நொண்டிக் கொண்டே வந்தான் ஒருவன். அதைக் கண்ட தமிழ்ப்புலவர் ஒருவர் முதல் நாள் எல்லாம் நன்றாக நடந்துகொண்டு இருந்தவன் இப்போது நொண்டுவதன் காரணம் என்னவென்று கேட்டார்.
அவன், ''என் காலை ஒரு யானை இடறி விட்டது. அதனால் நொண்டுகிறேன்” என்றான்.
"யானை இடறினால் என்ன? பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் கால் வாங்கித் தேய்த்தால் அது சரியாகிவிடுமே'' என்றார் புலவர்.
இந்த விந்தையான உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவருக்கு ஒன்றுமே புரியவில்லை. திகைப்பாகவும் இருந்தது. விளக்கம் கேட்டதற்குப் புலவர் பதில் சொன்னார்:
"நானோ ஒரு புலவன். என்னிடமே அச்சிறுவன் சிலேடை பேசுகிறான். அவன் காலில் நெருஞ்சிமுள் குத்திவிட்டது. யானைக்கு நெருஞ்சி என்ற சொல்லும் உண்டு. பத்துரதன் என்றால் தசரதன். அவன் மகன் ராமன். அவனுடைய நண்பன் சுக்ரீவன். விரோதி அவன் அண்ணன் வாலி. வாலியின் மனைவி தாரை. 'தாரை' என்ற வார்த்தையில் உள்ள காலை (கலை) எடுத்தால் அது 'தரை' ஆகிறதல்லவா! முள் தைத்த காலைத் தரையில் தேய்த்தால் சரியாகிவிடும் என்றேன். சரிதானே!''