ஒரு சிற்றூரில் கணவனும் மனைவியும் பரம ஏழைகளாய் இருந்தார்கள். பாடுபட்டு உழைத்து அன்றாடம் கிடைப்பதை உண்டு திருப்தியுடன் வாழ்ந்தனர். 'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்ற பழமொழிக்கு இலக்காக அவர்கள் விளங்கினார்கள்.
நாள்தோறும் சாப்பாடு கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, கோயிலுக்குப் போகக் கணவனும் மனைவியும் ஒரு போதும் தவறமாட்டார்கள். தங்கள் குடிசைத் தோட்டத்தில் பூக்கும் மலர்களைப் பறித்துப் போய் இறைவனுக்கும் இறைவிக்கும் சூட்டி, உள்ளன்புடன் வழிபடுவார்கள்.
நாள்தோறும் இந்த ஏழைகள் எதற்காகக் கோயிலுக்குப் போகிறார்கள் என்று அக்கம்பக்கத்தில் வாழ்பவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
'கோயிலுக்குப் போய் எப்பொழுதும் திருப்தியுடன் திரும்புகிறார்களே! அதன் மர்மம் என்ன?' என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினார்கள்.
ஆனால், கோயிலுக்குப் போகும் கணவனும் மனைவியும் எதையும் பிரார்த்திப்பதில்லை. தங்களுக்கு இருக்கும் மனநிம்மதி நீடித்தால் போதும் என்று அவர்கள் கருதினார்கள்.
இந்த நிலையில் இறைவன், கணவன் மனைவி இருவரின் உளப்பாங்கைச் சோதிக்க எண்ணினான். கணவன் கோவிந்தசாமியும் மனைவி கோமதியும் அன்று தங்கள் பிழைப்பில் கிடைத்த பணத்தைக் கொண்டு, சோளக் கஞ்சியும் மிளகாய்த் துவையலும் செய்திருந்தார்கள்.
அதுசமயம் இறைவன் எளிய பிச்சைக்காரக் கோலத்தில் அவர்கள் வீட்டுக்கு வந்து, ''அம்மா! தாயே! பசியாய் இருக்கிறது. ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்'' என்று கேட்டான்.
“வா வா'' என்று பிச்சைக்காரனைக் கூப்பிட்டுச் சோளக் கஞ்சியை வயிறு நிறையப் பிச்சைக்காரனுக்குக் கொடுத்தார்கள்.
சாப்பிட்டு முடிந்ததும், விநோதமான அந்தப் பிச்சைக்காரன், ''தம்பி, உனக்குப் பணம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டால், அதை வாலிபத்தில் பெற விரும்புவாயா? அல்லது முதுமையில் பெற விரும்புவாயா?'' என்று கேட்டான்.
'உடனே அவன், ''இறைவன் அருள் சுரந்து எனக்குப் பணம் தந்தால், அதை முதுமைக் காலத்தில் பெறுவதையே நான் விரும்புவேன். வாலிபப் பருவத்தில் உடல் நலமாயும் பலமாயும் இருக்கும். அப்போது பாடுபட்டு உழைத்துப் பணம் தேட முடியும். முதுமைக் காலத்தில் அவ்வாறு பொருள் ஈட்ட முடியாது. பிறர் தயவை நாடி நாம் வாழ வேண்டியிருக்கும். ஆகையால், முதுமையில் கிடைப்பதை நான் விரும்புகிறேன்'' என்று கூறினான்.
பிறகு பிச்சைக்காரன், கோமதி பக்கம் திரும்பி, "எந்தப் பருவத்தில் நீ பணம் பெறுவதை விரும்புகிறாய்?'' என்று கேட்டான்.
அதற்கு அவள், ''ஐயா! வாலிபப் பருவத்தில் பணம் கிடைப்பதையே நான் விரும்புகிறேன். அந்தப் பருவம்தான் அனுபவித்து ஆனந்தப்பட வேண்டிய பருவம். அந்தப் பருவத்தில் பணம் கிடைப்பதே நல்லது'' என்று சொன்னாள். மேலும் தொடர்ந்து அவள், ''ஐயா! முதுமைப் பருவத்தில் பணம் இருந்தால் இறைவனை மறக்க நேரிடும். கடைசிக் காலத்தில் இறைநினைப்பு இல்லாமலிருப்பது நல்லதல்ல'' என்று கூறினாள்.
இருவரின் உளப்பாங்கையும் திருப்தியையும் பக்தியையும் அறிந்த இறைவன் துணியும் உணவும் போதிய அளவு அவர்களுக்கு எப்பொழுதும் கிடைக்க அருள்பாலித்தார்.