ராமானுஜர் திவ்யதேச பயணத்தின்போது திருகுறுகூர் ஆதிநாதரையும், நம்மாழ்வாரையும் தரிசிக்க வந்தபோது, தாமிரபரணியில் குளித்துவிட்டு வரும் போது ஒருவன் உரத்தக் குரலில் சடகோபா, காரிமாறா, வகுளாபரணா, குருகூர் நம்பி, என்று வரிசையாய் தனது நான்கு மகன்களின் பெயர்களையும் உரக்கக் கூவி அழைத்தான்.
ராமானுஜருக்கு இந்தப் பெயர்களைக் கேட்டதும் காதுகளில் தேன் பாய்ந்தது போல் இருந்தது.
இராமானுஜர், அவனைப் பக்கத்தில் அழைத்தார்.
எப்படியப்பா இப்படிப்பட்ட பெயர்களை வைக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றியது என்று கேட்டார் ராமானுஜர்.
அதற்கு அவன் சொன்ன பதில்தான் ராமானுஜரின் உளவியல் உத்திக்கான வெற்றியாகக் கருதப்படுகிறது.
பொதுவாக ராமானுஜர் பெயர் சூட்டுதலில் திறமையானவர். நாம் அவர் சூட்டிய சில பெயர்களையே பதிவாகப் பார்க்கிறோம். ஆனால் வைணவத்தைப் பல்வேறு தரப்பினருக்கும் சமூகத்தின் பல்வேறு அடுக்கு நிலைகளில் இருப்பவர்களுக்கும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டுமென்றால் வைணவப் பெயர்களை சூட்டுவது, சம்பிரதாயப் பெயர்களை சூட்டுவது என்று முடிவெடுத்து அதைட் செயல்படுத்தி வந்தார்.
அப்படித்தான் கூரத்தாழ்வானின் மகனுக்கு பராசரர் என்று பெயர் வைத்தார். பராசரர் என்றால் விசிஷ்டாத்வைதத்தின் முன்னோடி என்பதை அறிந்தே அப்பெயரை அப்பையனுக்கு வைத்தார் ராமானுஜர். இதுபோல தன்னால் வாதப் போரில் வெல்லப்பட்ட பலருக்கும் வைணவப் பெயர்களை சூட்டியதன் மூலம், அப்பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் அந்த வரலாறு உச்சரிக்கப்பட்டே ஆக வேண்டும் என்ற சூழலை உருவாக்குகிறார் ராமானுஜர்.
அத்வைதியாகவே இருந்து அத்வைதியாகவே தனக்கு வேதம் போதித்த யாதவப் பிரகாசருக்கு கோவிந்த ஜீயர் என்று பெயர் சூட்டினார் ராமானுஜர். தன்னோடு வாதப் போர் புரிய வந்த யக்ஞ மூர்த்திக்கு அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்ற காஞ்சி பெருமாளின் பெயரைச் சூட்டினார் ராமானுஜர்.
இவ்வளவு ஏன் மேல்கோட்டையில் ஹொய்சாள சமண மன்னரான பிட்டிதேவனுக்கு விஷ்ணுவர்த்தனன் என்று வைணவப் பெயர் சூட்டி அவனை வைணவ மன்னன் ஆக்கினார். விஷ்ணு வர்த்தனன் என்று சொல்லும்போதே அவன் எப்படி இந்த பெயர் பெற்றான், இதற்கு முன்னர் என்னவாக இருந்தான் என்ற கேள்விகள் எழுந்து வரலாற்றைச் சொல்கின்றன.
அந்த வகையில், தாமிரபரணி ஆற்றங்கரையில் பார்த்த அவனிடம் ராமானுஜர், ‘உம் மகன்களுக்கு இந்தப் பெயர்களை எவ்வாறு சூட்டினீர்' என்று கேட்டார்.
அதற்கு அவன், ‘’ஆச்சார்யரே... நீர்தான் சமுதாய பேதம் இல்லாமல் அனைவருக்கும் வைணவத் திருநாமங்களை சூட்டிக் கொண்டிருக்கிறீர்கள். இது அறிந்துதான் நானும் எனது மகன்களுக்கு நம்மாழ்வாரின் நான்கு திருநாமங்களையும் சூட்டுவித்தேன். நீங்கள் எல்லாம் மந்திரங்கள், பாசுரங்கள் பாராயணம் செய்வீர்கள். ஆனால் என்னைப் போன்றவர்கள் எல்லாம் அதற்கு எங்கே போவது? அதனால்தான் தினம் தோறும் நூறு முறையாவது என் பிள்ளைகள் பெயரைச் சொல்லி அழைப்பேன். அப்படியென்றால் நம்மாழ்வாரின் திருநாமத்தை நூறு முறையாவது சொல்லி அதன் மூலம் புண்ணியம் தேடிக் கொள்ளலாம் என்றுதான் இப்பெயர்களை சூட்டினேன்” என்றான்.
அதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த ராமானுஜர், தனது பெயர் சூட்டும் உத்தி நடைமுறையில் நல்ல பலன் அளித்திருப்பதை நினைத்துப் பெருமிதப்பட்டார்.
அப்போதுதான் அவனிடம், ‘தினம் தினம் உன் பிள்ளைகளை அழைக்கும் போது நீ நம்மாழ்வாரை அழைக்கின்றாய். ஆனால், இப்படி வைணவப் பெயர்களை சூட்டி மகிழ்வதற்காகவாவது பிள்ளைகள் பெற்றிருக்கலாம் என்று ஏங்க வைத்துவிட்டாய்’ என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தார்.
அடுத்து அந்த நான்கு பேரும் ராமானுஜரின் திருவடிகளை சேவிக்க வந்தனர். அப்போது அவர்களைத் தடுத்த ராமானுஜர், ‘நில்லுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் எம்முடைய தலையாழ்வார் நம்மாழ்வாரின் நாமத்தைத் தாங்கியிருக்கிறீர்கள். தாங்கள் என் திருவடிகளில் வீழ்வதை அனுமதிக்க மாட்டேன்’ என்று சொல்லி அவர்களை வாழ்த்தினார் ராமானுஜர்.