ஐங்குறுநூற்றில் நெய்தல்நில வருணனை
முனைவர் பா. ஈஸ்வரன்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்),
கிருஷ்ணன்கோவில், விருதுநகர் மாவட்டம் - 626 126.
முன்னுரை
நெய்தல் திணையைப் பாடுவதிலும் புனைவதிலும் வல்லமையும் சிறப்பும் பெற்றவர் அம்மூவனார். இவர் நெய்தல் நிலத்தின் வளத்தினை நுட்பமாக வருணித்துள்ளார். கடலும் கடல் சார்ந்த நிலப்பகுதியும் நெய்தல் என்பதால், ஐங்குறுநூற்று நெய்தல் திணையில் கடல் பற்றிய வருணனைக் காட்சிகள் பெரும்பான்மையாக இடம் பெற்றுள்ளன. ஆகையால், ஐங்குறுநூற்று நெய்தல் திணையில் இடம் பெறுகின்ற நெய்தல் நில வருணனையை வெளிக்கொணர்வதாக இந்த ஆய்வுக் கட்டுரை அமைகின்றது.
நெய்தல் நிலம்
நெய்தல் நிலமானது, 1.கடல், 2.நெய்தல், 3.மென்புலம், 4.மெல்லம் புலம், 5.கானல், 6.பொதும்பர், 7.பொழில் என்னும் ஏழு பெயர்களில் பொருட்கூறுகளோடு அம்மூவனரால் வருணிக்கப் பெற்றுள்ளன. நெய்தல் நிலத்திலுள்ள கடற்கரைச் சோலையானது கால், பொதும்பர், பொழில் என்னும் மூன்று சொல்லாட்சிகளில் வருணிக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கிய அகப்பாடல் மரபில் இடம் பெறுகின்ற நெய்தல் திணையில், இரங்கலையும் இரங்கல் நிமித்தத்தையும் உரிப்பொருளாகக் கொண்டு கடல்காட்சி வருணனைகள் அமைவதோடு நெய்தல் நிலத் தலைவனுடைய நாட்டின் வளத்தினைக் காட்சிப்படுத்துவதாகவும் வருணனைகள் அமைந்துள்ளன. இவ்வருணனைகளைப் பின்வருமாறு காணலாம்.
கடல்காட்சி வருணனை
கடலும் கடல் சார்ந்த பகுதியும் நெய்தல் என்று அழைக்கப்படுவதால், நெய்தல் நிலமானது பரந்துபட்ட நிலப்பரப்பைத் தன்னகத்தே கொண்ட கடல் பகுதி என்பது தெளிவாகின்றது. நெய்தல் திணையில் ‘கடல்’ என்பது கடல், பௌவம், அறைபுனல் (ஒலிக்கும் நீரையுடைய கடல்) என்று மூன்று பெயர்களில் அறியப்படுகின்றன. கடலானது,
‘கடல்’ என்னும் பெயரில் ஐங்.நெய்.114:3-4; 124:1-3; 184:1-4 (2முறை கடல்); 192:1-2 ஆகிய நான்கு பாடல்களில் ஐந்துமுறை இடம்பெற்றுள்ளன.
‘முழங்குகடல்’ என்னும் பெயர் ஐங்.நெய்.105:1-2 இவ்வொரு பாடலில் மட்டும் வந்துள்ளது. ‘தண்கடல்’ என்னற சொல்லாட்சி ஐங்.நெய்.106:3-4; 107:3-4; 108:3-6; 196:1-4 இந்நான்கு பாடல்களில் காணப்படுகின்றன.
‘பெருங்கடல்’ என்ற சொல்லாட்சி ஐங்.நெய்.102:1-4; 123:1-3; 161:1-2; 162:1-2; 163:1-3; 164:1-2; 165:1-2; 166:1-2; 167:1-2; 168:1-2; 169:1-3; 170:1-2 இப்பன்னிரண்டு இடங்களில் இடம் பெற்றுள்ளன.
‘தெண்கடல்’ என்னும் பெயர் ஐங்.நெய்.126:1-3; 157:1-3 இவ்விரண்டு பாடல்களில் அமைந்துள்ளன.
‘எறிகடல்’ என்னும் சொல்லாட்சி ஐங்.நெய்.199:1-4 இவ்வொரு பாடலில் மட்டும் இடம் பெற்றுள்ளது.
‘உரவுக்கடல்’ வருணனையானது கடல், முழங்குகடல், தண்கடல், பெருங்கடல், தெண்கடல், எறிகடல், உரவுக்கடல் என்னும் சொல்லாட்சிகளில் இருபத்தாறு இடங்களில் கையாளப்பட்டுள்ளன.
‘பௌவம்’ என்னும் பெயர் ஐங்.நெய்.121:1-3 இவ்வொரு பாடலில் மட்டும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
‘அறைபுனல்’ என்னும் சொல்லாட்சி ஐங்.நெய்.193:1-4 இப்பாடலில் மட்டும் இடம்பெற்றிருப்பதும் இங்குச் சுட்டத்தக்கதாகும்.
நெய்தல் திணையில் கடல் வருணனைக் காட்சியில், கடலில் கிடைக்கின்ற பொருளை வருணனைக் கூறுகளாக்கிக் கொண்டு அம்மூவனார் அழகுறக் காட்சிப்படுத்துகின்றார். இக்காட்சிப்புனைவினை,
“வலம்புரி உழுத வார்மணல் அடைகரை
இலங்குகதிர் முத்தம் இருள்கெட இமைக்கும்
துறைகெழு கொண்க!நீ தந்த”
அறைபுனல் வால்வளை நல்லவோ தாமே?”
(ஐங்.நெய்.193:1-4)
என்னும் பாடல் அடிகளில் காணமுடிகின்றது. இப்பாடலில், கடலில் கிடைக்கக் கூடிய வலம்புரிச் சங்கு, மணல், கடற்கரை, முத்துக்கள், ஒலிக்கும் நீரையுடைய கடல், தலைவி அணியக்கூடிய சங்கால் செய்யப்பட்ட வெண்மையான வளையல் ஆகிய வருணனைக் கூறுகளைக் கொண்டு ஆசிரியர் நயமுடன் காட்சிப்படுத்தியுள்ளார்.
கடற்கரைக் காட்சியில் இருங்கழி மற்றும் அறுகழியில் கிடைக்கக்கூடிய தாழ்ந்த மீன் வகையான ‘அயிரை’ ஐங்.நெய்.164:1-2 என்னும் பாடலிலும், ‘கெடிறு’ ஐங்.நெய்.167:1-2 என்னும் பாடலிலும் சுட்டப்பட்டுள்ளன. கடற்காட்சி நெய்தல் திணையில் அநேக இடங்களில் கடற்கரைக்காட்சியோடு வருணனை பெற்று வந்துள்ளன. கடற்கரையானது நெய்தல், ஞாழல், புன்னை, முண்டகம் ஆகிய மலர்களைக்கொண்டு அழகுறக் காட்சியளிப்பதனை, ஐங்.நெய்.170:1-2; 169:1-3; 177:2-3 இம்மூன்று பாடல்களில் காணமுடிகின்றன.
உள்ளுறைச் செய்தி
கடலுக்கு அருகிலுள்ள பனை மரத்தில் கடல்நாரை தங்கி ஒலித்தல் ஐங்.நெய்.114:3-4, கடற்கரையிலுள்ள சிறுவெண்காக்கை தனக்கான இரையை உண்டு கரிய கொம்புகளையுடைய புன்னை மரத்தில் தங்குதல் ஐங்.நெய்.161:1-2, துவலை ஒலியில் கடற்கரைச் சோலையில் உறங்குதல் ஐங்.நெய்.163:1-2, சிறுவெண்காக்கை நெய்தல் மலரைச் சிதைத்தல் ஐங்.நெய்.170:1-2 ஆகியவை நெய்தல் நில வருணனையில் கடல் காட்சியோடு காட்சியுருப்பெற்றுள்ளன. இவ்வருணனையில் இடம் பெறுகின்ற நாரை, சிறுவெண்காக்கை என்னும் இவ்விரண்டு பறவைகளின் செயல்பாடுகளைத் தலைவனின் செயல்பாடுகளோடுப் பொருத்தி உள்ளுறைச் செய்தியாக அழகுற வருணனைக்காட்சிகள் புனையப்பட்டுள்ளன. இதனை,
“கடலின் நாரை இரற்றும்
மடல்அம் பெண்ணை அவனுடை நாட்டே?”
(ஐங்.நெய்.114:3-4)
என்னும் பாடல் அடிகள் சுட்டுகின்றன. இப்பாடலில், கடலைவிட்டு நீங்கி வந்த நாரைக்குத் தலைவனின் நாட்டிலுள்ள பனை மரமானது தங்குவதற்கு இடம் கொடுத்ததைப் போன்று, தலைவியும் அவளது இல்லத்தைவிட்டு நீங்கித் தலைவனுடைய நாட்டிற்குச் சென்றால், தலைவனும் ஏற்றுக்கொள்வான் என்னும் தலைவனுடைய சிறப்பினைப் புலப்படுத்தும் உள்ளுறைச் செய்தியை முதலில் கூறப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது. இதற்குப்பிறகு, கடலில் வாழும் நாரையானது கடலைவிட்டு நீங்கிப் பனை மரத்தில் தங்கும் காட்சியைக்காட்டி, இக்காட்சியின் மூலமாகத் தலைவன் தலைவியைத் திருமணம் செய்யும் முயற்சியில் ஈடுபடாமல் அவனுடைய மனையில் தங்கியிருக்கின்றான் என்று, தலைவனைச் சிறப்பிக்காத உள்ளுறைச் செய்தியை இரண்டாவதாகக் கூறப்பட்டுள்ளதையும் அறியமுடிகின்றது. அம்மூவனார் உள்ளுறையாகச் செய்தியைக் கூறுவதிலும், எச்செய்தியை முன்பின் கூறவேண்டும் என்ற மரபின் வரைமுறையினையும் சிறப்பாகக் கையாண்டுள்ளார்.
பெரிய கடற்கரையில் வாழும் சிறுவெண்காக்கையினது செயல்பாடானது, நெய்தல் நிலத்தில் இயல்பாக நடைபெறக்கூடியதாகும். இச்செயல்பாடுகளைத் தலைவனுடைய செயல்பாடுகளோடுப் பொருந்துமாறு ஆசிரியர் உள்ளுறையாகக் கூறியுள்ளார். இவ்வருணனைக் காட்சிகளை,
“பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி அயிரை ஆரும்”
(ஐங்.நெய்.164:1-2)
என்றும்,
“பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி இனக்கெடிறு ஆரும்”
(ஐங்.நெய்.167:1-2)
என்றும்,
“பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
அறுகழி சிறுமீன் ஆர மாந்தும்”
(ஐங்.நெய்.165:1-2)
என்றும்,
“பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி நெய்தல் சிதைக்கும்”
(ஐங்.நெய்.170:1-2)
என்றும் இந்நான்கு பாடல்கள் எடுத்தியம்புகின்றன. பெரிய கடலில் கிடைக்கக்கூடிய உயர்ந்த இனத்தையுடைய பெரிய மீன்களை உண்ணாமல், இருங்கழி மற்றும் அறுகழியில் கிடைக்கக்கூடிய தாழ்ந்த மீன்வகையான ‘அயிரை’ மற்றும் கூட்டமாக வாழக்கூடிய ‘கெடிறு’ எனப்படும் ‘கெழுத்தி’ மீனைப் பெரிய கடலில் வாழும் சிறுவெண்காக்கை உணவாக உட்கொண்டமை இயல்பாக நெய்தல் நிலத்தில் நடைபெறக்கூடியதாகும். இச்செயல், நல்லின்பம் நல்கக்கூடிய தலைவியை விட்டுவிட்டு, பலரிடம் இன்பத்தைப் பகிர்ந்து கொள்கிற பரத்தையிடம் இன்பம் அனுபவிக்கும் தலைவனுக்கு உள்ளுறையாகப் புனையப்பட்டுள்ளது. தலைவன் ஒரு பரத்தையிடம் மட்டும் உறவுடையவன் இல்லை. பல பரத்தைகளிடம் உறவுடையவன் என்பதனையும் ஐங்.நெய்.170:1-2 என்னும் பாடல் எடுத்துரைக்கின்றது. இவ்வாறு, கடல் வருணனையில் தலைவனுடைய பரத்தைமையை வெளிப்படையாகக் கூறாமல், கடற்கரைப் பறவைகளின் செயல்பாடுகளின் வாயிலாகக் கூறுவதற்கு உள்ளுறை உத்தியினை ஆசிரியர் கையாண்டுள்ளதனை அறியமுடிகின்றது.
மணல் வருணனை
கடல் வருணனையில் ‘மணல்’ வருணனையானது, ஐங்.நெய்.105:1-2; 113:2; 177:2-3; 199:1-4 ஆகிய நான்கு பாடல்களில் இடம்பெற்றுள்ளன. இப்பாடல்களில் மணலானது வெண்மையாகவும், வான் அளவிற்கு உயர்ந்ததாகவும், வலம்புரிச் சங்கால் உழுதும், அலைகள் தந்த முத்துக்களுமாகக் காட்சி கொள்கிறது. இவ்வருணனைக் காட்சியில் மணலின் நிறம், உயரம், மணல் வலம்புரிச்சங்கால் உழுதுகிடக்கும் தன்மை ஆகிய வருணனைக் கூறுகள் காணப்படுகின்றன.
நெய்தல் திணையில் மருதத்தின் உரிப்பொருள்
நெய்தல் திணையில் நெய்தல் நிலமானது ‘நெய்தல்’ என்னும் பெயரில் ஐங்.நெய்.184:1-3 என்னும் இவ்வொரு பாடலில் மட்டும இடம்பெற்றுள்ளது என்பது இங்குச் சுட்டத்தக்கது. நெய்தல் நிலமானது பெரிய நீர்நிலையும், அந்நீர் நிலையில் மலர்ந்த நெய்தல் மலரும், நெய்தல் மலருக்கு அருகில் மீன்களும், அம்மீன்களை உண்ட குருகு கடற்கரைச் சோலையில் தங்குவதாகவும் வருணிக்கப்பட்டுள்ளது. இக்காட்சியினை,
“நெய்தல் இருங்கழி நெய்தல் நீக்கி
மீன்உண் குருகினம் கானல் அல்கும்
கடல்அணிந்தன்று அவர் ஊரே”
(ஐங்.நெய்.184:1-3)
என்னும் பாடலடிகள் காட்சிப்படுத்துகின்றன. இப்பாடலில், நெய்தல் நிலம், இந்நிலத்திற்குரிய பெரிய நீர்நிலைகள், நெய்தல் மலர், நெய்தல் நிலத்தினைச் சார்ந்து வாழும் மீனை உண்ணும் குருகினம், கடற்கரைச்சோலை, கடல் ஆகிய வருணனைக் கூறுகளை உட்படுத்தி நெய்தல் நிலத்தினை வருணித்திருப்பது அம்மூவனாரின் கவிப் புலமையினை வெளிப்படுத்தும் சிறப்பு எனலாம்.
நெய்தல் நிலத்திலுள்ள பெரிய நீர்நிலையில் மலர்ந்திருந்த மணமிக்க நெய்தல் மலர் தலைவி. நெய்தல் மலருக்கு அருகிலுள்ள இழிந்த நாற்றமுடைய மீன் பரத்தை. அம்மீனை உண்ட குருகானது பரத்தையிடம் இன்பம் அனுபவித்த தலைவன். குருகு கடற்கரைச் சோலையில் தங்குவது என்பது தலைவன் பரத்தையர் சேரியில் தங்குதல் என்பதாக உள்ளுறைப்பொருள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வுரிப்பொருளானது மருதத்திணையில் இடம்பெற வேண்டியது நெய்தல் திணையில் இடம் பெற்றிருப்பதைத் திணைமயக்கம் என்று கூறுவர். முதற்பொருளாலும் கருப்பொருளாலும் நெய்தல் திணையாக அமைந்துள்ளது. உள்ளுறைப்பொருளால் மட்டும் மருதத்தின் உரிப்பொருள் வந்துள்ளது. இப்பாடலின் மூலம், நெய்தல் நிலத்திலும் தலைவன் பரத்தமைமேற்சென்றிருந்த தன்மை புலனாகின்றது.
இக்கட்டுரையில் நெய்தல் நிலத்தின் பல்வேறுபட்ட பெயர்கள் எத்தனைப் பாடல்களில் இடம்பெற்றுள்ளன என்பதைப் புள்ளிவிவரத்தோடு அறியமுடிகின்றது.
நிலவருணனையின் வாயிலாக நிலத்தினுடைய தன்மை வெளிப்படுகின்றது. நெய்தல் நிலத்திற்குரிய கருப்பொருளின் செயல்பாடுகளைத் தலைவனின் செயல்பாடுகளாக உள்ளுறையின் வாயிலாக ஆசிரியர் வெளிப்படுத்துகின்றார். மருதத்திணையின் உரிப்பொருளானது நெய்தல் திணையில் இடம்பெற்றுள்ளதால் திணைமயக்கத்திணையும் இங்குக் காணமுடிகின்றது.
பயன்பட்ட நூற்கள்
1. சோமசுந்தரனார், பொ.வே., ஐங்குறுநூறு மூலமும் உரையும், திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், லிமிடெட், 1/140, பிரகாசம் சாலை, சென்னை -1, முதற்பதிப்பு: 1972.
2. சாமிநாதையன்,வே. (ப.ஆ), ஐங்குறுநூறு, டாக்டர் ஐயரவர்கள் நூல்நிலைய வெளியீடு, சென்னை -41, ஆறாம் பதிப்பு:1980.
3. துரைசாமிப்பிள்ளை, ஔவை. சு., ஐங்குறுநூறு மூலமும் உரையும், முதல்தொகுதி: மருதம் & நெய்தல், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், முதற்பதிப்பு: 1957.
4. புலியூர்கேசிகன், (உ.ஆ), ஐங்குறுநூறு மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை - 600 014, முதற்பதிப்பு: 2010.
5.மாணிக்கணார், அ., ஐங்குறுநூறு மூலமும் உரையும், முதல் பகுதி, இரண்டாம் பகுதி, வர்த்தமானன் பதிப்பகம், ஏ.ஆர்.ஆர்.காம்ப்ளெக்ஸ், 141, உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை - 600 017, மறுபதிப்பு:2001.
6. வையாபுரிப்பிள்ளை, எஸ்., (தொ.ஆ., & ப.ஆ), சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்), பாரிநிலையம், 59, பிராட்வே, சென்னை - 1, முதற்பதிப்பு:1940.
தரவு திரட்டப்பட்ட மூல நூற்கள்
1. சோமசுந்தரனார், பொ.வே., ஐங்குறுநூறு மூலமும் உரையும், திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், லிமிடெட், 1/140, பிரகாசம் சாலை, சென்னை -1, முதற்பதிப்பு: 1972.
இரண்டாம் நிலைத் தரவு நூற்கள்
1. துரைசாமிப்பிள்ளை, ஔவை. சு., ஐங்குறுநூறு மூலமும் உரையும், முதல்தொகுதி: மருதம் & நெய்தல், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், முதற்பதிப்பு: 1957.
2. ராஜம், எஸ்., ஐங்குறுநூறு, மர்ரே அண்டு கம்பெனி, 5, தம்புச்செட்டித் தெரு, சென்னை-1, முதற்பதிப்பு:1957.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.