திருமுருகாற்றுப்படையில் சூரசம்காரம்
மு. பூங்கோதை
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி.
முன்னுரை
சங்ககாலத்தில் எழுதப்பெற்ற இலக்கியங்களில் ஆற்றுப்படை இலக்கியங்கள் தனித்துவம் வாய்ந்தவை. ஒருவன் தான் பெற்ற செல்வத்தை தன்னைப் போன்றே பிறரும் பெறவேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையோடு படைக்கப்பட்டுள்ளன. ஆற்றுப்படை என்பதற்கு ஆற்றுப்படுத்துதல் என்பது பொருளாகும். “ஆறு" என்றால் பாதை என்றும், “படுத்துதல்" என்றால் செலுத்துதல் என்றும் பொருளாகும். அதாவது, ஒருவர் செல்ல வேண்டிய பாதையை சரியான முறையில் தெரிவித்தலாகும். அவ்வகையில், ஆற்றுப்படை இலக்கியங்கள் யாவும் பரிசில் தருகின்ற மன்னனைத் தேடிச் சென்று பாணன் பரிசு பெற ஆற்றுப்படுத்துவதாக அமைந்திருக்க, திருமுருகாற்றுப்படை முருகனின் திருவருளைப் பெற பக்தர்களை ஆற்றுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அத்திருமுருகாற்றுப்படையில் அமைந்துள்ள சூரசம்கார நிகழ்வினை எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகின்றது.
திருமுருகாற்றுப்படை
திருமுருகாற்றுப்படையின் ஆசிரியர் மதுரைத் தமிழ்ச்சங்கப் புலவர் நக்கீரர் ஆவார். 317 அடிகளைக் கொண்டது. இவ்லிலக்கியத்தை திரு + முருகு + ஆற்றுப்படை என பிரித்து திரு என்பது அழகு, முருகு என்பது முருகன், ஆற்றுப்படை என்பது வழிப்படுத்துதல் எனவும் பொருள் கொள்ளலாம். முருகப்பெருமானின் அருள் பெற்ற புலவன் இன்னொரு புலவனைப் பார்த்து முருகனின் அறுபடை வீடுகளுக்குச் சென்று பாடிப்புகழ்ந்து பெறுவதற்கு அரிய வீடுபேற்றை பரிசாக பெற்றுக் கொள்வதற்கு வழிப்படுத்துகின்ற காரணத்தினால் புலவராற்றுப்படை என்றும் அழைக்கப்படுகின்றது.
முருகப்பெருமானின் பிறப்பு
காசியப்ப முனிவருக்கும் மாயைக்கும் மனித உடலுடன் குதிரை முகத்துடன் பிறந்த அசுரன் சூரபத்மன். அவன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து இந்திரஞாலம் எனும் தேரையும், பெண்ணால் பிறக்காத குழந்தையால் மட்டுமேத் தனக்கு மரணம் ஏற்படவேண்டும் என்ற வரத்தையும் பெற்றான். பெற்ற வரத்தால் தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் அனைவரும் வரம் அளித்த சிவபெருமானிடம் முறையிட்டனர். தேவர்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றும் நோக்குடன் சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணைத் திறக்க, அவைகளில் இருந்து ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டன. அவற்றை அக்கினிபகவான் ஏந்திச் சென்று "சரவணப் பொய்கையில்" மலர்ந்திருந்த தாமரை மலர்களின் மீது சேர்த்தான். அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாக தோன்றின. ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி, பாலூட்டி வளர்த்து வரும் வேளை அகிலலோகநாயகி பார்வதி தன் மைந்தர்கள் அறுவரையும் ஒன்றாக அன்புடன் கட்டி அணைத்திட அவையாவும் ஒரு திருமேனியாக வடிவங் கொண்டு ஆறுமுகங்களும் பன்னிருகரங்களும் உடைய ஒரு திருமுருகனாக தோன்றின. இதனை.
“நெடும்பெருஞ் சிமையத்துநீலப் பைஞ்சுனை,
ஐவருள் ஒருவன் அங்கைஏற்ப,
அறுவர்பயந்தஆறுஅம்ர்செல்வ!
ஆல்கெழுகடவுட் புதல்வ! மால்வரை
மலைமகள் மகனே….” (திருமுருகு.253-257)
“….ஆங்குஅப்பன்னிருகையும் பாற்பட இயற்றி” (திருமுருகு.118)
“…..ஆங்குஅம்மூ-இருமுகனும்,முறைநவின்றுஒழுகலின்” (திருமுருகு.104)
என்ற திருமுருகாற்றுப்படையில் முருகப்பெருமான் ஆறுமுகத்துடனும், பன்னிருகைகளுடனும் பிறந்த கதையை அறிந்து கொள்ள முடிகின்றது. அன்னை பார்வதிதேவி தன்னைப் போன்ற ஒரு சக்தியை உருவாக்கி அதனை தனது சக்திகள் யாவும் கொண்ட ஓர் வீரவேலாக உருமாற்றி முருகனிடம் தந்தார். வேல் வாங்கிய முருகன், தேரேறிதெற்கெ இருந்த வீரமகேந்திரபுரியை நோக்கிச் செல்கின்றார்.
கிரௌஞ்ச மலையைத் தகர்த்தல்
மாயாபுரத்தை ஆண்ட சூரனின் தம்பி தாரகாசுரன் (ஆனைமுகம் கொண்டவன்) கிரௌஞ்சம் என்னும் பெரியமலையாய் உருமாறி வழி மறிக்கின்றான். தாரகன் தன் மாயையால் முருகனின் சேனையை அழுத்தி சிறைப்படுத்துகின்றான். அப்போது முருகப்பெருமான் தன்னுடைய கூர்வேலினால் மாயை மலையைப் பிளக்க தாரகாசுரன் அழிகின்றான். இதனை,
“வேல்கெழுதடக்கைச் சால்பெருஞ் செல்வ!
குன்றம் கொன்றகுன்றாக் கொற்றத்து,
விண்பொருநெடுவரைக் குறிஞ்சிக் கிழவ” (திருமுருகு.265-267)
திருமுருகாற்றுப்படையில் இடம் பெறுகின்ற வரிகளின் வாயிலாக முருகப்பெருமான் கிரௌஞ்ச மலையைத் தகர்த்த நிகழ்வினை அறிய முடிகின்றது.
சூரபத்மனை வென்ற வேலன்
முருகன் வேலோடும், படையோடும் சூரபத்மனைஅழிக்கப் புறப்பட்டார். முதலில் பானுகோபன் (சூரபதுமன் மகன்), சிங்கமுகனையும் (சூரபதுமன் தம்பி) அழித்தார். இறுதியாகப் போருக்குப் புறப்படுகின்றான் சூரபதுமன். வீரமகேந்திரபுரத்தில் பலப்பல மாயங்கள் செய்து போர் புரிகிறான். உதவி செய்ய இருந்த உற்றமும் சுற்றமும் அழிந்து, உறவும் அற்றுப் போனதினால் சூரனும் மயங்கித் தத்தளித்தான். தன்னுடன் போர்செய்ய வந்தது இறைவனே என்று அறிந்தும், அடிபணிய ஆணவம் அவனைவிடவில்லை. தனது மாயவித்தைகளால் மறைந்து மறைந்து முருகனின் படையைத் தாக்குகின்றான். முருகப்பெருமானும் அவன் சென்ற இடமெல்லாம் துரத்திச் சென்று கடைசியாக நடுக்கடலடியில் மாமரமாய் மாறுவேடத்தில் நின்ற சூரனை; நீரினுள் சென்று மாமரத்தை இருகூறாக்கி சூரனைச் சங்காரம் செய்தார். இதனை,
“பார்முதிர்பனிக்கடல் கலங்கஉள்புக்கு
சூர்முதல் தடிந்தசுடர்இலைநெடுவேல்” (திருமுருகு-45-46)
“இருபேர்உருவின் ஒருபேர்யாக்கை,
அறுவேறுவகையின் அஞ்சுவரமண்டி
அவுணர்நல்வலம் அடங்கக் கவிழ்இணர்
மாமுதல் தடிந்தமறுஇல் கொற்றத்து” (திருமுருகு.57-60)
“சூர்மருங்குஅறுத்தமொய்ம்பின் மதவலி!
போர்மிகுபொருந! குரிசில்!எனப்பல,” (திருமுருகு.275-276)
ஆணவம் அழியப் பெற்ற சூரன் தம் தவறை உணர்கின்றான். தன்னை மன்னித்து, ஏற்றுக் கொள்ளும்படி மன்றாடி முருகனை வேண்டி நிற்கின்றான். அவன்மேல் இரக்கம் கொண்டு; பிளவுபட்ட மாமர பாதிகள் இரண்டையும் முருகன் தன் அருளால் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி, மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியிலும் தன்னுடன் சேர்த்துக் கொள்கின்றார்.
முருகன் - தெய்வானை திருமணம்
சூரசம்காரம் முடிந்த பின்னர், அமரேந்திரன் (இந்திரன்) தேவயானைக்கும் முருகப்பெருமானுக்கும் திருமணம் நடைபெறுகின்றது. திருமுருகாற்றுப்படையில் தெய்வானையின் கணவன் என்று முருகப்பெருமான் அடையாளப்படுத்தப்படுவதை,
“மறுஇல் கற்பின் வாள்நுதல் கணவன்” (திருமுருகு.6)
என்ற அடிகளின் வாயிலாக அறிய முடிகின்றது.
முடிவுரை
• திருமுருகாற்றுப்படையில் முருகன் நிகழ்த்திய சூரசம்காரகதையைஅறியமுடிகின்றது.
• முருகப்பெருமான் சூரர்களைஅழிக்கநிகழ்த்தியபோர்நாட்களைதான் இன்று சஷ்டி விரதமாககடைபிடித்துவருகின்றனர்.
• முருகன் சூரனைவதம் செய்தநாளன்றுமுருகப்பெருமான் கோயிலில் பொம்மையிலான சூரனைஎரிக்கின்றநிகழ்வுநடைபெற்றுவருகின்றது.
பயன்பட்ட நூல்கள்
1. ச. வே. சுப்பிரமணியன், (உரையாசிரியர்), சங்கஇலக்கியம் பத்துப்பாட்டு (மூலமும் உரையும்), மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர்தெரு, பாரிமுனை, சென்னை– 600 108.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.