கல்வெட்டியல், தொல்பொருளியல் பல்லூடக அகராதிகளின் எதிர்காலவியல்
முனைவர் தமிழ்ப்பரிதி மாரி
உதவிப்பேராசிரியர்,
இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை,
பெரியார் பல்கலைக்கழகம்,
சேலம்-636011, தமிழ்நாடு.
உலா பேசி: +91- 7299397766,
மின்மடல்: tparithi@periyaruniversity.ac.in
அறிமுகம்
சொற்களை அகரவரிசைப்படி, அதன் விளக்கங்களையும், சொற்பயன்பாட்டையும் அளிக்கும் நூலே அகரமுதலி எனக் கேம்பிரிட்ஜ் லேனர்சு அகரமுதலியின் இரண்டாம் பதிப்புக் கூறுகின்றது. தமிழில் அகராதி, அகரமுதலி, நிகண்டு ஆகிய சொற்களால் அகரமுதலிகள் குறிக்கப் பெற்றுள்ளன. சிதம்பரரேவணசித்தர் 1594-இல் உருவாக்கிய நிகண்டில் ‘அகராதி நிகண்டு’ என்னும் பொருளில் குறிக்கப் பெற்றுள்ளது. அச்சு வடிவிலான அகரமுதலிகள் இன்று மின்னகரமுதலியாய், அலைபேசி அகரமுதலியாய், செயலிசார் அகரமுதலிகளாக வேர்விட்டு நிற்கின்றன. அச்சுப்படிகளில் தனக்கான இடத்தைக் கொண்டிருக்கும் அகரமுதலிகள், இணையத்தின் பல்லூடகங்களின் உறுதுணையுடன் கல்வெட்டியல், தொல்பொருளியல் துறைகளுக்கேற்ப ஒத்திசைவாகச் செயற்படுவதற்கான அடிப்படைகளையும், அதன் எதிர்காலவியலையும் இக்கட்டுரை ஆராய்ந்துள்ளது.
தமிழ் அகரமுதலிகளின் வரலாற்றுப் படிநிலைகள்
சேந்தன் திவாகரம் நமக்குக் கிடைத்துள்ள நிகண்டுகளில் காலத்தால் முற்பட்டு இருப்பதாக எஸ். வையாபுரிப்பிள்ளை (1985) கூறுகின்றார். பிங்கல நிகண்டு எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது எனச் சண்முகனார் (1965) குறிப்பிடுகின்றார்; இந்நூல் பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்ததென மு. அருணாசலம் (1975) குறிப்பிடுகின்றனர். காங்கேயர் என்பார் 11-ஆம் நூற்றாண்டில் உரிச்சொல் நிகண்டினை வெளியிட்டுள்ளார் என்கின்றார் மு. அருணாசலம் (1975). சிதம்பரரேவணசித்தரால் 1594-இல் அகராதி நிகண்டு தொகுக்கப்பெற்றது. சூடாமணி நிகண்டு 16-ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பெற்றதாகும். கயாதரம் என்னும் நிகண்டும், கைலாச நிகண்டு சூடாமணியும் 17-ஆம் நூற்றாண்டில் வெளிவந்தவை ஆகும்.
சீகன்பால்கு தமிழ் அகராதியையும் (1732), தமிழ் உரைநடை அகராதியையும் (1732) தொகுத்துள்ளார்; இவை அச்சாகாதவை என்கின்றார் பெ. மாதையன் (1997:57). வீரமாமுனிவரால் உருவான சதுரகராதி 1732-இல் வெளிவந்தது. மானிப்பாய் என்னும் அகராதியை யாழ்ப்பாணத்து சந்திரசேகர பண்டிதர் 1842-இல் வெளியிட்டுள்ளார். நா. கதிரைவேற்பிள்ளையின் தமிழ் மொழி அகராதி 1904-இல் வெளிவந்தது. த. குப்புசாமி நாயுடு தமிழ்ப்பேரகராதி என்னும் அகரமுதலியை 1906-இல் வெளியிட்டுள்ளார். பி. இரமநாதன் 1909-இல் The Twentieth Century Tamil Dictionary என்ற அகரமுதலியை உருவாக்கியுள்ளார். இவ்வாகராதியில் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவே படங்களுடன் வெளிவந்த முதல் அகரமுதலி எனவும் பெ. மாதையன் (1997:59) குறிப்பிடுகின்றார். ச. பவானந்தம் பிள்ளை 1925-இல் தற்காலத் தமிழ்ச் சொல்லகராதியும், 1935-இல் ஜூபிலி தமிழ் அகராதியும், 1937-இல் மதுரைத் தமிழ்ப்பேரகராதியும் வெளியாயின. தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தால் 1985-இல் தமிழ்-தமிழ் அகரமுதலி வெளியிடப்பெற்றது எனத் தமிழ் அகராதியின் காலவரிசை வரலாற்றைப் பெ. மாதையன் (1997) விவரித்துள்ளார். ‘சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியின் சீர்கேடு’ என்னும் நூலின் வாயிலாக ஞா. தேவநேயப் பாவாணர் (1961) அகரமுதலி ஆய்வுப்பணிகளை மதிப்பாய்விற்கு உட்படுத்தியுள்ளார்.
2002-இல் ப. அருளி 1.3 இலட்சத்திற்கும் மேற்பட்ட அருங்கலைச் சொற்களை உடைய ‘அருங்கலைச்சொல் அகரமுதலி’ என்னும் நூலினை வெளியிட்டுள்ளார். இந்நூல் தற்காலத்திற்கு ஏற்றவாறு அனைத்துக் கலை, அறிவியல், தொழில்நுட்பவியல், பொறியியல் என 135 துறைகளுக்கான அருங்கலைச் சொற்களைக் கொண்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, விக்கிப்பீடியா சகோதரத் திட்டங்களில் ஒன்றாகத் தமிழ் விக்சனரி செயற்பட்டு வருகின்றது. தமிழ்ப்பேழை அகராதி, இணையத்தில் 72 அகராதிகளுக்கும் மிகுதியாக அகராதி வளங்களை ஒருங்கிணைந்த முறையில் தேடுபொறியுடன் அளித்துள்ளது.
தமிழ்ப்பேழை (https://MyDictionary.in/): தமிழ் அகரமுதலிகளின் களஞ்சியம்
தமிழ்ப்பேழை (MyDictionary.in) உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின்னகராதியாகச் செயல்படுகின்றது. இவ்வகராதியில் வானியல், மண்ணியல், மீனியல், கானியல், கணிப்பொறியியல் என 160-க்கும் மேற்பட்ட துறைகளுக்கான கலைச்சொற்கள் அளிக்கப் பெற்றுள்ளன. உலக அளவில் அகராதி வளங்களில் 23-ஆம் இடத்தில் இருந்த தமிழ் அகராதி வளங்களை எட்டாம் இடத்திற்குத் தமிழ்ப்பேழை தற்போது மாற்றியுள்ளது. இன்னும் நான்கு ஆண்டுகளுக்குள் உலக அளவில் 171 மொழிகளில் தமிழ் அகராதி வளங்களை முதலிடத்திற்கு வருவதற்குரிய பணிகளைத் தமிழ்ப்பேழை மேற்கொண்டு வருகின்றது. இவ்வகராதியில் 16 இலட்சம் அடிப்படைச் சொற்களுக்கு 1.6 கோடி விளக்கங்கள் உள்ளன. தமிழ்ப்பேழை அகராதி ஓர் ஒருங்கிணைந்த அகராதியாக இணையத்தில் செயல்படுகின்றது.
ஒருங்கிணைந்த அகராதி என்பது பல்வகை அகராதிகளின் அடிப்படைச் சொற்களையும் அதன் விளக்கங்களையும் எளிதில் முழுமையாக ஒற்றைத் தேடலில் ஒரே பக்கத்தில் அளிக்கும் ஒன்றாகும். எடுத்துக்காட்டாக ‘முறை’ என்னும் சொல்லிற்கான விளக்கத்தைத் தமிழ்ப்பேழை அகராதியில் தேடினால், ‘முறை’ என்னும் சொல்லில் 12 சொற்கள் தொடங்குகின்றன. ‘முறை’ எனும் சொல் ஒருங்கிணைந்த தேடலாக 2124 முறை வருகின்றது. அச்சொல் தமிழின் இலக்கண, இலக்கியங்களில் எப்பொருளில் உள்ளதெனக் காட்டுவதோடு, முறை என்னும் சொல்லின் முன்னொட்டு, பின்னொட்டுகளுடன் தமிழ்ப்பேழையிலுள்ள 72 அகராதிகளில் என்னென்ன தலைச்சொற்கள் உள்ளன, அவற்றின் விளக்கங்கள் யாவை என்பதை அளிக்கின்றது. தற்போது அதிகச் சொற்களுடன் திகழும் முதல் பெரிய தமிழ் அகராதித் தளமாகத் தமிழ்ப்பேழை உருவாக்கப்பெற்றுள்ளது. உலக அளவில், இணையத்தில் தமிழை அதிகமான சொற்பதிவுகள் கொண்ட முதல் மொழியாக மாற்றும் எதிர்கால நோக்கில் இவ்வகராதி உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்ப்பேழை அகராதியில் ஐம்பதாயிரம் பழமொழித் தரவுகளும், ஆயிரக்கணக்கான விடுகதைகளும், நான்கு இலட்சம் தமிழ் நூல்களுக்கான தரவுகளும், ஆயிரக்கணக்கான திரைப்பட, தமிழிதழ்த் தரவுகளும் அளிக்கப்பெறுவதற்கான அடிப்படைகள் உருவாக்கப் பெற்றுள்ளன. இத்தரவுகள் யாவும் தேடுபொறிக்கு உகந்தவையாகவும் பொறிகளும் படிக்கும் தன்மையுடன் ஒருங்குகுறி-தமிழில் (Unicode) உள்ளன.
தமிழ்ப்பேழைத்திட்டத்தின் அகராதிகள் யாவும் படைப்பாக்கப் பொதும உரிமத்தின் கீழ் (Creative Commons Attribution-ShareAlike License) வழங்கப்பட்டுள்ளன. எனவே, இவ்வகராதிகளின் வளங்களை யாவரும் பகிரலாம், சேமிக்கலாம், சான்றுகளுடன் மாற்றலாம். தமிழ்ப்பேழைத் தளத்தில் தமிழின் இலக்கண, இலக்கிய அகராதிகளையும் அறிவியல், நுட்பியல் கலைச்சொற்களையும் ஒருங்கிணைத்துள்ளது. தொல்காப்பியம், அகநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், திருவருட்பா ஆகிய நூல்களின் சொற்களை அதன் விளக்கத்துடனும் பாடல் எண்களுடனும், கலைச்சொற்களுடன் இணைத்துள்ளது. இந்த அகரமுதலி அலைபேசிகளுக்கு ஒத்திசைவு கொண்டதாக உள்ளது. தமிழ்ப்பேழை அகராதியில் பல்லூடகக் கூறுகள் இணைக்கப் பெறுவதற்கான அடிப்படைக் கட்டமைப்பு உருவாக்கப் பெற்றுள்ளது. இத்தளம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒத்திசைவாக உள்ளது.
தமிழ்ப்பேழையும் கல்வெட்டு, தொல்பொருளியல் அகராதிகளும்
தமிழ்ப்பேழைத் தளத்தில் கலைச்சொல் பேரகராதி - தொகுதி 12, கல்வெட்டியல் (2010), கல்வெட்டுச் சொல்லகராதி (2011), தஞ்சைப் பெருவுடையார் கோயில் கல்வெட்டுகளில் உள்ள அருஞ்சொற் பொருட்குறிப்பு ஆகிய அகராதிகள் தேடுபொறிக்கு உகந்ததாக ஒருங்கிணைந்த அகராதியாக அளிக்கப்பெற்றுள்ளன. தமிழ்ப்பேழை ஓர் ஒருங்கிணைந்த அகராதியாகச் செயற்படுவதால், ஒரே சொல் மேற்படி மூன்று அகராதிகளிலும் எவ்வாறு உள்ளன என்றும் ஒருங்கிணைந்த முறையில் எவ்வாறு பொருள் வளத்தினைக் கொண்டுள்ளது என்றும் அறியலாம். தமிழ்ப்பேழை ஒருங்கிணைந்த முறையில் செயற்படுவதால் ஒரு கல்வெட்டுச் சொல் தமிழ் இலக்கிய, இலக்கணங்கள், கலைச்சொற்கள் போன்றவற்றோடு உள்ள தொடர்பினை எளிதில் அறியும் வகையில் உருவாக்கப்பெற்றுள்ளது.
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி (1997)
தமிழ்க் கல்வெட்டுகளில் காணப்படும் அரிய சொற்களையும் அவற்றின் பொருளையும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பதிப்புத்துறையால் ‘கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி’ என்னும் நூல் வெளியிடப்பெற்றுள்ளது. இந்நூலின் ஆசிரியர் சி. கோவிந்தராசன். இந்நூல் 487 பக்கங்களைக் கொண்டது. இந்நூலின் அமைப்பில் முதலில் கலைச்சொற்கள் அகரவரிசைப்படி தரப்பெற்றுள்ளன. ஒரு கல்வெட்டுச் சொல்லிற்கு அதன் தமிழ் விளக்கம், அதனைத் தொடர்ந்து கல்வெட்டில் அமைந்தவாறு கல்வெட்டுச் சொல்லின் சொற்றொடர், கல்வெட்டின் நோக்கீட்டிற்கான பார்வைகள் அளிக்கப்பெற்றுள்ளன.
இந்நூலில் காணப்படும் மஞ்சிக்கம்: எவருக்கும் சொந்தமில்லாமல் தரிசாகக் கிடக்கும் நிலங்களைக் குறிக்கும் சொல்; கண்டழிவு: நிவந்தத்தில் (செலவினத்தில்) அடங்காத இதர அல்லது பொதுவான செலவினங்களைக் குறிக்கும் சொல்; தலைமாறு: ஒரு பொருளுக்கு இணையாக வேறு பொருளைக் கொடுக்கும் பரிவர்த்தனை முறை (Exchange); தற்குறி மாட்டேறி: ஒருவருக்குப் பதிலாக மற்றொருவர் கையொப்பமிடும் அதிகாரம் (Power of Attorney); அன்றாழ் கோ: அன்று ஆளும் அரசனைக் குறிக்கும் சொல் என்பன நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. தேடுபொறிக்கான ஒத்திசைவுடன் இவ்வகராதி ஒருங்கிணைந்த அகராதிச் செயற்பாட்டுடன் இவ்வகராதி தமிழ்ப்பேழை மற்றும் பிற இணையத்தில் சேர்க்க வேண்டிய ஒன்று.
கல்வெட்டுச் சொல்லகராதி (2011)
'கல்வெட்டுச் சொல்லகராதி' (2011) என்பது, தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறையால் வெளியிடப்பட்ட 210 பக்கங்களைக் கொண்ட ஒரு முதன்மையான அகராதியாகும். கல்வெட்டறிஞர் தி.நா. சுப்பிரமணியன் அவர்களால் இது தொகுக்கப்பட்டுள்ளது. இந்நூலின் பொதுப் பதிப்பாசிரியர் முனைவர் தி. சிறீ. சீரீதர், இ.ஆ.ப. ஆவார். தமிழ்நாடு அரசு, பண்டைய காலக் கல்வெட்டுகளின் பயன்பாட்டைப் புரிந்து கொள்ளவும், அவற்றின் நுட்பமான சொற்களை இன்றைய தலைமுறையினர் அறியவும் இந்த அரிய நூலை உருவாக்கியுள்ளது. இந்நூலில் கல்வெட்டுச் சொற்களுக்கும், கிரந்தச் சொற்களுக்கும் தமிழில் விளக்கம் அளிக்கப் பெற்றுள்ளது. இந்த அச்சு நூல் இரண்டு பகுதிகளாக வகைமை செய்யப் பெற்றுள்ளது. முதல் வகைமையாக ஒரு கல்வெட்டுச் சொல்லுக்கு உரிய தமிழ் விளக்கம் அளிக்கப் பெற்றுள்ளது. இரண்டாம் வகைமையாகப் பார்க்கும் போது ஒரு கல்வெட்டுச் சொல்லுக்குரிய ஒலிப்புக்குறி (diacritic marks) அளிக்கப்பெற்று அதன் விளக்கம் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளது.
தமிழ்ப்பேழைத் தளத்தில் இவ்வகராதியின் சொற்கள் அகர வரிசைப்படி பகுக்கப்பெற்றுள்ளன. ஒரு சொல்லினைத் தேடுபொறிக்குள் தேடினால் அச்சொல் இவ்வகராதி முழுவதும் என்னென்ன பொருளில் ஆளப்பெற்றுள்ளது என்பதை நொடிப்பொழுதில் அறியும் வண்ணம் உருவாக்கப்பெற்றுள்ளது. கல்வெட்டுப் புழக்கத்திலுள்ள கலைச்சொல் ஒன்றினை அளிக்கும்போது அச்சொல் தற்கால வழக்கில் என்ன பொருளில் உள்ளதென்பதையும் கல்வெட்டுகளில் அதன் சிறப்பு விளக்கம் என்னவென்பதையும் நம்மால் அறிய முடிகின்றது. தமிழ்ப்பேழைத் தளம் இவ்வகராதியின் தமிழ்க் கலைச்சொற்களை மட்டுமே தேடுபொறிக்கு உகந்ததாக அளித்துள்ளது. ஒலிப்புக்குறி (diacritic marks) அளிக்கப்பெற்று ஆங்கிலத்தில் விளக்கம் தரப்பட்டுள்ள சொற்கள் இன்னும் சேர்க்கப்பெறவில்லை.
கலைச்சொல் பேரகராதி, தொகுதி 12, வாழ்வியல் துறைகள் - கல்வெட்டியல்
இந்த அகராதியைக் கலைச்சொல்லாக்கக் குழு, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தொகுதி 12-இல், இந்நூலில் கல்வெட்டியலுக்கான ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்க் கலைச்சொற்கள் அகர வரிசைப்படி அளிக்கப்பெற்றுள்ளன. இத்தொகுப்பில் கல்வெட்டியலுக்கான ஆங்கிலச் சொற்களும், கல்வெட்டியல் தொடர்புடைய பிற கலைச்சொற்களும் இடம் பெற்றுள்ளன. இவ்வகராதியை தமிழ்ப்பேழை தளம் ஒருங்கிணைந்த-தேடல் வசதியுடன் வெளியிட்டுள்ளது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் கல்வெட்டுகளில் உள்ள அருஞ்சொற் பொருட்குறிப்பு
இந்நூலின் ஆசிரியர் சா. கணேசன். இந்நூலினைத் தொல்பொருள் ஆய்வுத்துறை, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இருபத்தைந்து பக்கங்களையுடைய இந்நூலின் பதிப்பாண்டு குறிப்பிடப்பெறவில்லை. இந்நூலில் கல்வெட்டுச் சொற்கள் அகரவரிசைப்படி அளிக்கப்பெற்று, அதற்கான தமிழ் விளக்கம் தரப்பெற்றுள்ளன. ஒரு கல்வெட்டுச் சொல்லுக்கு அதன் பக்க எண்ணும் வரியும் என்னும் அடிப்படையில் நோக்கீட்டுத் தரவுகள் அளிக்கப்பெற்றுள்ளன. இந்நூலின் கல்வெட்டுச் சொற்களை ஒருங்கிணைந்த முறையில் அகர வரிசையில் தேடுபொறிக்கானதாக 2024-இல் தமிழ்ப்பேழைத் தளம் வெளியிட்டுள்ளது. இந்நூலின் கல்வெட்டுச் சொற்களைப் பிற துறைச்சொற்களுடன் அறியும் வாய்ப்பைத் தமிழ்ப்பேழை வழங்கியுள்ளது.
முடிபுரை
கல்வெட்டுச் சொற்கள் தனித்த பொருளில் இயங்குவதால் அவற்றிற்கான முழு அகராதி மிக இன்றியமையாத ஒன்றாகும். கல்வெட்டுகள் வரலாறு, மாந்தவியல், குமுகவியல், அரசியல், அறிவியல், பொறியியல், நுட்பியல், மொழியியல், இலக்கியம், இலக்கணம், வேர்ச்சொல்லியல், உழவியல் எனப் பல்துறை சார்ந்த ஒன்றாக இருப்பதால், தமிழ்நாட்டின் கல்வெட்டுச் சொற்கள் அனைத்திற்குமான முழுமையான அகராதி இணைய அகராதியாக ஒருங்கிணைந்த முறையில், தேடுபொறிக்கு உகந்ததாக, பொறிகளும் படிக்கும் தன்மையில் கட்டற்றத் தரவுகளுடன் தமிழ்ப்பேழைத் தளம் உருவாக்கியுள்ளது. தற்போது தேடுபொறிக்கு உகந்ததாக ஒருங்கிணைந்த முறையில் செயல்படும் தமிழ்ப்பேழை தளம் பல்லூடக வசதிகளை கல்வெட்டு, தொல் பொருளியல் கலைச்சொற்களுக்கு வழங்க வேண்டும். கல்வெட்டு, தொல்பொருளியல் சொற்களுக்கான பல்லூடக வசதிகளான ஒலிப்பு. ஒளிப்படம், காணொலி, அசைவூட்டப்படங்கள், இடக்குறி, நிலவரைபடம், இணைய இணைப்புகள் போன்றவை தேவைக்கேற்ப அளிக்கப்பெற வேண்டும்.
பரிந்துரைகள்
1. தமிழ்நாட்டரசின் தொல்பொருளியல் துறையின் கல்வெட்டு நூல்களின் அடிப்படையில் முழுமையான கல்வெட்டு அகராதி ஒன்று பல்லூடகத்தன்மைகளுடன் இணையத்தில் உருவாக்கப்பெற வேண்டும்.
2. தமிழ்நாட்டு அரசின் வெளியீடான அருங்காட்சியகவியல் சொற்கள் தமிழ்ப்பேழைத்தளத்தில் பல்லூடகத் தன்மைகளுடன் இணைக்கப்பெற வேண்டும்.
3. அகராதியில் ஒரு கல்வெட்டுச் சொல்லுக்குரிய தமிழ் விளக்கமும், ஆங்கில விளக்கமும், அக்கலைச்சொல் இடம்பெற்றிருக்கும் கல்வெட்டின் நோக்கீட்டுக் குறிப்புகளும் முழுமையாக அளிக்கப்பெற வேண்டும்.
4. ஒருங்கிணைந்த தேடுபொறிக்கு உகந்த கல்வெட்டு அகராதிச் செயலிகள் பல்லூடகத்தன்மைகளுடன் உருவாக்கப்பெற வேண்டும்.
5. கல்வெட்டு அகராதியில் பயன்படுத்தப்பெற்றிருக்கும் சொல் இடம்பெற்றிருக்கும் கல்வெட்டின் படம் அல்லது அதன் அச்சுப்படி (estampage) இணைக்கப்பெற வேண்டும்.
6. கல்வெட்டு அகராதியின் சொற்களுக்குரிய வேர்ச்சொல் இணைக்கப்பெற வேண்டும்.
7. கல்வெட்டு அகராதியின் சொற்களைத் தற்காலப் பயன்பாட்டிற்கும் புழக்கத்திற்கும் கொண்டுவரும் உரையாடல்கள் நடத்தப்பெற வேண்டும்.
8. பிற மாநிலங்கள், பிற நாடுகளில் கண்டறியப்பெற்ற தமிழ், தமிழர், தமிழ்நாடு சார்ந்த கல்வெட்டுச் சொற்கள் ஒருங்கிணைந்த தரவில் தேடுபொறிக்கு உகந்ததாகப் பல்லூடகத்தன்மைகளுடன் சேர்க்கப்பெற வேண்டும்.
9. கல்வெட்டுகளுக்கான ஒளியெழுத்துணரிகள் (OCR) கண்டறியப்பெற வேண்டும்.
10. கல்வெட்டுக் கலைச்சொற்கள் தொடர்புடைய சொற்களோடு பகுப்பாக்கம் செய்யப்பெற்று, சொற்றொடர்களோடு தொடர்புடைய தரவுகளாக வகைமை செய்யப்பெற வேண்டும்.
11. சாந்தி சாதனா வெளியிட்டுள்ள தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி (இரண்டு தொகுதிகள்) இணைய அகராதிகளாக ஒருங்கிணைந்த தன்மையுடன் உருவாக்கப்பெற வேண்டும்.
12. https://www.udhayam.in/ தளத்தினைக் கல்வெட்டுச் சொற்களுக்கான தரவுத் தளமாகப் இணைப்பாகப் பயன்படுத்தலாம்.
பார்வைத் தரவுகள்
1. கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி (1997), கோவிந்தராசன், சி., மதுரை காமராசர் பல்கலைக்கழகம்: மதுரை.
2. கல்வெட்டுச் சொல்லகராதி (2011), சுப்பிரமணியன், தி. நா., தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை: சென்னை.
3. கலைச்சொல் பேரகராதி, தொகுதி 12, வாழ்வியல் துறைகள் (2010), தமிழ் இணையக் கல்விக் கழகம்: தமிழ்நாடு அரசு.
4. தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி (இரண்டு தொகுதிகள்) (2003), சாந்தி சாதனா அறக்கட்டளை: சென்னை.
5. தஞ்சைப் பெருவுடையார் கோயில் கல்வெட்டுகளில் உள்ள அருஞ்சொற் பொருட்குறிப்பு (--), கணேசன், சா., தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை: சென்னை.
6. https://MyDictionary.in/ (பார்க்கப்பெற்ற நாள் 01.07.2026)
7. https://www.udhayam.in/ (பார்க்கப்பெற்ற நாள் 02.07.2026)
8. https://youtu.be/pyy1Ec6Ds_Y?si=BH8awziQ7z7dujYl (பார்க்கப்பெற்ற நாள் 01.07.2026)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.