ஆஞ்சனேயர் இலங்கையை எரித்த பிறகு ஸ்ரீராமபிரானைக் காண்பதற்காகத் திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது அவருடைய உள்ளம் நடந்துபோன விஷயங்களை நினைத்து அசை போட்டது. 'அப்பப்பா! எவ்வளவு வேலைகளை நான் செய்திருக்கிறேன்! சமுத்திரத்தைத் தாண்டினேன்; சீதாபிராட்டியைத் தேடிக் கண்டுபிடித்தேன்; ராவணனுடைய மகனைக் கொன்று ராவணனையே கண்டு பேசினேன்; இலங்கைக்கு நெருப்பு வைத்து அரக்கர்களைக் கதிகலங்க அடித்தேன்' என்றெல்லாம் அவர் தம்மைப் பற்றி நினைத்தவுடனே அவருடைய உள்ளத்தில் கர்வம் தோன்ற ஆரம்பித்தது. அனுமனின் இந்த மனமாற்றத்தைப் பகவான் உடனே அறிந்துகொண்டார்.
தமது வீரச் செயல்களை நினைத்துப் பார்த்த ஆஞ்சனேயருக்குப் பெருமை தாங்க முடியவில்லை. ஆகவே அவர் மகிழ்ச்சி பொங்க, பலத்த கர்ஜனையுடன் வந்து கொண்டிருந்தார். வழியில் அவருக்குத் திடீரென்று தாகம் உண்டாயிற்று. தண்ணீர் குடிக்காமல் மேலே பிரயாணத்தைத் தொடர முடியாது என்று தோன்றியது. உடனே நின்றார். அந்த இடம் மகேந்திர மலை. நான்கு புறமும் கண்களை ஓடவிட்டு நீர் நிலை ஏதாவது தென்படுகிறதா என்று பார்த்தார். தண்ணீர் இருக்கும் இடம் எதுவும் கண்ணில் படவில்லை. ஆனால் அங்கே சற்றுத் தூரத்தில் அமைதியின் உருவமாக ஒரு முனிவர் உட்கார்ந்திருப்பது தெரிந்தது.
மாருதி, முனிவரின் அருகே சென்று அவரை வணங்கினார்: ''முனிவரே! நான் இராமபிரானுக்காகச் சீதையைத் தேடிக் கண்டுபிடிக்கும் வேலைகளைச் செய்து முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருக்கிறேன். எனக்கு இப்போது மிகவும் தாகமாக இருக்கிறது. தயவு செய்து எனக்குக் குடிக்கச் சிறிது தண்ணீர் தாருங்கள். அல்லது நீர்நிலை ஏதாவது இருந்தால் அது இருக்கும் இடத்தைக் காண்பியுங்கள்; நானே சென்று குடித்துக் கொள்கிறேன்'' என்று கூறினார்.
முனிவர் எதுவும் பேசவில்லை. புன்னகையுடன் அவர் தண்ணீர் இருக்கும் திசையைத் தம் விரலால் சுட்டிக் காட்டினார். ஆஞ்சனேயர் புரிந்து கொண்டு மகிழ்ச்சியுடன் நீரைத் தேடிப் புறப்பட்டார். போவதற்கு முன்பு சீதை அவரிடம் கொடுத்த சூடாமணி, ராமனின் முத்திரை மோதிரம், மற்றும் பிரம்மதேவன் அளித்த ஒரு கடிதம் ஆகிய மூன்றையும் எடுத்து முனிவரின் முன்னால் வைத்து விட்டுத் தண்ணீர் குடிப்பதற்காகப் போனார்.
சிறிது நேரத்தில் வேறொரு குரங்கு முனிவர் இருந்த இடத்திற்கு வந்தது. அது, முனிவரின் முன்னால் ஆஞ்சனேயர் வைத்துச் சென்ற பொருள்களை எடுத்து முனிவரின் அருகில் இருந்த கமண்டலத்திற்குள் போட்டுவிட்டு ஓடிவிட்டது!
அதையும் முனிவர் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
தாகசாந்தி செய்துகொண்ட பிறகு ஆஞ்சனேயர் முனிவர் இருந்த இடத்திற்கு வந்தார். அவர் முனிவரின் முன்னால் தாம் வைத்துச் சென்ற பொருள்களைக் காணாமல் திடுக்கிட்டார். முனிவரிடம் அவர், ''சுவாமி! நான் இங்கே வைத்துச் சென்ற பொருள்கள் எங்கே?'' என்று வினவினார். முனிவர் அப்போதும் பேசவில்லை. புருவங்களை உயர்த்தி, கமண்டலுவின் பக்கம் காட்டினார். அனுமார் கமண்டலத்திற்குள் பார்த்தார். என்ன ஆச்சரியம்! ஆஞ்சனேயர் வைத்துச் சென்றதைப் போலவே ஆயிரக்கணக்கான முத்திரை மோதிரங்கள் கமண்டலத்திற்குள் காணப்பட்டன.
அதைக் கண்டதும் ஆஞ்சனேயர் சற்றுக் குழப்பத்துடன் முனிவரை நோக்கி, ''சுவாமி, இதில் காணப்படும் முத்திரை மோதிரங்களுள் நான் வைத்துச் சென்ற முத்திரை மோதிரம் எது?'' என்று கேட்டார்.
முனிவர் சிறிதும் பதற்றம் அடையவில்லை. அவர் பழையபடி தமது அதே புன்னகையுடன், ''குழந்தாய்! இராமாவதாரம் நடக்கும் காலங்களிலெல்லாம் சீதையை இராவணன் கவர்ந்து செல்வதும், பிறகு அனுமன் சீதையைக் கண்டு திரும்பும்போது முத்திரை மோதிரத்தை என் கமண்டலத்திற்குள் போடுவதும் வழக்கம். அத்தகைய மோதிரங்களைத்தான் நீ இப்போது கமண்டலத்திற்குள் பார்க்கிறாய்'' என்று பதில் சொன்னார்.
முனிவர் சொன்ன பதிலைக் கேட்டவுடனே அனுமனின் கர்வம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. வெட்கத்துடன் அவர் முனிவரிடம், ''சுவாமி! இதுவரையிலும் எத்தனை இராமர்கள் தோன்றியிருக்கிறார்கள்?'' என்று கேட்டார்.
முனிவர் அதற்குப் பதிலாக, ''குழந்தாய்! கமண்டலத்திலுள்ள முத்திரை மோதிரங்களை எண்ணினால் தெரியும்!'' என்றார். அனுமன் அவற்றை எண்ணிக் கணக்கிடுவது இயலாத காரியம் என்பதைப் புரிந்துகொண்டார்.
ஆஞ்சனேயர், ''என்னைப் போல எத்தனை எத்தனை பேர் இந்தக் காரியங்களைச் செய்திருக்கிறார்கள்! அவர்களைவிட நான் என்ன அப்படி அபூர்வமான காரியத்தைச் செய்து முடித்துவிட்டேன்?'' என்று எண்ணிக்கொண்டே அங்கதன் இருக்கும் இடத்தை அடைந்தார்.
பிறகு அங்கதனுடன் புறப்பட்டு இராமசந்திரமூர்த்தியைக் கண்டு வணங்கினார். ஆஞ்சனேயரின் கண்களிலிருந்து நீர் தாரைதாரையாகக் கொட்டியது. இராமபிரானை நோக்கி அவர், பிரபுவே! மிகப் பெரிய அபராதம் நடந்துவிட்டது'' என்று ஆரம்பித்து, முனிவரின் ஆசிரமத்தில் தமக்கு ஏற்பட்ட எல்லா அனுபவங்களையும் விவரமாக எடுத்துச் சொன்னார்.
முழுவதையும் கேட்டுவிட்டு இராமபிரான் நகைத்துக்கொண்டே கூறினார்: ''செல்வனே! முனிவரின் உருவத்தில் வந்து நான்தான் உன் நன்மைக்காக இந்த வேடிக்கையைச் செய்தேன். கலங்காதே, இதோ பார்'' என்றார். அங்கு அவருடைய கையில் ஆஞ்சனேயர் முனிவரின் ஆசிரமத்தில் விட்டு வந்த மோதிரம் ஒளி வீசிக்கொண்டிருந்தது.
கர்வம் நீங்கிய மாருதி இராமபிரானிடம் மகாவிஷ்ணுவின் முழுத் தோற்றத்தையும் கண்டார். உள்ளம் நெகிழ்ந்து, தடாலென்று தரையில் வீழ்ந்து பரம்பொருளை வணங்கினார்; நீண்ட நேரம் வரையிலும் அவர் எழுந்திருக்கவே இல்லை. அதன் பிறகு எந்த நிலையிலும் அனுமனின் உள்ளத்தில் கர்வம் தோன்றவே இல்லை.