ஏன் இவ்வளவு காலதாமதம்?
ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் எமலோகத்தில் வரிசையில் நின்று கொண்டிருந்தான்.
சித்திரகுப்தன் அந்த மனிதன் செய்த பாவ, புண்ணியங்களைக் கணக்கெடுத்து விசாரணை செய்து கொண்டிருந்தார்.
“உலகில் நீ யார் மேலாவது அன்பு செலுத்தி இருக்கிறாயா?”
“இல்லை அய்யா”
“உனக்கு நண்பர்கள் யாராவது இருந்திருக்கிறார்களா?”
“அப்படி யாரும் இல்லை அய்யா!”
“குழந்தைகளின் முகங்களைக் கண்டு உனக்குள் அன்பு எனும் உணர்ச்சியைத் தோற்றுவித்ததா?”
“இல்லை பிரபு”
“துன்பப்படுபவர்களைக் கண்டால் உனக்கு கருணை தோன்றியதுண்டா...?”
“இல்லையே சுவாமி!”
“நீ இயற்கை அழகை ரசித்ததுண்டா...?”
“இல்லவே இல்லை சுவாமி”
“விலங்குகள், பறவைகள் மேல் உனக்கு அன்பு ஏற்பட்டதுண்டா...?”
“இல்லவே இல்லை அய்யா”
“அப்படியானால் நீ எப்போதோ இறந்து விட்டாய். இங்கு வருவதற்கு ஏன் உனக்கு இவ்வளவு கால தாமதம்? மனிதப் பண்புகள் இல்லாமல் நீ வாழ்ந்ததற்கு உனக்கு நரகம் இருகரம் கூட்டி வரவேற்பளிக்கும்” என்றார் சித்ரகுப்தன்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.