முல்லா வசித்துவந்த ஊரில் ஒரு நாத்திகன் வசித்து வந்தான். அவன் சிறிதும் தெய்வ நம்பிக்கை இல்லாதவன். அவன் தெய்வ நம்பிக்கையுடைய முல்லா போன்றவர்களை எப்பொழுதும் கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருப்பான்.
ஒரு நாள் சந்தைத் திடலில் அந்த நாத்திகன் நின்று கொண்டிருந்தான்.
அவன் இருக்கும் இடத்துக்கருகே முல்லா நடந்து வந்து கொண்டிருந்தார். அங்கே கூடியிருந்த மக்களுக்கு மத்தியிலே முல்லாவை அவமானப்படுத்த வேண்டும் என்று அவன் நினைத்தான்.
முல்லா அருகே வந்ததும், "முல்லா அவர்களே உலகத்திலேயே நீங்கள் முற்றும் துறந்த துறவி என்று மக்கள் பேசிக் கொள்கிறார்களே? அப்படி எதைத் துறந்து நீங்கள் ஞானியானீர்கள்?" என்று நாத்திகன் கேலியாகக் கேட்டான்.
"எந்த முட்டாள் அந்த மாதிரி சொன்னான் என்னைவிட மிகவும் மகத்துவம் வாய்ந்த துறவி ஒருவர் இருக்கிறாரே!" என்றார் முல்லா.
நாத்திகனுக்கு மட்டுமல்ல அங்கு நடமாடிக் கொண்டிருந்த மக்களுக்கும் முல்லா சொன்ன தகவல் ஆச்சரியத்தைத் தந்தது.
”முல்லாவையும்விட மேலான துறவி இந்த ஊரில் யார் இருக்க முடியும்?” என்று அவர்களுக்கு விளங்கவில்லை. மக்கள் அந்த இடத்தில் கூடினர்.
நாத்திகனும் அந்தத் தகவலைக் கேட்டு வியப்படைந்து "முல்லா இந்த ஊரில் உள்ள அந்த மகத்துவம் வாயந்த துறவி யார்?" என்று கேட்டான்.
"அந்தத் துறவி நீங்கள்தான் " என்று முல்லா கூறியதைக் கேட்ட நாத்திகன் அதிர்ச்சியடைந்து விட்டான்.
"நானா அந்தத் துறவி? அது எப்படி?" என்று கேட்டான்.
" என்னைப் போன்ற சாதாரணத் துறவிகள் கேவலம் உலகத்தில் இருக்கும் பொருட்களைத்தான் துறப்பது வழக்கம் நீரோ கடவுளையேத் துறந்து விட்ட துறவியாயிற்றே... உம்மை மிஞ்சக் கூடிய துறவி உலகத்தில் ஏது?" என்று முல்லா பதிலளித்தார்.
அங்கே சூழ்ந்திருந்த மக்கள் நாத்திகனைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்க ஆரம்பித்தனர். நாத்திகன் அவமானத்துடன் அந்த இடத்தை விட்டு வேகமாக சென்று விட்டான்.