பெருமையோடு வாழ வேண்டும்
உலகப் புகழ்பெற்ற தத்துவமேதைகளில் கிரேக்க நாட்டைச் சேர்ந்த டயோஜினசும் ஒருவர். பேரறிஞராக விளங்கிய அவர் எளிமையாக வாழ்ந்து வந்தார்.
அரசவையின் பெருமைக்கோ பெருஞ்செல்வர்களின் பகட்டிற்கோ சிறிதும் மயங்காதவர் அவர்.
ஒருமுறை அவர் தன் வீட்டில் சமியல் செய்வதற்காகக் காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அறிஸ்டிபசு என்ற அறிஞர் அந்நாட்டின் அரசரின் மதிப்பைப் பெற்றவர். பகட்டாக உடை அணிந்திருந்தார்.
டயோஜினசு காய்கறிகளை நறுக்குவதைப் பார்த்த அவர், “நீங்கள் மட்டும் அரசரை ஒரே ஒரு முறை புகழ்ந்து பேசினால் போதும். எல்லோரும் உங்களை மதிப்பார்கள். செல்வம் உங்கள் வீட்டில் குவியும். இப்படிக் காய்கறிகளை நறுக்கித் துன்பப்பட வேண்டாம்.” என்றார்.
அவரைப் பார்த்த டயோஜினசு, “என்னைப் போல எளிய வாழ்வு வாழக் கற்றிருந்தாலே போது. நம்மை விட அறிவில் குறைந்தவர்களைப் புகழ்ந்து பேசாமல், பெருமையோடு வாழலாமே...” என்றார்.
அதன் பிறகு அறிஸ்டிபசு பதில் பேச முடியாமல் போனது.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.