கிராமத்தில் அனைத்து மக்களும் வருகின்ற திருவிழாவிற்காக வீட்டைச் சுத்தம் செய்து வெள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள். வேண்டாதவற்றை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
ஒரு வாடிக்கைப் பிச்சைக்காரன் அக்கிராமத்திற்கு ஆண்டுக்கு ஒருமுறை திருவிழா நேரத்திற்கு வந்து வரி வசூலிப்பதைப் போன்று அனத்து வீடுகளிலும் உரிமையோடு ஏதாவது பணமாகவோ, பொருளாகவோ பெற்றுச் செல்வதுண்டு.
80 வயதான அங்கம்மா கிழவி தனி நபர். உற்றார் உறவினர் எவரும் இல்லாதவர்.
அவர் வீட்டிற்குப் பிச்சைக்கு வந்த வாடிக்கைப் பிச்சைக்காரன் அங்கம்மா கிழவியைப் பார்த்து விட்டு தீயில் மிதித்தவன் போல அலறினான்.
"என்னடா சாம்பசிவம் பேயைப் பார்த்தவன் போல ஏன்டா கத்தறே?" கிழவி கேட்டாள்.
"போன வருடம் வெள்ளையடிக்கும் போது பாட்டி நீ ஏணியின் மீது ஏறி நின்று கொண்டு பரண் மீது இருந்து சாக்கு மூட்டையைத் தலையில் தாங்கி கீழே இறக்க முயற்சிக்கும் போது உன்னைப் பாம்பு கொத்தி விட்டதே? எந்த மருந்தைச் சாப்பிட்டே" என்றான் வாடிக்கைப் பிச்சைக்காரன்.
"பாம்பா! ஆ! போன வருடம் என் கையில் பட்ட காயம் பாம்பா கொத்தியது? நீ பார்த்தாயா?" என்றாள் கிழவி.
"ஆமாம்" என்றான் அவன்.
கிழவிக்கு வாயிலிருந்து நுரை தள்ளியது, பட்டென்று உயிர் போய் விட்டது. அக்கம் பக்கம் மக்கள் வந்தனர்.
ஒரு வருடம் கழிந்து விபரம் தெரிந்த பின் விஷம் வேலை செய்தது. அந்த விஷம் எங்கு சேமிக்கப்பட்டிருந்தது? கிழவி செத்தது விஷத்தினால் தான் என்று உள்ளூர் வைத்தியர் சோதித்துச் சொன்னார்.