கத்தரிக்காய் துவையல்
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. பெரிய கத்தரிக்காய் - 1 எண்ணம்
2. தேங்காய் - 1/2 மூடி
3. கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
4. உளுநம்ப் பருப்பு - 1 மேசைக்கரண்டி
5. மிளகாய் - 2 எண்ணம்
6. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
7. பெருங்காயத் தூள் - சிறிதளவு
8. கல் உப்பு - தேவையான அளவு
9. கறிவேப்பிலை - சிறிது
10. கடுகு - 1 தேக்கரண்டி
11. எண்ணெய் - தேவையான அளவு
12. புளி - சிறிது
செய்முறை:
1. கத்தரிக்காயைச் சுத்தம் செய்து, எண்ணெய்யை அதன் மேல் நன்கு தடவிக் கொள்ளவும்.
2. அடுப்பைச் சிறு தீயில் வைத்து அதன் காம்பைப் பிடித்துக் கொண்டு எல்லா பக்கமும் நன்கு சுடவும்.
3. சுட்ட கத்தரிக்காயைத் தட்டில் வைத்து ஆற விடவும்.
4. சுட்ட கத்தரிக்காயின் தோலை உரித்து, மசித்து, ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
5. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும்,கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பைச் சிவக்க வறுக்கவும்.
6. அதனுடன் புளி, மிளகாய், மிளகாய் வற்றலைப் போட்டு வதக்க்கவும்.
7. அடுத்து தேங்காய்த் துண்டுகளைப் போட்டு நன்கு வதக்கவும்.
8. அதனுடன் மசித்து வைத்த கத்தரிக்காயைப் போட்டு ஒரு பிரட்டு பிரட்டிக் கொள்ளவும்.
9. அவை நன்றாக ஆறியதும், பெரிய மிக்ஸி ஜாரில் உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக, அரைக்கவும்.
10. அரைத்ததை பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
11. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளிக்கவும்.
12. தாளிச்த்தை, அரைத்து வைத்த துவையலுடன் சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு: இந்தத் துவையலை சுடு சாதத்தில் நெய் சேர்த்துக் கலந்து கத்தரிக்காய் துவையல் சோறாகச் சாப்பிடலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.