தாவரங்கள் ஆதாரமாக இருப்பதனாலேயே மருந்தை ஔஷதி என்றழைக்கின்றனர்.
அதை நேரே பெறுவது சுலபமல்ல. பக்குவம் அறிந்து பறித்து வந்து தகுந்த சேர்க்கைப் பொருட்களுடன் கலந்து இடித்து, கொதிக்க வைத்து, வடித்து, காலமறிந்து உட்கொள்ளப்படும் போது அது மருந்தாகிறது. அதை நிர்வகிப்பதற்கு வைத்தியன் துணை அவசியம்.
அது போல நமக்குக் கொடுக்கப்பட்ட உடலிலும் தெய்வநிலைக் காண தகுந்த குருவின் உதவித் தேவைப்படுகிறது. இங்கேயும் அரைப்பது இடிப்பது கொதிக்க வைப்பது என பல வழி முறைகளை சீடனின் பக்குவம் அறிந்து குரு வைத்தியம் செய்வார்.
குருவின் வைத்தியம் தொடங்கியது.
ஒரு முறை புல்லே ஷா தன் குரு இனாயத் ஷாவை குடும்பத் திருமணத்திற்கு அழைத்திருந்தார். குருவோ தான் போகாமல் தன் சீடன் ஒருவனை பிரதிநிதியாக அனுப்பி வைத்தார். அவரும் குருவைப் போலவே அர்யன் குலத்தை சார்ந்தவராதலால் சையது குலத்தைச் சேர்ந்த புல்லே ஷா குடும்பத்தினர் அவரை தகுந்த முறையில் வரவேற்காமல் அலட்சியப்படுத்தினர். எப்படியோ புல்லா ஷாவும் இந்தத் தவறுக்கு அறிந்தோ அறியாமலோ காரணமாகி விட்டார்.
சீடன் திரும்பியதும் திருமணம் பற்றி விசாரித்தார் குரு. நடந்ததைக் கூறினார் சீடன்.
“ஓ! அப்படியா ? அவனால் நமக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை. இனி நீரின் போக்கு அவனுடைய பாத்தியிலிருந்து உன்னுடைய பாத்திகளுக்கு பாயட்டும்.” என்று தமது அருளின் பாதையை மாற்றி விட்டார் குரு.
அந்த நிமிடத்திலிருந்து புல்லா அனுபவித்து வந்த ஆனந்தம் மறைந்து விட்டது. இறைக்காட்சியும் மறைந்தது.
இனாயத் ஷா அவரது அருளை மட்டும் நிறுத்தவில்லை. தன்னைப் பார்க்க வரக்கூடாதென்றும் கட்டளையிட்டு விட்டார்.
பெரும் பணக்காரன் ஒருவன் திடீரென்று ஏழ்மையைத் தழுவினால் அவன் நிலை எப்படியிருக்கும்?
நீரை விட்டு அகலிய மீனைப் போலத் துடிக்கலானார் புல்லா.
குருவின் மனம் மட்டும் கல்லாகி விட்டது.
குருவின் பழைய ஆதரவுக்காக புல்லா ஏங்கலானார்.