அடுத்த நாட்டு அரசனைப் பாடிவிட்டு யானை ஒன்றைப் பரிசிலாகப் பெற்று வந்த புலவரைப் பார்த்து, ''என்ன பரிசு பெற்று வந்தாய்?'' என அவர் மனைவி கேட்கிறாள்.
அதற்குப் புலவர், ''களபம் கொண்டு வந்திருக்கிறேன்'' என்றார். (களபம் = யானை / சந்தனம்)
அது கேட்ட அவள், 'சந்தனம்' எனப் புரிந்து, சாப்பாட்டுக்கே வழியில்லை சந்தனமா என மனதில் நினைந்தவளாக, ''சரி, பூசிக் கொள்ளுங்கள்'' என்கிறாள்.
புலவரோ, என்ன இவள்? தவறாகப் புரிந்து கொண்டு விட்டாளே என நினைத்துக் கொண்டு, ''மாதங்கம் கொண்டு வந்திருக்கிறேன்'' என்கிறார்.(மாதங்கம் = யானை / நிரம்ப தங்கம்)
அவர் மனைவியோ, 'மா தங்கம்' அதாவது அதிகமான பொன் எனப் புரிந்து கொண்டு, ''அதைக் கொண்டு நாம் நல வாழ்வு வாழலாம்'' என்கிறாள்.
இப்போதும் தவறாகத்தான் புரிந்திருக்கிறாள் என உணர்ந்த புலவர், ''வேழம் கொண்டு வந்திருக்கிறேன்'' என்றாராம். (வேழம் = யானை / கரும்பு)
அவர் மனைவியோ, கரும்பு என புரிந்து கொண்டு, ''சரி, சாப்பிடுங்கள்'' என்றாள்.
தன் மனைவி பாணினி இப்போதும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்த பாணன், ''பகடு கொண்டு வந்திருக்கிறேன்'' என்று சொன்னார். (பகடு = யானை / உழவுமாடு)
''பகடு கொண்டு வந்திருக்கிறீர்களா, நல்லதாய்ப் போயிற்று, அதை ஏரில் பூட்டி வயலை உழும்'' என்று சொன்னாள்.
இப்போதும் தவறாகத்தான் புரிந்து கொண்டிருக்கிறாள் என அறிந்த புலவர், ''கம்பமா கொண்டு வந்திருக்கிறேன்'' என்கிறார். (கம்பமா = யானை / கம்புமாவு)
மனைவி ''கம்பமா என்பதை கம்பு மாவு எனப் புரிந்து கொண்டு, நல்ல களி செய்து சாப்பிடலாம்'' என்கிறாள்.
இதற்கு மேலும் சரி வராது என அறிந்த புலவர், ''கைம்மா கொண்டு வந்திருக்கிறேன்'' என்கிறார். (கைம்மா = யானை)
அப்போதுதான் நீண்ட தும்பிக்கையை உடைய யானை (கை + மா = கைம்மா) என அறிந்த அவர் மனைவி, என் சமையல் இந்த ஆள் வயிறுக்கே போதுவதில்லை. இந்நிலையில், உடம்பெங்கும் வயிறாய் உள்ள யானையின் தீனிக்கு என்ன செய்வது என்று கலங்கினாள்.