வியாபாரி மாணிக்கத்திற்கு முத்து, ரத்தினம், வைரம் என்று மூன்று மகன்கள்.
இவர்களில் பெரியவன் முத்து வெளிநாடுகளில் வியாபாரம் செய்து பெரும்பொருள் ஈட்டினான்.
அவன் தம்பி ரத்தினமும், வைரமும் உள்ளூர் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டனர்.
மாணிக்கம் ஒரு நாள் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. தான் இறந்து விடுவோம் என்று தோன்றியது. சொத்துக்கள் அனைத்தையும் உள்ளூரில் இருக்கும் தனது மகன்களிடம் ஒப்படைத்து விட்டு இறந்துபோனார்.
பேராசை கொண்ட ரத்தினமும், வைரமும் அப்பாவின் சொத்துக்களை இரண்டாகப் பிரித்துக் கொண்டு அண்ணன் முத்துவைக் கொலை செய்ய திட்டமிட்டனர். ஒரு நாள் அண்ணன் முத்து திரும்பி வந்தான். அவனிடம் சொத்துக்களை மூன்றாக பிரித்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள்.
அண்ணனும் தம்பிகள் சொன்னதை நம்பினான். ஆனால் அன்று இரவே முத்துத் தூங்கி கொண்டிருக்கும் போது அவனை அடித்து ஒரு குளத்தில் வீசி எறிந்தனர்.
அடுத்த நாள் அந்த குளக்கரையில் இருந்த கோவிலின் அருகில் ஒதுங்கிக் கிடந்தான் முத்து. ஆனால் அவன் உடம்பில் எந்த விதமான காயமும் இல்லை.
அவன் முன்னால் கடவுள் தோன்றினார்.
கடவுளைக் கண்ட முத்து அவரை வணங்கினான்.
"முத்து, உனக்கு இனி எந்த ஆபத்தும் வராது. 100 ஆண்டுகள் வரை நீ வாழ்வாங்கு வாழ்வாய்...." என்று வரமளித்து விட்டு கடவுள் மறைந்தார்.
முத்து வீட்டிற்குத் திரும்பினான் ரத்தினமும் வைரமும் அதிர்ச்சியடைந்தனர்.
"காலையில் உங்களைக் காணாமல் துடித்துப் போனோம்... உங்களைப் பார்த்த பின்னர் தான்..... எங்களுக்கு உயிரே வந்தது" என்று சொல்லி நடித்து அழுதனர்.
"என்ன நடந்தது......" என்று கேட்டனர்.
எதையும் மறைத்துப் பேசத் தெரியாத முத்து நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொன்னான். தான் 100 ஆண்டுகள் சாகாமல் வாழ பெற்ற வரத்தையும் பற்றி கூறினான்.
தாங்களும் இதே போல் அதிக ஆண்டு வாழ வேண்டும் என்று திட்டமிட்டனர்.
பேராசை பிடித்த ரத்தினமும், வைரமும் தங்கள் இருவரையும் அடித்து அந்த குளத்தில் வீசி எறியும்படி ஏற்பாடு செய்தனர்.
அடுத்த நாள் அவர்கள் இருவரும் கோவிலின் அருகில் ஒதுங்கிக் கிடந்தனர்.
அவர்கள் எதிரில் கடவுள் தோன்றினார்.
"உங்களுக்கு என்ன நடந்தது"? என்றார் கடவுள்.
தங்களை விரோதிகள் அடித்துப் போட்டதாக கூறினர்.
"கடவுளே நான் 200 ஆண்டு சாகாமல் வாழவேண்டும்....." என்றான் ரத்தினம்.
"நான் 400 ஆண்டு சாகாமல் வாழ வேண்டும்" என்றான் வைரம்.
ரத்தினம் 500 ஆண்டு என்றான். வைரம் 600 என்றான். இருவரும் இப்படி ஆண்டுகளை ஏற்றிக் கொண்டே சென்றனர்.
"நான் சொல்வது போல் செய்தால் உங்கள் திறனுக்குத் தகுந்தவாறு பத்தாயிரம் ஆண்டுகள் கூட சாகாமல் வாழலாம்.." என்றார் கடவுள்.
"சொல்லுங்கள்... சொல்லுங்கள்" என்றனர் இருவரும் அவசரம் அவசரமாக.
"இந்தக் குளத்தில் நீங்கள் மூழ்கி இருக்கும் ஒவ்வொரு மணித்துளிக்கும் 100 ஆண்டுகள் சாகாமல் வாழும் வரம் கிடைக்கும்" என்று கடவுள் சொல்லி முடிப்பதற்குள் இருவரும் குளத்தில் குதித்தனர்.
இருவரும் நீருக்குள் மூழ்கினர். ரத்தினத்தை விட 100 ஆண்டாவது அதிகம் பெற வேண்டும் என்று வைரம் நினைத்தான்.
வைரத்தைவிட 100 ஆண்டு அதிகமாகப் பெற வேண்டும் என்று ரத்தினம் நினைத்தான்.
யார் அதிக ஆண்டு சாகாமல் இருக்கும் வரத்தைப் பெறப் போகிறார் என்று பார்த்தபடி கடவுள் நின்று கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில் வைரமும், ரத்தினமும் பிணமாக குளத்தில் மிதந்தனர்.