நீண்ட நேர இரவுப் பிரார்த்தனைக்குப் பின்பு பள்ளிவாயிலிலிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார் பாயஸீத் பிஸ்தாமி என்கிற ஞானி.
வரும் வழியில் குடிகாரன் ஒருவன் கையில் வைத்திருந்த இசைக் கருவியொன்றை மீட்டியபடி ஆபாசமான பாட்டுக்களைப் பாடியவாறு அந்த வழியில் செல்பவர்களை யெல்லாம் திட்டிக் கொண்டிருந்தான்.
பாயஸீத் அந்த குடிகாரனுக்கு புத்திமதி சொல்லும் நோக்கத்துடன் அவனருகேப் போனார். இதனால் கோபமடைந்த குடிகாரன் தன் கையில் வைத்திருந்த இசைக் கருவியால் அவருடைய தலையில் பலமாகத் தாக்கினான்.
இதனால் பாயஸீத்தின் தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டதுடன் குடிகாரனின் இசைக் கருவியும் உடைந்து போய் விட்டது. பாயஸீத் ஒன்றும் சொல்லாமல் காயம் பட்ட தலையை அழுத்திப் பிடித்தவாறு வீடு திரும்பினார்.
மறுநாள் காலையில் , சில இனிப்புப் பண்டங்களையும் ஒரு சிறு தொகையையும் ஒரு நண்பர் மூலம் அந்த குடிகாரனுக்கு அனுப்பி வைத்த பாயஸீத், இந்தச் செய்தியையும் கூடவே அனுப்பினார்.
"உங்களுடைய அருமையான இசைக்கருவி உடைபடுவதற்கு, என் தலை நேற்றிரவு காரணமாக இருந்தது பற்றி மிகவும் வருந்துகிறேன். நான் அனுப்பியுள்ள சிறு தொகையைக் கொண்டு புதியதொரு இசைக்கருவி ஒன்றை வாங்கிக் கொள்ள வேண்டுகிறேன்.
மேலும் உங்கள் நாவு கசப்பான வார்த்தைகளை அதிகமாக உச்சரித்ததைக் கேட்டேன். நான் இத்துடன் அனுப்பியுள்ள இனிப்புப் பண்டங்களின் மூலம் உங்கள் நாவிலுள்ள கசப்பு மாறி இனிமை பிறக்குமென்று எதிர் பார்க்கிறேன்."
இதைக் கண்ட அந்தக் குடிகாரன், வெட்கத்தால் தலை குனிந்தான்.
சிறிது நேரத்தில் அந்தக் குடிகாரனும் அவனுடைய தோழர்களும் பாயஸீத்தைத் தேடி வந்தார்கள்.
அவர்கள் அனைவரும் மொத்தமாகச் சேர்ந்து, " மாட்சிமை மிகுந்த பெரியோரே, அறியாத்தனத்தினாலே எங்கள் வாழ்நாளில் பெரும் பகுதியை இந்தப் பாவ வழியில் கடத்தி விட்டோம். உங்களுடைய பொறுமையும், போதனையும் எங்கள் கண்களைத் திறந்து விட்டன. இனி நாங்கள் நல்லவர்களாக வாழ முயலுவோம். " என்றனர்.