Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            ISSN  2454-1990
muthukamalam
உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.

முத்து: 12 கமலம்: 24
உள்ளடக்கம்

சமையல்

அசைவச் சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

கலித்தொகையில் நகை மெய்ப்பாடுகள்

முனைவர் ப. சுதா
தென்னமநாடு (அ), ஒரத்தநாடு (வ), தஞ்சாவூர்-614625.


அமிழ்தினும் இனிய தமிழ்மொழியின் தனிச் சிறப்பே அதில் அமைந்துள்ள பொருள் இலக்கணமாகும். அப்பொருள் இலக்கணத்தில் அகம், புறம் என்னும் இருதிணை வடிவமைப்பும் தமிழ்மொழி ஒன்றில் மட்டுமே காணப்படுகின்றது. இவ்வக வாழ்வுக்கும் புறவாழ்வுக்கும் பொதுவான மெய்ப்பாடுகளுள் ஒன்றான நகை என்னும் மெய்ப்பாடு கலித்தொகையில் எவ்வாறு இடம்பெற்றுள்ளன என்பதைக் காண்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

மெய்ப்பாடு - விளக்கம்

மெய்ப்பாடு என்பது மெய்யின்கண் தோன்றும் மாறுபாடுகள் அல்லது உணர்ச்சி வெளிப்பாடுகள் எனலாம். இளம்பூரணர், “மெய்யின்கண் தோன்றுதலின் மெய்ப்பாடாயிற்று” என்கிறார். பேராசிரியர், “உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்கும் புலப்படுவதோ நாற்றான் வெளிப்படுதல்” என்கிறார். தொல்காப்பியர் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டு மெய்ப்பாடுகளை அடிப்படை மெய்ப்பாடுகளாகக் கூறுகிறார். இதனை,

“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்
றப்பாலெட்டும் மெய்ப்பா டென்ப” (தொல்.பொருள்.மெய்ப்.நூ.247)

என்னும் நூற்பாவின் மூலம் அறியமுடிகின்றது. அவரே, இந்த எட்டு மெய்ப்பாடுகளும் எங்கெங்குத் தோன்றும் என்பதைத் தனித்தனியாகக் குறிப்பிட்டுள்ளார். அதாவது மனித உடலசைவு மொழிகள் பல்வேறு வகையினதாக மனிதனிடத்தே பரிணமிக்கின்றன. இந்தப் பரிணமித்தலை வகைப்படுத்தி அதனை மானுட அறிவியலாகத் தொல்காப்பியர் தந்துள்ளார்.நகை

“இடுக்கண் வருங்கால் நகுக” என்றார் வள்ளுவர். மனிதர்கள் பொன்நகையினால் தங்கள் முகங்களை அலங்கரிப்பதைக் காட்டிலும் புன்னகையினால் அலங்கரித்தல் சிறந்தது. “வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது முதுமொழி. பரபரப்பான இன்றைய வாழ்க்கைச் சூழலில் மனிதர்க்கு எல்லாவற்றிற்கும் நேரம் இருக்கிறது. ஆனால், சிரிப்பதற்கு மட்டும் நேரமில்லை. அதன் விளைவு மன இறுக்கம், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் முதலான நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

தொல்காப்பியர் சிரிப்பின் முக்கியத்துவத்தைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உணர்ந்து நகை என்றவொரு மெய்ப்பாட்டை அமைத்துள்ளார். நகை, எள்ளல், இளமை, பேதைமை, மடன் என்ற நான்கு பொருள் பற்றி வருவதனை,

“எள்ளல் இளமை பேதைமை மடனென்று
உள்ளப் பட்ட நகைநான் கென்ப” (தொல்.பொருள். மெய்ப்.நூ.248)

என்னும் நூற்பாவின் மூலம் அறியமுடிகின்றது. நகை என்பதற்குப் பேராசிரியர், நகை என்பது சிரிப்பு அது முறுவலித்து நகுதலும், அளவே சித்தலும், பெருகச் சிரித்தலும் என மூன்று வகைப்படும்” என்று விளக்கம் தருகிறார்.

எள்ளல்

எள்ளல் என்பது எள்ளி நகையாடுவது ஆகும். இதனைக் கேலிமொழி என்றும் கூறுவதுண்டு. இது பிறரைப் புண்படுத்தாத வண்ணம் விளையாட்டாகக் கூறப்படுவதாகும். பிறரது செயலைக் கண்டு எள்ளும்போது பிறரால் எள்ளப்பட்ட வழியும் நகை பிறக்கும். இளம்பூரணர், “எள்ளல் என்பது நகைப்படு பொருள் கண்டதன் வழி முறுவலோடு வரும். மகிழ்ச்சிப் பொருள் எள்ளல் காரணமாக வரும்” என்கிறார்.

தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தைக் கண்டு தலைவி எள்ளி நகையாடுவதை,

“இனிப்புணர்ந்த வெழினல்ல ரிலங்கெயி றுறாஅலி
னனிச்சிவந்த வடுக்காட்டி நாணின்றி வரினெல்லா” (மரு.க.2:14-15)

என்னும் கலித்தொகை பாடலின் மூலம் அறியமுடிகின்றது. இனிதாக்கக் கூடிய அழகினையுடை பரத்தையரின் பற்கள் பதிந்த சிவந்த வடுக்களைக் காட்டி நாணமின்றியே வருவான் எனத் தலைவனின் தீய ஒழுக்கத்தை எள்ளி நகையாடுவதன் மூலம் தலைவிக்கு எள்ளல் காரணமாக நகை தோன்றுகின்றது.

தலைவனது பரத்தமை ஒழுக்கத்திற்குத் துணை போகும் பாணனைத் தலைவி எள்ளி நகையாடுவதை,

“சேரியாற் சென்றுநீ சேர்ந்தவில் வினாயினன்
றேரொடு திரிதரும் பாகனைப் பழிப்பேமோ” (மரு.க.3:16-17)என்னும் கலித்தொகை பாடலின் மூலம் அறியமுடிகின்றது. இதில், பரத்தையர் இருக்கும் சேரியிலே சென்று ஒவ்வொரு வீடாகப் போய் நீ இருக்கும் இடம் தெரியாமல் கேட்டுக் கேட்டுத் தேரோடு திரியும் உன்னுடைய பாகனைக் கண்ட நாங்கள் குறை கூறுவோமோ? எனத் தலைவி தலைவனிடம் கூறுவதன் மூலம் தலைவிக்கு எள்ளல் காரணமாக நகை வெளிப்படுகின்றது. இதுபோல்,

“நகைஆ கின்றே தோழி நெருநல்
மணிகண் டன்ன துணிகயம் துளங்க
இரும்புஇயன் றன்ன கருங்கோட்டு எருமை
ஆம்பல் மெல்அடை கிழிய, குவளைக்
கூம்புவிடு பல்மலர் மாந்தி கரைய
காஞ்சி நுண்தாது ஈர்ம்புறத்து உறைப்ப
மெல்இடு கவுள அய்குநிலை புகுதரும்
கண்துறை ஊரன் திண்தார் அகலம்
வதுவை நாள் அணிப் புதுவோர்ப் புணரிய
பரிவோடு வரூஉம் பாணன் தெருவில்
புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி யாழ்இட்டு
எம்மனைப் புகுதந்தோனே, அது கண்டு
மெய்ம் மலி உவகை மறையினென் எதிர்சென்று
இம்மனை அன்று அஃது உம்மனை என்ற
என்னும் தன்னும் நோக்கி
மம்மர் நெஞ்சினோன் தொழுதுநின் றதுவே” (அகம்.56)

என்னும் அகநானூற்றுப் பாடலில், தலைவி, நேற்றுத் தலைவனைத் தேடிவந்த பாணனால் எனக்குக் குறையாத நகைப்பு ஏற்பட்டது. எவ்வாறென்றால் தெளிந்த குளம் கலங்கக் கரிய பெரிய கொம்பையுடைய எருமை மாடு நீரில் இறங்கி ஆம்பலின் இலைகளைக் கிழித்து குவளை மலர்களைத் தின்று குளக்கரையில் உள்ள காஞ்சிப் பூக்களின் மகரந்தத்தைப் பெற்று அசைந்தாடி, கொட்டிலுக்கு வந்து சேர்கின்ற நீர்த்துறை ஊரனாகிய தலைவனைப் பரத்தையுடன் சேர்க்க விரும்பி வந்தான் பாணன். வந்தவன் சமீபத்தில் கன்று ஈன்ற பசு, தன்னை நோக்கிப் பாய்ந்ததால் கலக்கமுற்றுப் பயந்து யாழினைக் கீழே போட்டு அச்சத்துடன் நம் வீட்டில் புகுந்தான். அதைப் பார்த்து மனத்துள் மகிழ்ந்த நான், அவன் முன் சென்று உன் இல்லம் இதுவன்று என்று கூறினேன். மயங்கிய நெஞ்சை உடையவனாய் என்னையும் தன்னையும் நோக்கித் தொழுது நின்றான். அந்நிலையை நினைத்தால் எனக்கு நகை தோன்றுகிறது என்கிறாள். இதில் தலைவிக்கு எள்ளல் காரணமாக நகை தோன்றியதை அறியமுடிகின்றது.

இளமை

இளமை என்பது குழந்தைத் தன்மையாகும். அக்குழந்தை கூறும் மழலைப் பேச்சைக் கேட்கும் போது கண்டிப்பாக நகை தோன்றும். பேச்சு மட்டுமல்லாமல் அது செய்யும் குறும்புத்தனமும் நகையை உண்டாக்கும் குழந்தையின் மழலைக் காரணமாக இன்பம் உண்டாவதை வள்ளுவர்,

“குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்” (குறள்.66)

என்னும் குறளில் குறிப்பிட்டுள்ளார். இளமை என்பதற்கு இளம்பூரணர், “குழவிக் கூறும் மழலைச் சொல்லும், இளமைப் பொருளாயிற்று” என்று விளக்கம் தருகிறார்.புதல்வனின் இளமைக் காரணமாக நகை தோன்றுவதை,

“திறனல்ல யாங்கழற யாரை நடுமிம்
மகனல்லான் பெற்ற மகன்” (மரு.க.21:26-27)

என்னும் கலித்தொகை பாடலின் மூலம் அறியமுடிகின்றது. இதில் தலைவன் வந்ததை அறியாமல் புதல்வனை நோக்கி உன்னுடைய தந்தையைப் போல் திறனல்லாத செயல்களைச் செய்யாதே என்று சொல்ல மகன் தன்னுடைய தாயை நோக்கிச் சிரிக்கின்றான். இதன் மூலம் இளமை காரணமாக நகை தோன்றுவதை அறிய முடிகின்றது. இதுபோல்,

“உண்டுமகிழ் தட்ட மழலை நாவின்
பழஞ் செருக்காளர் தழங்கு குரல் தோன்ற” (மது.கா.668-669)

என்னும் மதுரைக்காஞ்சிப் பாடலடிகளில் கள்ளை உண்டவர்கள் களிப்பினைத் தம்மிடத்தே இருக்கச் செய்ய மேன்மேலும் கள்ளை உண்டனர். ஆகையால் மழலை ஒலிபோல் வார்த்தைகளைப் பேசினர் எனக் கூறுவதன் மூலம் இளமைக் காரணமாக நகை தோன்றுவதை அறியமுடிகின்றது.

பேதைமை

பேதைமை என்பது அறிவில்லாமல் செய்யும் செயல் ஆகும். இதனை அறிவின்மை என்றும் கூறுவர். பொதுவாகக் கூறின் வாழ்க்கையின் இன்றியமையாது அறிய வேண்டியவற்றை அறியாதிருத்தல் ஆகும். பேதைமை என்பதற்கு இளம்பூரணர், “கேட்டதனை உய்த்துணராது “மெய்யாகக்கோடல்‘’ என்கிறார். பேராசிரியர், “பேதைமை என்பது அறிவின்மை” என்கிறார். ச.வே.சுப்பிரமணியன், “பேதைமை என்பது அறியாமை” என்று விளக்கம் தருகிறார்.

தலைவன் உண்மையான செல்வம் பொருள்தான் என்று கூறுவதன் மூலம் தலைவனது பேதைமை காரணமாகத் தோழிக்கு நகை தோன்றுவதை,

“பொருள் அல்லால் பொருளும் உண்டோ? என, யாழநின்
மருளிகொள் மட நோக்கம், மயக்கப்பட்டு அயர்த்தாயோ?” (பா.க.13:10-11)

என்னும் கலித்தொகை பாடலின் மூலம் அறியமுடிகின்றது. தோழித் தலைவனை நோக்கிப் பொருளே உண்மையான செல்வம் என்றும் வேறு செல்வம் கில்லையென்றும் அறியாமையில் ஆழ்ந்து கிடக்கும் உன் அறிவு, உன்னை மயக்க, அதன் வலையில் அகப்பட்டு நீ அன்பை மறந்து விட்டாயோ? என்பதன் மூலம் தலைவனின் பேதைமை காரணமாகத் தோழிக்கு நகை தோன்றுகின்றது.மடன்

மடன் என்பது எதைக் கூறினாலும் எளிதில் நம்புவது ஆகும். பிறர் சொல்லுவதை அறிந்து கொண்டாலும், தான் அறிந்ததைப் பிறருக்கு விளங்கக் கூறத் தெரியாததாகும். எது கூறினாலும் ஆராய்ந்து பார்க்காமல் அப்படியே நம்பி விடுவதே மடமையாகும். மடன் என்பதற்கு இளம்பூரணர், “பொருண்மை யறியாது திரியக்கோடல்” என்கிறார் சோமசுந்தர பாரதியார், “மடம் - ஏழ்மை அதாவது ஆராயது, ஐயுறாது நம்புமியல்பு” என்கிறார்.

தலைவி தலைவனின் மடமை தன்மையைத் தோழியிடம் கூறி நகையாடுவதை,

‘வதுவை யயர்வாரைக் கண்டு மதியறியா
வேழையை யென்றகல நக்குவந் தீயாய் நீ” (முல்.க.14 :4-5)

என்னும் கலித்தொகை பாடலின் மூலம் அறியமுடிகின்றது. இதில், உன் காதலியை யாருக்கோ மணம் செய்து கொடுக்கப் போவதை அறியமுடியாத நிலையில் உள்ளாயோ? அந்த திருமணத்தைத் தடுத்து, அவளை மணந்து கொள்ளும் வழியை அறியாத அறிவற்றவனாய், கோழையாய் உள்ளாயோ? என்று தலைவனைக் கண்டு நகையாடிவிட்டு வா எனத் தலைவி தோழியிடம் கூறுவதன் மூலம் தலைவனின் மடமையால் தலைவிக்கு நகை தோன்றுவதை அறியமுடிகின்றது.

முடிவுரை

தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில் மாந்தரின் மெய்ப்பாடு உணர்வுகளைத் தொல்காப்பியர் மிகத் துள்ளியமாகவும் நுட்பமாகவும் விளக்கியுள்ளார். மெய்ப்பாடு என்பது மெய்யின் கண் தோன்றல், பொருட்பாடு வெளிப்படுத்தல் போன்ற பொருட்கள் உரையாசிரியர்களின் வாயிலாக வெளிப்படுகின்றன. இத்தகைய மெய்ப்பாடுகளுள் ஒன்றான நகை மெய்ப்பாட்டைக் கலித்தொகையில் பொருத்திப் பார்க்கும் போது கவிஞரின் அறிவு நுட்பம் புலப்படுகின்றது. மேலும், இலக்கியங்கள் உணர்ச்சிக்கு ஆட்பட்டவை என்பது புலனாகிறது.

பார்வை நூல்கள்

1. சோமசுந்தர பாரதியார் (1975), தொல்காப்பியப் பொருட்படலம் புத்துரை மெய்ப்பாட்டியல், நாவலர் புத்தக நிலையம், மதுரை.

2. திருக்குறள் பரிமேலழகர் உரை (2002), சாரதா பதிப்பகம், சென்னை.

3. ந. சி. கந்தையா உரை (2008), செவ்விலக்கியக் கருவூலம் அகநானூறு, தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.

4. ந. சி. கந்தையா உரை (2008), செவ்விலக்கியக் கருவூலம் பத்துப்பாட்டு, தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.

5. ச. வே. சுப்பிரமணியன், (2009) தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளக்கோவை, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.

6. இளம்பூரணர் உரை (2010), தொல்காப்பியம், சாரதா பதிப்பகம், சென்னை.

7. இரா. மணியன் உரை (2010), கலித்தொகைக் காட்சிகள், கவின்மதி பதிப்பகம், சென்னை.

8. கு. சுந்தரமூர்த்தி (2012), தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியர் உரை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p152.html


ISSN 2454 - 1990
UGC Journal No. 64227
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License