மகாத்மா காந்திஜிக்கு இயற்கை மருத்துவத்தில் நம்பிக்கை அதிகம். உணவு வகைகளிலும் அவர் அதைக் கடைப்பிடித்து வந்தார்.
அவர் வேப்பிலைக் கொழுந்தைச் சட்டினி செய்து பயன்படுத்த முற்பட்டதும், ஆசிரமவாசிகள் அதைக் கண்ணை மூடிக்கொண்டு விழுங்க முற்பட்டார்கள்.
ஒரு சமயம் சர்தார் பட்டேலும் ஜெ.சி. குமரப்பாவும் காந்தியடிகளுடன் உணவு அருந்த உட்கார்ந்தார்கள்.
இலையில் போட்ட வேப்பிலைச் சட்டினியைக் குமரப்பா கண்ணை மூடிக்கொண்டு கஷ்டத்தோடு விழுங்கினார்.
அருகில் இருந்த காந்தியடிகள், “இந்தாருங்கள், இன்னும் கொஞ்சம்!” என்று கூறி வேப்பிலை சட்டினியை மறுபடியும் இலையில் போட்டார்.
மறுபடியும் கசப்பை விழுங்க வேண்டுமே என்று திணறிய குமரப்பாவின் முகமாறுதலைக் கவனித்த சர்தார் பட்டேல், “பாபுஜி இத்தனை காலம் ஆட்டுப் பாலைத்தான் சாப்பிட்டு வந்தார். இப்போது ஆட்டின் ஆகாரத்தையும் சாப்பிட ஆரம்பித்துவிட்டாரே!' என்று சொன்னதும், காந்திஜி உட்பட அனைவரும் சிரித்துவிட்டார்கள்.