அந்தக் குடியிருப்புப் பகுதியில் இசை வகுப்பு ஒன்று ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டது.
ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பல பெண்மணிகள் உற்சாகத்துடன் வகுப்புக்கு வர ஆரம்பித்தனர். வகுப்பு மிகச் சிறப்பாகப் போய்க் கொண்டிருந்தது.
மூத்த அந்த பாடகிகள் மிகுந்த ஈடுபாட்டுடன் கற்றுக் கொண்டிருந்தனர்.
அந்தக் குடியிருப்பின் சங்க ஆண்டு விழா வந்தது.
அதில் இந்தப் பெண்மணிகளின் இசை நிகழ்ச்சிக்கு ஒரு வாய்ப்பு தரப்பட்டது.
அனைவருக்கும் முழுமையான மகிழ்ச்சி.
பாடகிகளை உற்சாகப்படுத்த வந்த சங்கத் தலைவர், ''அம்மா, நீங்கள் எல்லோரும் நன்றாக பாடுவீர்கள். ஆனால் யாருக்காவது பாட வரவில்லையென்றால் அவர்கள் மௌனமாக இருந்து விடுவது நல்லது'' என்று சொன்னார்.
அனைத்துப் பாடகிகளுக்கும் தங்கள் திறமையில் சிறு சந்தேகம்.
குறிப்பிட்ட நாள் வந்தது.
மேடையில் அந்த மூத்தப் பெண்மணிகள் பயம் கலந்த மகிழ்ச்சியுடன் வந்து அமர்ந்தனர்.
இசை ஆசிரியையும் வந்தமர்ந்தார்.
பின்னால் திரும்பி ஒரு கண்ணசைவில் அனைவரையும் பாடச்சொல்லிவிட்டு அவர் பாட ஆரம்பித்தார்.
பிறகு என்ன ஆயிற்று?
அந்த ஆசிரியை குரல் மட்டுமே கேட்டது.