ஒப்பாரியின் தாக்கம் பெற்ற புறநானூறு
முனைவர் இரா. சி. சுந்தரமயில்
இணைப்பேராசிரியர், பூ.சா.கோ.அர. கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,
பீளமேடு, கோயம்புத்தூர் - 641004
முன்னுரை
நாட்டுப்புறத்தில் வாழக்கூடிய மக்களையும் அவர்களின் வாழ்வியற் கூறுகளையும் எடுத்துக்கூறும் இலக்கியம் நாட்டுப்புற இலக்கியமாகும். நாட்டுப்புற மக்களின் இன்ப உணர்வுகளையும், துன்ப உணர்வுகளையும் வெளிப்படுத்தும் கருவியாகத் திகழக்கூடியதே நாட்டுப்புற இலக்கியங்கள் எனலாம். இதில் பிறப்புச் சடங்குப் பாடல்கள், பூப்புச் சடங்குப் பாடல்கள், திருமணச் சடங்குப் பாடல்கள், காதல் பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள், இறப்புப் பாடல்கள் என அவர்களின் உணர்வுகள் அனைத்தும் இலக்கிய வடிவத்தில் இடம்பெற்றிருக்கும்.
நாட்டுப்புற இலக்கியங்களும் சங்க இலக்கியங்களும்
மக்களின் உணர்வுகளை, முறைப்படுத்தப்படாத நெறிமுறைகளை மீறிய மக்கள் இலக்கியமே நாட்டார் இலக்கியங்கள் என வரையறை செய்யலாம். சங்க இலக்கியங்கள் முறைப்படுத்தப்பட்டவை. நெறிமுறைகளுக்கு உட்பட்டவையாகும். மேலும் பாவகையின் கட்டுக்கோப்புகளுக்குக் கட்டுப்பட்டது சங்க இலக்கியங்கள். ஆனாலும் மக்களின் உணர்வுச் சிதறல்கள் இப்பாடல்களிலும் பதிந்து கிடப்பதை மறுக்க முடியாது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் புறநானூற்றில் ஒப்பாரிப் பாடலின் சாயல் பலப் பாடல்களில் காணக்கிடக்கின்றன.
ஒப்பாரிப் பாடல்
இறந்தவர்களை நினைத்து அவர்கள் மீது பாடப்படும் பாடல்களை ஒப்பாரிப்பாட்டு என்பர். தமிழ் அகராதி ஒப்பாரிக்கு ஒப்பூ+ஆரி, ஒப்புச்சொல்லி அழுதல் எனப்பொருள் தருகிறது. (1) வாழ்வின் முன்னுரை தாலாட்டு. ஆனால் முடிவுரை ஒப்பாரியாகும். தாலாட்டு கலங்கரை விளக்கமானால் ஒப்பாரி நினைவுச் சின்னமாகும். உயிரிழப்பு ஏற்படும் போதுதான் ஒப்பாரி உயிர் பெற்று எழுகின்றது” (2) ஒப்பாரிப்பாட்டுக்கு அழுகைப்பாட்டு என வேறு பெயரும் உண்டு. பெண்கள் மார்பில் அடித்துக் கொள்வதால் மாரடிப்பாட்டு எனவும் கூறப்படும். இது கவிஞர்களால் இரங்கற்பா எனவும் அழைக்கப்படுகிறது.
ஒப்பாரிப் பாடல்கள் பெரும்பான்மையாக இரண்டு சீர்களேப் பெற்றுவரும். வந்த சொல் சொற்றொடர் மீண்டும் மீண்டும் வருவதாக அமையும். மேலும் மோனைத் தொடையும் எதுகைத்தொடையும் அதிக முக்கியத்துவம் பெற்றுவரும். தெளிவாக, அனைவருக்கும் புரியும்படியான எளிய சொற்களைப் பெற்றுவரும்.
“தாலிக்கு அரும்பெடுத்த
தட்டானும் கண் குருடோ?
சேலைக்கு நூலெடுத்த
சேனியனும கண் குருடோ?” (3)
குறியீட்டுப் பொருளிலும் ஒப்பாரிப் பாடுவதுண்டு.
“குட்டப் புளியமரம்
குயிலடையும் நந்தவனம்
குட்ட மரம் பட்டுப்போச்சுன்னா
குயில் போய் எங்கடையும்” (4)
இறந்தவர்களின் இழப்பை ஆற்றும் பொருட்டும், மனச்சுமையை இறக்கி வைக்கும் பொருட்டும், இறந்தவர்களுடன் தம்மையும் இணைத்துத் தங்கள் உறவு நிலையையும் கடந்தகால வாழ்வையும் கலந்து பாடுவதாக அமையும்.
“ஆற்றங்கரையோரம் ஒரு
அன்னம்போல் குந்தியிருந்தேன்
அன்னமென்றும் பார்க்காமே ஒரு
அம்பைவைச்சு எய்தானே!” (5)
கையறுநிலைப் பாடல்கள்
மனித மனத்தின் அழுத்தமான அழுகைக்குரலுக்குச் சொந்தமானதே ஒப்பாரிப்பாடல். இவ்வொப்பாரிப் பாடலேச் சங்க இலக்கியத்தில் கையறு நிலைப்பாடல் என வழங்கப்பட்டது. கையறுநிலை என்பது இறந்த அரசனைக் குறித்து அவனைச் சார்ந்தோர் இரங்குதல். இரங்கிப்பாடுதல் ஆகும். தன் அன்பிற்குரியவர்கள் இறந்துபட்டால், அவர்களின் பெருமைகளை உணர்வுப்பூர்வமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் பாடுவதாகும்.
“இல்லா கியரோ காலை மாலை
அல்லா கியர் யான் வாழும் நாளே
நடுகல் பீலி சூட்டி நார் அரி
சிறு கலந்து உடுப்பவும் கொள்வன் கொல்லோ
கோடு உயர் விறங்குமலை கெழீஇய
நாடு உடன் கொடுப்பவும் கொள்ளாதோனே” (புறநானூறு பா.எ.232)
புறநானூற்றுப் பாடலில் ஒப்பாரிப் பாடலின் தாக்கம்
புறநானூற்றுப் பாடலில் ஒப்பாரிப்பாடல் நிலையில் அமையப்பெற்ற கையறு நிலைப்பாடல்கள் பரவலாகக் கிடக்கின்றன. கையறுநிலை தவிர ஆனந்த பையுள், தாபத நிலை பாடல்களும் ஒப்பாரிப் பாடலை ஒத்தே காணப்படுகின்றன. ஆனந்த பைபுள் என்பது கணவன் இறந்த போது மனைவி துன்புறுதலைக் கூறுதல். இறந்தாரைக்கண்டு ஏனையோர் வருந்துதலும் ஆகும். தாபதநிலை என்பது கணவன் இறந்ததால் மனைவி கைம்மை நோன்பிருத்தலை உரைத்தலாகும். புறநானூற்றுப் பாடலில் 43 கையறு நிலைப்பாடல்களும், 4 ஆனந்தப்பையுள் பாடல்களும், 3 தாபத நிலைப்பாடல்களும் காணப்படுகின்றன. இவ்வைம்பது பாடல்களிலும் ஒப்பாரிப்பாடற் கலைக்கூறுகள் விரவிக்கிடக்கின்றன.
தொடை
மோனைத்தொடை அமைப்புக்கொண்ட கையறு நிலைப்பாடல்கள் ஒரு சிலவே காணப்படுகின்றன. அவையும் கூட பாடல் முழுவதிலும் பெற்று வருவதில்லை. இடையிடையே ஓரிரு வரிகள் மாற்றம் பெற்று வருகின்றன.
“பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு புரந்த
பெருங்களிறு டழந்த வைதற் பாகன்
அது சேர்ந்த அல்கிய… … …” (புறநானூறு பா.எ.220)
எதுகைத் தொடை அமைப்புக் கொண்ட பாடல்கள் பரவலாகக் கிடக்கின்றன.
“மடடுவாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பவும்
அட்டு ஆன்று ஆனாக் பொழுந்துவை ஊன் சோறும்
பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழனி
நட்டானை மன்னோ முன்னே… … …” (புறநானூறு பா.எ.113)
வந்த சொல், சொற்றொடர்
ஒப்பாரிப் பாடலும் கையறு நிலைப்பாடலும் உணர்வு நிலையில் ஒத்துக் காணப்படுகின்றன என்றாலும், ஒரு சில இடங்களில் ஒப்பாரிப்பாடலைப் போன்று வந்த சொல் வருதல் என்ற தனித்தன்மைப் பெற்ற உருவ ஒற்றுமைக் கொண்ட கையறு நிலைப் பாடல்களைப் புறநானூற்றில் காணமுடிகிறது.
“பொய்யாகியரோ பொய்யாகியரோ
பாவடி யானை பரிசிலர்க்கு அருகாச்
சீர்செழு நோன்தாள் அகுதைகண் தோன்றிய
பொன்பினை திகிரியின் பொய்யாகியரோ” (புறநானூறு பா.எ.233)
புறநானூற்றுப்பாடலில் இது போன்ற இன்னும் 8 பாடல்கள் (112, 114, 115, 218, 221, 226, 228, 235) காணக்கிடக்கின்றன.
குறியீடு
புறநானூறு என்பதே பொதுவாக இவர்தான் என சுட்டிப் பெயர் சொல்லப்படும் என்பர். ஆனால் கையறு நிலைப்பாடல் ஒன்று இம்மன்னன் இப்புலவர் என சுட்டப்படாமல் குறிப்பால் உணர்ந்துகொள்ளும் படியாக குறியீட்டு முறையில் அமைந்துள்ளது.
“பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் செய ஆயினம் தொடைபுணர்ந்து
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
ஒரு வழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப
சாலார் சாலார் பாலர் ஆகுபவே” (புறநானூறு பா.எ.218)
உறவு நிலை
நாட்டையும் தந்தையையும் இழந்த நிலையில் பாரி மகளிர் பெரிதும் கலங்கிப்பாடிய புறநானூற்றுப் பாடல் ஒப்பாரிக்கு ஒப்பாகப் பாடப்பட்டதாகும்.
“அற்றைத் திங்கள் அவவெண் நிலவில்
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர் கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் னிலவில்
வென்று எறிமுரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே” (புறநானூறு பா.எ.112)
இது தவிர, கணவனை இழந்த மனைவி பாடுவதாகவும் (பா.எ.246), மனைவியை இழந்த கணவன் பாடுவதாகவும் (பா.எ.245), மகனை இழந்த தாய் நிலையில் மூன்றாமவன் பாடுவது போன்ற பாடல்களும் (பா.எ.270) காணப்படுகின்றன.
இறந்தவரின் பெருமை
இறந்துப்பட்டவனுடைய சிறப்பைப் பற்றிப் புகழ்ந்து கூறுவது போன்று அமைந்த புறநானூற்று ஒப்பாரிப் பாடல் ஒன்றைக் காண்போம்.
“செற்றன்று ஆயினும் செயிர்ந்தன்று ஆயினும்
உற்றன்று ஆயினும் உய்வின்றி மாதோ
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி
இரத்தன்று ஆகல் வேண்டும் பொலந்தார்
மண்டு அமர் கடக்கும் தானைத்
திண் தேர் வளவற் கொண்ட கூற்றே” (புறநானூறு பா.எ.226)
இப்பாடல் வரிகள் மன்னனுடைய வீரத்தைக் கூறி இப்படிப்பட்ட மன்னனை பரிசிலர் போல் கூற்றுவன் கைதொழுது ஏந்தியே அவன் உயிரைப் பெற்றிருக்க வேண்டும் என்கிறார்.
தொகுப்புரை
மனித மனத்தின் அழுத்தமான அழுகைக்குரலுக்குச் சொந்தமானதே ஒப்பாரிப் பாடல்களாகும். அதனைச் சங்க இலக்கியத்தில் கையறு நிலைப்பாடல் என்பர். ஒப்பாரிப் பாடல் கிராம மக்களின் குரல். கையறு நிலைப்பாடல்கள் சுற்றறிந்த புலவர்களின் பாடல். முன்னதில் பாடப்பெற்றவர். யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். புறநானூற்றுப் பாடல்களில் அரசகுல மக்களே பெரும்பாலும் பாடப்பெற்றவர் ஆவர் என்றாலும் கூட புறநானூற்றுப் பாடலில் ஒப்பாரிப் பாடற்கலையின் சாயல் காணப்படுகிறது. அது உணர்வு நிலையில் மட்டுமல்லாது, சொல்லுகின்ற விதத்திலும் ஒத்துக்காணப்படுகிறது. தொடை ஒற்றுமையும் வந்ந சொல் சொற்றொடர் வருதலும் காணக்கிடக்கின்றன. இறந்தவர்களுடன் தம்மையும் இணைத்துத் தங்கள் உறவு நிலையையும், இறந்தவர்களின் பெருமையையும், கடந்தகால வாழ்வையும் கலந்து பாடுவது ஒப்பாரியின் சிறப்பம்சமாகும். இந்நிலை புறநானூற்றுப்பாடல்களிலும் அமையப்பெற்றுள்ளன.
அடிக்குறிப்புகள்
1. கழகத் தமிழ் அகராதி , ப. 6
2. சு. சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு, ப. 59
3. மேலது., ப. 61
4. நா. வானமாமலை, தமிழர் நாட்டுப்பாடல்கள், ப. 519
5. கி.வா. ஜகந்நாதன், மலையருவி (நாடோடிப்பாடல்கள்), ப. 281
துணை நூற்பட்டியல்
1. தமிழ் அகராதி, கழகத் தமிழ் அகராதி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை - 1, 1964
2. சக்திவேல் சு., நாட்டுப்புற இயல் ஆய்வு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை - 1, 1983
3. நா. வானமாமலை, தமிழர் நாட்டுப்பாடல்கள், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை - 98, 2004
4. கி.வா. ஜகந்நாதன், மலையருவி(நாடோடிப்பாடல்கள்), தஞ்சை, சரஸ்வதிமஹால் வெளியீடு, 1958
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.