குலோத்துங்க சோழனின் அவைப் புலவர் கம்பர். அவருடைய பெருமையைக் குலைக்க எண்ணி மற்ற புலவர்கள் அரண்மனைத் தாசியான பொன்னி என்பவளுக்குக் கம்பர் அடிமை என்பதாக ஓர் ஓலையில் எழுதி அதைப் பொன்னியிடம் கொடுத்துக் கம்பரின் கையொப்பத்தை அந்த ஓலையில் பெற்று வருமாறு தூண்டினார்கள்.
கம்பரும் சிறிதும் தயங்காமல், 'தாசி பொன்னிக்கு யானடிமை' என எழுதியுள்ள ஓலையில் கையொப்பமிட்டு பொன்னியிடம் கொடுத்தார்.
மறுநாள் சபையில் அந்த ஓலையை மற்றப் புலவர்கள் அரசனிடம் காண்பித்தனர்.
அரசன் கம்பரை நோக்கி, ''என்ன இது, தங்களுக்கு இது வெட்கமாக இல்லையா?'' என்று கேட்டார்.
கம்பர் சொன்னார்: "இதில் நான் வெட்கப்பட என்ன இருக்கிறது? தா(தாய்) – அன்னை, சி (ஸ்ரீ)–மங்களகரமான, பொன்னி என்றால் லட்சுமிதேவி – அன்னை ஸ்ரீமகாலட்சுமிதேவிக்கு யானடிமை – இது பெருமைக்குரியதல்லவா? எனக்கு ஏன் வெட்கம்?”
மன்னர் உடனே புலவர்களின் கவி சாதுர்யத்தைக் கீழ் வரும் செய்யுளால் சிறப்பித்தார்.
“போற்றினும் போற்றுவர்; பொருள் கொடாவிடில்
தூற்றினும் தூற்றுவர்; சொன்ன சொற்களை
மாற்றினும் மாற்றுவர் வன் கணார்கள்
கூற்றிலும் பாவலர் கொடிய வராவரே!”
இந்தச் செய்யுளுக்கு விளக்கம் தேவையில்லை, எளிமையாகத்தானே இருக்கிறது.