1. ஆணோ, பெண்ணோ, எந்தக் குழந்தையாய் இருந்தாலும், நல் தொடுதல் (Good Touch), தீய தொடுதல் (Bad Touch) எவை என்பதைப் பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
2. மேலாடையின்றியோ, ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்குக் குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியேத் தெரியும் என்று எண்ணாதீர்கள்.
3. குழந்தைகளைத் தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, கடைகளில் பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோக் கவனம் தேவை.
4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் (அவர் வீட்டு முகவரி உட்பட) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்.
6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளைப் போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களைத் தொடுவதும் சில இடங்களில் நடக்கிறது. அப்படியிருந்தால் அந்த வாகனத்தில் பயணிக்க அனுமதிக்காதீர்கள்.
7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்குத் தெளிவுப்படுத்துங்கள்.
8. குழந்தைகள் தங்களது வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைபேசி எண்கள் அறிந்திருத்தல் நலம் என்பதால், அவற்றைச் சொல்லப் பழக்கப்படுத்துங்கள்.
9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டுப் பேசாதீர்கள்.
10. ஒரு கட்டத்திற்கு மேல், படிப்பு உள்ளிட்ட உங்கள் விருப்பங்களைக் குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.
11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவு போன்ற திரைக்காட்சிக்களையோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை குழந்தைகளுடன் அமர்ந்து பார்ப்பதைத் தவிர்க்கவும்.
12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் தொலைக்காட்சித் தொடர்களிலோ, சமூக ஊடகப் பதிவுகளிலோ மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்குப் பிடிக்கும் வகையில், அவர்களுக்கு பொதுஅறிவு வளர்ச்சியடையும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம். முடிந்தவரை நல்ல சிந்தனைக் கதைகளைச் சொல்லி மகிழ்ச்சிப்படுத்துங்கள்.
13. குழந்தைகளிடம் தினமும் சிறிது நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் விருப்பங்களை அறிந்து செய்து கொடுங்கள்.
14. தவறுகளைத் தன்மையுடன் சொல்லித் திருத்துங்கள், கடுமையாகத் தண்டிக்க நினைக்காதீர்கள்.
15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பப்படி மாறிவிட மாட்டார்கள். உங்கள் குழந்தைகளை நல்லவர்களாக வளர பொறுமை மிகவும் அவசியம்.
16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பாட்டிகளோ வீட்டில் இருத்தல் வேண்டும்.
17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களைப் பற்றி பேச நேரிடலாம்.
18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்கப் படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம் என்பதால், பெற்றோர்களை மதித்து நடந்து கொள்ளுங்கள்.
19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு வேறு ஏதாவதில் ஆர்வமிருந்தால், அதையும் ஊக்குவியுங்கள்.
20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்குத் தடை போடாதீர்கள்.
21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள். பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள். சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.
22. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு", "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்திற்குத் தடை போடாதீர்கள்.
23. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.
24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே கணவன் - மனைவி, மாமியார் - மருமகள் சண்டை என்று சண்டையிடுவதைத் தவிருங்கள்.
25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.