தலித் சிற்றிதழ் புதிய கோடாங்கி உணர்த்தும் கதைக் கரு
ரெ. நல்லமுத்து.
இலக்கியப் படைப்புகளை ஆய்வு செய்து முடிவுகளை முன் வைப்பது போல இதழ்களை மிகுதியாக ஆய்வாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்துவதில்லை. இதனை முன்னிறுத்தியே சிற்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும். சமூகத்தால் ஓரங்கட்டப்பட்ட மக்களைக் கவனத்தில் கொண்டு தலித் சிற்றிதழ்களை ஆய்வு செய்யும் நோக்கத்தில் இதனைச் செய்ய விழைகிறேன். தலித் சிற்றிதழ்கள் தமிழ்ச் சிந்தனைகளுடன் வெளிவருகின்ற நிலையினைப் புதிய கோடாங்கி வாயிலாகக் காணமுடிகிறது. பெண்ணியம், புதுக்கவிதை, கேள்வி பதில் (முனிமா), தலையங்கம், வரலாறு ஆகிய மேற்கண்ட தலைப்புகளில் வாயிலாக இதழின் நோக்கும், போக்கும் குறித்துச் சொல்லப்படுகின்றன.
பெண்ணியக் கட்டுரைகள்
ஐரோப்பிய-அமெரிக்கத் தொழிற்புரட்சி மற்றும் உலகப் போர்களின் விளைவாகப் பெண்ணியம் தோன்றியது. பெண் அடையாளம் பற்றிய புதிய அரசியலாக்கச் சட்ட உருவாக்கம் பற்றியும், பொது விடுதலைக்கான உணர்வு பற்றியும் தீவிரமாகப் பேசப்பட்டது. தாராளவாதப் பெண்ணியம் கோசலிசவாதப் பெண்ணியம் மற்றும் தீவிரவாதப் பெண்ணியம் ஆகியன உருவாயின.
இந்தியாவில் மூன்று வகையான பெண்கள் அமைப்புகள் இருந்து வந்திருக்கின்றன. ஆண் சமூகம் பெண்களைச் சட்டம் மற்றும் நிதிகளினால் வந்திருக்கின்றன. ஆண் சமூகம் பெண்களைச் சட்டம் மற்றும் நிதிகளினால் அடக்கி வந்துள்ளதை எடுத்துக்கூறுவது முதல் வகை அமைப்பாகவும், பெண்கள் ஆணாதிக்க அமைப்பில் வாழ்வதிலிருந்து விடுபட்டு மேன்மை பெறவேண்டும் என்பது இரண்டாவது வகை அமைப்பாகவும், நிலவுடைமைச் சமூகம், முதலாளித்துவம், பொருள்வாத தன்மை மற்றும் பாசிசம் முதலிவற்றை எதிர்த்துச் செயல்பட்டு வந்ததை மூன்றாவது வகை அமைப்பாகவும் சுட்டிக்காட்டுகிறது. (தலித் சிந்தனை மரபு, ப-6. புதிய கோடாங்கி-2004). பெண்ணைக் குடும்பத்திளத்தில் அடக்குவதையும், ஒடுக்குவதைப்பற்றிப் பேசினாலும் குடும்பத்திலிருந்து பெண்ணுக்கு விடுதலை இல்லை எனக் கூறுகிறது, கோசலிசப் பெண்ணியம். தீவிரவாதப் பெண்ணியமானது, பெண் உடல் அரசியலைப் பெண்ணே கைக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை முன் மொழிந்தாலும் அமெரிக்கர்களின் கலாச்சாரப் பின்னணியில் உருவானதால் இந்தியாவில் இது ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரப் பண்பாட்டைச் சிதைப்பதாக உள்ளது. எனவே தீவிரவாதப் பெண்ணியம் ஓரங்கட்டப்பட்டமை இதன் மூலம் கூறப்படுகிறது. ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு - ஆணுமாகப் புரிதல் நிறைந்த, விட்டுக் கொடுத்து வாழத்தகுந்த, பெண்ணை மதிக்கத் தகுத்த, பெண் விடுதலையை அங்கீகரிக்கின்ற பெண்ணியம் கலாச்சாரப் பெண்ணியமாக இடம் பெற்றுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை சாதிகளாலும்-மதங்களாலும் கட்டுப்படுத்தப்படாத ஆண் பெண் குறித்த புதிய மதிப்பீடுகள், கலாச்சாரப் பெண்ணியத்தை வளர்க்க வேண்டும். பெண்ணியம் குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுவரும் சூழலில் பெண் குறித்த குறிப்பீடுகளை விரிவான தளத்தில் கொண்டு செல்ல வேண்டும். பன்முகப்பார்வையில் பெண்ணியம், தலித்தியம் ஆகியன குறித்த புரிதலை ஈடுபாட்டுணர்ச்சியோடு எடுத்துக்காட்டுவதன் மூலம் சமூகத்திற்கு உணர்த்த முடியும். வேதகாலத்திலும், சங்க காலத்திலும் கல்வி கற்க அனுமதிக்கப்பட்ட பெண்கள் பிற்காலத்தில் கற்கும் உரிமையையும் இழந்தனர். பெண்ணை முழுமையான அடிமைகளாக மாற்றுவதில் மதங்கள் முக்கியப்பங்கு வகித்தன. தொடக்க காலத்தில் விசாலமான வெளிப்படையான கூறுகளுடன் விளங்கியவை பல்வேறு மதங்கள். பிற்காலத்தில் தந்தை வழிச் சமூக ஆதிக்கத்தின் கூறுகளை ஏற்றுப் பெண் எப்படியெல்லாம் ஆணுக்கு அடிமையாக இருக்கவேண்டும் என்பதைப் போதித்தன (தலித் சிந்தனை ஏற்பட்ட எழுச்சி பெண்களுக்கான பல்வேறு உரிமைகளைப் பெற்றுத்தந்தன என்றாலும் ஆண்-பெண் சம உரிமை இன்றும் நிறைவேற்ற ஒன்றாகவே இருக்கிறது. பெண்களுக்கான சொத்துரிமை, இந்த 21-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஒரு சதவீதமாக இருக்கும் நிலையில், தலித் பெண்களில் சொத்துரிமை என்ன வகையாக இருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது. பெண்களை அதிகாரத்தின் மூலம் அமிழ்த்தி வைத்துக்கொண்டு பெண்ணிய விடுதலைப் பற்றி நிகழ்த்தும் உரையாடல்கள் அனைத்தும் கொடும் வன்முறையாகவே இருக்கும்.
நவீனக் கதைகள்
மனித வாழ்வு என்பது என்ன? என்ற கேள்விக்கு மொழியினால் கட்டமைக்கப்பட்ட ஒரு புனைவு எனப் பதில் கூறத் தோன்றுகிறது. மனிதர்களுக்கு அவர்களே உருவாக்கிக்கொண்ட மொழி அமைப்பிலிருந்து வெளியே செல்ல வெளிவாசலென ஒன்று இல்லை. இப்படியாக, மனிதர்களைப் பிடித்தாட்டும் மொழியோடு வேறு எந்த இலக்கிய வகைகளை விடவும் மிக அணுக்கமான உறவு கொண்ட ஓர் இலக்கிய வகையாகத் தான் கவிதை உள்ளது. மற்ற இலக்கிய வகைகளை விடக் கவிதைதான் மொழியோடு ஆனமட்டும் கொஞ்சுகிறது. குலாவுகிறது, சிரிக்கிறது. சீறுகிறது, விளையாடுகிறது, வினைபுரிகிறது, மீறுகிறது, ஒரு தளத்தின் தன்னை வடித்தெடுக்கும் மொழியையே வடித்து வளர்க்கும் மாபெரும் பணியிலும் ஈடுபட்டுக் கொண்டே வருகிறது. இப்படிக் கவிதையானது மொழியின் மேல் வினைபுரிவது என்பது இறுதியில் மனித வாழ்வின் மேல் வினைபுரிவதாக முடிகிறது. மனித வாழ்வுக்கும் கவிதைக்குமான உறவு நெருக்கமாக இருப்பதால், நவீனத் தமிழ்க்கவிதை, வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களோடு மாறி வளர்ந்துள்ளது. நவீனத் தமிழ்த் கவிதைக்கான புதிய கூறுகளைப் பாரதியார் எழுத்துகளில் (1882-1921) காண முடிகிறது. என்றாலும், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரியத்துடன் வெளிக்கிளம்பிய தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் சைவ மறுமலர்ச்சி இயக்கம், தனித்தமிழ் இயக்கம், ஆகியவை பெரிதும் போராடித் தங்களுக்குச் சார்பான புதிய வாசகர் கூட்டத்தை உற்பத்தி செய்துகொள்ள வேண்டிய நெருக்கடியில் இருந்தன (நவீன கவிதைகள் ப-40, புதிய கோடாங்கி -2004).
நவீனத் தமிழ்க் கவிதைகளை உற்பத்தி செய்வதில் தமிழ் மொழித்துறை
காலத்தில் மாற்றத்திற்கு ஏற்றப் பதிவுகள் இதழ்களில் வெளிவந்தன. சிறப்பாகச் சிற்றிதழ்களே பங்காற்றியுள்ளன. இக்கவிதைகளின் வரலாற்றைப் புதிய கோடாங்கி போன்ற சிற்றிதழ்கள் வழியாகத்தான் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. நவீனத் தமிழ் கவிதைகளில் இளைஞனின் அறிவுக்கு ஊக்கமளிக்கும் உள்ளடக்கங்கள் வேலையில் தலித் சிற்றிதழ்கள் பெரும்பங்கு ஆற்றுகின்றன.
நீ சாதீயில் காட்டும்
வேகத்தை
சாதிப்பதிலும் காட்டும்
சாதியை ஒழிக்க வேண்டுமா?
நீ சாதனையாளனாக மாற இந்த
சகாப்தங்கள் எல்லாம் மண்டியிடும்
உன்முன்னால்
ஆயுதத்தால் சாதிப்பதை விட
அகிம்சையில் சாதிப்போம்!
வா.... தோழா
தோள் கொடுப்போம்
துவண்டு கிடக்கும் நம் சமூகத்தை
தூக்கி நிறுத்து! (நவீன தமிழ் கவிதைகள் ப-40, புதிய கோடாங்கி, ஏப்ரல்-2004)
ஆணுக்கு பெண் சரிநிகர்சமம் என்றாயே
அவசரத்தால் கிறுக்கினாயோ இல்லை
அனுதாபத்தில் கவிதை செதுக்கினாயோ?
யானறியேன்! (சிந்தனை, புதிய கோடங்கி, ப.30, ஜீலை-2004)
நவீன கவிதையில்தான் ஒரு மனிதனின் ஆற்றலை வெளிப்படுத்த முடியும். ஒருவருக்குள் இருக்கும் அறியாமை, அனைத்தையும் அகற்ற முடியும். சாதிக்கத் தூண்டும் மனிதனை, சாதியின் பெயரால் அமுக்கிவிடாமல், ஒருவரை உயர்த்த நவீன கவிதை பெரிதும் உதவுகிறது. புதிய கோடங்கி இதழில், முனிமாவின் கேள்வி-பதில் என்னும் பகுதியில் அனைத்துத் தரப்பு மக்களின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் தெளிவாகவும் விடை அளிக்கப்பெறுகிறது. இந்த பகுதியில், உலகம், அரசியல், சமயம், சாதியம், திரைப்படம் என்ற கல்வி ஆகியன இடம் பெறுகிறது. இச்சிற்றிதழ்ல் மிகவும் முக்கியம் வாய்ந்த பகுதியாகக் கருதப்படுவது தலையங்கம் இதழுக்கே உரிய இப்பகுதியில் எல்லா வகைச் சிக்கல்களுக்கும் தீர்வு தரப்படுகிறது. ஒரு சில இதழ்களில் உண்மை நிகழ்ச்சி என்னும் தலைப்பில் கிராமத்திலும், மலைப்பகுதிகிளிலும் வசிக்கும் மக்களின் நிலை ஆகியன பற்றி அலசி ஆராய்ந்து தெளிவாக இவ்விதழ் சுட்டிக்காட்டுகிறது.
சிறுகதை
இதழ்களில் இடங்களை நிரப்புவதற்காகத்தான் சிறுகதைகள் இடம் பெறுகின்றன என்னும் தவறான கண்ணோட்டத்தைத் தகர்த்தெறியும் வகையில் தலித் சிற்றிதழ்களில் உள்ள சிறுகதைகள் காணப்படுகின்றன. அடித்தட்டு மனிதர்களின் வாழ்க்கை முறைகளையும் அவர்களது நம்பிக்கைகளையும் எடுத்துச் செல்லும் முறையில் சிறுகதைகள் அமைந்துள்ளன. இவ்வாறு சிறுகதையின் மூலக்கூறுகளை உள்ளடக்கித் தனக்கே உரிய பாணியில் இதழ்கள் வழங்கி வருகின்றன.
புதிய கோடாங்கிச் சிற்றிதழ்கள் ஒவ்வொன்றும் வெவ்வெறு முறையில் வெளிவருகின்ற காலக்கட்டத்தில், தொடங்கிய காலத்தில் இருந்து, இன்றுவரை சிற்றிதழ் அறநெறி வரம்பிற்கு உட்பட்டு, பலதரப்பட்டச் செய்திகளைத் தாங்கி வெளிவரும் முறையில் புதிய கோடாங்கிச் சிற்றிதழ் வெளிவருகிறது. பலநோக்குச் சிந்தனை என்பது எதிர்காலத்தில் தலித் அரசியலில், கலை, இசை, ஓவியம், நாடகம், நாட்டுப்புறவியல் இலக்கியம் ஆகியன தலித்துகளைத் தலைமை நோக்கி முன்னேறச் செய்யவேண்டும். நிலவுரிமை, மூலதன உருவாக்க உரிமை, வாணிபம் செய்கிற உரிமை, மூலவளப் பகிர்வு உரிமை, உயர் தொழில்நுட்ப உரிமை, மருத்துவம், பொறியியல், உயர் ஆராய்ச்சி உரிமை, தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டு உரிமை போன்ற பொருளாதாரச் சமத்துவ உரிமைகளை அடைவதற்கான செயல்திட்டங்களைப் பயனாக்கிக் கொள்கிற பலநோக்கு எழுத்துக்கள் வெளிவர வேண்டும். அண்ணல் அம்பேத்கர் எழுதிய மண்ணின் மைந்தரது மறைக்கப்பட்ட வரலாறு மற்றும் அடித்தட்டு மக்கள் வரலாறு போன்றவை தொடர்ந்து வெளியிட வேண்டும். இவ்வாறு பலநோக்குக் கருத்துக்களை உள்ளடக்கித் தனக்கே உரிய பாணியில் கருத்து இதழ்கள் வருங்காலங்களில் வெளியிட வேண்டும்.
அடிக்குறிப்புகள்
1. அண்ணல் அம்பேத்கர் வரலாறு - தொகுதி - 1.
2. புதிய கோடாங்கி இதழ்கள் சனவரி - 2004, ஏப்ரல் - 2005, மே - 2004 & ஜீலை-2004.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.