ஒரு துறவியிடம் இரண்டு பேர் வந்தனர். அவர்களிருவரும் தாங்கள் பாவம் செய்தவர்கள் என்றும் அதற்குப் பிராயசித்தம் செய்ய வேண்டும் என்றும் கேட்டனர்.
துறவி இருவரையும் செய்த குற்றங்களை விவரமாகக் கூறும்படி கேட்டார்.
முதலாமவன், “சுவாமி! என்னுடைய ஆத்திரபுத்தியினால் என் நண்பன் ஒருவன் இறக்கக் காரணமாகி விட்டேன். என் மனசாட்சி என்னைத் துன்புறுத்துகிறது. அந்தச் செயலை நினைத்து வேதனைப்படுகிறேன்” என்று சொல்லி அழுதான்.
இரண்டாமவன், “நான் பெரிய குற்றம் ஏதும் செய்யவில்லை. சிறிய சிறிய குற்றங்களாகப் பல செய்திருக்கிறேன். அவற்றை ஞாபகம் வைத்துக் கொள்ள இயலவில்லை.” என்றான்.
துறவி சிறிது நேரம் யோசனை செய்தார்.முதலாமவனைப் பார்த்து, “உன்னால் சுமக்கக் கூடிய அளவுக்கு ஒரு பெரிய கல்லாகப் பார்த்துத் தூக்கிக் கொண்டு வா” என்றார்.
இரண்டாமவனைப் பார்த்து, “ஒரு கோணிப்பை எடுத்துக் கொள். சிறிய சிறிய கற்களாகப் பொறுக்கி எடுத்துக் கோணிப் பையில் போட்டுக் கொண்டு வா” என்று கூறினார்.
இருவரும் துறவி கூறியபடியே செய்தனர்.
துறவி முதலாமவனைப் பார்த்து, “நீ எடுத்து வந்த கல்லை எடுத்த இடத்திலேயே போட்டுவிட்டு வா” என்றார்.
முதலாமவன் அப்படியே செய்தான்.
பிறகு இரண்டாமவனைப் பார்த்து, “நீ கொண்டு வந்த கற்களை எங்கெங்கு எடுத்தாயோ, அங்கேயே போட்டுவிட்டு வா” என்றார்.
இரண்டாமவன் விழித்தான். தான் பொறுக்கி எடுத்த இடங்களைக் கண்டுபிடிக்க இயலாது என்றும் கூறினான்.
“அன்பர்களே! பாவங்கள் இந்தக் கற்களைப் போன்ற்வையே. பெரும்பாவம் செய்தவன் மனம் பெரிய கல்லைப் போலவே அழுத்திக் கொண்டே இருக்கும். அவன் அதை உணர்ந்து, நினைத்து வருந்தும் போது, அந்தப் பாவத்தை மன்னித்து விட முடியும். எண்ணற்ற சிறிய சிறிய பாவங்களைச் செய்தவன், தான் என்ன பாவம் செய்தோம் என்பதையே எண்ணிப் பார்க்க முடியாமல், அவற்றை நினைத்து வருந்தவும் முடியாதவனாக இருப்பதால் அவன் எப்போதும் பாவியாக இருக்கிறான்.
“பாவம் சிறியதானாலும், பெரியதானாலும் அது பாவமே. அதை நினைத்து மனப்பூர்வமாக வருந்தி ஆண்டவனிடம் முறையிட்டால் ஆண்டவன் மன்னிப்பார்” என்றார் துறவி.