மகாபாரத யுத்தம் முடிந்து, தர்மபுத்திரர் சக்கரவர்த்தியாக முடிசூட்டப் பெற்றார்.
பீஷ்மர், சூரியன் வடதிசையை அடையும் 'உத்தராயண புண்ணிய காலத்தை எதிர்பார்த்துத் தம் உயிரை விடுவதற்காக யுத்தப் பூமியில் அம்புப் படுக்கையின் மீது படுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு நாள் தர்மபுத்திரர் கண்ணபிரானிடம் அனுமதி பெற்று, தம்பிமார்களோடும் திரௌபதியோடும் பீஷ்மரைக் காணக் குருக்ஷேத்திரத்திற்குப் புறப்பட்டார்.
பாண்டவர்களும் திரௌபதியும் சிறந்த தர்மாத்மாவான பீஷ்மரைக் கண்டு வணங்கினார்கள். யுதிஷ்டிரர் பீஷ்மரிடம் வர்ணம், ஆசிரமம், மக்களின் கடமை, அரசரின் கடமை போன்ற பல சிறந்த விஷயங்களைப் பற்றிய கேள்விகளைக் கேட்கக் கேட்க, பீஷ்மரும் எல்லாவற்றிற்கும் தக்க பதில்களைச் சொல்லிக் கொண்டு வந்தார்.
இவ்விதம் பீஷ்மர் யுதிஷ்டிரருக்குத் தர்மோபதேசம் செய்து கொண்டிருந்தபோது திடீரென்று திரௌபதி 'களுக்' என்று சிரித்து விட்டாள்.
அந்தச் சத்தத்தைக் கேட்ட பீஷ்மர் தர்மோபதேசத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு, திரௌபதியை நோக்கி, ' மகளே! ஏனம்மா சிரித்தாய்?" என்று கேட்டார்.
திரௌபதிக்கு மிகவும் வெட்கமாகப் போய்விட்டது. எனவே தலையைத் தாழ்த்திக் கொண்டு அவள், “என்னை மன்னித்து விடுங்கள், பிதாமகரே! ஏதோ அறியாமல் நகைத்துவிட்டேன். என்மீது தவறுதான். என்னை மன்னியுங்கள்" என்றாள்.
பிதாமகர் இந்தப் பதிலால் திருப்தி அடையவில்லை. அவர் தொடர்ந்தார்: “'குழந்தாய்! எந்தக் குலப் பெண்மணியும் பெரியவர்கள் கூடிய இடத்தில் சிரிக்கமாட்டார்கள். உன்னைப் போன்ற சிறந்த நடத்தையுடைய உத்தமப் பெண்கள் காரணமில்லாமல் பலர் முன்னிலையில் சிரிக்க மாட்டார்கள். நீயோ சிறந்த குணவதி; கற்பிற் சிறந்தவள். அப்படிப்பட்ட உனக்குக் காரணமின்றிச் சிரிப்பு வந்திருக்க முடியாது. எனவே வெட்கப்படாமல் நீ சிரித்ததற்குக் காரணத்தைச் சொல்” என்றார்.
அதைக் கேட்ட திரௌபதிக்குக் கண்ணீர் திரையிட்டது தன் இரு கைகளையும் கூப்பி, பீஷமரை வணங்கியபடி அவள், "பெரியவரே! அது மிகவும் சிறிய விஷயம். இருப்பினும் நீங்கள் கேட்டுவிட்டீர்கள். தங்கள் கட்டளையை நான் மீறுவதற்கில்லை. இதோ கூறிவிடுகிறேன். நான் சொல்வதைக் கேட்டுத் தயைகூர்ந்து என்மீது கோபப்படாதீர்கள்.
"சுவாமி! தாங்கள் இப்போது இவ்வளவு தர்மோபதேசம் செய்து கொண்டிருந்தீர்கள். அப்போது திடீரென்று என் மனதில் ஒன்று தோன்றியது. அதாவது, இன்று தர்மத்திற்கு இவ்வளவு சிறந்த விளக்கத்தைக் கொடுக்கும் இதே பிதாமகர், கௌரவர் சபையில் துச்சாதனன் என்னை மானபங்கப்படுத்த முயன்று கொண்டிருந்த போது வாய்மூடிப் பேசாமல் மௌனமாகத்தானே பார்த்துக் கொண்டிருந்தார்? அந்தச் சமயத்தில், இப்போது இவ்வளவு தர்மம் பேசும் பீஷ்மாசாரியார் இந்த ஞானத்தை எல்லாம் எங்கே விட்டு வைத்திருந்தார்? அல்லது ஒருவேளை இவர் இந்தத் தர்ம விஷயங்களைப் பிறகு கற்றிருக்கலாம் என்று தீர்மானித்தேன். இதை நினைத்தவுடனே எனக்குச் சிரிப்பு வந்து விட்டது. என்னை மன்னித்துவிடுங்கள்" என்றாள்.
பிதாமகர் அமைதியாக அவளுக்குப் பதில் கூறினார்: “குழந்தாய், உன் கேள்வி நியாயமானதுதான். இதில் உன்னை நான் மன்னிப்பதற்கு என்னம்மா இருக்கிறது? துரியோதனின் சபையில் நான் இருந்த அந்தச் சமயத்திலேயே அற விஷயங்களைப் பற்றிய அறிவு எனக்கு இருக்கத்தான் செய்தது. ஆனால் துஷ்டனான துரியோதனனின் உணவை நான் அப்போது சாப்பிட்டு வந்தேன். அது காரணமாக என் அறிவு மழுங்கி நன்மை தீமைகளைப் பற்றி ஆலோசிக்க முடியாமல் போய்விட்டது. தீயவர்கள் போடும் உணவைச் சாப்பிட்டால் சாப்பிடுபவனின் மனமும் உடலும் கெட்டுப் போய்விடும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனால் இப்போது அர்ஜுனன் போரில் என்மீது எய்திய அம்புகளால் என் உடலிலிருந்த எல்லா இரத்தமும் வெளியேறிவிட்டது. கெட்ட உணவைச் சாப்பிட்டதனால் உண்டான இரத்தம் ஒரு சொட்டுவிடாமல் உடலை விட்டு வெளியேறியதனால் என் புத்தி தெளிந்துவிட்டது. அதனால் தற்போது இந்த அளவுக்குத் தர்மத்தின் தத்துவங்களைச் சரியாக எடுத்துச் சொல்ல முடிந்தது'' என்றார்.