அயோத்தி மாநகரில் துறவி ஒருவர் இருந்தார். அவர் ஒரு சமயம் சரயு நதியைக் கடந்து வேறு ஓர் இடத்துக்குப் போக வேண்டியிருந்தது. அது மழைக் காலம். வானத்தில் கரிய மேகங்கள் சூழ்ந்து மூட்டம் கண்டிருந்தது. மழை எந்தச் சமயத்திலும் வந்துவிடும் போல இருந்தது.
ஆகவே துறவி வெகு வேகமாக சரயு நதிக்கரையை நோக்கி நடந்தார். நதியில், அண்மையில் பெய்த மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு மிகுதியாக இருந்தது.
துறவி ஆற்றங்கரைக்கு வந்த சமயம், அங்கே ஒரே ஒரு படகு இருந்ததைக் கண்டார். அதுவும் புறப்படும் தறுவாயில் இருந்தது. படகில், பண பலமும் ஆணவமும் நிறைந்த மக்கள் கூட்டமாக உட்கார்ந்திருந்தார்கள்.
அவர்கள் துறவியைக் கண்டதும், அவரைத் தங்களுடன் படகில் பிரயாணம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்று நினைத்தனர். அதோடு, துறவியைப் பற்றியும் அவரது உடையைப் பற்றியும் கேலியாகப் பேசிச் சிரித்தனர்,
துறவியை நோக்கிப் படகில் இருந்தவர்கள் அனைவரும், 'இங்கே படகில் இடமே இல்லை. நாங்களே நெருக்கமாகத்தான் உட்கார்ந்திருக்கிறோம். நீ வேண்டுமானால் காத்திருந்து அடுத்த படகில் வா'' என்று ஒன்றாகச் சேர்ந்து கூவினர். அவர்களுக்கு, துறவியைத் தங்களுடன் அழைத்துச் செல்லும் விருப்பம் இல்லை. ஆனால், அதைத் துறவியிடம் நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாகக் கூறினர்.
அப்போது மாலை சாய்ந்து இருளும் பரவ ஆரம்பித்துவிட்டது. இந்தப் படகைத் தவற விட்டுவிட்டால், அடுத்த படகு கிடைக்குமா என்பதே சந்தேகம். ஏனென்றால், காற்றும் வெள்ளமும் பலமாக இருக்கும் அந்த இரவு வேளையில், படகுக்காரர்கள் யாரும் படகை ஓட்ட முன்வர மாட்டார்கள்.
இரவில் வேறு படகு கிடைப்பதற்கு வழியில்லை என்பதைத் துறவி உணர்ந்தார். ஆதலால் அவர், அதே படகில் ஏறி ஆற்றைக் கடக்க நினைத்தார்.
அவர் படகுக்காரனிடம், தன்னையும் படகில் ஏற்றிச் செல்லும்படி கேட்டுக் கொண்டார். படகுக்காரனுக்கும் நிலைமை புரிந்தது.
அவன் சில வினாடிகள் யோசித்துவிட்டு, "நீங்கள் படகில் ஏறிக்கொள்ளுங்கள்'' என்று சொன்னான். பிறகு அவன், படகின் ஒரு மூலையில் இடத்தை ஒதுக்கித் துறவி உட்கார வழி செய்தான்.
படகில் இருந்தவர்கள், துறவி படகில் ஏறாமல் இருப்பதற்காக ஏதேதோ காரணங்களைச் சொல்லித் தடுத்தும் பார்த்தனர். ஆனால், தெய்வச் செயலாக அவர்களுடைய முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. துறவி மக்களுடைய ஆட்சேபணைகளைப் பொருட்படுத்தாதவராகப் படகில் சென்று உட்கார்ந்தார். அவருடைய உதடுகள் பகவானின் திருநாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தன.
துறவிக்குப் படகிலே இடம் கொடுக்கக்கூடாது என்று நினைத்த மக்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். அவர் படகில் உட்கார்ந்ததை வெறுக்கும் வகையில் அவர்களுடைய முகங்கள் மிகவும் 'அழகாக' இருந்தன. தாங்கள் இவ்வளவு சொல்லியும் 'இந்த ஆண்டிப் பரதேசி படகில் ஏறிவிட்டானே!' என்று அவர்களுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அதோடு, ''சரி, சரி. நாங்கள் இவ்வளவு சொல்லியும் கேட்காமல் நீ படகிலே இடம் பிடித்துக் கொண்டாயா? போகட்டும். உனக்குப் புத்தி வரும் வகையில் சரியான பாடம் கற்பிக்கிறோம்'' என்று மனதிற்குள்ளாகவே நினைத்துக் கொண்டனர்.
துறவி படகின் ஒரு மூலையில் அமைதியாக உட்கார்ந்திருந்தார். அப்போதும் அவருக்குத் துன்பம் தரும் வகையில் படகில் இருந்தவர்கள் ஏதேதோ சொல்லவும் செய்யவும் செய்தனர்.
துறவிக்கு அந்த மக்கள் மீது எந்தவித வெறுப்பும் இல்லை. மற்றவர்களைக் கோபிப்பது, வெறுப்பது என்பதெல்லாம் படகில் இருந்த துறவிக்குத் தெரியவே தெரியாத விஷயங்கள். மனத்தால் கூட மற்றவர்களுக்குத் தீமை நினைப்பது என்பது அவருடைய அகராதியிலேயே கிடையாது. அவர், மக்கள் தம்மை வாயில் வந்தபடியெல்லாம் தூற்றியதை உணர்ந்தவராகவே தெரியவில்லை.
படகில் உட்கார்ந்த துறவி, தம் இரத்தத்திலேயே ஊறிய தமது இயல்பின்படி கண்களை மூடி ஆண்டவனின் திருநாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்குள்ளாகவே அவர், புறவுலக நினைவை இழந்து ஆழ்ந்த தியானத்தில் ஆமிழ்ந்து போனார். ஆகவே, மற்றவர்கள் தன்னைப் பற்றிப் பேசும் கேலிப் பேச்சுகளைக் கவனிக்க இயலாத நிலையில் இருந்தார்.
நடு ஆற்றிலே படகு போய்க் கொண்டிருந்தது. கடுமையாகக் காற்றும் வீசியது. பிரயாணிகள் துறவியைக் கேலி செய்யும் 'கைங்கர்ய'த்தைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். வெளியுலக நினைவு இல்லாத துறவியோ அமைதியாக இருந்தார்.
துறவியின் மௌனம் படகில் இருந்தவர்களின் கோபத்தை மேலும் அதிகப்படுத்துவதாக அமைந்தது.
சிலர் ஆற்று நீரைக் கைகளால் வாரி துறவியின் முகத்தில் அடித்தனர். துறவி முழுக்க முழுக்க நனைந்து விட்டார். அப்போதும் கூட, தியானத்தில் இருந்த அவரிடம் எந்தவித மாற்றமும் உண்டாகவில்லை. துறவி கண்களையும் திறவாமலேயே பகவானின் நினைவில் தோய்ந்திருந்தார். இதைக் கண்டதும் மக்களின் கோபம் மேலும் அதிகமாகியது. ஒரு போக்கிரி ஆத்திரத்துடன் துறவியின் கழுத்தில் ஓங்கி அடித்தான். அதைத் தொடர்ந்து பலரும் துறவியை அடிக்கத் தொடங்கினார்கள். ஆனால் உடல் நினைவு அறவே இல்லாததால், துறவி மற்றவர்கள் தன்னைத் துன்புறுத்துவதை உணராமல் இருந்தார்.
''தண்ணீரை மேலே இறைத்தாலும் கண்களைத் திறக்கவில்லை. அடித்தாலும் அசையவில்லை. இனிமேல் இந்தத் துறவியை ஆற்றிலே பிடித்துத் தள்ளி மூழ்கச் செய்ய வேண்டியதுதான்'' என்று படகில் இருந்த மக்கள் முடிவு செய்தார்கள். அந்த முடிவுக்கு வந்த உடன் அனைவருமாகச் சேர்ந்து, துறவியை அசைத்து ஆற்றிலே தள்ள முயன்றனர்.
ஆனால், தனது அன்பிற்குரிய பக்தனுக்கு மக்கள் விளைவித்த துன்பங்களை, அதற்கு மேலும் ஆண்டவன் பொறுத்துக் கொள்ளத் தயாராக இல்லை. துறவியை மக்கள் ஆற்றிலே தள்ள இருந்த சமயத்தில், வானத்தில் அசரீரியாக ஆண்டவனின் குரல் முழங்கியது. ''ஓ சாதுவே! நீங்கள் ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்கள். நீங்கள் அனுமதித்தால் இந்தக் கொடியவர்களை இந்த வினாடியே ஆற்றில் மூழ்கிச் சிதறச் செய்கிறேன்''
படகில் இருந்தவர்கள் அத்தனை பேருமே இடியைப் போல முழங்கிய அசரீரியின் குரலைக் கேட்டு நடுங்க ஆரம்பித்தார்கள். பயத்தால் அவர்களுடைய இரத்தம் உறைந்தது போல ஆகிவிட்டது. முகங்களெல்லாம் சிவந்து விட்டன. துறவியை அதிக அளவில் துன்புறுத்தியவர்கள் பரிதாபமாக விழித்தார்கள். சிலர் பயத்தால் ஆடாமல் அசையாமல் கற்சிலையைப் போலக் கிடந்தார்கள். சிலருக்கு அடி வயிற்றைக் கலக்கியது. சிலரால் பயம் காரணமாகச் சரியாக மூச்சுக்கூட விடமுடியவில்லை.
அசரீரியின் குரலைக் கேட்டதால், அந்தச் சமயத்தில் துறவிக்குப் புறவுலக நினைவு திரும்பியது. தியானம் கலைந்த துறவிக்குப் படகில் இருந்தவர்களின் நிலைமை புரிந்தது. மறு வினாடியே அவர் ஆண்டவனை நினைத்துக் கைகளைக் கூப்பி வணங்கியபடி, ''எனது அன்புக்குகந்த கருணை தெய்வமே! இந்த மக்களும் உன்னுடைய குழந்தைகளே, அல்லவா? நீங்களே இவர்களை மன்னித்து அருள் புரியவில்லையானால், வேறு யார் அவ்விதம் செய்யப் போகிறார்கள்? அவர்கள், தாங்கள் யார் என்பதையும் இன்னதுதான் செய்கிறோம் என்பதையும் அறியாமல் இருக்கிறார்கள். என் தெய்வமே! தங்களுக்கு என்மீதுள்ள அன்பின் பெயரால், எனது பிரார்த்தனைக்குச் செவிசாய்த்து உங்களுடைய இந்தக் குழந்தைகளை மன்னித்து திருவருள் புரிய வேண்டுகிறேன். அவர்களுடைய பயத்தைப் போக்கி அருள்வீராக! அவர்களுக்கு அமைதி தருவீராக! தங்களின் அன்புச் செல்வங்களாக இவர்கள் அனைவரையும் கருணைகூர்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்களுக்குத் தங்களின் மேல் மனப்பூர்வமாக பக்தி உண்டாகச் செய்யுங்கள்'' என்று உள்ளம் நெகிழப் பிரார்த்தித்தார்.
ஆண்டவன் துறவியின் பிரார்த்தனைக்குச் செவிசாய்த்தார். துன்பம் விளைவித்தவர்கள் சான்றோர்களாகத் திருந்தப் பெற்று தலைசிறந்த பக்தர்களானார்கள்.