இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடல்கள்

உ. தாமரைச்செல்வி.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இணையற்ற கவிஞர். பள்ளி ஆசிரியர் மற்றும் கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர் கவிஞராக மட்டும் அடையாளம் காணப்படுபவரில்லை. மொழிபெயர்ப்பாளர், ஏட்டுச் சுவடிகளின் தொகுப்பாளர், ஆய்வாளர், நூலாசிரியர் என்று இவருடைய வேறு சில சிறப்புகளும் இவருக்கு உண்டு. இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் குறிப்பிட்ட எல்லைக்குள் முடங்கிக் கிடக்கவில்லை. இவரது கவிதைப் படைப்புகள் பரந்து விரிந்த கவிதை உலகில் பக்திப் பாடல்கள், இயற்கைப் பாடல்கள், இலக்கியப் பாடல்கள், குழந்தைப் பாடல்கள், வரலாற்றுப் பாடல்கள், வாழ்வியல் போராட்டப் பாடல்கள், சமூகப் பாடல்கள், தேசியப் பாடல்கள், வாழ்த்துப் பாடல்கள், கையறுநிலைப் பாடல்கள், பல்சுவைப் பாடல்கள் மற்றும் பிற மொழியைத் தழுவி எழுதிய மொழிபெயர்ப்புப் பாடல்கள் என்று பல்வேறு வகைப்பாடுகளில் பல விழுதுகளைக் கொண்டு பன்னெடுங்காலத்திற்கும் நிலைத்து நிற்கும்படி வேரூன்றி இருக்கின்றன.

கவிமணியின் பாடல் சிறப்புக்கு அவரது பாடலில் அமைந்துள்ள எளிமையான சொல்லாடல், எளிமையாக விளக்கும் தன்மை, எவரும் அறிந்து கொள்ளும் அமைப்பு என இவரது பாடல்கள் அனைத்துமே அகராதி தேடாதவை. எக்காலத்திற்கும் ஏற்றவை. அவருடைய பாடல்களை நாம் முழுமையாக இங்கு ஆய்வு செய்யப் போவதில்லை. அந்தப் பாடல்களில் சில துளிகளை எடுத்துச் சுவைத்துப் பார்க்கப் போகிறோம். தேனின் சில துளிகள் நாக்கை இனிப்பாக்கி உடலைக் குளிர்ச்சியாக்கி விடும். கவிமணியின் சில பாடல்களைப் படித்தாலோ அல்லது கேட்டாலோ போதும், நமக்கு அதன் சுவை நம் மனதை நிறைவாக்கி விடும்.



பக்திப் பாடல்கள்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இறைவழிபாட்டுக்கான பல்வேறு பாடல்களை எழுதியிருக்கிறார். இறைவழி நம்பிக்கை மனதில் மிகப்பெரும் நம்பிக்கையை உருவாக்கும் என்று எளிமையான முறையில் தன் கவிதைகளின் வாயிலாக மன அமைதிக்கும், ஆன்மிக நம்பிக்கைக்கும் வழிகாட்டுகிறார். இப்பாடல்களில் “கோவில் வழிபாடு” எனும் பாடலை நாம் இங்கு எடுத்துக் கொள்வோம். இப்பாடல் இரு தோழியர்கள் பேசிக் கொள்வதாகப் பாடப்பட்டிருக்கிறது. இரு தோழிகளுள் ஒருவர் கோயில் வழிபாடு பல செய்தும் கடவுளைக் காண முடியவில்லை என்கிற செய்தியைச் சொல்கிறார்...

கோவில் முழுதுங் கண்டேன் - உயர்
கோபுரமேறிக் கண்டேன்
தேவாதி தேவனை யான் - தோழி
தேடியும் கண்டிலனே

தெப்பக் குளங் கண்டேன் - சுற்றித்
தேரோடும் வீதி கண்டேன்
எய்ப்பில் வைப்பா மவனைத் - தோழி
ஏழை நான் கண்டிலனே

சிற்பச் சிலைகள் கண்டேன் - நல்ல
சித்திர வேலை கண்டேன்
அற்புத மூர்த்தி யினைத் - தோழி
அங்கெங்குங் கண்டிலனே

பொன்னும் மணியுங் கண்டேன் - வாசம்
பொங்கு பூ மாலை கண்டேன்
என்னப்பன் எம்பி ரானைத் - தோழி
இன்னும் யான் கண்டிலனே

தூப மிடுதல் கண்டேன் - தீபம்
சுற்றி எடுத்தல் கண்டேன்
ஆபத்தில் காப்பவனைத் - தோழி
அங்கே நான் கண்டிலனே

தில்லைப் பதியுங் கண்டேன் - அங்கு
சிற்றம்பலமுங் கண்டேன்
கல்லைக் கனி செய்வோனைத் - தோழி
கண்களாற் கண்டிலனே



இப்பாடலில் கோயில், கோயிலைச் சுற்றி இருக்கும் வளாகங்கள், குளங்கள், தேரோட்டம் கண்ட தெருக்கள், கோயிலில் அழகூட்டப்பட்ட சிலை, அச்சிலைக்குச் செய்யப்பட்ட சில வழிபாடுகள் என்று அனைத்தும் கண்டு விட்டேன். ஆனால், எந்த இடத்திலும் இறைவனைக் காணவில்லை என அவள் வருத்தமுற்றுப் பாடுகிறாள்.

இதைக் கேட்ட அவளது தோழி

கண்ணுக் கினிய கண்டு - மனதைக்
காட்டில் அலைய விட்டுப்
பண்ணிடும் பூசை யாலே - தோழி
பயனொன் றில்லையடி.

உள்ளத்தி லுள்ளானடி - அது நீ
உணர வேண்டு மடி
உள்ளத்தில் காண்பாய் எனில் - கோவில்
உள்ளேயும் காண்பாயடி.

என்று அவளுக்கு பதிலளிக்கிறாள்.



கண்ணிற்கு இனிமையாய்க் காட்சி தரும் வெளிக்காட்சிகளைக் கண்டு மயங்கி விடுகிறாய். அதையே மனதில் கொண்டு, மனதை அலைய விட்டு அதன் பிறகு செய்யப்படும் வழிபாட்டினால் பயன் எதுவும் இல்லை. இறைவன் ஒவ்வொருவர் உள்ளத்திலுமிருக்கிறான். அதை முதலில் உணர வேண்டும். அப்போதுதான் கோயிலிலுக்குள்ளே குடி கொண்டிருக்கும் இறைவனைக் காணமுடியும் என்று மற்றொரு தோழி பதிலளிப்பதாக இந்தப் பாடல் அமைந்திருக்கிறது.

வெளித்தோற்றத்தைக் கண்டு ஏமாற்றமடைந்து விடக்கூடாது. உள்ளுக்குள்ளும், உள்ளத்திற்குள்ளும் இருக்கும் இறைவனை நினைத்தே நம் செயல்பாடுகள் இருக்க வேண்டும். அதுதான் இறைவனைக் காண்பதற்கான வழி என்று கவிமணி தனது பாடலில் மிக எளிமையாக விளக்கியிருக்கிறார். இந்தப் பக்திப் பாடல்களைப் போல கவிமணி, பல பக்திப் பாடல்களில் இறைவனைத் தேடும் முறையையும், வழிபடும் நடைமுறையையும் விளக்கிக் காட்டியிருக்கிறார்.

இயற்கைப் பாடல்கள்

கவிஞராய் இருப்பவர்கள் இயற்கையைப் போற்றி வணங்குவது மட்டுமில்லை, அதன் சிறப்பை வியந்து போற்றுவார்கள். அதை மற்றொன்றுடன் ஒப்பிட்டு மாற்றுவார்கள். அதை தன்னுடன் கூப்பிட்டு மகிழ்வார்கள். இயற்கையை எழுதாத கவிஞனே இல்லை. இதற்குக் கவிமணியும் விதிவிலக்கில்லை.

இயற்கை எழில் கொஞ்சும் நாஞ்சில் நாட்டில் பிறந்த கவிமணி, இயற்கை குறித்து பல பாடல்களைப் படைத்திருக்கிறார். அவற்றில் ஒன்றாக இங்கு ஆறு எனும் தலைப்பில் பாடிய பாடலை மட்டும் நாம் இங்கே காண்போம்.

கல்லும் மலையும் குதித்து வந்தேன் - பெருங்
காடும் செடியும் கடந்து வந்தேன்;
எல்லை விரிந்த சமவெளி - எங்கும் நான்
இறங்கித் தவழ்ந்து தவழ்ந்து வந்தேன்.

ஆயிரம் காலால் நடந்து வந்தேன் - நன்செய்
அத்தனையும் சுற்றிப் பார்த்து வந்தேன்;
நேயமுறப் புன்செய்க் காட்டிலும் - அங்கங்கு
நீரை இறைத்து நெடுக வந்தேன்

மாங்கனி தேங்கனி வாரிவந்தேன் - நல்ல
வாச மலர்களும் அள்ளி வந்தேன்;
தீங்கரும் பாயிரம் தள்ளி வந்தேன் - மிகத்
தேனும் தினையுமே சேர்த்து வந்தேன்

அல்லும் பகலும் அலைந்து வந்தேன் - எங்கள்
ஆழி இறைவனைக் காண வந்தேன்;
நில்லும், எனக்கினி நேரமில்லை - இன்னும்
நீண்டவழி போக வேண்டும் அம்மா!


கல், மலை போன்ற பல்வேறு தடைகள் எதிர்ப்படும் போது அதைத் தாண்டிக் குதித்தும், சமவெளியில் சிறு குழந்தை போல் தவழந்தும் பயணம் செய்து செல்லும் ஆற்றின் பயணப்பாதையில் இருக்கும் நிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள அனைத்துப் பயிர்களையும் உயிர்ப்பித்துச் செல்கிறதாம். ஆற்றின் ஓட்டத்தில் பல்வேறு சுவையுள்ள கனிகளையும், வாசமுள்ள மலர்களையும் தன்னுடன் கொண்டு செல்வதாகவும், இறைவனான கடலைத் தேடிக் கலந்து விட நெடுந்தொலைவுப் பயணம் செய்ய வேண்டியிருப்பதால், இரவு பகல் என்று பாராமல் ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றுக்கு நின்று பேச நேரமில்லை என்று ஆற்றின் செயலையும், ஆற்றின் முடிவையும் எளிமையாகச் சொல்லும் இந்தப் பாடல் மனிதனின் வாழ்க்கைக்கும் ஒரு உதாரணமாக அமைந்திருக்கிறது.

மனிதர்களின் வாழ்க்கையும் இந்த ஆற்றைப் போன்றதுதான். ஆற்றைப் போல் மனிதர்களும் எதிர்ப்படும் தடைகளைத் தாண்டியும், சமநிலைகளில் தாழ்ந்தும், இந்தப் பூமியில் நம்மால் செய்யக் கூடியதைச் செய்து, நம் வாழ்க்கையை முடிந்த வரை பிறருக்குப் பயனுடையதாக்கி, முடிவில் இறைவனைச் சென்றடைவதுதான் மனித வாழ்க்கையின் மிகப்பெரும் தத்துவத்தை ஆற்றைக் கொண்டு உணர்த்தியுள்ளார்.

சமூகப் பாடல்கள்

மனிதர் வாழ்க்கையில் நிறம் மற்றும் தொழில் எனும் அடிப்படையிலான வேறுபாடுகள், சாதிகளாக, சமயங்களாகப் பிரிந்து சண்டையிட்டுக் கொள்ளும் அவல நிலையைப் போக்க வேண்டும். இதை இயற்கையுடன் இணைந்து வாழும் பிற உயிரினங்களைப் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் பல பாடல்களைப் பாடியிருக்கிறார்.

அவற்றில் ஒன்றாக அவர், பறவையைக் கண்டு பகுத்தறிவு கொண்டதாக ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். அந்தப் பாடல்;

சாதிச் சண்டையில்லை - ஓயாச்
சமயச் சண்டையில்லை;
வேத சாத்திரங்கள் - கூறும்
விதிவிலக்குமில்லை.

பட்டுடை வேண்டாம் - வயிரப்
பணிகள் பூணவேண்டாம்;
பொட்டிட வேண்டாம் - தலையில்
பூவும் சூட வேண்டாம்.

உள்ள துள்ளபடி - பேசி
உலகில் வாழ்ந்திடலாம்;
கள்ளம் கபடுகள் - இன்றிக்
காலம் போக்கிடலாம்.

பகுத்தறி வெதற்கோ? - பறவை
படைத்த நாள் ஈசன்
வகுத்தளித் திருக்கும் - இயற்கை
வாசனை போதாதோ?

நமனை எண்ணி எண்ணி - உள்ளம்
நடுநடுங்கிடாமல்,
அமைதி கண்டிடலாம் - நித்ய
ஆனந்தம் பெற்றிடலாம்.

சாதி, சமய வேறுபாடுகளால் சண்டை, சச்சரவுகள் என்று தங்களை அழித்துக் கொள்ளும் மனிதர்கள், பட்டுடைகள் அணிந்து, வயிரம் போன்ற விலையுயர்ந்த பொருள்களை அணிந்து, பொட்டும், பூவும் வைத்துக் கொண்டு, தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்ள வேண்டியதில்லை. உள்ளதை உள்ளபடி பேசி, கள்ளங் கபடமின்றி காலத்தைக் கழிக்க வேண்டும். இதற்கான பகுத்தறிவைப் பறவைகளிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இறைவன் இயற்கையாய் அளித்திருக்கும் இவ்வுலகில் எதைப் பற்றியும் பயம் கொள்ளாமல் அமைதி கொண்டு, தினமும் மகிழ்ச்சியாய் வாழ வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

குழந்தைப் பாடல்கள்

கள்ளங்கபடமில்லாத குணம் குழந்தைகளிடம் மட்டும்தான் இருக்கும். கள்ளங்கபடமில்லாக் குழந்தைகளுக்கு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பல குழந்தைப் பாடல்களை எழுதியுள்ளார். குழந்தைகளுக்காகத் தாய் பாடும் தாலாட்டுப் பாடல்களும், குழந்தைகள் தாமே பாடி மகிழத்தக்க எளிமையான பாடல்களும் என குழந்தைப் பாடல்களை அதிகமாக எழுதியுள்ளார்.

தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
அம்மா என்குது வெள்ளைப்பசு - உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி

நாவால் நக்குது வெள்ளைப்பசு - பாலை
நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி
முத்தம் கொடுக்குது வெள்ளைப்பசு - மடி
முட்டிக் குடிக்குது கன்றுக்குட்டி

என்று பசுவுக்கும், அதன் கன்றுக்குட்டிக்கும் இடையிலான உறவினை எடுத்துச் சொல்லி குழந்தைகளுக்குத் தாயன்பைக் காட்டும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, இந்திய தேசத் தந்தையான காந்தியடிகள் வாழ்ந்து காட்டிய, அவர் விரும்பிய வன்முறையற்ற நன்முறையிலான புதிய வழிமுறையான காந்தியத்தை;

"கூனக்கிழவி நிலவினிலே - இராட்டில்
கொட்டை நூற்கும் பணி செய்வதை - இம்
மாநிலம் கண்டு மகிழ்ந்திடவே - காந்தி
மாமதி யோங்கி வளருதம்மா."

என்று காந்தியின் கொள்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று விரும்பினார். இதற்காகக் குழந்தைகளுக்கு ஏற்றபடி பல காந்திய வழிப் பாடல்களையும், பல நல்வழிப்பாடல்களையும் பாடி குழந்தைகளுக்காகப் பாடியிருக்கிறார்.

விடுதலைப் போராட்டம்

இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் இவர் நேரடியாகப் பங்கு பெறவில்லை எனினும், விடுதலைப் போராட்டம் குறித்துப் பல பாடல்களைப் படைத்துள்ளார். இந்திய நாடு சுதந்திரம் பெற்று விட்டது என்று இருந்து விடாமல் அந்தச் சுதந்திரத்திற்குப் பாடுபட்ட விடுதலைப் போராட்ட வீரர்களை நாம் அன்றாடம் நினைவில் கொள்ள வேண்டும் என்று தனது சில பாடல்களில் விடுதலைப் போராட்ட வீரர்களுடைய தியாகத்தை நினைவூட்டுகிறார்.

கைநோவக் கால்நோவக் கல்லுடைத்துச் செக்கிழுத்து

மெய்சோர்ந்தும் ஊக்கம் விடாது நின்ற - ஐயன்
சிதம்பரம் அன்று சிறை சென்றிலனேல், இன்று
சுதந்திரம் காண்பாயோ? சொல்.

அஞ்சுவனோ வெள்ளையரின் ஆட்சியொழிப்பேன் என்று வஞ்சினம் கூறிநின்ற மாவீரன் - விஞ்சுபுகழ்ச் செந்தமிழ்ச் செல்வன் சிதம்பரப் பேரண்ணலை நாம் வந்தனை செய்வோம் மகிழ்ந்து. கப்பலை ஓட்டிக் கடுங்காவற்கு ஆளாகி
உப்பிலாக் கூழ் உண்டு உடல் மெலிந்தோன் - ஒப்பிலாத்
தென்னாட்டு வீர திலகன் சிதம்பரத்தின்
நன் நாமம் வாழ்த்துக என் நா.



சிறை வாழ்க்கையில் கல்லுடைத்து, செக்கிழுத்து உடல் சோர்ந்தாலும் உள்ளம் சோராமல், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராடிய வ. உ. சிதம்பரனாரை வணங்கிட வேண்டும். ஆங்கிலேயருக்கு எதிராக கப்பலோட்டிய குற்றத்திற்காகக் கடுங்காவல் சிறைப்பட்டு, உப்பில்லாத உணவு உட்கொண்டு உடல் மெலிந்தாலும், ஒப்பில்லாத வீரனாகத் திகழ்ந்த வ. உ. சிதம்பரனாரை வாழ்த்த வேண்டும் என்று வாழ்த்துகிறார்.

இதுபோல் மகாகவி பாரதியார் குறித்தும், வேறு சில விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்தும் பாடல்களைப் பாடி விடுதலைப் போராட்ட வரலாற்றையும், அதற்காகப் பாடுபட்ட விடுதலைப் போராட்ட வீரர்களையும் நினைவூட்டுகிறார்.

மொழி பெயர்ப்புப் பாடல்கள்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தமிழில் மட்டுமில்லாது ஆங்கில மொழியிலும் சிறப்பான தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் பாரசீக மொழியில் உருவாக்கப்பட்ட உமர்கய்யாம் பாடல்களை ஆங்கிலம் வழியாகத் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்து “உமர்கய்யாம் பாடல்கள்“ என தனித்தலைப்பில் அளித்திருக்கிறார். அப்பாடல்களிலிருந்து சான்றாக இங்கு ஒன்றை மட்டும் நாம் பார்க்கலாம்.

வெய்யில் கேற்ற நிழலுண்டு;
வீசும் தென்றல் காற்றுண்டு;
கையில் கம்பன் கவியுண்டு;
கலசம் நிறைய மதுவுண்டு;
தெய்வ கீதம் பலவுண்டு;
தெரிந்து பாட நீயுமுண்டு;
வையம் தரும் அவ்வனமன்றி;
வாழும் சொர்க்கம் வேறுண்டோ?”

வெய்யில் எனும் வெப்பநிலைக்கு நிழல் இருக்கிறது, தென்றல் காற்று இருக்கிறது, கம்பன் எழுதிய கவிதை இருக்கிறது, தெய்வப் பாடல்கள் பல இருக்கிறது. அதைத் தெரிந்து பாட நீயும் இருக்கிறாய். இந்த உலகம் தரும் இயற்கையை விட வாழும் சொர்க்கம் வேறு எதுவுமில்லை. இருப்பதைக் கொண்டு சிறப்பாய் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை தமிழ் மொழிக்கேற்றவாறு மொழிபெயர்ப்பு செய்து எழுதியுள்ள அவரது கவித்திறன் நம் அனைவரையும் வியக்க வைக்கிறது.

நகைச்சுவைப் பாடல்கள்

கவிமணி நா. தேசிக விநாயகம் பிள்ளை நகைச்சுவையாகவும் சில பாடல்களையும் அவ்வப்போது எழுதியிருக்கிறார். ஒரு சமயம் சிரங்குகளின் தொல்லையால் வேதனையுற்றார். பல மருந்துகள் போட்டும் சிரங்குகள் ஆறாமல் இருந்தன. அந்த வேதனையைத் தாங்க முடியாமல் அவதிப்படும் நேரங்களில், சில நகைச்சுவைப் பாடல்களைப் பாடினார். அப்படி அவர் வெளியிட்ட நகைச்சுவைப் பாடல்களில் ஒன்று;

முத்துப் பவழம் முழுவயிரம் மாணிக்கம்
பத்தியொளி வீச பதக்கமெல்லாம் - சித்தன்
சிரங்கப்ப ராயன் சிறியேன் எனக்குத்
தரங்கண்டு தந்த தனம்.

முத்து, பவழம், வயிரம் மாணிக்கம் என உடலில் அனைத்தும் ஒளி வீசுகின்ற வகையில் பதக்கமாகக் கிடைத்திருக்கிறது. இவையெல்லாம், சொறி சிரங்கு எனும் செல்வந்தன், என்னுடைய உடல்நிலையைக் கண்டு கொடுத்த செல்வம் என்று தனது உடலில் ஏற்பட்ட சொறி சிரங்குகளின் வேதனையினை, எளிமையான, நகைச்சுவையான கவிதை வடிவில் வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார். தன் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையைக் கூட நகைச்சுவையாக்கி, அதை கவி நயத்துடன் அழகாக வடிவமைத்திருக்கும் அவருடைய கவித்திறன் தற்போதும் பாராட்டுக்குரியதாகவே இருக்கிறது.

கவிமணியின் கவிதை நயம்

உள்ளத்துள்ளது கவிதை - இன்பம்
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்துரைப்பது கவிதை.



என்னும் கவிமணியின் கவிதை பற்றிய விளக்கம் அவரின் கவிதைகளுக்கு நன்கு பொருந்துவதாக இருக்கிறது.

சர். எட்வின் அர்னால்டு எழுதிய "The Light of Asia" என்னும் நூலைத் தழுவி எழுதப் பெற்ற “ஆசிய ஜோதி“ , “எட்வர்ட் பிட்ஸ் ஜெரால்டு“ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பாரசீகக் கவிஞர் உமர்கய்யாம் பாடல்களைத் தழுவி “உமர்கய்யாம் பாடல்கள்“ , “மலரும் மாலையும்“ , “நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்“ , “கதர் பிறந்த கதை“ ஆகிய ஐந்து கவிதைப் படைப்புக்களும், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் சிறந்த கவிதைப் படைப்புகளுக்கு மிகப்பெரும் சான்றாக இருக்கிறது. இவை தவிர, அவருடைய “தேவியின் கீர்த்தனங்கள்“ என்ற இசைப் பாடல்களின் தொகுப்பில் இடம் பெற்றுள்ள பாடல்கள் பல இன்னிசைப் பாடகர்கள் இன்றும் மேடைகளில் விரும்பிப் பாடி வருகின்றனர். மொத்தத்தில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல்கள் அனைத்தும் இன்றைய சமூகத்திற்கும் தேவையானதாக இருக்கிறது. கவிமணியின் பாடல்களைப் படிப்போம். அப்பாடல்களிலுள்ள இனிமையை ரசிப்போம். அதன் சுவையை ருசிப்போம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p57.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License