படித்த பண்டிதர் ஒருவர் காஞ்சிபரமாச்சாரியாரிடம் தான் கீதையைக் கரைத்துக் குடித்திருப்பதாக பீற்றிக் கொண்டிருந்தார்.
சுவாமிகள் அவரிடம் அங்குள்ள கோவில் ஒன்றில் அவரால் பத்துநாட்கள் கீதை உபன்னியாசம் செய்ய முடியுமா? என்று கேட்டார். அந்தப் பண்டிதரும் சம்மதிக்க உபன்னியாசம் நடந்தது.
முதல் நாள் நல்ல கூட்டம் வந்தது.
இரண்டாம் நாள், மூன்றாம் நாள் என்று நாள் செல்லச் செல்லக் கூட்டமும் குறைந்து கொண்டே வந்தது.
அவர் பரமாச்சாரியாரிடம் ,"என்ன ஊர் இது? முதல் நாள் 50பேர் வந்தார்கள். இரண்டாம் நாள் 25 பேர். பிறகோ இரண்டே பேர்தான் வந்தார்கள்- யாருக்குமே கீதையைக் கேட்க ஆசையில்லை போலிருக்கிறது" என்று அலுத்துக் கொண்டார்.
பரமாச்சாரியார் ஒரு புன்முறுவலுடன், "ஏன் வருத்தப் படுகிறீர்கள்? கண்ணன் கீதையைச் சொன்ன போது அதைக் கேட்க ஒரே ஒருவர்தானே இருந்தார்" என்று சொன்னார்.