலைவன் காம நோயால் வருந்தித் தவிக்கும் அளவிற்கு நம்மை மணந்து கொள்ளாமல் காலம் தாழ்த்தமாட்டான் என்று வருந்தும் தன் நெஞ்சிற்கு நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளது.
அகநானூற்றில் அகத்தொடர்பு
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதை உணர்ந்த நெஞ்சம் பொருள் தேடத் தூண்டுகிறது. ஆனால், தலைவனோ பொருளை எப்பொழுது வேண்டுமானாலும் தேடிப் பெற்றுக் கொள்ளலாம் என்று எண்ணியவனாய் தன் நெஞ்சிடம்,
“நல் நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர்,
துன் அருங் கானம் துன்னுதல் நன்று எனப்
பின்னின்று சூழ்ந்தனை ஆயின், நன்று இன்னாச்
சூழ்ந்திசின் - வாழிய நெஞ்சே!” (அகநானூறு - பா.எ - 77)
என்று கூறுகிறான்.
நெஞ்சமே! நம் தலைவியின் நெற்றியில் பசலை படர பிரிந்து சென்று, பொருளீட்ட எண்ணிக் காட்டையும் கடந்து செல்வது நன்று என நினைத்தாயானால், நீ எனக்குக் கேடு நினைத்ததாய் ஆகிவிடும். ஆதலால், நீ எனக்குக் கேடு நினைக்காமல் வாழ்வாயாக என்று கூறுவதாக அமைந்துள்ளது.
முடிவுரை
உணர்வுகள் என்பது எப்போதும் எக்காலத்தும் மாறாத ஒன்றாகும். சங்கச் சான்றோர்கள் வீரம், நம்பிக்கை, உறுதி, முயற்சி, கடமையைக் கண்னெனப் போற்றிய திறம், உள்ளுணர்வுக்கு மதிப்பளித்தச் சிறப்பு இவையெல்லாம் நம்மை சிந்தை நெகிழ வைக்கின்றன. இவ்வாறு சங்கச் சான்றோர்கள் வாழ்ந்து அனுபவித்து உணர்ந்த உண்மைகளையும் உணர்வுகளையும் பதிவு செய்து வைத்து சென்றுள்ளனர். அவை இன்று சங்க இலக்கியங்களாக மிளிர்கின்றன என்பதை அறிய முடிகிறது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.