விநாயகர் அகவல் பாடி முடித்தவுடன், விநாயகப் பெருமான் ஔவைப் பாட்டியைத் தம் துதிக்கையால் தாங்கிக் கைலாசத்தில் கொண்டுபோய்ச் சேர்த்து விட்டார்.
அங்கே திருவாயிலில் ஔவை உட்கார்ந்திருந்தாள்.
சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனைக் காணப் போகும் வேகத்தில் ஔவையைக் கவனிக்கவில்லை.
பின் வந்த சேரமான் பெருமாள் நாயனார் அங்கு ஔவை இருப்பதைக் கண்டார்.
“எப்படி நீங்கள் இங்கே வந்து சேர்ந்தீர்கள்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.
அதற்கு “விநாயகப் பெருமானைப் பூஜை பண்ணினேன். அவரைத் துதிக்கையிலே, அவர் துதிக்கையிலே வந்து சேர்ந்தேன்” என்றார் ஔவையார்.
இதில் 'துதிக்கையிலே' என்ற ஒரே வார்த்தை , 'விநாயகரைத் துதிக்கும் போது' என்றும், 'விநாயகர் துதிக்கையால் தூக்கிவிட்டார்' என்றும் இரண்டு பொருள் தரும் சிலேடை நயம் குறிப்பிடத்தக்கது.