ஒரு முறை தேவலோகத்தில் வசிஷ்ட முனிவர், "என் சீடன் மன்னன் அரிச்சந்திரன் சத்தியசந்தன். உண்மையே பேசுபவன். ஒரு பொய் கூடக் கூறாதவன்" என்று பெருமையுடன் கூறினார்.
வசிஷ்டரிடம் எப்போதும் பகைமை பாராட்டி வந்த விஸ்வாமித்ர முனிவர், "நான் அவனைப் பொய் பேச வைக்கிறேன். அவ்வாறு செய்ய முடியாவிட்டால் நான் எனது தவ வலிமை முழுவதையும் இழக்கத் தயார்" என்று சவால் விட்டார்.
பூவுலகிற்கு வந்த விஸ்வாமித்ரர் ஒரு இராட்சதனை தன் தவ வலிமையால் ஒரு காட்டுப் பன்றியாக மாற்றினார். அதனை அவர் அரிச்சந்திரனின் அழகிய பூந்தோட்டத்தை நாசமாக்கிவிட்டு வரும்படி ஏவினார். அதுவும் நந்தவனத்திற்குள் நுழைந்து செடிகொடிகளைப் பெயர்த்து, பாத்திகளைக் குடைந்து பாழாக்கியது. தோட்டக்காரர்களாலும், படை வீரர்களாலும் அதை அடக்க முடியவில்லை.
இச்செய்தி அரிச்சந்திரனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவனும் வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொண்டு குதிரை மீதேறி அக்காட்டுப்பன்றியை துரத்திக் கொண்டு போனான். அது அங்கும் இங்கும் ஒடி போக்குக் காட்டியதேத் தவிர அகப்படவில்லை. அதைத் துரத்திக் கொண்டே வெகு தூரம் வந்து விட்டிருந்தான் அரிச்சந்திரன்.
மிகுந்த களைப்புற்ற அவன் அருகிலிருந்த ஆற்றின் நீரைப் பருகிவிட்டு, ஒரு பாறை மீதமர்ந்து ஓய்வெடுத்தான். அப்போது அங்கு வந்த ஒரு வயதான பிராமணர், அவனிடம் தர்ம சாஸ்திரங்கள் பற்றி விவரிக்கத் தொடங்கினார். ஆள் நடமாட்டமே இல்லாத இந்த இடத்தில் இப்படி ஒரு ஞானியா? என்று வியந்த அரிச்சந்திரன் அவரைப் பற்றி விசாரித்தான். அவர் தனக்கு ஒரு மகன் உள்ளான் என்றும், அவனுக்கு திருமணம் செய்யத் தன்னிடம் போதுமான பணம் இல்லை என்றும் வருத்தத்துடன் கூறினார்.
அவர் மீது இரக்கமுற்ற அரிச்சந்திரன், "கவலைப்படாதீர்கள். தலைநகரில் அரசவையில் என்னை வந்து பாருங்கள். உங்களுக்கு வேண்டிய செல்வத்தை நான் அளிக்கிறேன்" என்று கூறிவிட்டு தலைநகருக்குத் திரும்பினான். மறுநாள் அந்த பிராமணர் அரசவைக்குப் போய், "மன்னா! எனக்கு வேண்டிய செல்வத்தைக் கொடுப்பதாக வாக்களித்தாய். எனக்கு உன் நாடு, உன் அரண்மனை எல்லாம் வேண்டும்" என்றார். அரிச்சந்திரனும் தயங்காமல் அவர் கேட்டதை எல்லாம் தானமளித்து விட்டார்.
அந்தப் பிராமணர் வேறு யாருமில்லை; விஸ்வாமித்ரர்தான்.
தானம் பெற்றபின் அவர் அரிச்சந்திரனிடம், "மன்னா! நீ சொன்னபடி நான் கேட்டதையெல்லாம் கொடுத்துவிட்டாய். ஆனால் தானமளித்த பின் தட்சிணை கொடுக்க வேண்டுமே! அதையும் கொடு" என்றார். தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் கொடுத்துவிட்ட அரிச்சந்திரனிடம் கொடுப்பதற்கு இப்போது ஒன்றுமே இல்லை. ஆயினும், அவர் கேட்கும் தட்சிணையைக் கொடுப்பதாகவும் ஆனால் அதற்கு சிறிது அவகாசம் கொடுக்கும்படியும் வேண்டினான்.
தன் மனைவி சந்திரமதியையும் மகன் லோகிதாசனையும் அழைத்துக் கொண்டு புண்ணிய நகரான காசிக்கு வந்தான். அங்கு வந்த விஸ்வாமித்ரர் அரிச்சந்திரனிடம், "ஏன் இவ்வளவு சிரமப்படுகிறாய்? தட்சிணை கொடுக்க இயலாது என்றே சொல்லியிருக்கலாமே" என்றார்.
அதற்கு அவன், "நான் சொன்ன சொல் தவறாதவன். எப்பாடுபட்டாவது தங்களுக்கு தட்சிணை கொடுத்துவிடுகிறேன்" என்றான்.
பிறகு அவன், ஒரு செல்வந்தரிடம் தன் மனைவியையும் மகனையும் அடிமைகளாக விற்றும், தன்னையே ஒரு மயான அதிகாரியிடம் விற்றும் அந்தப் பணத்தைப் பிராமணருக்கு தட்சிணையாகக் கொடுத்தான்.
அரிச்சந்திரனின் மனைவியும் மகனும் அந்த செல்வந்தரின் வீட்டு வேலைகளை மிகவும் சிரமப்பட்டு செய்தார்கள். அரிச்சந்திரனோ மயானத்தைக் காவல் காப்பதும் அங்கு எடுத்து வரப்படும் பிணங்களை எரிப்பது, பிணங்களை எரிக்கக் கட்டணம் வசூலிப்பது போன்ற பணிகளை செய்து வந்தான்.
ஒருநாள் லோகிதாசன் தோட்டத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்து இறந்துவிட்டான். துக்கம் தாங்காமல் அரிச்சந்திரனின் மனைவி இறந்து போன தன் மகனின் உடலை எரிக்க மயானத்திற்குக் கொண்டு சென்றாள்.
அங்கு காவல் காத்துக் கொண்டிருந்த அரிச்சந்திரன் அவளிடம் பிணத்தை எரிக்கப் பணம் கேட்டான். தன்னிடம் பணம் இல்லை என்று கூறி அழுதாள் அவன் மனைவி. அப்போதுதான் அது தன் மனைவி என்றும் இறந்தது தன் மகன் என்பதையும் கண்டான் அரிச்சந்திரன். லோகிதாசனை எரிக்கும் நெருப்பிலேயே விழுந்து உயிரை மாய்த்துக்கொள்வது என்று இருவரும் முடிவு செய்தனர்.
லோகிதாசனின் உடலுக்குத் தீ மூட்டிவிட்டு அந்த நெருப்பில் இருவரும் இறங்க எத்தனித்தபோது ஒரு பேரிடி கேட்டது. மறுகணமே லோகிதாசன் உயிர் பெற்றெழுந்தான்.
அப்போது விஸ்வாமித்ரர் அங்கு இந்திரன் முதலான தேவர்களுடன் வந்து, "அரிச்சந்திரா! பொய் பேசுவதில்லை என்ற உன் கொள்கையை உறுதியுடன் பின்பற்றினாய். உன் வாழ்வில் மிகுந்த சோதனைகளை சந்தித்த போதும் அதனை நீ கைவிடவில்லை. உன் புகழ் இவ்வுலகில் என்றென்றும் ஓங்கி நிற்கும்" என்று வாழ்த்தி அவன் நாட்டை அவனிடமே ஒப்படைத்தார்.