சாலையைக் கடந்து கொண்டிருந்த ஒரு பள்ளிச் சிறுவனை மோதித் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது அந்த வாகனம்.
இரத்தக் காயங்களுடன் கிடந்த சிறுவனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, அடையாள அட்டையிலிருந்த அலைபேசி எண்ணுக்குத் தகவல் தந்தான் சுப்புராம்.
விரைந்து வந்த சிறுவனின் பெற்றோர், மருத்துவரைப் பார்த்துவிட்டு, சுப்புராமை அணுகினார்கள்.
“பத்து நிமிசம் தாமதம் ஆகியிருந்தால், உங்கப் பிள்ளையைக் காப்பாற்றியிருக்க முடியாது”ன்னு டாக்டர் சொன்னார். நான் கடவுளை நம்புறவன். அவராப் பார்த்து உங்களை அனுப்பியிருக்கார். ரொம்ப நன்றிங்க...” என்று சொல்லிச் சுப்புராமின் இரு கைகளையும் பற்றித் தன் கண்களில் ஒற்றிக் கொண்டார் சிறுவனின் தந்தை.
குரல் தழுதழுக்கச் சொன்னான் சுப்புராம், “என் இரண்டு வயசுக் குழந்தை காணாமல் போயி இரண்டு வருசம் ஆச்சு. கடவுளை வேண்டாத நாளில்லை. அவர் கண் திறக்கலை. அவருக்கு உங்க மேல ரொம்பப் பிரியம் போலிருக்கு. நீங்க கேட்காமலே உங்களுக்கு உதவி செய்ய என்னை அனுப்பியிருக்கார். நீங்க சொன்னா அவர் கேட்பாரு. தயவு பண்ணி என் பிள்ளையைக் கண்டுபிடுத்துக் கொடுக்கச் சொல்லுங்க...”
என்ன சொல்வதென்று புரியாமல் விழித்தார் சிறுவனின் தந்தை.