இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

குறுந்தொகையில் இளமைப் பெயர்கள்


முனைவர் ம. பழனி

நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்,
கௌரவ விரிவுரையாளர் (சுழற்சி-II),தமிழ்த்துறை,
அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
பருகூர் - 635 104.


ஆய்வுச் சுருக்கம்

பண்டையத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் படம் பிடித்துக் காட்டுவன சங்க இலக்கியங்களாகும். சங்க இலக்கியங்கள் பாட்டும் தொகையுமென பரந்து விரிந்து கிடக்கின்றன. பத்துப்பாட்டை முதலில் குறித்துப் பின் எட்டுத்தொகையைக் குறிப்பிட்டாலும், காலத்தால் முந்தியது எட்டுத்தொகை நூல்களே. இந்த எட்டுத்தொகை நூல்களுள் இரண்டாவதாக வைத்துப் போற்றப்படுவது குறுந்தொகை. குறுந்தொகையின் சிறப்பினை உணர்த்த ‘நல்ல குறுந்தொகை’ என்ற அடைமொழியால் அழைக்கப்படுகிறது. கடவுள் வாழ்த்தோடு 401 பாடல்களைக் கொண்ட குறுந்தொகையில் 235 பாடல்கள் உரையாசிரியர்களால் மேற்கோள் பாடல்களாகக் கையாளப்பட்டுள்ளன. 235 பாடல்களையும் சங்க இலக்கியங்களிலுள்ள பிற நூல்களோடு ஒப்பிடும் போது குறுந்தொகையிலிருந்தே அதிகப் பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ‘நல்ல குறுந்தொகை’ என்ற அடைமொழி குறுந்தொகைக்குப் பொருத்தமாகவும் அமைகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த குறுந்தொகையில் இளமைப் பெயர்களும் பயின்று வந்துள்ளன.

திறவுச் சொற்கள்

மரபு, இளமை, பெயர், பறப்பவை, தவழ்பவை, விலங்குகள், குழந்தை, மக்கள்.

முன்னுரை

தமிழ்நாட்டின் எல்லைகளையும், அந்த எல்லைகளுக்குள் வாழ்ந்த மாந்த இனத்தின் மொழியையும், வரலாற்றையும், வாழ்க்கை முறைகளையும் மடடுமல்லாது மற்ற உயிரினங்களின் இயங்கியலையும் படம் பிடித்துக் காட்டுவன தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களுமாகும். தொல்காப்பியம் பொருளதிகாரத்திற்கு இலக்கியமாக அமைந்தவை சங்க இலக்கியங்களா அல்லது சங்க இலக்கியங்களுக்கு இலக்கணமாக எழுந்தவை தொல்காப்பியப் பொருளதிகாரமா என்பது சிந்தனைக்குரியது. தொல்காப்பியர் தமக்கு முன்பிருந்த இலக்கண நூலாசிரியர்களின் இலக்கண முடிபுகளை ஏற்றுத் தொல்காப்பியத்தை இயற்றியுள்ளார் என்பதை ‘என்மனார் புலவர், என்ப, மொழிப, அறிந்திசினோரே’ போன்ற சொல்லாடல்களால் உறுதிப்படுத்தலாம். இதனால் முன்னோர் மரபுகளை அடியொற்றிச் சான்றுகளின் அடிப்படையிலமைந்த முதல் இலக்கண நூலாகத் தொல்காப்பியத்தை மதிப்பிடலாம். தொல்காப்பியத்தின் இறுதி இயலாக அமைந்துள்ளது மரபியலாகும். மரபியலில் இளமைப் பெயர், ஆண்பால் பெயர், பெண்பால் பெயர் என அனைத்து உயிரினங்களுக்குமான பெயர்களையும் அவற்றின் அறிவுப் பண்பாட்டையும் தொல்காப்பியர் விளக்குகிறார். சங்க இலக்கியங்களிலும் தொல்காப்பியர் குறிப்பிடும் இளமைப் பெயர்கள் பல இடங்களில் பயின்று வந்துள்ளன. அவற்றில் குறுந்தொகையில் இடம் பெற்றுள்ள இளமைப் பெயர்களோடு தொல்காப்பியர் குறிப்பிடும் இளமைப் பெயர்களை ஒப்பிட்டு ஆராய்வதாக இந்தக் கட்டுரை அமைகிறது.


மரபு - பொருள் விளக்கம்

மக்களால் தொன்று தொட்டு நெடுங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கங்களை மரபு எனலாம். நன்னூலின் ஆசிரியரான பவணந்தி முனிவர்,

“எப்பொருள் எச்சொல்லின் எவ்வா றுயர்ந்தோர்
செப்பினார் அப்படிச் செப்புதல் மரபே” (நன்னூல்: 388)

என்ற நூற்பாவில் மரபு என்பதைப் பற்றிக் குறிப்பிடுகிறர். எந்தப் பொருளை எந்தச் சொல்லினால் எந்த நெறியுறச் சான்றோர்கள் சொல்லினார்களோ அந்தப் பொருளை அந்தச் சொல்லினால் அந்த நெறியுறச் சொல்ல வேண்டும் என்பது இந்நூற்பாவிற்கான பொருளாக அமைகிறது. இதிலிருந்து வழிவழியாக வழங்கிய வழக்காற்று மரபுகளை மரபு என அவதானிக்கலாம்.

இளமைப் பெயர்கள்

உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களுக்குமான ஆண்பால் பெயர்களையும், பெண்பால் பெயர்களையும், இளமைப் பெயர்களையும் மரபு வழியிலமைந்த வழக்கங்களே சுட்டிக் காட்டுகின்றன. தொல்காப்பியரும் இளமைப் பெயர், ஆண்பால் பெயர், பெண்பால் பெயர் ஆகியனவற்றை மரபு வழியிலமைந்த பெயர்கள் என்று மரபியலில் குறிப்பிடுகிறார். இத்தகைய மரபு வழியிலமைந்த இளமைப் பெயர்களாக,

“மாற்றரும் சிறப்பின் மரபியல் கிளப்பிற்
பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்
கன்றும் பிள்ளையும் மகவும் மறியுமென்
றொன்பதும் குழவியொ டிளமைப் பெயரே” (தொல்.மரபு: 1)

என்ற நூற்பாவில் ‘பார்ப்பு, பறழ், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி’ ஆகிய ஒன்பது பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மக்கள், விலங்கினங்கள், பறவையினங்கள் மற்றும் தவழ்வனவற்றின் இளமைப் பெயர்களைக் குறிப்பிடும் தொல்காப்பியர்,

“பிள்ளை குழவி கன்றே போத்தெனக்
கொள்ளவும் அமையும் ஓரறி வுயிர்க்கே” (தொல்.மரபு: 24)

என்ற நூற்பாவில் தாவரயினங்களின் பெயர்களையும் இளமைப் பெயர்களாகக் குறிப்பிடுகிறார். இந்நூற்பாவிற்கு “புல், மரம் எனப் பகுத்துரைக்கப்படும் ஓரறிவுயிராகிய தாவரங்கட்குப் பிள்ளை, குழவி, கன்று, போத்து என்னும் இளமைப் பெயர் நான்கும் (இளமைக் குறித்த) பெயர்களாகக் கொள்ளுதல் பொருந்தும்” (1) என்று க.வெள்ளைவாரணனார் ஆய்வுரை வழங்கியுள்ளார். இந்த இளமைப் பெயர் கொண்ட உயிரினங்கள் எவையெவை என்பதைத் தொல்காப்பியர் மரபியலிலுள்ள 4 ஆவது நூற்பாவிலிருந்து 26 ஆவது நூற்பா வரை விளக்குகிறார்.


இந்த நூற்பாக்களின் அடிப்படையில்

பார்ப்பு - பறப்பன, தவழ்வன.

பறழ் - மூங்கா (கீரி), வெருகு (காட்டுப் பூனை), எலி, மூவரி அணில் (அணிலின் முதுகுப்புறத்திலுள்ள கோடுகள்), நாய், பன்றி, புலி, முயல், நரி, குரங்கு.

குட்டி - மூங்கா, வெருகு, எலி, மூவரி அணில், நாய், பன்றி, புலி, முயல், நரி, குரங்கு (மரக்கிளையே அல்லாது மலையில் வாழ்வனவும்).

குருளை - நாய், பன்றி, புலி, முயல், நரி.

கன்று - யானை, குதிரை, கழுதை, கடமை (மான்), ஆன் (பசு), எருமை, மரை (மான்), கவரி (மான்), கராகம் (கரடி (2), முதலை(3)), ஒட்டகம், பூங்கன்று.

பிள்ளை - பறப்பன, தவழ்வன, பன்றி, புலி, முயல், குரங்கு, கமுகம்பிள்ளை, தெங்கம்பிள்ளை, போத்து (புலிப்போத் தன்ன(4)).

மகவு - குரங்கு, குழந்தை (மக்கள்).

மறி - ஆடு, குதிரை, நவ்வி (புள்ளிமான்), உழை (மான்), புல்வாய் (மான்).

குழவி - குஞ்சாரம் (யானை), ஆ (பசு), எருமை, கடமை (மான்), மரை (மான்), குரங்கு, முசு (குரங்கு), ஊகம் (குரங்கு), குழந்தை (மக்கள்).

ஆகிய உயிரினங்களையும் மக்களையும் இளமைப் பெயர்களாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறுந்தொகையில் இளமைப் பெயர்கள்

சங்க இலக்கியங்களில் 248 இடங்களில் இளமைப் பெயர்கள் பயின்று வந்துள்ளன. அவற்றில் குறுந்தொகையில் பார்ப்பு 4 இடங்களிலும், பறழ் 2 இடங்களிலும், குருளை 4 இடங்களிலும், கன்று 6 இடங்களிலும், பிள்ளை 4 இடங்களிலும், மகவு 1 இடத்திலும், மறி 6 இடங்களிலும், குழவி 7 இடங்களிலும் என 34 இடங்களில் இளமைப் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. குட்டி என்ற இளமைப் பெயர் குறுந்தொகையில் இடம் பெற்றிருக்கவில்லை.

பார்ப்பு

தொல்காப்பியர் பார்ப்பு, பிள்ளை (தொல்.மரபு:4) ஆகிய இரண்டையும் பறப்பனவற்றின் இளமைப் பெயர்களாகக் குறிப்பிடுவதைப் போன்று தவழ்ந்து செல்லும் உயிரினங்களையும் (தொல்.மரபு:5) பார்ப்பு, பிள்ளை என்ற பெயரிலியே அழைக்கிறார். பார்ப்பு என்ற சொல்லிற்குப் “பறப்பவற்றின் இளமை (தொல்.பொ.559) தவழ்பவற்றின் இளமை (தொல்.பொ.560) விலங்கின் குட்டி (பிங்)” (5) என்று தமிழ் லெக்சிகன் விளக்கமளிக்கிறது. இந்நூற்பாக்களுக்கு “இவ்விரண்டும் புள்ளிளைமைக்குரிய, என்றவாறு. இவையெல்லாம் இக்காலத்து வழக்கினுள் அரியவாகலிற் சான்றோர் செய்யுட் காணப்படும்” (6) என்றும், “ஆமையும் உடும்பும் ஓந்தியும் முதலையும் முதலாயின. நீருள் வாழினும் நிலத்தியங்குங்கால் தவழ்பவையெனப்படும்” (7) என்றும் பேராசிரியர் விளக்கமளிக்கிறார். மேலும், “குரங்கிற்குக் குட்டியென்னும் பெயரேயன்றி மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்புமெனப்பட்ட இந்நான்கும் குட்டியென்னும் பெயர்போல அக்குரங்கின் பகுதிக்கு உரியவாம், என்றவாறு” (8) என்கிறார். இதன் மூலமாக, ஆமை, உடும்பு, ஓந்தி, முதலை, குரங்கு ஆகியவற்றின் குட்டிகளை, பார்ப்பு, பிள்ளை (தொல்.மரபு:5) ஆகிய இளமைப் பெயர்களைக் கொண்டு அழைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

பார்ப்பு என்ற இளமைப் பெயர் நான்கு இடங்களில் பயின்று வந்துள்ளன. குறிஞ்சித் திணையிலமைந்த கிளிமங்கலங்கிழார் பாடிய,

“யாமைப் பார்ப்பின் அன்ன” (152:4)

என்ற அடியிலமைந்த பார்ப்பு என்னும் பெயர் ஆமையின் குஞ்சுகளைக் (உ.வே.சாமிநாதையர்.1947:331 தமிழண்ணல்.2022:194, இரா. அறவேந்தன்.2024:278) குறிப்பிடுகின்றன. குறிஞ்சித் திணையிலமைந்த கபிலர் பாடிய,

“நரைமுக வூகம் பார்ப்பொடு பனிப்பப்” (249:2)

பாடலடியிலும்,

பாலைத் திணையிலமைந்த வேரிசாத்தன் பாடிய,

“பார்ப்புடை மந்திய மலையிறந் தோரே” (278:7)

பாடலடியிலும்,

இருந்தையூர்க் கொற்றன் புலவன் பாடிய குறிஞ்சித் திணையிலமைந்த,

“பைங்கண் மந்தி பார்ப்பொடு கவரும்” (335:4)

பாடலடியிலும்

என மூன்று பாடல்களில் முதற்பாடலுக்கு வெள்ளை முகத்தையுடைய கருங்குரங்கினது குட்டிகள் (உ.வே.சாமிநாதையர்.1947:517), வெளுத்த முகத்தையுடைய கருங்குரங்கினது குட்டி (தமிழண்ணல்.2022:296), நரைத்த வெள்ளையான முகம் கொண்ட கருங்குரங்கினது குட்டி (இரா. அறவேந்தன்.2024:278) என்று குரங்குக் குட்டிகளைக் குறிப்பிட பார்ப்பு என்ற பெயர் பயின்று வந்துள்ளது. ஒரே பாடலிலுள்ள குரங்கு என்ற சொல்லுக்கு உரையாசிரியர்கள் மூன்று விதமானப் பொருள்களைக் கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

அடுத்ததாகவுள்ள இரண்டு பாடல்களிலும் பெண் குரங்கினது குட்டிகளைக் (உ.வே.சாமிநாதையர்.1947:574,676.தமிழண்ணல்.2022:330,398. இரா.அறவேந்தன்.2024:452,532) குறிப்பிடுவதற்காகப் பார்ப்பு என்ற இளமைப் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. பார்ப்பு என்ற சொல் தவழ்வனவாகிய ஆமைக் குஞ்சுகளையும் குரங்குக் குட்டிகளையும் குறிப்பிடும் இளமைப் பெயராகவே பாடலில் பயின்று வந்துள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.


பறழ்

மூங்கா, வெருகு, எலி, மூவரி அணில் (தொல்.மரபு:7), நாய், பன்றி, புலி, முயல், நரி (தொல்.மரபு:10), குரங்கு (தொல்.மரபு:14) ஆகிய உயிரினங்களைப் பறழ் என்ற இளமைப் பெயரில் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். தொல்காப்பியர் குறிப்பிடுவதைப் போன்றே ‘பறழ்’ என்ற சொல்லிற்கு “மரங்களில் தவழ்பவை, தவழ்வன, மூங்கா, வெருகு, எலி, அணில், நாய், பன்றி, புலி, முயல், நரி இவற்றின் இளமைப் பெயர் (திவா)” (9) என்று தமிழ் லெக்சிகனும் விளக்கமளிக்கிறது. ‘பறழ்’ என்ற சொல்லுக்கு, “இவை இக்காலத்து வீழ்ந்தன” (10) என்று பேராசிரியர் விளக்கமளிக்கிறார். இதன் மூலமாக, மேற்கண்ட உயிரினங்களைக் குறிப்பிட தற்காலத்தில் ‘பறழ்’ என்ற பெயர் வழக்கத்திலில்லை என்பதை உறுதியாகக் கூறலாம்.

குறிஞ்சித் திணையிலமைந்த வெள்ளிவீதியார் பாடிய,

“வரையாடு வன்பறழ்த் தந்தைக்” (26:7)

பாடலடியிலும்,

கருந்தோட்கரவீரன் பாடிய குறிஞ்சித் திணையிலமைந்த,

“கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி” (69:3)

பாடலடியிலும் பறழ் என்ற இளமைப் பெயர் இடம்பெற்றுள்ளது.

பறழ் என்ற சொல்லோடு ‘வன்’ என்ற அடைமொழி இணைந்து ‘வன்பறழ்’ என்று வந்துள்ளதால், வலிய குட்டி, மரமேறுதல் முதலியவற்றைக் கற்கவில்லை என்ற குரங்குக்குட்டி (உ.வே.சாமிநாதையர்.1947:68,161) என்றும் வலிமை வாய்ந்த குட்டிக்குத் தந்தையாகிய ஆண் குரங்கு, வலிய குட்டி (தமிழண்ணல். 2022:53,104) என்றும், மலைப்பகுதியில் விளையாடும் குட்டியின் தந்தையாகிய ஆண் குரங்கு, தனித்து வாழப் பழகாத இளம் குட்டி (இரா. அறவேந்தன். 2024:96,158) என்றும் பயின்று வந்துள்ளன. ஓரடியிலிலுள்ள ‘பறழ்’ என்ற சொல்லை உரையாசிரியர்கள் மூன்று விதமானப் பொருள்களில் கையாண்டிருந்தாலும் அச்சொல் குரங்கினது குட்டியைக் குறிப்பிடும் இளமைப் பெயராகவேப் பயின்று வந்துள்ளது.

குருளை

குருளை என்ற சொல் நாய், பன்றி, புலி, முயல் (தொல். மரபு:8), நரி (தொல். மரபு:9), குட்டி, பறழ் (தொல். மரபு:10) ஆகிய உயிரினங்களைக் குறிப்பிடும் இளமைப் பெயராகத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. தமிழ் லெக்சிகனும் “நாய், பன்றி, புலி, முயல், நரி ஒருசார் விலங்கின் இளமை (தொல்.பொ.564, 565), பாம்பின் குஞ்சு, ஆமை (மூ.அ)” (11) என்று விளக்கமளிக்கிறது.

குறிஞ்சித் திணையிலமைந்த வெள்ளிவீதியார் பாடிய,

“வெயிலாடு முசுவின் குருளை யுருட்டுங்” (38:2)

பாடலடியில் கருங்குரங்கின் குட்டி (தமிழண்ணல்.2022:53), குரங்கின் குட்டி (உ.வே.சாமிநாதையர்.1947:97. இரா. அறவேந்தன்.2024:96) என்று குரங்கு குட்டியையும்,

நெடுவெண்ணிலவினார் பாடிய குறிஞ்சித் திணையிலமைந்த,

“லிரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை” (47:20)

பாடலடியில் பெரிய புலிக்குட்டி (உ.வே.சாமிநாதையர்.1947:116. இரா.அறவேந்தன்.2024:96), கரிய புலிக்குட்டி (தமிழண்ணல்.2022:80) என்று புலிக் குட்டியையும்,

சத்திநாதனார் பாடிய குறிஞ்சித் திணையிலமைந்த,

“சிறுவெள் ளரவி னவ்வரிக் குருளை” (119:1)

பாடலடியில் சிறிய வெள்ளிய பாம்பினது அழகிய கோடுகளையுடைய குட்டி (உ.வே.சாமிநாதையர்.1947:264), பாம்பினது அழகிய கோடுகளை உடைய குட்டி (தமிழண்ணல்.2022:160), வெள்ளை நிறம் கொண்ட அழகிய வரிகளை உடைய பாம்பினது குட்டி (இரா. அறவேந்தன்.2024:230) என்று பாம்புக் குட்டியையும்,

பாலைப்பாடிய பெருங்கடுங்கோ பாடிய பாலைத் திணையிலமைந்த,

“மறப்புலிக் குருளை கொளிடங் கறங்கு” (209:2)

பாடலடியில் மறம் மிக்கப் புலிக் குட்டிகள் (தமிழண்ணல்.2022:160), வலிமையுடைய புலிக் குட்டிகள் (உ.வே.சாமிநாதையர்.1947:442. இரா. அறவேந்தன்.2024:230) என்று புலிக் குட்டிகளைக் குறிப்பிடுவதாகவும் குருளை என்ற இளமைப் பெயர் இடம்பெற்றுள்ளது.

தொல்காப்பியரின் விதிப்படி 47, 209 ஆகிய பாடல்கள் புலிக் குட்டிகளைக் குறிப்பிடுகின்றன. ஆனால் 38 ஆவது பாடலில் குரங்குக் குட்டியையும் 119 ஆவது பாடலில் பாம்பினது குட்டியையும் குருளை என்ற பெயரில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. தொல்காப்பியர் குரங்குக் குட்டியையும், பாம்புக் குட்டியையும், குருளை என்ற பெயரில் குறிப்பிடாமலிருக்க குறுந்தொகை இவைகளைக் குருளை என்று குறிப்பிடுவது ஆய்வுக்குரியது.

தொல்காப்பியர் பாம்பின் குட்டியைக் குருளை என்ற பெயரில் குறிப்பிட்டிருக்கவில்லை. “‘ஆங்கவை நான்கும்’ என்றதனால் தத்துவனவற்றுக்கும் குட்டிப்பெயர் கொடுக்கப்படும்; தவளைக்குட்டி யெனவரும். மேல் ஊர்வனவற்றுக்குந் தவழ்வனவற்றிலக்கணம் எய்துவித்தமையார் பாம்புக்குட்டி யென்பதுங் கொள்க” (12) என்று பேராசிரியர் அவரது உரைக்கு அடிக்குறிப்பாகப் பாம்புக் குட்டியைக் கையாண்டுள்ளதை க. வெள்ளைவாரணார் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார். தமிழ் லெக்சிகனும் பாம்பின் குஞ்சுகளுக்குக் குருளை என்றே பொருள் விளக்கம் தருகிறது. பேராசிரியர் உரையின்படியும் தமிழ் லெக்சிகன் தரும் பொருளினடிப்படையிலும் குருளை என்ற இளமைப் பெயர் பாம்புக் குட்டியைக் குறிப்பிடுவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.


கன்று

யானை, குதிரை, கழுதை, கடமை, பசு (தொல். மரபு:15), எருமை, மரைமான் (தொல். மரபு:16), கவரிமான், கராகம் (தொல். மரபு:17), ஒட்டகம் (தொல். மரபு:18), பூங்கன்று (தொல். மரபு:24) ஆகிய உயிரினங்களின் இளமைப் பெயர்களைக் கன்று என்னும் பெயரில் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

கொல்லனழிசி பாடிய பாலைத் திணையிலமைந்த,

“கன்று முண்ணாது கலத்தினும் படாது” (27:1)

பாடலடியிலும்,

முல்லைத் திணையிலமைந்த கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் பாடிய,

“பல்லா நெடுநெறிக் கன்று வருந்தெனப்” (64:1)

பாடலடியிலும்,

முல்லைத் திணையிலமைந்த வாயிலான்றேவன் பாடிய,

“கறவை கன்று வயிற்படர் புறவிற்” (108:2)

பாடலடியிலும்,

குறிஞ்சித் திணையிலமைந்த கபிலர் பாடிய,

“கன்றாற்றுப் படுத்த புன்றலைச் சிறாஅர்” (241:3)

பாடலடியிலும்,

கல்லாடனார் பாடிய பாலைத் திணையிலமைந்த,

“கன்றி லோரா விலங்கிய” (260:7)

பாடலடியிலும் என ஐந்து பாடல்களிலும் கன்று என்ற இளமைப் பெயர் பசுவினது கன்றைக் (உ.வே.சாமிநாதையர்.1947:70,151,243,502,539. தமிழண்ணல்.2022:55, 99, 109, 288, 310 இரா. அறவேந்தன்.2024:99,152, 215, 401, 427) குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

குறிஞ்சித் திணையிலமைந்த கபிலர் பாடிய,

“கன்றுதன் பயமுலை மாந்த முன்றிற்” (225:1)

பாடலடியில் யானையினது கன்றை குறிக்கக் ((உ.வே.சாமிநாதையர்.1947:474. தமிழண்ணல்.2022:272. இரா. அறவேந்தன்.2024:383) கன்று என்ற இளமைப் பெயர் பயின்று வந்துள்ளது. பசுவினது கன்றையும் யானையினது கன்றையும் ‘கன்று’ என்ற பெயரில் குறிப்பிடும்படியான பாடல்கள் உள்ளதைப் போன்று எருமைக் கன்றையும் பூங்கன்றையும் குறிப்பிடும்படியானப் பாடல்கள் ஏதுமில்லை.

பிள்ளை

பறப்பன (தொல். மரபு:4), தவழ்வன (தொல். மரபு:5), பன்றி, புலி, முயல் (தொல். மரபு:11), குரங்கு (தொல். மரபு:14), கமுகம்பிள்ளை, தென்னம்பிள்ளை, போத்து (தொல். மரபு:24) ஆகியனவற்றின் இளமைப் பெயரைப் பிள்ளை என்ற பெயரில் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். பிள்ளை என்ற சொல்லிற்கு “விலங்கின் இளமைப் பெயர் (திவா), நாயொழிந்த விளங்கினிளமை (பிங்), பறப்பன தவழ்வனவற்றினிளமை (தொல்.பொ.560, 561), கரிக்குருவி, பிள்ளை யுள்புகுந் தழித்த தாதலால் (சீவக.1584), காகம் (சூடா), நெல்லும் புல்லும் ஒழிந்த ஓரறிவுயிரின் இளமைப் பெயர் (தொல்.பொ.596, 580), மக்கள், சில விலங்கு, சில பறவை, சில மரம் இவற்றின் பெயர்களோடு சேர்த்துச் சொல்லும் சொல். பெண்பிள்ளை, கீரிப்பிள்ளை, கிளிப்பிள்ளை, தென்னம்பிள்ளை” (13) என்று தமிழ் லெக்சிகன் விளக்கமளிக்கிறது.

மாமிலாடன் பாடிய மருதத் திணையிலமைந்த,

“யில்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்” (46:5)

பாடலடியிலும்,

நெய்தல் திணையிலமைந்த தாமோதரன் பாடிய,

“பிள்ளை யுள்வாய்ச் செரீஇய” (92:4)

பாடலடியிலும்,

ஒக்கூர் மாசாத்தியார் பாடிய மருதத் திணையிலமைந்த,

“பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங்” (139:4)

பாடலடியிலும் என முதலிரண்டு அடிகளில் குருவிகளின் குஞ்சுகளையும், மூன்றாவதாக இருக்குமடியில் கோழிகளின் குஞ்சுகளையும் (உ.வே.சாமிநாதையர்.1947:114, 212, 305. தமிழண்ணல்.2022:78, 131, 181 இரா. அறவேந்தன்.2024:129, 194, 258) குறிப்பிட பிள்ளை என்ற இளமைப் பெயர் பயின்று வந்துள்ளது.

உ.வே.சாமிநாதையரும் “பிள்ளையென்பது பறவையின் இளமைப் பெயர்” (14) என்கிறார்.

மருதத் திணையிலமைந்த மதுரைக் கண்ணனார் பாடிய,

“பிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக்” (107:4)

பாடலடியில் காட்டுப்பூனையின் குட்டியைப் (உ.வே.சாமிநாதையர்.1947:305 தமிழண்ணல்.2022:108 இரா. அறவேந்தன்.2024:214) பிள்ளை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொல்காப்பியர் காட்டுப் பூனைக் குட்டியைப் ‘பறழ், குட்டி’ என்ற இளமைப் பெயர்களில் குறிப்பிட்டிருக்கக் குறுந்தொகையில் ‘பிள்ளை வெருகிற்’ என்ற அடியிலுள்ள ‘பிள்ளை’ காட்டுப் பூனையைக் குறிப்பிடப் பயின்று வந்துள்ளது. மதுரைக் கண்ணனார் தவழ்ந்து செல்லும் உயிரினமாகப் பூனையை மதிப்பிட்டு அதனைப் பிள்ளை எனற பெயரில் பாடியிருக்கலாம். பூனைக் குட்டியை, பிள்ளை என்ற பெயரால் தொல்காப்பியம் குறிப்பிடவில்லை. தமிழ் லெக்சிகனும் ‘சில விலங்கு’ என்று பொதுவாகக் குறிப்பிடுகிறதே தவிர, ‘பூனைக் குட்டி’ என்று பூனையைக் குறிப்பிட்டுப் பொருள் விளக்கம் தரவில்லை. ஆனால், “இனி அவையல்லது பிறவில்லை யென்றமையின், ஒன்றற்குரியவற்றை ஒன்றற்குரிதாக்கி வழங்குவனவுஞ் சிறுபான்மை கொள்ளப்படும். கழுதை மறியெனவும் ‘பிள்ளை வெருகிற் கல்கிரை யாகி’ என்றார் போலவும், சான்றோர் செய்யுளகத்து வருவன கடியப்படா வென்றவாறு எடுத்தோதாதது பெரும்பான்மை” (15) என்கிறார் க. வெள்ளைவாரணனார். இதிலிருந்து பூனைக் குட்டியை, பிள்ளை என்ற பெயரால் அழைப்பது பிறகால உரை வளர்ச்சியாகப் புரிந்து கொள்ளலாம். கமுகம்பிள்ளை, தென்னம்பிள்ளை என்று தாவரங்களைப் பிள்ளை என்ற பெயரில் குறிப்பிடும் பாடல்களும் போத்து என்று புலிக்குட்டியைப் பிள்ளை என்ற பெயரில் குறிப்பிடும் பாடல்களும் இல்லை என்பது கவனத்திற்குரியதாகும்.


மகவு

மகவு என்னும் இளமைப் பெயர் குரங்கையும் (தொல்.மரபு:14), குழந்தையையும் (தொல்.மரபு:23) குறிப்படுவதாகத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். மகவு என்ற சொல்லிற்குக் “குழந்தை (திவா), கோட்டில் வாழ் விலங்கின் பிள்ளை (தொல்.பொ.569)”(16) என்று தமிழ் லெக்சிகன் விளக்கமளிக்கிறது.

குறிஞ்சித் திணையிலமைந்த ஔவையார் பாடிய,

“மகவுடை மந்தி போல” (29:6)

பாடலடியில் குட்டியையுடைய பெண் குரங்கு (உ.வே.சாமிநாதையர்.1947:75), சிறுகுட்டியினால் இறுகத் தழுவிக் கொள்ளப்பெற்ற பெண் குரங்கு போல (தமிழண்ணல்.2022:58), மரத்தின் கிளையில் குட்டியுடன் உள்ள பெண் குரங்கு போல (இரா. அறவேந்தன்.2024:102-103) என்று மகவு என்னும் இளமைப் பெயர் குரங்கை மட்டும் குறிப்பிடுகிறது. குழந்தையைக் குறிப்பிடுவதாகப் பாடல்கள் இல்லை.

மறி

ஆடு, குதிரை, நவ்வி, உழை, புல்வாய் (தொல்.மரபு:12) ஆகிய பெயர்கள் மறி என்னும் இளமைப் பெயரைக் குறிப்பிடுவதாகத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தைப் போன்றே தமிழ் லெக்சிகனும் மறி என்ற சொல்லிற்கு “ஆடு, குதிரை, மான் முதலியவற்றின் இளமை (தொல்.பொ.568), ஆடு, குதிரை, மான் முதலியவற்றின் பெட்டை (யாழ்.அக), அழுங்கின் குட்டி (பிங்), மான் (பிங்)” (17) என்று பொருள் விளக்கம் தருகிறது.

கபிலர் பாடிய குறிஞ்சித் திணையிலமைந்த,

“செவ்வரைச் செச்சை வருடை மான்மறி” (187:1)

பாடலடியிலும்,

பாலைத் திணையிலமைந்த கச்சிப்பேட்டுக் காஞ்சிக்கொற்றன் பாடிய,

“றெறித்துநடை மரபிற்றன் மறிக்கு நிழலாகி” (213:5)

பாடலடியிலும்,

நாகம்போத்தன் பாடிய பாலைத் திணையிலமைந்த,

“நௌவி நாண்மறி கௌவிக் கடன்கழிக்குங்” (282:3)

பாடலடியிலும் என மூன்று பாடல்களிலும் வருடை மானின் குட்டி (உ.வே.சாமிநாதையர்.1947:186 தமிழண்ணல்.2022:231 இரா. அறவேந்தன்.2024:327), மான் குட்டி (உ.வே.சாமிநாதையர்.1947:450 தமிழண்ணல்.2022:259), ஆண்மான் குட்டி (இரா. அறவேந்தன்.2024:367), நவ்வி மான் குட்டி (உ.வே.சாமிநாதையர்.1947:580 தமிழண்ணல்.2022:335), மான் கன்று (இரா. அறவேந்தன்.2024:367) என்று மானின் குட்டியைக் குறிப்பதாக மறி என்னும் இளமைப் பெயர் பயின்று வந்துள்ளது.

முல்லைத் திணையிலமைந்த உறையூர் முதுகொற்றன் பாடிய,

“பறியுடைக் கையர் மறியினத் தொழிய” (221:2)

பாடலடியிலும்,

பெருஞ்சாத்தன் பாடிய குறிஞ்சித் திணையிலமைந்த,

“மறிக்குர லறுத்துத் தினைப்பிரப் பிரீஇச்” (263:1)

பாடலடியிலும்,

குறிஞ்சித் திணையிலமைந்த வேம்பற்றூர்க் கண்ணன்கூத்தன் பாடிய,

“சிறுமறி கொன்றிய ணறுநுத னீவி” (362:4)

பாடலடியிலும் என மூன்று பாடல்களிலும் ஆட்டுக் குட்டி (உ.வே.சாமிநாதையர்.1947:464, 544, 722 தமிழண்ணல்.2022:267, 314, 363 இரா. அறவேந்தன்.2024:377, 431, 566) என்ற பொருளிலேயே மறி என்னும் இளமைப் பெயர் பயின்று வந்துள்ளது.

குழவி

யானை (தொல்.மரபு:19), பசு, எருமை (தொல்.மரபு:20), கடமை, மரை (தொல்.மரபு:21), குரங்கு, முசு, ஊகம் (தொல்.மரபு:22) ஆகிய உயிரினங்களோடு குழந்தையை (தொல்.மரபு:23) அழைப்பதற்கும் தாவரங்களைக் (தொல்.மரபு:24) குறிப்பிடவும் குழவி என்ற இளமைப் பெயரைத் தொல்காப்பியர் பயன்படுத்தியுள்ளார்.

குறிஞ்சித் திணையிலமைந்த குறியிறையனார் பாடிய,

“முழந்தா ளிரும்பிடி கயந்தலைக் குழவி” (394:1)

பாடலடியில் யானையின் கன்றைக் குறிப்பிட (உ.வே.சாமிநாதையர்.1947:770 தமிழண்ணல்.2022:459 இரா. அறவேந்தன்.2024:617) குழவி என்ற பெயர் பயின்று வந்துள்ளது.

முல்லைத் திணையிலமைந்த கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் பாடிய,

“மடக்கட் குழவி யவண்வந் தன்ன” (64:3)

பாடலடியிலும்,

சிறைக்குடியாந்தையார் பாடிய குறிஞ்சித் திணையிலமைந்த,

“கடுஞ்சுரை நல்லா னடுங்குதலைக் குழவி” (132:4)

பாடலடியிலும்,

ஐயூர் முடவன் பாடிய குறிஞ்சித் திணையிலமைந்த,

“அமர்க்க ணாமா னஞ்செவிக் குழவி” (322:1)

பாடலடியிலும்,

குறுங்குடி மருதன் பாடிய முல்லைத் திணையிலமைந்த,

“பால்வார் குழவி யாளி னிரையிறந்” (344:5)

பாடலடியிலும் பயின்று வந்துள்ள குழவி என்ற பெயர் பசுவின் கன்றைக் (உ.வே.சாமிநாதையர்.1947:152, 290, 654, 691 தமிழண்ணல்.2022:99, 174, 382, 405 இரா. அறவேந்தன்.2024:152, 250, 382, 543) குறிப்பிடுவதாகப் பயின்று வந்துள்ளது.

கிள்ளிமங்கலங்கிழார் பாடிய மருதத் திணையிலமைந்த,

“னுழவன் யாத்த குழவியி னகலாது” (181:4)

பாடலடியில் எருமைக் கன்று (உ.வே.சாமிநாதையர்.1947:386 தமிழண்ணல்.2022:225 இரா. அறவேந்தன்.2024:319) என்ற பொருளிலும் நெய்தல் திணையிலமைந்த அம்மூவனார் பாடிய,

“டன்னா யென்னுங் குழவிபோல” (397:5)

பாடலடியில் வாய் திறந்து அன்னையே என்று அழும் குழந்தையைப் போல (உ.வே.சாமிநாதையர்.1947:776), அம்மா என்று வாய்விட்டு அழும் குழந்தை (தமிழண்ணல்.2022:225 இரா. அறவேந்தன்.2024:319) என்று மக்களையும் குறிப்பிடுவதாகவும் பசுவின் கன்று, எருமையின் கன்று ஆகியவற்றைக் குறிப்பிடவும், குழந்தை என்ற மக்களைக் குறிப்பிடவும், குழவி என்ற இளமைப் பெயர் பயின்று வந்துள்ளது. விலங்குகளையும், குழந்தையையும் குழவி என்ற பெயரில் குறிப்பிடும் பாடல்கள் உள்ளதைப் போன்று தாவரங்களைக் குறிப்பிடும்படியான பாடல்கள் இல்லை.


முடிவுரை

தொல்காப்பியர் குறிப்பிடும் இளமைப் பெயர்களுள் குட்டி என்ற இளமைப் பெயரைத் தவிர, மற்ற அனைத்தும் குறுந்தொகைப் பாடல்களில் பயின்று வந்துள்ளன. தொல்காப்பியர் குரங்குக் குட்டியையும், பாம்பினது குட்டியையும் குருளை என்ற பெயரில் குறிப்பிடாமலிருக்கக் குறுந்தொகை குரங்குக் குட்டியையும், பாம்புக் குட்டியையும் குருளை என்ற பெயரில் குறிப்பிடுவது ஆய்வுக்குரியது. பசுவின் கன்றுகளைக் குறிப்பிட ஆவின் கன்று, பசுவின் கன்று என்று நேரிடையாகப் பயின்று வந்துள்ளதைப் போன்று எருமையின் கன்றுகளைக் குறிப்பிடும்படியான நேரிடையானப் பெயர்கள் ஏதுமில்லை. கறவைக் கன்று, கன்று என்ற பெயர்கள் பசுவின் கன்றுகளைக் குறிப்பிடுகிறதா அல்லது எருமையின் கன்றுகளைக் குறிப்பிடுகிறதா என்பதையும் அறிவதற்கான சான்றுகள் இல்லை. தொல்காப்பியர் பூனைக் குட்டியைப் பறழ், குட்டி என்ற இளமைப் பெயர்களில் குறிப்பிட குறுந்தொகைப் பிள்ளை என்ற இளமைப் பெயரால் குறிப்பிடுகிறது. குரங்கைக் குறிப்பிட மகவு என்ற பெயர் பாடலில் பயின்று வந்துள்ளதைப் போன்று குழந்தையைக் குறிப்பிடும் மகவு என்னும் பெயரிலமைந்த பாடல்களும் தென்னம்பிள்ளை, கமுகம்பிள்ளை, பூங்கன்று என்று தாவரங்களைக் குறிப்பிடுகின்ற பாடல்களும் புலிக்குட்டியைக் குறிப்பிடும் போத்து என்னும் பெயரிலமைந்த பாடல்களும் குறுந்தொகையில் இல்லை.

அடிக்குறிப்புகள்

1. தொல்காப்பியம் - மரபியல், க.வெள்ளைவாரணனார். ப:33.

2. மேலது. ப:25.

3. தொல்காப்பியம்-பொருளதிகாரம், வ.த. இராமசுப்பிரமணியம். ப.462.

4. தொல்காப்பியம் - மரபியல், க.வெள்ளைவாரணனார். மேலது. ப:32.

5. TAMIL LEXICON, VOL V, PART I, ப.2617.

6. தொல்காப்பியம்-பொருளதிகாரம், பேராசிரியர் உரை. ப.543.

7. மேலது, ப.535.

8. மேலது, ப.540.

9. TAMIL LEXICON, VOL IV, PART I, ப.2561.

10. தொல்காப்பியம்-பொருளதிகாரம், பேராசிரியர் உரை. ப.536.

11. TAMIL LEXICON, VOL II, PART I, ப.1020.

12. தொல்காப்பியம் - மரபியல், க.வெள்ளைவாரணனார். ப:12.

13. TAMIL LEXICON, VOL V, PART I, ப.2712.

14. எட்டுத்தொகையுள் இரண்டாவதாகிய குறுந்தொகை, உவே.சாமிநாதையர் உரை. ப.854.

15. தொல்காப்பியம் - மரபியல், க.வெள்ளைவாரணனார். ப:36.

16. TAMIL LEXICON, VOL V, PART I, ப.2982.

17. மேலது, ப.3120.

துணைநூற்பட்டியல்

1. அடிகளாசிரியர்., (பதிப்பாசிரியர்) தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணர் உரை (செய்யுளியல் நீங்கலாக): 2008. தமிழப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613010.

2. அறவேந்தன்.இர., (உரையாசிரியர்) குறுந்தொகை: சங்க இலக்கிய உரைவேறுபாட்டுக் களஞ்சியம் தொகுதி-3:2024. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை-600050.

3. இராமசுப்பிரமணியம்.வ.த., தொல்காப்பியம் பொருளதிகாரம் (மூலமும் உரையும்), நான்காம் பதிப்பு:2018, பூம்புகார் பதிப்பகம், சென்னை-600018.

4. ஈஸ்வரன்.ச., பவணந்தி முனிவரின் நன்னூல் சொல்லதிகாரம் - காண்டிகை உரை:2014. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை-600050.

5. கலியாணசுந்தரையர்.S., (பதிப்பாசிரியர்) எட்டுத்தொகையுள் இரண்டாவதாகிய குறுந்தொகை (உ.வே.சாமிநாதையர் உரை), இரண்டாம் பதிப்பு:1947, கபீர் அச்சுக் கூடம், சென்னை.

6. தமிழண்ணல்., (உரையாசிரியர்) குறுந்தொகை:சங்க இலக்கியம் தொகுதி-2:2022. வர்த்தமானன் பதிப்பகம், தியாகராயர் நகர், சென்னை-600017.

7. தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம்:2022. இராஜா வெளியீடு, திருச்சிராப்பள்ளி-620023.

8. பவானந்தம் பிள்ளை.ச., (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம்-பொருளதிகாரம் (பேராசிரியர் உரையுடன்) (செய்யுளியல் மரபியல்): 1917, லாங்மென்ஸ் க்ரீன் அண்ட் கம்பெனியார், சென்னை.

9. வெள்ளைவாரணனார்.க., தொல்காப்பியப் பொருளதிகாரம் மரபியல் உரைவளம் (ஆய்வுரையுடன்):1994. பதிப்புத் துறை, மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், மதுரை-625012.

10. வெள்ளைவாரணனார்.க., வெள்ளைவாரணனார் நூல் வரிசை -10, தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம்:2014. மாணவர் பதிப்பகம், தியாகராயர் நகர், செனனை-600017.

11. Lexicon - Tamil Lexicon, University of Madras - 1982.

12. அகராதி - கதிரைவேற்பிள்ளை. நா., தமிழ்ப் பேரகராதி (செம்பதிப்பு), சாரதா பதிப்பகம், சென்னை - 2003.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p331.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License