ஊருக்கே பெரிய மாளிகை. அதில் எழிலோவியம் வாசவதத்தை வாழ்ந்து வந்தாள். அவளுடைய அழகுக்கு வசப்பட்ட உள்ளங்கள் ஏராளம்!
இளவேனிற் காலத்தின் காலை நேரம். ஒரு பௌத்தத் துறவி, வாசவதத்தையின் மாளிகையின் வாயிலில் பிச்சையின் பொருட்டு வந்து நின்றார். திடீரென்று துறவியின் மீது வாசவதத்தையின் பார்வை சென்றது. ஒருமுறை பார்த்தாள். மறுமுறை பார்த்தாள். பார்த்துக் கொண்டே இருந்தாள்.
வந்த துறவி உபகுப்தர் ஓர் ஆண்டிதான். ஆனால், மறுவுலக வாழ்க்கைக்குத் தேவையான அருள் விஷயத்தில் நிகரற்றவர். அவருக்கு என்று சொந்த ஊர், வீடு, வாசல் எதுவுமே கிடையாதுதான். உலகிலேயே பெரிய பெரிய ராஜ்யங்களைவிடவும், பெரியதாகவும் அளவிட இயலாததாகவும் இருப்பது மனம்தான். அப்படிப்பட்ட மனதின் மீதே முழு அளவில் வெற்றி கண்டவர் உபகுப்தர். புலன்கள் அனைத்துமே அவருக்கு அடிமை.
அத்தகைய துவராடை அணிந்த துறவியின் முன், பலரைத் தோற்கடித்த பேரழகி வாசவதத்தை தோற்றுப்போனாள். உபகுப்தர் நீட்டிய பிச்சைப் பாத்திரத்தில் தன் இதயத்தையே அர்ப்பணிக்க முன்வந்தாள்; கெஞ்சினாள்; பிரார்த்தித்தாள்.
சாந்தமூர்த்தியாகிய பிக்ஷு, ''எனக்கு இப்போது நேரமில்லை'' என்றார்.
''பின் எப்போது வருவீர்கள்?'' என்று ஆவல் ததும்பக் கேட்டாள் வாசவதத்தை.
பிட்சுவோ சிறிதும் கவலையின்றி இயல்பான குரலில், "சில நாட்கள் செல்லட்டும். பிறகு வருகிறேன்'' என்று கூறிவிட்டு, ஒரு வினாடியும் தாமதிக்காமல் பௌத்த விஹாரத்தை நோக்கி விரைந்தார்.
துறவியின் பதிலையும் செயலையும் வாசவதத்தை எதிர்பார்க்கவில்லை. அவள் அடிபட்ட பெண்புலியாகச் சீறினாள்: ''கேவலம் ஒரு பிட்சுவின் எழிலை அலட்சியப்படுத்துவதா! பார்த்துவிடுகிறேன்!''
உபகுப்தர் சொன்ன அந்த நாள் எப்போது வரும் என்று காத்திருந்தாள்.
அற்ப ஆயுளை உடைய சந்தியா காலம் விரைந்தது. சரத்காலச் சந்திரன் மிகுந்த சோபையுடன் விண்ணில் தோன்றி நிலவைப் பொழியத் தொடங்கினான். அடர்ந்த காட்டிலுள்ள மரங்களின் கால்களைக் கழுவியவண்ணம் கங்கை ஓடிக் கொண்டிருந்தது.
அந்தக் காட்டின் வழியாக உபகுப்தர், தமது அன்றாடக் கடமைகளை முடித்துவிட்டு மடத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் ஒரு சிங்கம் அவர் மீது பாயத் தயாராயிற்று. அதற்குத் தெரியுமா புத்தரின் கொள்கைகளும் உபதேசங்களும்? எனவே அது உபகுப்தரை நோக்கிப் பாய்ந்தது. உபகுப்தர் தம் தலையைத் தாழ்த்திக்கொண்டு தயாராக இருந்தார்.
அருகில் ஒரு சிறிதும் ஒளி புகமுடியாத அடர்ந்த புதரிலே வேடன் ஒருவன் ஒளிந்து கொண்டு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான். சிங்கம் பாயத் துவங்கியவுடன், எங்கிருந்தோ வந்த அம்பு சிங்கத்தின் மீது பாய்ந்து அதைக் கீழே வீழ்த்தியது! மிகவும் பெருமையுடன் வேடன் வெளியே வந்தான்.
உபகுப்தர் வேடனை நோக்கி, "அப்பா! நிரபராதியான சிங்கம் உனக்கு என்ன தீங்கு செய்தது? அது என்னைத்தானே கொல்ல வந்தது?'' என்று அமைதியாகக் கேட்டார். வேடன் துணுக்குற்றான். உபகுப்தரின் கருணை விழிகள் அவனுக்கு எத்தனை எத்தனையோ விஷயங்களை எடுத்துக் கூறின. வேடன், தன்னுடைய வில்லையும் அம்பறாத்துணியையும் அம்புகளையும் கங்கையிலே வீசிவிட்டு, 'இதுவே என்னால் செய்யப்பட்ட கடைசிக் கொலை' என்று சொல்லி அன்பின் வழிநாடிப் புறப்பட்டான்.
உபகுப்தர் மிகவும் சிரமத்துடன் சிங்கத்தைக் கங்கைக்கு அருகில் இழுத்து வந்தார். அம்பைப் பிடுங்கிக் காயங்களைக் கழுவினார். சிங்கம் பிழைக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால், உபகுப்தர் சிங்கத்தைக் காப்பாற்றும் முயற்சியில் மனம் தோய்ந்து ஈடுபட்டிருந்தார்.
அதேசமயம் நிலவின் ஒளியிலே கங்கையில் ஒரு படகு மிதந்து வந்தது. அதிலிருந்து வந்த இனிய கீதம் மிகவும் ரம்மியமாக இருந்தது. திடீரென்று பாட்டு நின்றது. காரணம், படகில் வீற்றிருந்த வாசவதத்தை உபகுப்தரின் செய்கையைக் கண்டதுதான். உடனே, ''ஏ பிட்சுவே! என்ன காரியம் செய்கிறாய்? அந்தச் சிங்கம் உன்னையே கொன்றுவிடுமே!'' என்று சொல்லி அவள் கூச்சலிட்டாள்.
உடனே உபகுப்தர் அவளை நோக்கி, “பெண்ணே , நீ தவறாகச் சொல்கிறாய். வெளியே அழகிய உடல் கொண்டு பிறரைக் கெடுக்கும் உள்ளங்கொண்ட நயவஞ்சகர்களை விட இது கொடியது அல்லவே!'' என்றார்.
வாசவதத்தைக்கு எதுவுமே விளங்கவில்லை. அவரைக் கண்டதும் ஆசைதான் அதிகமாகியது. ''பிட்சு, உம்மையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேனே! என்னை மறந்து விட்டீரா!'' என்று மயக்கத்துடன் கேட்டாள். உபகுப்தர், ''மறக்கவில்லை. அவசியம் சில நாட்கள் சென்ற பிறகு வருகிறேன்'' என்றார். அவளோ அன்றே, அந்த வினாடியே வர வேண்டும் என்று அடம்பிடிக்கத் தொடங்கினாள்,
உபகுப்தர் அவளைத் தேற்றும் வகையில், ''இந்தப் பிறவியிலேயே வருகிறேன்'' என்று சொன்னார். கடைசியில், ''இந்த வருடம் முடிவதற்குள்ளாகவே வந்துவிட வேண்டும்'' என்று. வேண்டிக்கொண்டு வாசவதத்தை தன் வழியே சென்றாள்.
உபகுப்தர் மீண்டும் சிங்கத்திற்கு மருத்துவம் செய்வதில் முனைந்தார்.
வாசவதத்தை நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள். நாட்கள் நகர்ந்தன. பருவங்கள் மாறின. ஆனால் உபகுப்தர் மட்டும் வரவேயில்லை. வருடம் முடிவதற்கு இன்னும் பதினைந்து நாட்களே மீதமிருந்தன.
அன்றைய தினம் வாசவதத்தையின் வீடு மிகவும் களை கட்டியிருந்தது. அன்று அவளுடைய வீட்டிலே ஒரு லட்சாதிபதிக்குத் தனி விருந்து. நடு இரவு நேரம். வாசவதத்தை, வேலைக்காரர்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டாள். கட்டிலில் மது மயக்கத்தில் மயங்கி அசைவற்றுக் கிடந்தான் லட்சாதிபதி. சற்றும் தயங்காமல் வாசவதத்தை தன்னுடைய கூரிய கத்தியால் இலகுவாக அவனை ஒரே குத்தில் கொன்று விட்டாள்! ஆம் கொலை தான். அவள் ஒரு சௌந்தரிய கொலைக்காரி! அந்த லட்சாதிபதியோ, 'அடி, மாயப் பிசாசே!'' என்று அலறியபடி தன் உலக வாழ்க்கையை அந்த வினாடியே முடித்துக் கொண்டான்.
அதேசமயம் வாயிலில் 'வாசவதத்தா!', என்றழைக்கும் குரல் கேட்டது. அவள் ஜன்னல் கதவைத் திறந்து பார்த்தாள். அங்கே உபகுப்தர் நிற்பதைக் கண்டு துணுக்குற்றாள். ''சுவாமி! வந்துவிட்டீர்களா!'' என்றாள். "இல்லை, விரைவில் வருவேன்'' என்றார் உபகுப்தர். ''பிறகு ஏன் இந்த அகால வேளையில் வந்தீர்கள்'' என்றாள் வாசவதத்தை. ''ஒன்றுமில்லை பெண்ணே! நான் புத்த விஹாரத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். உன் வீட்டைப் பார்த்ததும் நீ விழித்துக் கொண்டிருக்கிறாயா? அல்லது தூங்கிக் கொண்டிருக்கிறாயா? என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அழைத்தேன்'' என்றார்.
உடனே வாசவதத்தை, தனக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நினைவிருக்கிறதா என்று ஆவலோடு கேட்டாள். உபகுப்தர், ''புத்தரின் சீடர்கள் பொய் சொல்வதில்லை. இன்னும் பதினைந்து நாட்கள் மீதியிருக்கின்றனவே, வந்து விடுவேன்'' என்று சொல்லிவிட்டு, உடனே அங்கிருந்து சென்று விட்டார்.
வாசவதத்தை ஒளிந்து கொண்டாள்.
அவள் பணத்திற்காக லட்சாதிபதியைக் கொலை செய்தாள். குட்டு வெளிப்பட்டது. வாசவதத்தை குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்பட்டாள். அவளுக்கு உதவியாக அவளது செல்வமோ, அழகோ, வழக்கமாக வரும் காதலர்களோ வரவில்லை.
''அவளுக்குத் தூக்குத் தண்டனையே தரப்பட வேண்டும். ஆனால், அதுவே அவளுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகிவிடுமே! ஆகவே, அந்த வாய்ப்பைத் தந்து அவளைத் தப்பவிட்டுவிடக் கூடாது. அவளுடைய அழகு அழிக்கப்பட வேண்டும்'' என்று விசாரணையின்போது தீர்ப்பு வழங்கப்பட்டது.
வாசவதத்தை, ''ஒரே ஒரு வாரம் பொறுத்துக் கொள்ளுங்கள். ஒரு வாரத்திற்குப் பிறகு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்'' என்று தன்னால் இயன்ற மட்டும் மன்றாடி வேண்டினாள். தன் ஆருயிர் உபகுப்தரைப் பார்த்த பிறகு, எத்தகைய தண்டனையை வேண்டுமானாலும் அவள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தாள். ஆனால், அவளுடைய வேண்டுகோளுக்குச் செவிசாய்க்க ஒரே ஒருவர் கூட முன்வரவில்லை.
பிறரை வசீகரித்த வாசவதத்தையின் விழிகள் பிடுங்கப்பட்டன. காதுகளையும் மூக்கையும் அறுத்தெறிந்தார்கள். அவளுடைய இரண்டு கைகளும் கூட வெட்டப்பட்டு விட்டன. அவளுடைய செல்வம் முழுவதும் அபகரிக்கப்பட்டது. அந்த அவல நிலையில் வாசவதத்தை ஓர் அனாதையாக நடுத்தெருவிலே வீசப்பட்டாள். அதோடு மட்டும் இல்லாமல், வருவோர் போவோரிடமும் அவளுடைய பயங்கரக் கதையை வேறு விளக்கமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
இவ்வளவு காலமும், அவளையும் அவளது செல்வத்தையும் சுற்றிச் சுற்றி வந்தவர்கள் அத்தனை பேருமே, தங்களை ‘யோக்கியர்களாக' பாவித்துக்கொண்டு, இப்போது வெறுப்புடன் முகத்தைச் சுளித்துக் கொண்டு அவள் இருக்கும் இடத்தைவிட்டே விலகிச் சென்றார்கள்.
இத்தகைய அவல வேளையில் உபகுப்தர் அவளருகே வந்தார். அவளுடைய தலையில் தன் கையை வைத்தார்.
"யார்?''
''நான்தான் உபகுப்தன்.''
வெகுண்டாள் வாசவதத்தை. ''ஏன் வந்தீர்? நீங்கள் ஒருவர் மட்டும்தான் என்னைப் பரிகசிக்காத ஒரே ஆள் என்று நினைத்தேன், நீங்களும் இப்போது வந்து விட்டீரா?'' என்று எரிந்து விழுந்தாள். ''போ! திரும்பிப் போ! உன்னை யார் இங்கே அழைத்தது!'' என்று பொரிந்து கொட்டிக் கூச்சலிட்டாள்.
உபகுப்தர் தமக்கே உரிய இயல்பான குரலில் அமைதியாகப் பேசினார். ''பெண்ணே! என்னை ஏன் விரட்டுகிறாய்? நீ அழைத்தபடியே வந்திருக்கிறேன். இன்னும் இரண்டு நாட்கள் மீதம் இருக்கின்றன. இதுதான் சரியான சமயம்.''
வாசவதத்தை, 'பிட்சுவே! நான் எல்லா நலன்களும் பெற்று எழிலரசியாய் விளங்கும் போது உம்மை அழைத்தேனே தவிர, இப்போது அழைக்கவில்லையே!'' என்றாள்.
ஆனால் தயாளமூர்த்தி உபகுப்தர், கருணை ததும்ப, இந்த உலக வாழ்க்கையின் சாரமற்றத் தன்மையை விளக்கிப் பரம்பொருளின் மீது மனதைச் செலுத்துவது ஒன்றே ஒன்று மட்டும்தான் மனித வாழ்க்கையின் குறிக்கோள் என்பதை விளக்கினார்.
வாசவதத்தையோ, ''இந்த அந்திமக் காலத்தில், என்னால் எதுவுமே செய்ய இயலாத சமயத்தில் வந்து அறிவுரை தருகிறீர்களே! அப்போதே வந்திருந்தால் நான் திருந்தி இருப்பேன் அல்லவா?'' என்று நெஞ்சு வெடிக்கக் கூறினாள்.
உபகுப்தர், ''அம்மா! வாழ்க்கையைப் பற்றிய அப்படிப்பட்ட பெரிய உண்மைகளைப் புரிந்து கொள்ளும் நேரம் இப்போதுதான் உனக்கு வந்திருக்கிறது. உன்னை போதிசத்துலரிடம் அழைத்துப் போகிறேன்'' என்று கனிவுடன் சொன்னார். அவளை போதிசத்துவரிடம் அழைத்தும் சென்றார்.
புத்தபிரானின் கருணையால், வாசவதத்தை பாவ புண்ணியங்களில் இருந்தும் விடுபடும் பிராயச்சித்தம் என்னும் புனித ஆற்றில் மூழ்கி எழுந்தாள். துறவறம் மேற்கொண்டாள். எஞ்சிய வாழ்க்கை முழுவதையும் பரம்பொருளின் திருவடியைத் தொழுதபடியே மெய்யன்பைப் பெற்றாள்.