முன்னொரு காலத்தில் ஒரு பூதமும் ஒரு மனிதனும் நண்பர்களாக இருந்தனர்.
பூதத்திற்கென்று விலை மதிக்கமுடியாத புதையல் ஒன்று சொந்தமாக இருந்தது.
ஒரு நாள் பூதத்திற்கு அருகிலுள்ள ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது.
“புதையலை நண்பனிடம் ஒப்படைத்துவிட்டுச் சொல்லலாம். ஆனால், அவனை நம்பலாமா? கூடாதா? என்ற தயக்கம் அதற்கு ஏற்பட்டது.
நண்பனிடம் வந்த அது, “விலை உயர்ந்த புதையலை உன்னிடம் ஒப்படைத்து விட்டு அருகிலுள்ள ஊருக்குப் போய்விட்டு இரண்டு நாள் கழித்துத் திரும்பலாமென்று இருக்கிறேன். இந்தப் புதையல் பெட்டிக்குள் ஒரு முட்டை ஒன்று உள்ளது. இந்த முட்டையை உடைத்தால் நான் இறந்து விடுவேன். புதையலை விட இந்த முட்டையை அதிகக் கவனமாகப் பார்த்துக் கொள்” என்று புதையல் பெட்டியைக் கொடுத்துவிட்டுச் சென்றது.
அந்தப் புதையலைப் பார்த்தான் அவன். அவனுக்கு அந்தப் புதையலை அப்படியே தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டாகியது. அவன் பேராசையுடன் அந்தப் பெட்டியைப் பார்த்தான்
அந்தப் புதையல் முழுவதையும் தான் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றால் பூதத்தைக் கொல்ல வேண்டும். அதற்கு அந்த முட்டையை எடுத்து உடைத்து விட வேண்டும் என்று முடிவெடுத்தான்.
அந்தப் பெட்டியிலிருந்த முட்டையை எடுத்தான். அதைத் தரையில் போட்டு உடைத்தான்.
”அப்பாடா! பூதம் செத்தது. இந்தப் புதையல் முழுவதும் எனக்குத்தான் சொந்தம்” என்று கத்தினான்.
அவன் தோளில் யாரோ கைவைத்தது போல் இருந்தது. திரும்பிப் பார்த்தான்.
அங்கு அந்த பூதம் நின்று கொண்டிருந்தது.
பூதம் செய்த சூழ்ச்சி தெரியாமல் ஏமாந்து விட்டேனே... என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே, அந்த பூதம் அவனை அப்படியே தூக்கி விழுங்கியது.