தெனாலிராமன் ஒரு முறை சந்தைக்குச் சென்று ஐம்பது நாணயங்கள் கொடுத்து குதிரை ஒன்று வாங்கி வந்தான். அதில் ஏறி சவாரி செய்யப் பழகிக் கொண்டிருந்தான்.
ஒரு நாள் அரசர் தன் விலை உயர்ந்த குதிரை மேல் ஏறிக் கொண்டு இராமனையும் உடன் வருமாறு அழைத்தார்.
தெனாலிராமனும் தன் குதிரை மீது ஏறிக் கொண்டு மன்னருடன் உலாவப் புறப்பட்டான்.
அரசரின் குதிரை அழகாக நடை போட இராமனின் குதிரையோ தளர்ந்த நடை போட்டது.
அரசர் இந்தக் குதிரையைப் பார்த்து கடகடவெனச் சிரித்தார். " இராமா! போயும் போயும் இந்த வற்றிப் போன தொத்தல் குதிரைதானா உனக்குக் கிடைத்தது. இதனை வைத்துக் கொண்டு நீ எப்படி சவாரி செய்யப் போகிறாய்? என் குதிரையைப் பார். எப்படி ஓடுகிறது?" என்று இராமனைக் கேலி செய்தார்.
இராமனுக்கு கோபம் வந்து விட்டது. "அரசே! இந்தக் குதிரை பயன்படுவது போல உங்கள் குதிரை பயன்படாது." என்று தன் குதிரையைப் பற்றி மிக உயர்வாகப் பேசினான்.
மன்னருக்குக் கோபம் வந்து." இதை உன்னால் நிரூபிக்க முடியுமா?" என்றார்.
”வேண்டுமானால் பாருங்கள். உங்கள் குதிரையால் செய்ய முடியாததை என் குதிரையைச் செய்ய வைக்கிறேன்." என்றான் தெனாலிராமன்.
"அப்படியா சொல்கிறாய்? நூறு பொன் பந்தயம் கட்டுகிறேன். செய் பார்க்கலாம்." என்றார்.
அவர்கள் இருவரும் பேசியபடி மெதுவாக வந்து கொண்டிருந்தனர்.
அப்போது குதிரைகள் இரண்டும் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தன. கீழே ஆற்றில் வெள்ளம் போய்க் கொண்டிருந்தது.
ராமன் சட்டென்று குதிரையை விட்டுக் கீழே இறங்கினான். பாலத்தின் ஓரத்திற்குக் குதிரையைக் கொண்டு போனான். அரசர் திகைத்தார். ராமன் குதிரையை ஆற்றுக்குள் தள்ளி விட்டு விட்டான்.
அரசர் பதறியபடி, "இராமா! என்ன இது? ஏன் இப்படிச் செய்தாய்? " என்று கேட்டார்.
"அரசே! என் குதிரை செய்தது போல உங்கள் குதிரை செய்ய முடியுமா? உங்கள் ஆயிரம் பொன் மதிப்புள்ள குதிரையால் செய்ய முடியாததை என் குதிரை செய்து விட்டது பாருங்கள்."
ஆயிரம் பொன் மதிப்புள்ள குதிரை மட்டுமல்ல, அரசரின் நண்பனாகவும் பழகிய அறிவுள்ள குதிரை அது. அதை இழக்க அரசர் விரும்பாமல், பந்தயத்தில் சொன்னபடி நூறு பொன் நாணயங்களைக் கொடுத்தார்.
ஆனாலும் அரசர், "இராமா! ஒரு உயிரைக் கொல்வது தவறில்லையா?" என்றார் வருத்தத்துடன்.
"அரசே!, நோய்வாய்ப்பட்டு வயோதிக நிலையில் இருக்கும் இந்தக் குதிரையை யாரும் இனி வாங்க மாட்டார்கள். இது இறந்ததால் எனக்கு ஐம்பது நாணயங்கள் நஷ்டம். இப்போது எனக்கு நூறு பொன் கிடைத்து விட்டது. அத்துடன் அந்தக் குதிரையைப் பராமரிக்கும் செலவும் இனி எனக்கில்லை. குதிரைக்கும் வயோதிகத் துன்பம் நீங்கி விட்டது. என் குதிரையின் உயிர் இழப்பு எனக்கு இரு மடங்கு லாபமாயிற்று."என்றான்.
அரசரும் அதை ஒப்புக் கொண்டு தெனாலிராமனின் சாமர்த்தியத்தைப் பாராட்டினார்.