மார்க் ட்வெயினும் சான்ஸி டிப்யூவும் ஒரு கூட்டத்திற்குப் பேச்சாளர்களாக அழைக்கப்பட்டார்கள்.
முதலில் மார்க் ட்வெயின் பேசினார். காட்டாற்று வெள்ளமாக வந்தது அவர் பேச்சு. மகுடி முன் நாகம்போல் மயங்கியது சபை. அவர் பேசியபின் கைத்தட்டல் அடங்கப் பல நிமிடங்களானது.
அடுத்து பேச வந்தார் சான்ஸி டிப்யூ. மார்க் ட்வெயினின் பேச்சு மயக்கத் திலேயே இன்னும் இருந்தது சபை.
சான்ஸி டிப்யூ பேசத் தொடங்கினார்: “சீமாட்டிகளே, சீமான்களே, இந்தக் கூட்டத்திற்கு வரும் முன், நானும் நண்பர் மார்க் ட்வெயினும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டோம். அதன்படி, என் உரையை அவர் பேச வேண்டும், அவரது உரையை நான் பேச வேண்டும். அதன்படி, உங்கள் முன்னால் மார்க் ட்வெயின் பேசிய எனது உரைக்கு நீங்கள் அளித்த பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி.
“கூட்டத்திற்கு வரும் அவசரத்தில், நான் மார்க் ட்வெயினின் உரையைக் கொண்டு வர மறந்துவிட்டேன். அதனால், நான் இப்போது பேச முடியாத நிலையில் இருக்கிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று கூறி முடித்தார்.
சான்ஸி டிப்யூவின் சமயோசிதமான புத்திசாலித்தனத்தையும், சிந்தனை வேகத்தையும் கண்டு வியந்த சபையோரின் கைத்தட்டலில் அதிர்ந்தது அரங்கம்.