* சப்பாத்திக்கு மாவு பிசையும் போது, வெதுவெதுப்பான நீர் அல்லது சிறிது பால் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி பஞ்சு போல் மென்மையாக இருக்கும்.
* முட்டையை நன்றாக அடித்து நுரைத்த பிறகு, ஆம்லெட் ஊற்றினால் மென்மையாக மிருதுவாக இருக்கும்.
* இறைச்சியை வேக வைப்பதற்கு முன் வினிகர் அல்லது தயிர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்தால், அது இறைச்சியில் உள்ள நார்களை மென்மையாக்கும்.
* மாவு அரைக்கும் போது சிறிதளவு வெந்தயம் மற்றும் அவல் சேர்த்து அரைத்தால் இட்லி பஞ்சு போல் மென்மையாக இருக்கும்.
* காய்கறிகளை வதக்கும் போது சிறிதளவு உப்பும், எண்ணெய்யும் சேர்த்து வதக்கினால் காய்களின் சாறு வெளியேறாமல் மென்மையாக இருக்கும்.
* மீன் வதக்கும் போது, மஞ்சள் தூள் மற்றும் சிறிது தயிர் சேர்த்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். அதன் பிறகு வதக்கினால் மீன் மென்மையாகவும் வாசனையுடனும் இருக்கும்.
* இட்லி மாவிற்கு உளுந்து அரைக்கும் போது, உளுந்துடன் ஐஸ் கட்டி இரண்டு துண்டு சேர்த்து அரைத்தால், வழக்கத்தை விட இட்லி மென்மையாக இருக்கும்.
* பஜ்ஜி மாவில் ஒரு கரண்டி இட்லி மாவு சேர்த்தால், பஜ்ஜி நன்றாக உப்பி மென்மையாக வரும்.
* ஆப்பம் செய்வதற்கு முதல் நாள் மாவில் தேங்காய் நீரை ஊற்றி வைத்தால் ஆப்பம் பூ போன்று மென்மையாக இருக்கும்.
* பூரிக்கு மாவு பிசையும் போது ஒரு மேஜைக்கரண்டி கார்ன் ப்ளோர் (சோள மாவு) சேர்த்து செய்தால் பூரி மென்மையாக இருக்கும்.
* இடியாப்ப மாவுடன் சிறிது நெய் சேர்த்துப் பிசைந்து இடியாப்பம் பிழிந்தால் மிகவும் மென்மையாக இருக்கும்.
* கீரை சமைக்கும் போது அதனுடன் ஒரு டீஸ்பூன் வெள்ளை சர்க்கரையை தூவினால் நிறம் மாறாமல் சூடாக, சுவையாக மென்மையாக இருக்கும்.
* பருப்பு வகைகளை வேக வைக்கும் முன்பு சிறிது இஞ்சி, உப்பு சேர்த்து ஊற வைக்கவும். அப்படி செய்தால் பருப்பு வேகவைக்கும் நேரம் குறையும். பருப்பு மென்மையாகவும் இருக்கும்.
* இட்லி மாவு அரைக்கும் போது சிறிது வெண்டைக்காய் சேர்த்து அரைத்தால் இட்லி மென்மையாக வரும்.
* தோசைக்கு மாவு அரைக்கும்போது வேகவைத்த அரிசி கொஞ்சம் அதில் சேருங்கள் தோசை மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
* உளுந்து போண்டா செய்யும்போது, அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கைத் தோல் நீக்கிப் போட்டு அரைத்துச் செய்தால் உளுந்து போண்டா மிருதுவாகவும் மென்மையாகவும் இருக்கும்.