* மாவை அரைத்து, உப்பு சேர்த்து, கைகளால் கலக்கி 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். அப்போதுதான் தோசை மொறுமொறுப்பாக இருக்கும்.
* மீன் வறுக்கும்போது மசாலாவுடன் ஒரு ஸ்பூன் அரிசி மாவு அல்லது சோள மாவு சேர்த்தால், மீன் மொறுமொறுப்பாக இருக்கும்.
* தோசை மாவில் சிறிது வெந்தயம் மற்றும் சர்க்கரை சேர்த்து அரைத்தால், தோசை நன்கு சிவந்து மொறுமொறுப்பாக வரும்.
* உளுத்தம் பருப்பு அரைக்கும் போது சிறிது துவரம் பருப்பு சேர்த்து அரைத்தால் வடை மொறுமொறுப்பாக இருக்கும்.
* மாவு கலவையில் சிறிது சோள மாவு (Corn flour) அல்லது சூடான சமையல் எண்ணெய் சேர்த்தால் மொறுமொறுப்பு கூடும்.
* மசால் வடை செய்யும்போது மாவில் அரைமணி நேரம் ஊறிய நான்கு தேக்கரண்டி ஜவ்வரிசி, மூன்று தேக்கரண்டி பயத்தம் பருப்பு கலந்தால், வடை சுவையாகவும் மொறுமொறுப்பாகவும் இருக்கும்.
* ரவாதோசை செய்யும்போது இரண்டு கரண்டி சோளமாவு கலந்து செய்தால், தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென இருக்கும்.
* இறால் பஜ்ஜி செய்யும் போது, பஜ்ஜி மாவுடன் மைதா மாவு சேர்த்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
* ஒவ்வொரு கப் கோதுமை மாவுக்கும், இரண்டு தேக்கரண்டி அரைத்த ரவையைச் சேர்த்துப் பிசைந்து பூரி செய்தால் பூரி மொறுமொறுப்பாக இருக்கும்.
* வெஜிடபிள் சமோசா தயாரித்தவுடன், ஒரு தட்டில் வரிசையாக வைத்து, குளிர்சாதனப் பெட்டியில் அரை மணி நேரம் வைத்து எடுத்துச் சிறிது நேரம் கழித்து எண்ணெயில் பொரிக்க மொறுமொறுப்பாக இருக்கும்.
* பக்கோடா மாவில் கொஞ்சம் ரவையை சேர்த்து தயார் செய்தால், அது குளிர்ந்த பின்னரும் மொறுமொறுப்பாக இருக்கும்.
* முறுக்கு, சீடைக்கு மாவை வெந்நீர் ஊற்றி பிசைந்து பொரித்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
* பூரிக்கு மாவு பிசையும்போது மாவுடன் ஒரு டேபிள் ஸ்பூன் ரவையையும், சிறிது சர்க்கரையையும் சேர்த்துப் பிசைந்தால் பூரி வெகுநேரம் மொறுமொறுப்பாக இருக்கும்.
* வாழைக்காயை வறுவல் செய்யும் பொழுது சிறிது பிரட் தூள் சேர்த்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
* ரொட்டித் துண்டுகளில் நெய் தடவி அதன் மேல், இட்லிப் பொடியை துாவி எண்ணெயில் பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பாக இருக்கும்.
* சேப்பங்கிழங்கை வேக வைத்து தோலை அகற்றி வட்டமாக நறுக்கி சிப்ஸ் செய்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
* தோசை மாவுக்கு அரிசியுடன் ஜவ்வரிசி சேர்த்து ஊறவைத்தால் தோசை மொறுமொறுப்பாக இருக்கும்.
* அப்பளம், வடகம் போன்றவற்றை வெயிலில் காயவைத்து பொரித்தால், அதிக எண்ணெய் இழுக்காது. மொறுமொறுப்பாக இருக்கும்.
* வெண்டைக்காய் கறி செய்யும்போது சிறிது தயிர் ஊற்றி வதக்கினால் வழவழப்பு நீங்கி மொறுமொறுப்பாக இருக்கும்.
* பலகாரங்கள் செய்ய எண்ணெய் மிதமான காய்ச்சலில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மொறுமொறுப்பாக இருக்கும்.
* காய்கறி வறுவல்கள் (உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு) செய்யும்போது, வேகவைத்த காய்களைஅ சிறிது நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்த பின் வறுத்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.