சிரார்த்தம் 1008 வகையான காய்கறிகளுடன் செய்யவேண்டும். ஒருமுறை தன் முன்னோர் சிரார்த்தத்துக்குத் தன் குடிலுக்கு சாப்பிட வருமாறு விஸ்வாமித்ரரை வஸிஷ்டர் அழைத்தார். ''அதற்கென்ன வந்தால் போச்சு! ஆனால் 1008 வகை காய்கறி செய்து படைக்க வேண்டும்'' என்றார்.
உலகில் 1008 வகையான காய்கறிகள் உண்டா? அப்படியே இருந்தாலும் இத்தனை கறிகாய்களை சமைத்து யாராவது உணவு படைக்க முடியுமா? அப்படியே சமைத்துப்போட்டாலும் அதைச் சாப்பிட யாரால் முடியும்? விஸ்வாமித்திரர் தன்னை வேண்டுமென்றே சிக்கலில் மாட்டிவைக்கவோ அல்லது அவமானப்படுத்தவோ இப்படிச் செய்கிறார் என்பது வஸிஷ்டருக்குத் தெரியாதா என்ன?
இருந்தபோதிலும் விட்டுக்கொடுக்காமல், ''ஆஹா! 1008 வகை கறியமுது வேண்டுமா? அதற்கென்ன அருந்ததியிடம் சொல்லி விடுகிறேன்'' என்றார்.
வஸிஷ்டரின் மனைவியான அருந்ததி கற்பின் சின்னம். ஒவ்வொரு ஹிந்துவும் திருமணமான பிறகு அருந்ததி நட்சத்திரத்தைப் பார்க்க வேண்டும். 'வஸிஷ்டரும் அருந்ததியும் இணைபிரியாமல் இருப்பதுபோல நீங்கள் இருவரும் இணை பிரியாமல் வாழுங்கள்' என்று புரோகிதர்களும் வாழ்த்துவர்.
சிரார்த்த நாளும் வந்தது. விஸ்வாமித்திரர் அமர்ந்தார். பாகற்காய் கறி, பலாப்பழம், பிரண்டைத் துவையல் இவைகளோடு, ஒரு வாழை இலையில் எவ்வளவு காய்கறிகள் படைக்கமுடியுமோ அவ்வளவு மட்டுந்தான் இருந்தன. 1008 இல்லை.
விஸ்வாமித்திரர் கோபத்துடன், ''என்ன இது? 1008 வகை காய்கள் எங்கே?'' என்று வஸிஷ்டரை வினவினார். அவரோ, ''நான் அருந்ததியிடம் சொல்லி விட்டேனே! அவளையே கேட்டுக்கொள்ளுங்கள்'' என்றார். இவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த அருந்ததி, தானே முன்வந்து ஒரு ஸ்லோகத்தைக் கூறிவிட்டு, ''இதுதானே சிரார்த்தகால விதி. உங்களுக்குத் தெரிந்திருக்குமே!'' என்றாள். விஸ்வாமித்திரர் வாயடைத்துப்போனார். பேசாமல் சாப்பிட்டுவிட்டு வாழ்த்திவிட்டுப் போனார்.
''ஒரு சிரார்த்தத் திதியன்று சமைக்கப்படும் சமையலில், பாகற்காய் கறி 100 காய்களுக்குச் சமம். பிரண்டைத் துவையல் 300 காய்களுக்குச் சமம், பலாப்பழம் 600 காய்களுக்குச் சமம் என்று பாடல் கூறுகிறது. ஆயிரம் காய்கள் ஆயிற்றா? மீதி இலையில் எண்ணிப் பாருங்கள், எட்டு காய்கறிகள் வைத்திருக்கிறேன். ஆக மொத்தம் 1008'' என்றாள்.
சாஸ்த்திரப்படி விளக்கம் சொன்ன அருந்ததியின் பதில் நியாயம்தானே? சமயோசித புத்தியும், இல்லற தர்மமும் அறிந்தவர்களாக, நம் பாரதத்தில் அன்றைய பெண்கள் இருந்திருக்கிறார்கள்.