முன்பு ஒரு காலத்தில் கௌதமன் என்ற ஓர் அந்தணன் இருந்தான். பெயரளவில் தான் அவன் அந்தணனே தவிர, அவனுடைய நடையுடை பாவனைகள் யாவும் மிலேச்சர்களைப் போலவே இருந்து வந்தன. அவனைப் பெற்ற தகப்பனார் பெரிய பண்டிதர். ஆனால் கௌதமனது மனமோ படிப்பில் செல்லவில்லை. மனம் போனபடி அலைந்து திரிந்து வந்தான். முதலில் பிட்சை வாங்கிப் புசித்துப் பசியைப் போக்கி வந்தான். ஒரு நாள் அவன் மிலேச்சர் மட்டும் வாழும் நகரத்திற்குச் சென்றான். அங்கு ஒரு விதவையின் மேல் ஆசைகொண்டு, அவளையே மணந்துகொண்டு சுகமாக அங்கேயே வசிக்கத் தொடங்கினான். இப்போது அவனுடைய தொழில் பறவைகளையும் மிருகங்களையும் வேட்டையாடிப் பிழைப்பதுதான்.
ஒரு நாள் ஒரு சிறந்த பண்டிதராகிய அந்தணர் கௌதமனைக் கண்டார். அவருக்கு, அந்தணர் குலத்தில் பிறந்தும் வேட்டையாடும் இழிதொழிலைச் செய்துவந்த கௌதமன் மீது இரக்கம் உண்டாயிற்று. அவர் கௌதமனை அருகில் அழைத்து, ''வாயில்லாப் பிராணிகளை இம்சிக்கும் பாவச்செயலை விட்டுவிடு'' என்று புத்திமதி கூறினார். கௌதமன் அதற்கு இசைந்தான். பணம் சம்பாதிப்பதற்காக வேறு வழியைத் தேடிப் புறப்பட்டான். தற்செயலாக வியாபார நிமித்தமாகச் செல்லும் வியாபாரிகளின் கூட்டத்தைப் பார்த்தான். அவர்களுடன் தானும் சேர்ந்துகொண்டான். காட்டு வழியாகச் சென்று கொண்டிருந்த அவர்கள் மீது மதம் கொண்ட யானைகள் பாய்ந்து வந்தன. அனைவரும் தலைதெறிக்க ஓடினார்கள். எவ்வளவு வியாபாரிகள் கொல்லப்பட்டார்கள் என்பது யாருக்குமே தெரியாது. கௌதமனும் தப்பி ஓடி, ஓர் அடர்ந்த காட்டில் சுற்றித் திரிந்து வந்தான்.
கௌதமனுக்கு அதுவே ஒரு நல்ல காலமாக அமைந்தது. ஏனென்றால் அந்தக் காடு பல வகைகளிலும் சிறந்து விளங்கியது. பல வகையான பழங்கள் பழுத்துத் தொங்கும் மரங்களும், மணமுள்ள மலர்களும், இன்னிசையுடன் பாடும் பறவையினங்களும் கௌதமனை மிகவும் கவர்ந்தன. திருப்தியாகப் பழங்களைத் தின்றுவிட்டு இளைப்பாறுவதற்காக ஒரு மரநிழலை அடைந்தான். அது ஓர் ஆலமரம். அந்தக் காட்டில்தான் காச்யபரிஷியின் மகனும் ராஜதர்மன் என்ற பெயரையுடையதுமாகிய கொக்கு வசித்து வந்தது. அது வழக்கமாக இளைப்பாறும் மரம்தான் கௌதமன் இளைப்பாற வந்த இடம். இதுவும் அவனுடைய நல்வினைப் பயனே.
மாலை வந்தது. பல வண்ணங்களுடன் கண்களைப் பறிக்கும் அழகுடைய இறக்கைகளுடன் கூடிய ராஜதர்மன் தனது இருப்பிடத்திற்கு வந்தது. பிரம்மலோகம் சென்று திரும்பிய அது தன் வீட்டிற்கு யாரோ விருந்தினன் வந்திருப்பதைக் கண்டது. மிக்க மகிழ்ச்சியுடன் மனிதர்கள் பேசும் பாஷையிலேயே அவனை வரவேற்றது. வணக்கம் கூறியது. தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டது.
பிறகு விருந்தினன் படுத்துக் கொள்வதற்காக இளந்தளிர்களையும், நறுமணமுள்ள மலர்களையும் கொண்டுவந்து மிருதுவான படுக்கையைத் தயாரித்தது. அவன் மகிழும் முறையில் நன்கு உபசாரம் செய்து, சாப்பாடு போட்டது.
கௌதமன் வயிறார உண்டு மனம் மகிழ்ந்தான். தனக்காகத் தயாரிக்கப்பட்ட மலர்ப் படுக்கையில் படுத்துக்கொண்டான். அவன் படுத்துக் கொண்டதும் ராஜதர்மன் தன் சிறகுகளை விரித்து விசிறத் தொடங்கியது. கௌதமன் நன்றாக உறங்கினான்.
ராஜதர்மன் கௌதமனின் வறுமை நிலையைப் புரிந்துகொண்டது. பணம் தேடிப் புறப்பட்ட அவனைத் தன் நண்பனாகிய விரூபாக்ஷன் என்ற அரக்கனின் இருப்பிடத்திற்குப் போகச் சொல்லி ஆலோசனை கூறியது. விரூபாக்ஷனின் இருப்பிடம் அந்த இடத்திலிருந்து மூன்று யோஜனை தூரத்தில் இருந்தது.
மறுநாள் அதிகாலையிலேயே கௌதமன் விரூபாக்ஷனின் இருப்பிடத்தை நோக்கிப் புறப்பட்டான். விரூபாக்ஷன், கௌதமன் தன் நண்பனாகிய ராஜதர்மனால் அனுப்பப்பட்டவன் என்பதை அறிந்து, மிக்க மகிழ்ச்சியுடன் அவனை உபசாரங்களுடன் வரவேற்றான். நல்ல விருந்து வைத்தான். அதன் பிறகு கௌதமனின் தேவையை அறிந்து, அவன் விரும்பியதைவிட அதிகமாகவே பணத்தைக் கொடுத்தான்.
அரக்கர்களின் அரசனான விரூபாக்ஷன் அளித்த பணமூட்டையுடன் கௌதமன் திரும்பி வரும் வழியில், மறுபடியும் ராஜதர்மனின் இருப்பிடத்திற்கே வந்தான். இந்த முறையும் முன்புபோலவே ராஜதர்மன் அவனை வரவேற்று உபசரித்து நல்ல விருந்து வைத்தது. கௌதமனும் தானும் உறங்கிவிட்டால் காட்டு மிருகங்கள் எவையேனும் வந்து கௌதமனைக் கொன்றுவிட்டால் என்ன செய்வது என்று பயந்தது. ஆகையால், கௌதமன் உறங்கியதும் அங்கே சிறிது தொலைவில் தீ மூட்டி வைத்தது. கௌதமன் உறங்கிய பிறகு ராஜதர்மன் தரையிலேயே படுத்துக்கொண்டு நன்றாகத் தூங்கிவிட்டது.
நள்ளிரவில் திடீரென்று தூக்கம் கலைந்து எழுந்தான் கெளதமன். அவனுடைய சிந்தனை பழையபடி கெட்ட வழியில் சென்றது. அவன், 'நம் வீடோ மிகவும் தொலைவில் இருக்கிறது. பேராசைப்பட்டுக்கொண்டு அதிகமான பணத்தையும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். வழியில் சாப்பிடுவதற்கு ஏதேனும் கிடைக்குமோ கிடைக்காதோ, தெரியவில்லை. என்னிடமும் உண்பதற்கு எதுவும் இல்லை. இந்தக் கொழுத்த கொக்கைக் கொன்று எடுத்துச் செல்வது எதற்கும் சிறந்தது' என்று நினைத்தான். உடனே ராஜதர்மனைக் கொன்றான். அதன் இறக்கைகளைப் பிய்த்து எறிந்தான். அதன் உடலை அந்தத் தீயில் வாட்டி உடன் எடுத்துக் கொண்டு ஊரை நோக்கிப் புறப்பட்டான், அந்தக் கிராதகக் கௌதமன்.
ராஜதர்மன் இரண்டு இரவுகளாக வராத காரணத்தால் விரூபாக்ஷன் கலக்கம் அடைந்து, தன் மகனிடம், ''குழந்தாய்! என் ஆருயிர் நண்பன் ராஜதர்மன் தினமும் பிரம்மலோகத்திற்குச் சென்று பிரம்மாவை வணங்குவது வழக்கம். திரும்பும் வழியில் நம் வீட்டிற்கு வந்து என்னைப் பார்க்காமல் திரும்பிச் செல்ல மாட்டான். இதுவரை அப்படி இருந்த அந்த ராஜதர்மனை இரண்டு நாளாகக் காணவில்லை. காரணம் என்னவோ தெரியவில்லை. என் மனம் மிகவும் சங்கடப்படுகிறது. அவன் அனுப்பிய அந்தக் கௌதமன் நல்லவனாக இருப்பான் என்று எனக்குப் படவில்லை. நீ சென்று ராஜ தர்மனைப் பற்றி அறிந்து வா'' என்று தெரிவித்தான்.
அரக்கனின் மகன் தன் மற்ற அரக்கத் தோழர்களுடன் சென்று, ராஜதர்மனின் இருப்பிடம் அடைந்தான். அங்கே இறந்து கிடந்த ராஜதர்மனின் சிறகுகளைக் கொண்டு, நடந்ததை ஊகித்தான். உடனே கௌதமனைத் தேடிப் புறப்பட்டான். சிறிது நேரத்திலேயே கௌதமன் பிடிபட்டுவிட்டான். அவனை அப்படியே தூக்கிச் சென்று, அரக்கனின் மகன் தந்தையின் முன்பு நிறுத்தினான்.
நண்பனின் வெந்த உடலைக் கண்ட விரூபாக்ஷன் உடனே மயக்கமடைந்தான். சுற்றத்தார்களும் நண்பர்களும் மிகவும் கலங்கினர். கதறிக் கதறி அழுதனர். மூர்ச்சை தெளிந்ததும் அரக்க அரசன் கூறினான்: ''அரக்கர்களே! இந்த அந்தணனைக் கொன்று இவன் மாமிசத்தைச் சாப்பிடுங்கள்."
அதைக் கேட்ட அரக்கர்கள் இரண்டு கைகளையும் கூப்பி, ''அரசே! இந்தப் பாவியின் உடலை நாங்கள் உண்ணமாட்டோம். இந்த நன்றி கெட்டவனின் மாமிசத்தை உண்பதால் நாங்களும் பாவிகள் ஆகிவிடுவோம். எனவே இவனைச் சண்டாளர்களிடம் கொடுத்து விடுங்கள்'' என்று வேண்டிக் கொண்டார்கள்.
விரூபாக்ஷன் சண்டாளர்களிடம் கௌதமன் உடலை வெட்டி அளிக்க முற்பட்டபோது அவர்களும், ''அரசே! இந்த நன்றிகெட்டவனின் மாமிசம் எங்களுக்கும் வேண்டாம். அதை எந்தப் பறவையோ மிருகமோ அன்றிப் புழுவோகூட விரும்பாது. எனவே எங்களுக்குத் தேவையில்லை'' என்று முறையிட்டனர்.
ஆகவே கடைசியில் கௌதமனின் உடல் ஒரு பெரிய ஆழமான குழியில் தூக்கி எறியப்பட்டது.
அரக்க அரசன் ராஜதர்மனின் உடலை நறுமணம் மிக்க சந்தனச் சிதையில் வைத்துத் தக்க மரியாதையுடன் தீ மூட்ட எழுந்தான். ஆனால் அதற்குள் தேவேந்திரன் காமதேனுவுடன் அங்கே வந்து சேர்ந்தான். உடனே காமதேனுவின் வாயிலிருந்து அமிர்தமயமான நுரை வந்து சிதையில் விழுந்தது. அந்த நுரை ராஜதர்மனின் உடலில் பட்டதும், உடனே ஒரு விந்தை நிகழ்ந்தது. ராஜதர்மனின் சிறகு முன்பைவிடப் பொலிவுடன் முளைத்தது. ராஜதர்மன் உயிர்பெற்று எழுந்தான். உடனே நடந்தவை அனைத்தையும் அறிந்தான். அவன் தேவேந்திரனிடம், ''கௌதமனையும் உயிர் பெறச் செய்யவேண்டும்'' என்று வேண்டினான். தேவேந்திரன் ராஜதர்மனின் சிறந்த பண்பைப் பாராட்டிக் கௌதமனையும் பிழைப்பித்தான்.
சாதுக்கள் எனப்படுபவர் தமக்குத் தீங்கு இழைப்பவர்களுக்கும் நன்மையே செய்வார்கள். நன்றிகெட்ட பாவியும் கூடத் திருந்தி நலம் பெற அருள் செய்வார்கள்.