கருநீலவண்ணன் கவிதைகளில் - பல்வகைக் கோட்பாடுகள்
ச. சேட்டு மதார்சா
முன்னுரை
கவிஞர்கள் ஒரு வகையில் மெய்யுணர்வாளர்கள், அவர்களுடைய கவிதைகளில் வாழ்க்கையின் பொருளை அறிகிறோம். அதன் உண்மை சிக்கலைத் தெரிந்து கொள்கிறோம். இம்மெய்யுணர்வும் வாழ்க்கையை விளக்கும் உயர்தரக் கவிதையின் ஆற்;றலும் கவிதையின் உணர்ச்சிப் பண்பின் நேர்முக விளைவிக்கும் என்பார் வின்செஸ்டர் என்ற அறிஞர் இவ்வகையில் மெய்ப்பொருள்கள் பலவற்றைத் தம் கவிதைகளில் கருநீலவண்ணன் படைத்துள்ளார். அவர் கவிதைகளில் பலவகையான கோட்பாடுகள் புதிய நோக்கில் காணக்கிடக்கின்றன. அவற்றை விளக்க நிற்பது இக்கட்டுரையின் நோக்ககமாகும்.
அஃறிணைக் கோட்பாடு
‘உயர்திணை என்மனார் மக்கள் சுட்டே
அஃறிணை என்மானர் அவரல பிறவே” (தொல். கிளவி)
அத்தொல்காப்பிய வரிகள், மக்கள் மட்டுமே உயர்திணைக்குரியவை மற்றவையெல்லாம் அஃறிணை என்கிறது. ‘புல்லும் மரனும் ஓரறிவினவே”, ‘மக்கள் தாமே ஆறறிவுயிரே”, ‘ஆறறிவது அவற்றொடு மனனே” ஆகிய தொல்காப்பிய மரபியல் வரிகள், மரம் ஓரறிவு உயிர், சிந்திக்கும் மனிதன் ஆறறிவுயிர் என்று விளம்புவது தொல்காப்பிய காலக் கோட்பாடு. ஆனால், இன்றோ வளர்ச்சியடைந்த நாகரீகக் காலம், இத்தகைய நிலையில் உடன் உயிராக பழகியவர்கள் கூட பார்த்தும் பாராமுகம் காட்டிச் செல்கின்றனர். இவர்கள் இன்று ஆறறிவுயிர்கள், ஆனால் என்றோ நட்டு வைத்த மரம் பூக்களை உதிர்த்து உடன் உயிராகப் பழகியயவர்கள் போல அன்பைக்காட்டும். இவை இன்றும் ஓரறிவுயிர் இந்நிலையைக் கண்ணுற்ற கவிஞர் கருநீல வண்ணன் மரத்தை ஆறறிவுயிராகவே மதித்து அஃறிணைக் கோட்பாட்டிற்குப் புதுவழி வகுக்கிறார் கீழ்க்காணும் கவிதை வரிகளில்
‘எல்லா மாணவர்களும்
மரம் நட்டுக் கொண்டு இருக்கிறோம்
..................
அதே சாலையில்
என் நண்பன் எதிரே, வருகிறேன்
..................
நான் என அறிந்தும்
..................
என்னைக் கவனிக்காதது போல்
செல்கிறான்
என்னைப் பார்த்த மகிழ்ச்சியில்
மரம் தான் கிளையை ஆட்டி
என் மீது பூக்களைத் தூவியது” ( சாலையோர மரங்களும் உதிரும் பூக்களும்)
ஆணிலக்கணக் கோட்பாடு
இக்காலப் புதுமைக் கவிஞர்கள் பெரும்பாலாயோர் தமது கவிதைகளில் பாடுபொருளாக பெண்ணையும், பெண்ணடிமை நிலையையும், பெண்ணுரிமையையும் பற்றியே கூறியுள்ளனர். பெண், பெண்கள் சந்திக்கும் துன்பங்கள் இவற்றைப் பற்றி அலசுவதற்கே, ‘பெண்ணியம் தோன்றியது. பெண்ணியவாத கவிஞர்கள் பலரும் பெண்ணிலக்கணத்தை வகுக்க கவிதைகள் பலவற்றை யாத்தனர். ஆனால் குடும்பம் செழிக்க ஆண்கள் தங்களை மெழுகுவர்த்தியாக உருக்கிக் கொள்ளும் நிலையைப் பல கவிஞர்கள் வெளிப்படுத்தாது ஏனோ? என்பது புரியவில்லை.’புரட்சிவண்டு” கருநீலவண்ணன் கவிதையொன்று,
‘என் குடும்ப அங்கீகாரம் பெற
முகவரி இழக்கிறோம்
என் தந்தையும்நானும்” ( சாலையோர மரங்களும் உதிரும் பூக்களும்)
என்கிறது குடும்பத்திற்காகவே அக்குடும்பத்திலிருக்கும் ஆண்கள் தாங்கள் கடை நிலையிலிருந்தாலும், தன் குடும்ப நிதிநிலை உயர தன் முகவரியை இழக்கும் நிலை, இன்றளவும் கண்கூடாகத் திகழ்கிறது. இது குடும்பத்திற்காக தனக்குத்தானே ஆண்கள் வகுத்துக் கொண்ட இலக்கணமாக கவிஞர் கருநீலவண்ணன் மேற்குறித்த தனது கவிதையில் வெளிப்படுத்துகிறார்.
காதல் கோட்பாடு
உலகில் தோன்றிய எல்லா உயிரினங்களும் தம் வாழ்க்கையில் ஒருமுறையேனும் கண்டிப்பாகக் காதல் உணர்வைத் தாண்டியே வந்திருக்க வேண்டும். இல்லை என்று கூறுவேது மெய்யற்றவர்களின் கூற்றாகும். இப்படி அனைவரையும் தன்னிடம் இருக்கும் காதல் திடமானது. அதனால் தான், அத்திகமான காதலை கருநீலவண்ணன், பிடித்தவருடன் வாழ்வதே இனிமை, கிடைத்தவரோடு வாழ்வது வாழ்க்கையல்ல என்கிறார். அதனை வாக்கு மூலம் என்ற கவிதையில்
‘பிடித்த உன்னோடு
வாழ்வதுதான்
வாழ்வு
கிடைத்தவரோடு எல்லாம்
வாழ்வது
வாழ்வல்ல
..................
நான் காதலை அறிந்தவன் அல்ல
காதலைப் புரிந்தவன்.”
- என்று இதமாகக் கூறுகிறார். காதலின் பயன்பாடு வெளிப்படுத்துவதில் தான் அடங்கியிருக்கிறது. அவ்வாறு வெளிப்படுத்தி பெருந் துன்பத்தை அனுபவிப்பதைவிட சொல்லாமலே சுகத்துன்பம் தேடுவது இனிமை, அதைவிட்டுவிட்டு காதலுக்காகத் தற்கொலை செய்து கொள்வதை அக்கவிஞர் ‘கறுப்புக்கொடி” - என்ற கவிதையில்
‘உன்மீது அன்பு கொண்ட
அனைவரையும் உதறி
மூடனாய் கிடக்கின்றாய்!
இன்று ‘கறுப்புக்கொடி” காட்டுகின்றேன்
உன் மறைவுக்கு அல்ல....
உன்னைப் போன்ற
மூடர்களின் காதலுக்கு
கண்டனம் தெரிவிக்க”
-என்று சாடுகிறார். இவையெல்லாம் கவிஞரின் அனுபவ வெளிப்பாட்டில் கிடைத்த காதல் கோட்பாடுகளே எனலாம்.
ஒழுக்கக் கோட்பாடு
‘ஒழுக்கம் விருப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.”
-என்பது வள்ளுவனின் தெய்வவாக்கு. ஒழுக்கம் என்பது உயிரைவிட மேலாகக் கருத வேண்டும். ஒழுக்கத்திற்கு இழுக்கு நேர்வதன் விளைவே ஆட்கொல்லி நோய்களின் தோற்றம். கவிஞர் கருநீலவண்ணன் ‘எயிட்ஸை காணவில்லை என்று விளம்பரம் செய்வோமா?” என்ற கவிதையில் ஒழுக்கக் கோட்பாடுகளை நன்கு வலியுறுத்தி நிற்கிறார்.
‘தேவை என்று போனாலும்
தேவையானதை உபயோகம் செய்
தேடுதலைப் போலே எப்போது
தொலைநோக்குப் பார்வை வேண்டும்.”,
‘மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை
கண்டுபிடிக்க அவசியமில்லை
நாம் ஒவ்வொருவரும் முயற்சித்தால்...”
இஃது கவிஞரின் ஒழுக்கக் கோட்பாட்டிற்குச் சான்று பகர்கிறது.
வாழ்க்கைக் கோட்பாடு
இந்த உலகில் தோன்றிய உயிர்கள் அனைத்தும் என்று இறக்கும் என்பதை நம்மைப் படைத்த இறைவனைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது இன்றோ? நாளையோ? நம் அழிவு, இளமை நிலையில்லாத நிலையை நாலடியார்,
‘...............நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட்டரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத்தில்”
என்று குறிப்பிடுகிறது. கவிஞர் கருநீலவண்ணன், "பயணம்" என்ற கவிதையில்,
‘தொடர் வண்டியின்
பயணம் தான் வாழக்கை
..................
கூட்டத்தின் நெரிசலில்
முட்டி மோதி நடக்கும் வேளையில்
எத்தனையோ தொடுதல்களை
நாம் உணராமல் போயிருப்போம்”
‘தொடர்வோம் என உறுதி கூறமுடியாது
முறியும், தேதியும் நேரத்தையும்
உடனே கூறமுடியாது.”
என்று மேற்கூறிய நாலடியார் கருத்தை அரண் செய்யும் வகையில் வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும், அவர் ‘காப்பாற்று” என்ற கவிதையில் உவமை, உருவகங்களை நன்கு செம்மையுற பயன்படுத்தி வாழ்க்கைக் கோட்பாடுகளை வடித்துக்காட்டுகிறார். அக்கவிதை,
‘வேர் ஆயுள்
மரம் தோற்றம்
கிளை மாதம்
இலை நாட்கள்
..................
இலை உதிர்கிறது
கிளைகள் வெட்டப்படுகிறது,
மரம் வெறுமையாய் நிற்கிறது
வேரோடு சாயும்முன் காப்பாற்று”
என்பதேயாகும்.
மனிதநேயக் கோட்பாடு
தனக்காக வாழ்பவன் சாதாரண மனிதன். தன்னைச் சுற்றியுள்ள ஏழைமக்களின் துன்பத்தைக் கண்டு உருகி அவர்களுக்கு உதவ முன் நிற்பவன் தரமான மனிதன். அவ்வாறு துன்பம் துடைக்கச் செல்லும்போது தனக்கே துன்பம் ஏற்படக் கூடிய நிலை இருந்தால் அதையும் பொருட்படுத்தாமல் முன் செல்பவனே மனிதன் என்று அறிஞர் சாலை இளந்திரையன் கூற்றுக்கு ஏற்ப கவிஞர் கருநீலவண்ணன் மனித நேயக் கோட்பாடுகளை விளக்கும் கவிதைகள் பலவற்றைத் தந்துள்ளார். அவற்றுள் ஒரு சில இதோ, வறுமையில் உழன்ற ஏழை ஒருவன் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த உணவை உண்ணச்செல்லும் போது,
‘வாசலில் ஒருகிழவி
எனை ஈன்ற தாய் போல
‘மகனே” என்று குரல் கொடுக்க
இலையோடு அவளுக்குக் கொடுத்தேன்
‘இந்த உணவில் என் பெயர் இல்லையென்று” (நியதி)
-இவை கவிஞர் கருநீலவண்ணனின் மனித நேயத்திற்குச் சான்று பகர்கிறது.
நிறைவுரை
1. உயர்திணை, அஃறிணைநலன்களை மீட்கவும் உயரிய சமுதாயத்தை உருவாக்கவும் கவிஞர் கருநீலவண்ணன் முயன்றுள்ளார்.
2. பகுத்தறிவு, பொதுவுடைமை, மனித நேயம், ஆணியம், புதுவகை; காதல் கொள்கை ஆகியவையெல்லாம் கருநீலவண்ணன் கவிதைகளில் சுடர் விட்டு மிளர்கிறது.
3. வெளியுலகம் அறியாக் கவிஞராக இருந்தாலும், இனிவரும் காலங்களிலாவது இக்கவிஞர் எட்டுத்திக்கும் புகழ்பெறுவார் என்பது ஐயமில்லை.
4. பல்வகைப் புதுமைக் கோட்பாடுகளை தன் அகத்தில் வைத்திருந்ததன் வெளிப்பாடே, அவரின் கவிதைகள் பலவற்றில் வெளிப்படுகிறது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.