அகராதியியல் நோக்கில் தொல்காப்பிய உரியியல்
இரா. செந்தில்குமார்
முன்னுரை
தமிழின் இலக்கிய இலக்கண இயல்புகளை நுண்மையாக ஆராய்ந்து உள்ளது உள்ளவாறு எடுத்தியம்பிய தமிழ்ச் சான்றோர் பலர் இவ்வுலகில் வாழ்ந்துள்ள போதும் அவர்களின் பருந்துப் பார்வையினின்றும் தப்பிய தமிழின் மேன்மைகளைக் காலப்போக்கில் ஆய்வுலகம் தான் எதிர்கொள்ளும் புதியக் கருத்தனுபவங்களிலிருந்து இனங்கண்டிருக்கிறது. எனவே, ஆய்வில் புதிய முடிவுகளுக்கு வழிவகுத்தது ஒப்பியல் ஆய்வென்று துணியலாம்.
தமிழின் மீதும் தமிழர் பண்பாட்டின் மீதும் மாளாத பற்று கொண்ட நம்மவருள் சிலர் தமிழும் தமிழர் பண்பாடுமே மேலானது என்று துணிவர். அப்பெருமக்களிடம் தமிழிலக்கிய இலக்கணங்களை மேலை நாட்டாரின் இலக்கிய இலக்கணங்களோடு ஒப்பிட்டு மேற்கத்திய இலக்கணக் கொள்கைகள் தமிழில் அதன் அங்கமாய் மிகப் பழங்காலந்தொட்டே பின்பற்றப்பட்டிருக்கிறது என்பதைக் கூறின், மேற்கத்திய இலக்கணங்களோடு ஒப்பிட்டு அதன்வழி தமிழை உயர்த்துவதும் ஒருவித தாழ்வு மனப்பான்மை என்று கருதுகின்றனர். அப்பெருமக்களின் கருத்தும் உண்மையே. எனினும், தமிழின் தன்மையை அறியாதோருக்கும், தமது நாட்டு இலக்கியக் கொள்கைகளால் இறுமாந்திருப்போருக்கும் தமிழின் செம்மையினையும் தனித்தன்மையினையும் எடுத்துக்கூறுவதோடு பிற மொழி வளத்திற்கு தமிழின் வளம் பல்வகையிலும் இணையானது எனக் காட்டவும் தமிழைப் பிற மொழியோடு ஒப்பிட்டு நோக்க வேண்டியுள்ளது. மேலும் ஆய்வுலகின் பார்வையைப் புதிய கண்கொண்டு விரிந்ததாக்கி பின்னர் ஆழ்ந்து நோக்கச் செய்வதற்கும் இவ்வொப்பியல் ஆய்வு பயன்படும் எனலாம். எனவே, தமிழ் மொழியோடு மேற்கத்திய மொழிகளின் ஒப்பீடு என்பது தாழ்வு மனப்பான்மையால் அல்ல, தமிழின் தனித்தன்மையையும், அதன் இலக்கண வளத்தையும் உலகுக்குணர்த்தும் முயற்சியாகக் கொள்ளலாம்.
1. தொல்காப்பியமும் பொருண்மையியலும்
தொல்காப்பியம் தமிழில் கிடைத்த இலக்கண நூல்களுள் மிகவும் தொன்மையானதாய் இருப்பினும் அதன் அணுகுமுறைகள் தற்கால நவீன மொழியியல் அணுகுமுறைகள் பலவற்றுடன் தொடர்புடையனவாக உள்ளன. மொழிக்கூறுகளின் பொருண்மை வெளிப்பாடு இன்றி கருத்துப்பரிமாற்றம் நிகழமுடியாதென்பதால் மொழியாராய்ச்சியில் பொருண்மையாராய்ச்சி (பொருண்மையியல்) முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது குறித்து தொல்காப்பியத்துள் தனியாக இயல் வகுக்கப்படவில்லை எனினும் பொருண்மை தொடர்பான செய்திகள் பல்வேறு இயல்களில் ஆங்காங்கே கூறப்பட்டுள்ளன.
பொருண்மையியலைச் சார்ந்து பயன்பாட்டு மொழியியலின் ஓர் அங்கமாக அகராதியியல் விளங்குகிறது. அகராதியியலை சொற்பொருண்மையியலின் பயன் என்றும் கூறுவர். இத்தகைய அகராதியியல் (Lexicography) பொதுவாக இரண்டு பிரிவுகளைக் கொண்டது. அவற்றுள் ஆக்கமுறை அகராதியியல் (Practical Lexicography) என்பது அகராதிகளை உருவாக்குதலும் ஏற்கனவே எழுதப்பட்ட அகராதியில் மாற்றங்கள் தேவைப்படின் அவற்றைப் புகுத்தி வெளியிடுவதும் ஆகும். கோட்பாட்டு அகராதியியல் (Theoretical Lexicography) என்பது மொழியில் காணப்படும் சொற்களின் பொருண்மையமைப்பு, தொடரமைப்பு, பதிலீட்டமைப்பு அடிப்படையிலான தொடர்புகள் (Semantic, Syntactic and Paradigmatic relationship) குறித்துப் பகுத்தாராய்ந்து முடிவுகளைக் காண்பதாகும். இக்கட்டுரை இவ்விரு வகை தற்கால அகராதியியல் கூறுகளையும் தொல்காப்பிய உரியியலில் இனங்காண முயல்கிறது.
2. உரியியலும் அகராதிக்குரிய சொற்களும்
உரியியலின் முதல் நூற்பா அகராதியியலின் முக்கிய அடிப்படையை எடுத்துக் கூறுகின்றது. சொற்பொருள் விளக்கம் அளித்தல் முதன்மை நோக்கமாக ஒருபுறம் இருப்பினும், எத்தகையச் சொற்களுக்குப் பொருள் விளக்கத்தில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும், அவற்றின் பொருள் விளக்கப்படும் முறை எவ்வாறு அமைதல் வேண்டும் என்பனவற்றை விளக்குவனவாக அந்நூற்பா உள்ளது.
1. பெயர் வினை மயக்கம் தரும் சொற்கள் (மலர், மலர்)
2. ஒரு சொல் பலபொருள் (படி – படி (Step), படித்தல் (read), படி( measurement))
3. பல சொல் ஒரு பொருள் (கூறு, சாற்று, நவில், பறை, பகர்)
4. வழக்கில் இல்லாத சொற்களின் பொருளை வழக்கில் உள்ள சொற்களைக் கொண்டு விளக்குதல் (கடி – கூர்மை, புதுமை, விரைவு)
இச்செய்திகள் தொல்காப்பிய உரியியலின் முதல் நூற்பாவில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவை தற்கால அகராதிகளில் பின்பற்றப்படும் சொற்பொருள் விளக்க நெறிமுறைகளோடு ஓரளவு ஒப்புமையுடையது எனலாம்.
"உரிச்சொல் கிளவி விரிக்குங் காலை
இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றிப்
பெயரினும் வினையினும் மெய் தடுமாறி
ஒரு சொல் பலபொருட்கு உரிமை தோன்றினும்
பலசொல் ஒரு பொருட்கு உரிமை தோன்றினும்
பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தித்
தத்தம் மரபில் சென்று நிலை மருங்கின்
எச் சொல்லாயினும் பொருள் வேறு கிளத்தல்" (தொல். சொல்.782)
3. உரியியல் – நிகண்டு – அகராதி
அரிய சொற்களுக்குப் பொருள் விளக்கம் பெறுவதற்காகப் பெரும்பாலும் அகராதிகள் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வகையில் தமிழில் தோன்றிய அகராதிகளின் முதல் நிலையாக நிகண்டுகளைக் கொள்ளலாம். மேலும் உரியியல் நூற்பாக்கள் பலவற்றை நோக்கும்போது அவை அரிய சொற்களுக்குப் பொருள் விளக்கம் தருவனவாக அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது. இது பிற்காலத்தே தோன்றிய நிகண்டுகள் செய்யுள் வடிவில் சொற்பொருள் விளக்கம் தந்ததோடு ஒப்புமையுடையதாக இருப்பதைக் காணமுடிகின்றது.
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள், ”அகராதி என்பது அதன் உருவிலும் உள்ளடக்கத்திலும் மேலைத்தேய பண்பாடு வழிவந்ததாகும். தமிழ் மரபில் நிகண்டு முறைமையே உண்டு. அம்முறையினுள் அகராதியில் கிடைப்பன போன்ற சொல்லுக்கான கருத்து தரப்படாது. மாறாகச் சொற்கள் தொகுதிகளாகத் தரப்படும். சிவனுக்குரிய பெயர்கள், கடலுக்குரிய பெயர்கள் என தொகுதி முறையிலேயே வரும். உண்மையில் ஆங்கில மரபுப்படி இவை ஒரு பொருளுக்கான பல பெயர்கள் (Synonymy) என்றே கொள்ள வேண்டும்.” என்று கூறுவதாக யாழ்ப்பாண அகராதி ஓர் அறிமுகம் என்ற கட்டுரையில் மேற்கோள் எடுத்தாளப்பட்டிருக்கிறது. சொற்களை அகரவரிசைப்படுத்திப் பொருள்விளக்கம் தருவதாக அகராதி நிகண்டு சதுரகராதிக்கு முன்பே தமிழில் தோன்றியிருப்பதும் இங்கு சிந்திக்கத்தக்கது. உரைநடை முறையில் எழுந்த முதல் அகராதியாக வேண்டுமானால் சதுரகராதியைக் கொள்ளலாம். மேலைநாடுகளில் பதினாறாம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான் அகராதிகள் தோன்றியதாகக் குறிப்பிடுவர். ஆனால் தமிழ் மரபில் அதற்கு முன்பே அகராதி நிகண்டு சொற்களை அகரவரிசைப்படுத்தி விளக்கியிருப்பதும் சிந்திக்கத்தக்கது.
இதன்வழி உலக அகராதிகளுக்கு முன்னோடியாக வடமொழி மரபைப் பின்பற்றித் தமிழில் தோன்றிய நிகண்டுகளைக் குறிப்பிடினும், நிகண்டுகளுக்கும் முன்னோடியாகத் தமிழ் மரபில் சொற்பொருள் விளக்கம் தரும் முறை மிகப் பழங்காலந்தொட்டே இருந்திருப்பதைத் தொல்காப்பிய உரியியலின் வழி தெளியமுடியும். எனவே உரியியலை நிகண்டுகளுக்கும் முன்னோடியாகக் கொள்ளலாம்.
4. அரிய சொற்களும் பொருள் விளக்கமும்
வெளிப்படையாகப் பலரும் அறிந்து வைத்திருக்கும் சொற்களுக்குப் பொருள் விளக்கம் தருதலை நீக்கி, பயன்பாட்டில் இல்லாத அல்லது பயன்பாடு குறைந்த சொற்களுக்கு உரிச்சொல் தகுதியளித்து அவற்றிற்குப் பொருள் விளக்கம் தரவேண்டும் என்று உரியியலுள் குறிக்கப்படுவதைக் காணமுடிகின்றது. இக்கருத்தும் தற்கால அகராதியியலுக்கு ஓரளவு பொருந்தக்கூடியதாகும்.
"வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா
வெளிப்பட வாரா உரிச்சொல் மேன" (தொல். சொல். 783)
தற்கால மொழி அகராதிகளில் எளிய சொற்களுக்கும் பொருள் விளக்கம் தரப்படுகின்றது. ஆய்வாளர்கள், பணிபுரிவோர், பள்ளி மாணவர்கள், இரண்டாம் மொழிக் கற்பவர்கள் என்று பலரையும் கருத்தில்கொண்டு தற்காலத்தே அகராதிகள் எழுதப்படுவதால் வெளிப்படையான சொற்களுக்கும் அகராதியில் இடம் தர வேண்டியிருக்கிறது. அதனால்தான் கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி போன்றவற்றில் தற்கால வழக்குச் சொற்கள் இடம்பெறுவதைக் காணமுடிகின்றது.
உரியியலில் பல்வேறு நூற்பாக்கள் சொற்பொருண்மை விளக்கம் தருவதாக அமைகின்றன. உரு என்பது அச்சம் என்றும் புரை என்பது உயர்வு என்றும் மல்லல் என்பது வளம் என்றும் ஏ என்பது பெற்று என்றும் வம்பு என்பது நிலையின்மை என்றும் பொருள் தருவதாக உரியியல் நூற்பாக்களில் குறிக்கப்படுகின்றன. இவை போன்று மேலும் பல சொற்பொருள் விளக்கங்கள் பல நூற்பாக்களில் தரப்படுகின்றன.
"உரு உட்கு ஆகும் புரை உயர்பு ஆகும்" (தொல். சொல். 785)
"மல்லல் வளனே ஏ பெற்றாகும்" (தொல். சொல். 788)
"வம்பு நிலையின்மை" (தொல். சொல். 810)
5. சொற்களஞ்சியம் (Thesaurus)
சொற்களஞ்சியம் தற்காலச் சிறப்பு அகராதிகளில் ஒன்றாக வைத்து எண்ணப்படுகின்றது. சொற்களஞ்சியம் எனப்படுவது பொருண்மையால் தொடர்புடைய சொற்களைத் தொகுத்துத் தருவதாகும். ஒருபொருள் குறித்த பலசொற்களும் (Synonym), ஒரே மாதிரியான பொருளைக் குறிக்கும் பல சொற்களும் (Identical Synonym) ஒவ்வொரு தலைச்சொல்லின் கீழோ அல்லது ஒரு பொதுப்பொருண்மையைக் குறிக்கும் சொல்லின்கீழோ தொகுக்கப்பட்டிருக்கின்றன. தொல்காப்பியம் ஒருபொருள் குறித்த பலசொற்களைப் பொருண்மைக் களங்களாகப் பிரித்து விளக்கியிருப்பதன் மூலம் சொற்களஞ்சிய அணுகுமுறைக்கானதொரு பார்வை தொல்காப்பியத்துள் இருப்பதைக் காணமுடிகின்றது.
"அவைதாம்
உறு தவ நனி என வரூஉம் மூன்றும்
மிகுதி செய்யும் பொருள என்ப" (தொல். சொல். 784)
"குருவும் கெழுவும் நிறனாகும்மே" (தொல். சொல். 786)
"செல்லல் இன்னல் இன்னாமையே" (தொல். சொல். 787)
"அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கம் செய்யும்" (தொல். சொல். 799)
ஒரு பொருண்மைக்களத்தின் கீழ் உள்ளடக்கப்படும் சொற்கள் யாவும் மற்றொரு பொருண்மைக்களத்தின்கீழும் உள்ளடக்கப்படலாம் என்பதால் அதுவும் தொல்காப்பியத்துள் சுட்டப்படுகின்றது.
6. ஒருபொருள் குறித்த பலசொல்லும் ஒப்புருச் சொல்லும்
தட என்ற சொல் கய, நளி ஆகிய சொற்களைப் போன்று பெருமை என்ற பொருளில் பயன்படுவதாகவும் (நூற்பா. 803) பின்னர் அச்சொல் கோட்டம் (வளைவு) என்ற பொருளில் பயன்படுவதாகவும் (நூற்பா. 804) குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறே நளி என்பதும் செறிவு என்ற பொருளைத் தரும் (நூற்பா. 806) என்று குறிக்கப்படுகின்றது. இதன் மூலம் ஒரு சொல்லைப் பொருண்மையால் தொடர்புடைய சொற்களோடு தொகுத்து ஒரு வகையாகக் கூறியிருப்பதையும், தொடர்பற்ற பொருண்மையைக் குறிக்கும் நிலையில் அதனைத் தனியே விளக்குவதையும் காணமுடிகின்றது. இவ்வாறு ஒரு சொல் ஒன்றற்கு மேற்பட்ட தொடர்பற்றப் பொருண்மைகளைத் (Homonymy) தரும்போது அவற்றைத் தனித்தனிச் சொற்களாகக் கொள்ள வேண்டும் என்று மொழியியல் கூறுகின்றது. தமிழிலும் இம்முறை (எடுத்துக்காட்டாக ஆறு என்ற சொல் எண், நதி ஆகிய பொருண்மைகளைத் தருவதை மொழியியலில் ஆறு1, ஆறு2 என்று குறிக்க வேண்டும்) ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருப்பினும் இவற்றை ஒரே சொல் வடிவமாகக் கொள்ள வேண்டும் என்று தொல்காப்பியம் கூறுகின்றது. ஆனால் நச்சினார்க்கினியர் தனது உரையில் தொல்காப்பியர் வெவ்வேறு சொற்களாகவே கருதவேண்டும் என்று சுட்டுவதாகக் குறிப்பிடுவார். தொல்காப்பியம் ஒரே சொல்லுக்கான தொடர்பற்றப் பொருண்மை விளக்கமாகக் கருதி, தெளிவுபட அதனைத் தனியாக எடுத்துரைக்கிறது. இவ்வணுகுமுறையில் தொல்காப்பியம் மொழியியலிலிருந்து வேறுபடுகின்றது எனலாம்.
"கம்பலை சும்மை கலியே அழுங்கல்
என்றிவை நான்கும் அரவப் பொருள" (தொல். சொல். 832)
"அவற்றுள்
அழுங்கல் இரக்கமும் கேடும் ஆகும்" (தொல். சொல். 833)
ஹோமோநிமி எனப்படும் ஒப்புருச்சொல் பார்வை தொல்காப்பியத்துள் இருப்பதை இதன்வழி அறியமுடியினும் அது தற்கால மொழியியல் விளக்க முறையிலிருந்து சிறிது வேறுபட்டு அமைகின்றது.
7. பலபொருள் குறித்த ஒரு சொல்லும் ஒப்புருச் சொல்லும்
மேற்கத்திய மொழியியலில் ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட வெவ்வேறு தொடர்புடைய பொருள்களைத் தரின் அதனைப் பலபொருள் குறித்த ஒரு சொல் என்பர். ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்பற்ற பொருண்மைகளைத் தரின் அவற்றை ஒப்புருச்சொல் என்று கூறுவர். தொல்காப்பியம் தொடர்புடைய பொருண்மை, தொடர்பற்ற பொருண்மை ஆகிய இரண்டையும் இணைத்து ஒரே நூற்பாவுக்குள் குறிப்பிடுகின்றது. எனினும் அதில் தொடர்புடைய பொருண்மைகளை முதலில் கூறி தொடர்பற்றனவற்றை இறுதியில் குறிப்பிடுகின்றது. பின்வரும் நூற்பா விளக்கங்கள்வழி இதனைத் தெளியலாம்.
"விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும்" (தொல். சொல். 836)
"கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள" (தொல். சொல். 855)
"நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப" (தொல். சொல். 856)
கறுப்பு, சிவப்பு ஆகிய சொற்கள் வெகுளி என்ற பொருண்மையில் பயன்படுவதாகத் தொல்காப்பிய நூற்பா குறிப்பிடுகின்றது (நூற்பா. 855). ச.வேசு. தனது உரையில் வெகுளி என்பதற்குச் சினத்தல், பகைத்தல் ஆகிய இரண்டு பொருண்மைகளைத் தருகின்றார். இவற்றை இச்சொற்களுக்கான தொடர்புடைய பொருண்மைகளாகக் கொள்ளலாம். மற்றொரு நூற்பாவில் கறுப்பு, சிவப்பு ஆகியவை நிறங்களையும் குறிக்கலாம் என்று குறிப்பிடுகின்றார்.
தொடர்பற்ற பொருண்மையைத் தனியாக விளக்கினும் மொழியியலாரின் ஒப்புருச்சொல் பார்வை தொல்காப்பியத்திலிருந்து வேறுபட்டு அமைகின்றது. ஏனெனில் தொல்காப்பியர் ஒப்புருச்சொல்லை (Homonym) ஒரு சொல்லாகவே கொள்கின்றார்.
"கடி என் கிளவி
வரைவே கூர்மை காப்பே புதுமை
விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே
அச்சம் முன்தேற்று ஆயீரைந்தும்
மெய்ப்படத் தோன்றும் பொருட்டாகும்மே"(தொல். சொல். 866)
கடி என்ற சொல் நீக்குதல், கூர்மை, காவல், புதுமை, விரைவு, விளக்கம், மிகுதி, சிறப்பு, அச்சம், சூள் உரைத்தல் ஆகிய தொடர்பற்ற வெவ்வேறு பத்து விதமான பொருண்மைகளைத் தரும் என்று குறிப்பிடப்படுகின்றது. எனினும் கடி என்பது ஒரு சொல் வடிவமாகக் குறிக்கப்படுவதைக் காணமுடிகின்றது.
8. உரிச்சொற்களின் பொருண்மையை அறியும் முறை
வழக்கில் பயன்படுத்தப்படும் உரிச்சொற்களை அவற்றின் முன்னும் பின்னும் வரும் சொற்களோடு தொடர்புபடுத்தி (முன்னும் பின்னும் வருபவை நாடி) பொருள்கொள்ள வேண்டும் என்றும் ஒத்த சொற்களைக் கொண்டு சேர்த்து (ஒத்த மொழியாற் புணர்த்தனர் உணர்த்தல்) பொருள் அறிய வேண்டும் என்றும் தொல்காப்பியத்தின் பின்வரும் நூற்பாவழி அறிய முடிகின்றது.
"மெய் பிறக் கிளந்த உரிச்சொல் எல்லாம்
முன்னும் பின்னும் வருபவை நாடி
ஒத்த மொழியால் புணர்த்தனர் உணர்த்தல்
தத்தம் மரபில் தோன்றுமன் பொருளே" (தொல். சொல். 872)
பெரும்பாலும் இவ்வணுகுமுறை, ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட பொருண்மைகளைக் கொண்டிருக்கும் போது பொருட்தெளிவு பெறுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.
சொற்பொருண்மையை முழுமையாக அறிவதற்கு தொடரமைப்பு அணுகுமுறையும் (Syntactic Dimension) அடுக்குறவு அணுகுமுறையும் (Paradigmatic Dimension) பயன்படுவதாகச் சசூரால் குறிக்கப்படுகின்றது. வாக்கியத்தில் வரும் சொற்களின் பொருளை அவற்றின் முன்னும் பின்னும் வரும் சொற்களோடு தொடர்புபடுத்திக் காணவேண்டும் என்பது அவரது தொடரமைப்பு அணுகுமுறையாகும். மேலும் அடுக்குறவு அணுகுமுறை என்பது வாக்கியத்தின் ஓரிடத்தில் வரும் சொல்லின் பொருளை அறிய ஒத்த வேறு சொற்களைப் பதிலீடு செய்து அதன் பொருண்மையைத் தெளிவதாகும். இவ்விரு அணுகுமுறைகளையும் தொல்காப்பியர் முன்பே அறிந்து பயன்படுத்தியிருக்கிறார் என்று துணிவதற்கு மேற்கண்ட நூற்பா இடந்தருகின்றது. ஏனெனில் “முன்னும் பின்னும் வருபவை நாடி“ என்பது தொடரமைப்பு அணுகுமுறையையும் “ஒத்த மொழியால் புணர்த்தனர்“ என்பது அடுக்குறவு அணுகுமுறையையும் நினைவுபடுத்துவனவாக உள்ளன.
9. உரிச்சொற்களின் பொருண்மை மாற்றமும் சொற்பிறப்பியலும் (Etymology)
பொதுவாகச் சொற்களின் பொருண்மையில் காலந்தோறும் மாற்றங்கள் நிகழ்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. தொல்காப்பியத்தில் உரிச்சொற்களும் அவை உணர்த்தும் பொருண்மைகளும் விளக்கப்பட்டதன் பின்னர் அப்பொருண்மைகளன்றி வேறு பொருண்மைகளிலும் அவை பயன்படுமாயின் அவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.
"கூறிய கிளவிப் பொருள்நிலை அல்ல
வேறு பிற தோன்றினும் அவற்றொடு கொளலே" (தொல். சொல். 873)
இதன் மூலம் காலந்தோறும் சொற்பொருண்மையில் நிகழும் மாற்றங்கள் சொற்பொருள் விளக்கத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடப்படுவதால் சொற்பிறப்பியல் அகராதிக்கும் (Etymological Dictionary) உரியியலுள் அடிப்படை இருந்திருப்பதை உணர முடிகின்றது.
10. சொற்பொருண்மை ஆழமும் – பொருண்மைக்கூறுப் பகுப்பாய்வும்
ஒவ்வொரு சொல்லின் பொருண்மையும் பொருளணுக்களால் பின்னப்பட்டுள்ளன என்பது பொருளணுப் பகுப்பாய்வு அணுகுமுறையாகும். இப்பொருளணுக்களும் பகுப்பாய்வுக்குரியன. எனவே இவற்றை ஆராய முற்படின் பொருண்மையின் எல்லை விரிந்து கொண்டே போகும். இக்கருத்தைத் தொல்காப்பியத்தில் வரும் பின்வரும் நூற்பாவுடன் ஒப்பிடலாம்.
"பொருட்குப் பொருள் தெரியின் அது வரம்பின்றே" (தொல். சொல். 874)
11. ஒருமொழி அகராதி (Monolingual Dictionary)
மேற்கண்ட செய்திகள் வழி நோக்கும் போது தொல்காப்பியம் தரும் உரியியல் செய்திகள் ஒருமொழி அகராதிக்கு உரியனவாகக் கொள்ளலாம். இருமொழி அகராதிகளுக்கான செய்திகள் எதுவும் இதில் இடம் பெறவில்லை. ஏனெனில் அரிய சொற்களுக்கு மட்டும்தான் பொருண்மை விளக்கம் தரவேண்டும் என்று உரியியல் குறிப்பிடுகின்றது.
தொகுப்புரை
1. உரிச்சொற்களின் இயல்புகளும் அகராதிச் சொற்களின் இயல்புகளும் ஒத்துள்ளன. உரிச்சொற்களுக்கான பொருள் விளக்கமுறை அகராதியின் சொற்பொருள் விளக்கமுறையோடு ஒத்துள்ளது.
2. தமிழில் அகராதிகளுக்கும் நிகண்டுகளுக்கும் முன்னோடியாகத் தொல்காப்பிய உரியியலைக் குறிப்பிடலாம்.
3. அரிய சொற்களுக்குப் (உரிச்சொல்) பொருள் விளக்கம் தருவது முக்கியத்துவம் வாய்ந்தது என்று தொல்காப்பியத்துள் சுட்டப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று காலத்தின் தேவைக்கேற்ப எளிய சொற்களுக்கும் பொருள் விளக்கம் தந்து இருமொழி, மும்மொழி அகராதிகள் உருவாதலையும் அறிய முடிகின்றது.
4. ஒப்புருச்சொல் பார்வை தொல்காப்பியத்துள் இருப்பதையும், ஒப்புருச்சொல்லை விளக்குவதில் மொழியியலிருந்து தொல்காப்பியம் வேறுபடுவதையும் அறிய முடிகின்றது.
5. உரிச்சொற்களின் பொருளைக் கண்டறிய தொல்காப்பியம் கூறும் அணுகுமுறை சசூரின் தொடரமைப்புப் பரிமாணம், அடுக்குறவுப் பரிமாணம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருப்பதைக் காணமுடிகின்றது.
6. உரியியலுள் "சொற்பொருள் மாற்றம் பதிவு செய்தல்" வலியுறுத்தப்படுவதால் இது சொற்பிறப்பியலோடு ஒப்பிட்டு நோக்கத்தக்கது.
7. சொற்பொருண்மையின் விரிவு குறித்துத் தொல்காப்பியம் குறிப்பிடுவது பொருண்மைக்கூறுப் பகுப்பாய்வுடன் ஒப்புநோக்கத் தக்கதாக உள்ளது.
8. தொல்காப்பியத்தின் உரியியலின் வாயிலாக அறியப்படும் அகராதியியல் செய்திகள் ஒருமொழி அகராதிக்குரியவை.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.