அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் உலகப் புகழ்பெற்ற தேவாலயங்களைப் பற்றி எழுத விரும்பினார்.
முதலில் சீனாவிற்குச் சென்றார். அங்குள்ள தேவாலயத்தில் தங்கத்தாலான தொலைபேசி ஒன்று சுவரில் தொங்குவதைக் கண்டார். அதனருகில் ‘ஓர் அழைப்பிற்குப் பத்தாயிரம் டாலர்’ என்று எழுதி இருந்தது.
அங்கிருந்த பாதிரியாரிடம் அதைப் பற்றி விசாரித்தார்.
அதற்கு பாதிரியார், ‘‘இது கடவுளிடம் நேரடியாகப் பேசக்கூடிய தொலைபேசி. அதனால்தான் அவ்வளவு அதிகக் கட்டணம்’’ என்றார்.
அடுத்து எழுத்தாளர் ஜப்பான் சென்றார்.
அங்கும் ஒரு மிகப் பெரிய தேவாலயத்தில் அதே மாதிரி, தங்கத் தொலைபேசி இருந்தது. சீனாவில் பார்த்த அதே மாதிரி தொலைபேசிதானா இதுவும் என்று அறிய அங்கிருந்த ஒரு கன்னிகாஸ்திரியிடம் விசாரித்தார்.
அவரும் அது கடவுளிடம் பேசும் நேரடித் தொடர்பு என்றும் 10,000 டாலர் கட்டினால் சொர்க்கத்துடன் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறினார்.
எழுத்தாளர் பிறகு பாகிஸ்தான், ரஷ்யா, ஜெர்மனி, பிரான்சு போன்ற பல இடங்களையும் சென்று பார்த்தார்.
அங்குள்ள தேவாலயங்களிலும் அதே போன்ற தங்கத் தொலைபேசியும் 10,000 டாலர் கட்டணப் பலகையும் இருக்கக் கண்டார்.
முடிவில் அவர் இந்தியாவிற்கு வந்து கேரளாவில் இறங்கினார்.
ஒரு தேவாலயத்திற்குள் நுழைந்தார். அங்கும் தங்கத் தொலைபேசி சுவரில் இருப்பதைப் பார்த்தார்.
அதன் கீழ் ‘ஓர் அழைப்பிற்கு ஒரு ரூபாய்’ என இருந்தது.
அமெரிக்கருக்கு ஒரே ஆச்சரியம்!
அருகிலிருந்த பாதிரியாரிடம் அது குறித்துக் கேட்டார்.
‘‘பாதர், உலகம் முழுதும் இதே போன்ற தங்கத் தொலைபேசிகளை பல தேவாலயங்களில் வைத்துள்ளனர். அது நேரடியாகச் சொர்க்கத்தில் கடவுளுடன் பேசும் தொடர்பு என்றனர். ஆனால், அங்கெல்லாம் கட்டணம் பத்தாயிரம் டாலர் என்று போட்டிருந்தது. ஆனால் இங்கு மட்டும் ஏன் இத்தனை குறைந்த கட்டணம்?’’ என்று விசாரித்தார்.
பாதிரியார் சிரித்தபடி, ‘‘மகனே, நீ இப்போது இருப்பது கடவுளின் சொந்த நாடு. இது உள்ளூர் அழைப்பு என்று தெரியாதா உனக்கு?’ என்றாரே பார்க்கலாம்.
(குறிப்பு: கேரளாவைக் கடவுளின் தேசம் என்று அழைப்பார்கள்)