கோடிகோடியாகப் பணம் சேர்க்க வேண்டும் அதுவே என் இலட்சியம் என்று போய்க் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் ஒருவர் ஒரு கோடி பேரையாவது சிரிக்க வைத்துப் பார்க்க வேண்டும் என்கிற முனைப்புடன் ஊர் ஊராகப் போய்க் கொண்டிருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? மனிதனாகப் பிறந்தவர்கள் அனைவரும் தங்கள் கவலைகளையெல்லாம் மறந்து சிரிக்க வேண்டும். அதன் வழியாக வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சென்னையைச் சேர்ந்த சிரிப்பானந்தா அவர்களை முத்துக்கமலம் இணைய இதழுக்காகச் சந்தித்தபோது;
தங்களைப் பற்றிச் சொல்லுங்கள்
எனது பெயர் சம்பத். நான் எம்.காம் படிப்பை முடித்துத் தனியார் நிறுவனமொன்றில் சில ஆண்டுகள் பணியாற்றினேன். பின்னர் அங்கிருந்து வெளியேறி, தற்போது சென்னை, அண்ணா நகரில் ரைட் சாய்ஸ் இன்வெஸ்டீ எனும் பெயரிலான முதலீட்டு ஆலோசனை நிறுவனம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறேன். சிரிப்பு யோகாவை மனமகிழ்ச்சிக்காகச் செய்து கொண்டிருக்கிறேன்.
சிரிப்பு யோகாவைப் பற்றி...?
உடல் நலத்திற்கு உதவும் யோகாவிலுள்ள ஆசனங்கள், மூச்சுப்பயிற்சிகள், தியானம் போன்ற பயிற்சிகளைக் கடினமாக நினைத்துப் பலரும் பயப்படுகின்றனர். அவர்கள் பயத்தைப் போக்கி, அனைத்து வயதினரும் எளிமையாகச் செய்யக்கூடியதாக சிரிப்புடன் மகிழ்ச்சியையும் சேர்த்து யோகா பயிற்சியளிக்கும் முறைகளில் ஒன்றுதான் சிரிப்பு யோகா. இந்த சிரிப்பு யோகா, தேன் தடவிய மருந்து என்பதால் பலரும் இதைத் தொடர்ந்து பின்பற்றமுடியும்.
சிரிப்பு யோகா யாருக்கு...?
பள்ளிக்குழந்தைகள் முதல் ஓய்வு பெற்று வீட்டிலிருக்கும் வயதானவர்கள் வரை அனைவருக்கும் சிரிப்பு யோகாவின் தேவை இருக்கிறது. மனதிலிருக்கும் கவலையைப் போக்கி மகிழ்ச்சி அலையில் நம்மைச் சிரிக்க வைக்கும் இந்த சிரிப்பு யோகாவை வேண்டாமென்று யாரும் சொல்வதில்லை. இந்த சிரிப்பு யோகாவைப் பற்றித் தெரியாமலிருக்கும் பலரையும் நான் தேடிச்சென்று அவர்களுக்குச் சிரிப்பு யோகாவை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறேன்.
பள்ளிக் குழந்தைகளுக்கு சிரிப்பு யோகா எதற்கு?
பள்ளிக் குழந்தைகளுக்குத் தொடர்ந்து தரப்படும் பாடச்சுமை, மதிப்பெண் அதிகரிப்பதற்கான தொடர் தேர்வுகள் என்று அவர்களுக்குள் ஏற்படும் மன அழுத்தம் அவர்கள் வாழ்க்கையை கவலைக்குரியதாக்கி விடுகிறது. அவர்களுக்கு சிரிப்பு யோகா பயிற்சிகள் மகிழ்ச்சியை மட்டுமின்றி, வாழ்க்கையையும் எளிதாக எடுத்துக் கொள்ளவும் வழிகாட்டுகிறது. குறிப்பாக அரசு பொதுத்தேர்வு எழுதும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் தேர்வு பயத்தைப் போக்குவதற்கு இது மிகவும் பயனுடையதாக இருக்கிறது. நான் நூற்றுக்கும் அதிகமான பள்ளிகளில் சிரிப்பு யோகா பயிற்சிகளை அளித்திருக்கிறேன். நான் பயிற்சியளித்த பல பள்ளிகளிலிருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. பள்ளிகள் மட்டுமின்றி கல்லூரிகளிலிருந்தும் கூட அழைப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன. கல்லூரிகளில் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றிக் கொள்ள இந்தப் பயிற்சிகள் அவசியத் தேவையாகவுமிருக்கின்றன.
மாணவர்களைத் தவிர்த்து, வேறு யாருக்கு சிரிப்பு யோகா...?
போட்டிகளும் சவால்களும் நிறைந்ததாக இன்றைய பணிச்சூழல் இருக்கிறது. இந்தச் சூழலில் பணியாற்றுபவர்கள் அனைவருமே பல்வேறு மன அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர். தங்கள் பணிகளால் ஏற்படும் பல்வேறு மன அழுத்தங்களிலிருந்து விடுபடவே பலரும் விரும்புகின்றனர். இதற்காகச் சிலர் மதுப்பழக்கம், புகைப்பழக்கம் என்று உடலுக்குக் கேடு விளைவிக்கும் தீயபழக்கங்களுக்குப் பாதை மாறிச்சென்று அதிலிருந்து விடுபட முடியாமல் அவதிப்படுகின்றனர். சிலர் மன அழுத்தங்களைத் தங்களுக்குள்ளாகவே புதைத்துப் பல்வேறு நோய்களில் மாட்டிக் கொண்டு மருத்துவமனைகளுக்குப் பணத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர். சிலர் மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டுத் தற்கொலை வரையிலான தவறான நிலைக்குக் கூடச் சென்றுவிடுகின்றனர். தங்கள் பணிகளினால் ஏற்படும் மன அழுத்தங்களிலிருந்து விடுபடவும், உடல்நலத்துடன் சிறப்பாகப் பணியாற்றிடவும் பணியாளர்களுக்குச் சிரிப்பு யோகா அவசியமானதாக இருக்கிறது.
மது அருந்துபவர்களை அப்பழக்கத்திலிருந்து சிரிப்பு யோகா விடுவிக்குமா?
மது அருந்துபவர்கள் பலருக்கும் மது அருந்துவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அனைத்துக் காரணங்களும் கவலை எனும் ஒரு காரணமே மூலகாரணமாக இருக்கிறது. உடலுக்கும், உள்ளத்துக்கும், சமூகத்திற்கும் தீமை தரக்கூடிய மதுப்பழக்கத்திலிருந்து விடுபட சிரிப்பு யோகா உதவுகிறது. அவர்களின் கவலையைத் தூக்கி எறிந்து, மதுப்பழக்கத்தையும் கைவிட சிரிப்பு யோகாவின் மூலம் சிலருக்குச் சில பயிற்சிகள் அளித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறேன். மதுபாட்டில்களில் சிறைப்பட்டுக் கிடந்த அவர்கள் மனம் திருந்தி, அதிலிருந்து விடுபட்டு தற்போது சிரிப்பில் மாட்டிக் கொண்டிருக்கின்றனர்.
சிறையிலிருக்கும் கைதிகளுக்கும் சிரிப்பு யோகா பயிற்சியளித்து அவர்கள் கவலையைக் குறைக்க முயற்சிக்கலாமே...?
சிறைக்கைதிகளுக்கும் சிரிப்பு யோகா பயிற்சியைக் கொண்டு சென்று விட்டேன். வேலூர் நகைச்சுவை மன்றத்தினர் முதன்முதலாக எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை வழங்கினார்கள். அவர்கள் மூலமாக, வேலூர் பெண்கள் சிறைச்சாலையில் தண்டனைக் கைதிகளாக இருக்கும் பெண்களுக்கு சிரிப்பு யோகா பயிற்சியை வழங்கினேன். ஏதொவொரு குற்றத்திற்காகத் தண்டனை பெற்ற அவர்கள் என் சிரிப்பு யோகா பயிற்சி மூலம் மகிழ்ச்சியைப் பெற்றார்கள்.
இதுபோல் சென்னை புழல் சிறைச்சாலையில் 18 வயதிலிருந்து 24 வயது வரை உள்ள விசாரணைக் கைதிகளுக்கு அங்குள்ள சிறப்புப் பள்ளியில் சிரிப்பு யோகா பயிற்சியளித்து அவர்கள் அனைவரையும் கவலை மறந்து சிரிக்க வைத்தேன். கோபத்தில் அவர்கள் செய்த ஏதோ ஒரு குற்றச்செயல் அவர்களை குற்றவாளிகளாக்கி சிறைக்கைதிகளாக்கி விட்டது. அவர்கள் மனத்திலும் பல்வேறு ஆசைகள் புதைந்து கிடக்கிறது. அவர்கள் விரைவில் அந்த இடத்திலிருந்து விடுதலை பெற்று, மனம் திருந்தி நல்வழியில் பயணிக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
இறைபக்தியில் இருப்பதால்தான் தங்களது பெயரைச் சிரிப்பானந்தா என்று மாற்றிக் கொண்டீர்களா...?
இறைவனைத் தேடுபவர்கள் இறைபக்தியில் ஆனந்தமடைவார்கள். அவர்களது இறைபக்தி வழிமுறைகளுக்கேற்ப ஒரு பெயரைத் தேர்வு செய்து அதனுடன் ஆனந்தா எனும் பெயரையும் சேர்த்து தங்கள் பெயரையும், தங்களையும் மாற்றிக் கொள்வார்கள். நான் சிரிப்பின் மூலம் ஆனந்தமடைகிறேன். சிரிப்பையும், அதனால் உண்டாகும் மகிழ்ச்சியையும் உணர்ந்து என்னை சிரிப்பானந்தாவாக மாற்றிக் கொண்டேன். சிரிப்புக்கு மொழி அவசியத் தேவையில்லை, சில ஒலிகள் இருந்தால் போதும், சில காட்சிகள் இருந்தால் போதும், எவரையும் சிரிக்க வைத்து விடலாம். சிரிப்புக்கு ஒரே மொழி ஹாஹா... நான் சிரிப்புக்கான ஹாஹாவிலிருந்து ஹாவையும், சிரிப்பால் கிடைக்கும் உற்சாகத்தின் மொழியான ஓஹோ என்பதிலிருந்து ஹோவையும் எடுத்து சிரிப்பையும், உற்சாகத்தையும் ஒன்றிணைத்து “ஹாஹோ” என்று புதிய ஒலியை என் பயிற்சியின் மந்திரச்சொல்லாக்கிக் கொண்டேன். இதனால் என்னை ஹாஹோ சிரிப்பானந்தா என்றுதான் எல்லோரும் அழைக்கின்றனர்.
சிரிப்பின் வழியாக இறைவனைக் காண முடியுமா...?
சிரிப்பின் வழியாக மகிழ்ச்சியைக் காண முடியும். ஏதாவதொரு குறையுடையவர்கள் அந்தக் குறையைப் போக்கி, வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைவதற்காக ஆன்மிக வழிகளில் இறைவனைத் தேடுகின்றனர். சிரிப்பும் நம் குறைகளைப் போக்கி, வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைய வைக்கிறது. சிரிப்பிற்கு வயது, பாலினம், சமயம், மொழி, நாடு என்று எந்தவிதமான பாகுபாடும் கிடையாது. இறைவனைக் கண்டால் பேய்களுக்குப் பயம் என்று சொல்வார்கள். நான் சிரிப்பைக் கண்டால் நோய்களுக்குப் பயம் என்றுதான் சொல்கிறேன்.
சிரிப்பைக் கண்டால் நோய்கள் ஓடிப்போய் விடுமா...?
வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்பது உண்மைதான். நமது நுரையீரல் சுமார் 2.4 லிட்டர் காற்று கொள்ளளவு கொண்டது. அது ஆக்ஸிஜன் பிரிக்கப்பட்டபின் உள்ள அசுத்தக் காற்றாகும். சாதாரணமாக மூச்சு விடும்போது 0.8 லிட்டர் அசுத்தக்காற்று வெளியேறி அதே அளவிலான புதுக்காற்று உட்புகுகிறது. ஆனால் வாய்விட்டுச் சிரிக்கும்போது இந்த அளவு மாறுபட்டு, 1.8 லிட்டர் அளவிற்கு புதுக்காற்று உட்புகுந்து இரத்தத்திற்கு அதிக அளவில் பிராணவாயு கிடைப்பதற்கு உதவுகிறது. இதன் மூலம் அனைத்துச் செல்களுக்கும் சக்தி அதிகமாகக் கிடைக்கிறது. இதானல் பல நோய்கள் ஓடி ஒளிகிறது. மேலும், என்டோஃபின் என்று சொல்லக்கூடிய முக்கியமான திரவம் ஒன்று சுரக்கிறது. இது பயம், கோபம் போன்ற எதிர்மறை எண்ணங்களை மாற்றி, மனஅழுத்தத்தைப் பெரிதும் குறைப்பதாக சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. மன நலனுக்கு சிரிப்பு பெரிதும் உதவுகிறது.
மனநலம் குறைந்தவர்கள் சிரிப்பு யோகா செய்யலாமா? இதனால் பயனுண்டா?
மனநலம் குறைந்தவர்கள் பலரும் சிரிப்பைப் பற்றி அறியாமல் போனவர்களே... மனநலம் குறைவுடையவர்களுக்கு அளிக்கப்படும் பல்வேறு சிகிச்சைகளுடன் சிரிப்பு யோகா பயிற்சியும் சேர்த்து அளிக்கலாம். மனநலம் குன்றியவர்களுக்கு அளிக்கப்படும் நம்முடைய சிரிப்பு யோகா பயிற்சிகள் குறித்து அவர்கள் அறியா விட்டாலும், அவர்கள் நம்மைப் போல் செய்து பார்க்க முயற்சிக்கிறார்கள். நாம் சிரிப்பதைப் பார்த்து அவர்களும் சிரிக்கிறார்கள். சில மனநலம் குன்றியவர்களுக்கான பாதுகாப்பில்லங்களுக்குச் சென்று பயிற்சியளித்திருக்கிறேன். அடுத்த முறை நான் அங்கு செல்லும் போது என்னைப் பார்த்து அவர்கள் சிரிப்பது எனக்கு மனமகிழ்ச்சியளிக்கிறது.
சிரிப்பு யோகாவில் கடினமான பயிற்சிகள் எதுவுமில்லையா?
சிரிப்பு யோகா என்பது யோகாவை எளிமையாகச் செய்யும் ஒரு பயிற்சிதான். இது நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, விளையாட்டுக்கள் கைதட்டல்கள் போன்றவைகளை ஒன்றிணைத்து, அனைத்து வயதினரும் செய்யக்கூடிய ஒரு எளிமையான பயிற்சி. 220க்கும் அதிகமான பயிற்சிகள் இருப்பினும், இவையனைத்தும் சிரிப்பு ஒன்றை மட்டுமே முடிவாகக் கொண்டிருக்கின்றன. இந்தப் பயிற்சிகள் அனைத்தும் உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் நன்மை அளிக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. சிரிப்பு யோகா பயிற்சிக்கு வந்தவர்கள் எவரும் என்னால் இது முடியாது என்று ஓடியதே இல்லை. எனக்கு இந்தப் பயிற்சி எனக்குப் பிடிக்கவில்லை என்று சொன்னதுமில்லை.
இந்தப் பயிற்சிக்குத் தங்களின் ஆசிரியர் என்று யாரைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறீர்கள்?
உடல், மனம், ஆன்மா என்று மூன்றையும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க யோகாசனப் பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன. இந்த யோகாசனப்பயிற்சிகளில் சில எளிய யோகாசனங்களுக்கான பயிற்சியை சிரித்துக் கொண்டே செய்வதற்கேற்றவாறு எளிமையான “சிரிப்பு யோகா” பயிற்சியை அலோபதி மருத்துவரான மதன் கட்டாரியா என்பவர் உருவாக்கினார். இவர்தான் என் சிரிப்புப் பயிற்சியின் ஆசிரியர் என்று சொல்வேன். இவரிடம் பெற்ற பயிற்சியிலிருந்து சில பயிற்சிகளை நான் சில தேவைகளுக்கேற்ப மாற்றிப் புதிய பயிற்சிகளை உருவாக்கி விரிவாக்கம் செய்து இருக்கிறேன். மருத்துவரான மதன் கட்டாரியா சிரிப்புப் பயிற்சியை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் நோக்கத்துடன் 1998 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் நாளில் “சிரிப்பு யோகா இயக்கம்” எனும் அமைப்பு ஒன்றையும் தொடங்கினார். இந்த அமைப்பு தற்போது உலகில் 65 நாடுகளில் ஆறாயிரத்துக்கும் அதிகமான நகைச்சுவை மன்றங்கள் எனும் அளவில் விரிவடைந்திருக்கிறது. இந்த மன்றங்கள் மன அழுத்தங்களைப் போக்கும் சிரிப்பு யோகா பயிற்சிகளை உலகம் முழுவதும் நடத்திக் கொண்டிருக்கின்றன.
பிறநாடுகளுக்குச் சென்று சிரிப்பு யோகா பயிற்சியளிப்பீர்களா...?
என்னுடைய சிரிப்பு யோகா பயிற்சியின் வழியாகப் பணம் தேடி வெளிநாடு செல்வதில் எனக்கு விருப்பமில்லை. ஆனால் சிரிப்பிற்காக, எந்த நாட்டிலிருந்து என்னை அழைத்தாலும், சிரிப்புப் பயிற்சியளிக்கத் தயாராக இருக்கிறேன். என்னுடைய வாழ்நாளில் குறைந்தது ஒரு கோடி பேரையாவது சிரிக்க வைத்துப் பார்க்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். இதற்காக இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சென்று சிரிப்பு யோகா பயிற்சிகளை அளிக்க விரும்புகிறேன். என்னுடைய விருப்பம் நிறைவேறிட எனக்கு பல்வேறு ஊடகங்கள் உதவி வருகின்றன. தற்போது இணைய ஊடகமான முத்துக்கமலம் என் விருப்பத்தை இந்த நேர்காணல் மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. பத்தாமாண்டில் நுழைந்திருக்கும் முத்துக்கமலம் இணையத்தில் இணைந்திருக்கும் அனைவருடனும் இணைந்திட என் இனிய நல்வாழ்த்துகள்!