முட்டாள் மரவெட்டி ஒருவன் மரம் வெட்டப் போனான்.
ஒரு மரத்தின் கிளையில் முன்பகுதியில் இருந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினான்.
இதை சிவலோகத்திலிருந்து பார்த்த பார்வதி தேவி, "இவன் என்ன முட்டாளாக இருக்கிறானே, அந்தக் கிளையின் முன்னமர்ந்து அந்தக் கிளையையே வெட்டினால் அவன் கீழே விழுந்து இறந்து விடுவானே..." என்று சிவபெருமானிடம் சொன்னார்.
அதற்கு அவர், " நாம் என்னதான் முயன்றாலும் முட்டாளை மட்டும் காப்பாற்ற முடியாது." என்றார்.
"நீங்கள் புரியும்படி சொல்லுங்கள்" என்றார் பார்வதி தேவி.
"அவன் கீழே விழும் போது அம்மா என்று அழைத்தால் நீ அவனைக் காப்பாற்று; அப்பா என்று அழைத்தால் நான் போகிறேன்." என்றார்.
இருவரும் மிகவும் கவனமாக அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.
மரவெட்டி கிளையை வெட்டி முடித்ததும் கிளை கீழ்நோக்கிச் சரிய அதில் அமர்ந்திருந்த அவன் "ஐயோ" என்று அலறியபடி விழுந்தான். விழுந்த வேகத்தில் தலை தரையில் அடிபட்டுச் செத்துப் போனான்.
பார்வதி தேவி, "அவன் இறந்து போனானே..." என்றார்.
அதற்கு சிவன் "அவன் அம்மா என்றால் நீ காப்பாற்றியிருப்பாய், அப்பா என்றால் நான் காப்பாற்றி இருப்பேன். அவன் எமனின் மனைவி "ஐயோ" வை அல்லவா கூப்பிட்டான். அதனால், எமன் அவன் உயிரை எடுத்துக் கொண்டு போய் விட்டான்." என்றார்.